Tuesday 1 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 8 – கவிதை வாசிப்பு (அன்னா ஸ்விர்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “சூழ்நிலை” (situation) எனும் பிரிவில் போலீஷ் கவிஞரான அன்னா ஸ்விர்ரின் (1909 – 1984) “கவிதை வாசிப்பு” சேர்க்கப்பட்டுள்ளது.  



வெவ்வேறு காலக்கட்டங்களை சேர்ந்த வெவ்வேறு கவிஞர்களை மிலோஷ் தன் நூலில் தொகுத்திருக்கிறார். மேற்கத்திய படைப்புகள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்தாலும் சீனம் ஜப்பான் போன்ற கீழைத்தேய நாடுகளிலிருந்தும் கணிசமான அளவில் கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. லாவோ ட்சு, ரூமி போன்ற பண்டையக் குரல்களில் தொடங்கி நவீன ஆளுமைகளான வாலேஸ் ஸ்டீவன்ஸ், தாமஸ் டிரான்ஸ்ட்ரோமர் வரை நீளும் கவிஞர்களை வாசிக்கும்போது சமயங்களில் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. நூறு நூறு வருஷங்கள் வெட்டி வெட்டி மறையும்போது உண்டாகும் திணறல் அது.  அல்லது ஒரே இடத்தில் நூற்றாண்டுகளாக இருப்பதன் திணறல்.

இக்கவிதைகள் வெவ்வேறு வடிவங்களில் இருக்கின்றன. தியானம் போலும் பிரார்த்தனை போலும் அவை வெளிப்படுகின்றன. முறையிடல் போலும் அறிவுரைப் போலும் ஒலிக்கின்றன. காட்சியாகவும் அக்காட்சியை பார்க்கும் மனமாகவும் ஒருங்கே திறக்கின்றன. எந்த வடிவில் நிகழும்போதும் அடிப்படையில் இக்கவிதைகள் ஒளி மின்னும் பொருட்களாக இருக்கின்றன. எங்கே இருந்து கவிதைகளில் இவ்வளவு வெளிச்சம் கூடுகிறது என யோசிக்கும்போது, அன்னா ஸ்விர்ரின் இக்கவிதை அதற்கு பதில் சொல்வதாக அமைந்தது. கவிஞன் வசிக்கும் இருட்டில் இருந்தே அந்த வெளிச்சம் பிறக்கிறது.

O 

 “எல்லா நாடுகளிலும் கவிதை வாசிப்பு ஒரே மாதிரி நிகழ்வதில்லை. போலந்து போன்ற சில நாடுகளில், கவிதையை வெறும் அழகியல் அனுபவமாக மட்டும் எண்ணாத, பார்வையாளர்களும் கவிதை வாசிப்பில் கலந்துகொள்கிறார்கள். வாழ்வு பற்றிய, மரணம் பற்றிய தங்கள் கேள்விகளை அந்த நிகழ்வில் அவர்கள் முன்வைக்கிறார்கள். கவிஞனிடமும் பார்வையாளர்களிடமும் உள்ள அறியாமையையும் அவர்களுடைய கையறு நிலையையும் இக்கவிதை அழகாய் காட்சிப்படுத்தியுள்ளது” – செஸ்லா மிலோஷ்

O

கவிதை வாசிப்பு

குளிரில் நடுங்கும்

நாய் போல் 

நான் ஒரு பந்தாக சுருண்டுக் கொண்டேன்


நான் ஏன் பிறந்தேன் என்பதற்கோ

வாழ்க்கை எனும்

இந்த கொடூரம் ஏன் நிகழ்கிறது என்பதற்கோ

எனக்கு யார்தான் பதில் சொல்வார்கள்? 


தொலைபேசி மணி ஒலிக்கிறது. நான் 

கவிதை வாசிக்க செல்ல வேண்டும்.


உள்ளே நுழைகிறேன்.

அங்கு நூறு மனிதர்கள். நூறு ஜோடிக் கண்கள்.

அவர்கள் என்னை நோக்குகிறார்கள். எனக்காய் காத்திருக்கிறார்கள்.

எதற்கு என்று எனக்கு தெரியும்.


நான் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்

அவர்கள் ஏன் பிறந்திருக்கிறார்கள் என்பதற்கும்

வாழ்க்கை எனும் இந்த கொடூரம் 

ஏன் நிகழ்கிறது என்பதற்கும்.



No comments:

Post a Comment