Wednesday 4 July 2018

பலூன் கோடாரி


"நான் பேசுவதற்கு விரும்புபவன். என் கவிதைகள் என்னைப் பேசாத இடத்திற்கு இழுத்துப்போகிறதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" 

 
-ஷங்கர்ராமசுப்ரமணியன் 

நோக்கம் (purpose) அவசியமில்லாத ஒரே இலக்கிய வடிவம் என்று கவிதையைக் குறிப்பிடுவார்கள். கவிதைக்கென்று தீர்மாணமான ஒரு கருத்தோ, தரப்போ, திட்டமோ இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. அடிப்படையில் மொழி எனும் அமைப்பு மட்டுமே அதற்குப் போதுமானது. மொழியின் நிச்சயமின்மைகளுக்குள் குழந்தைப் போல் கவிதை சுதந்திரத்துடன் ஓடி அலைகிறது. பொம்மை பாகங்களை இணைத்து ரயில்வே தண்டவாளத்தை எழுப்புவது போல் அது மொழியுடன் விளையாடுகிறது. பல சமயம் அதிலேயே நிஜ ரயில்களைக்கூடத் தோன்ற வைக்கிறது. புனைக்கதைகள் போலில்லாமல் முதன்மையாக மொழிக்குள்ளேயே நிகழ்வதனாலேயே கவிதை, ஒரு வகையில் வடிவவாதிகளின் (Formalists) இலக்கிய வரையறைக்குள் கச்சிதமாகப் பொருந்துகிறது என்று கூறலாம். வடிவவாதிகளின் கூற்றுப்படியே, பரிச்சயமான ஒன்றை -பொருளோ, காட்சியோ, அனுபவமோ- மொழிக் கட்டமைப்பின் மூலமாக முற்றிலும் புதிதாக உருமாற்றி அளிக்கிறது கவிதை. வீடு திரும்பும் வழக்கமான பாதையிலிருந்து விலகி, வேண்டுமென்றே தெரு மாறி செல்லும்போது ஏற்படும் விடுதலை உணர்ச்சி போல். அல்லது திகைப்பு போல். 

நோக்கம் இல்லாவிட்டாலும் கவிதைக்கு விளைவு உண்டு. அதையே கவித்துவ மனநிலை என்றும் உணர்ச்சிநிலை என்றும் சொல்கிறோம். “கவிதை என்பது கவித்துவ மனநிலையை உற்பத்தி செய்யும் இயந்திரம்” என்கிறார் பால் வெலரி. மொழியில் கவிதை தன்னை வெளிப்படுத்துவதன் மூலமாக அல்லது நிகழ்த்திக் கொள்வதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட மன அல்லது உணர்ச்சி நிலையை உருவாக்குகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட கவிஞர் பற்றிப் பேசுவது என்பது ஒருவகையில் அந்தக் குறிப்பிட்ட கவித்துவ நிலையைப் பற்றிப் பேசுவதே. எல்லா மனநிலைகளோடும் உணர்ச்சி நிலைகளோடும் எப்படியோ பொழுதுகளும் இயல்பாக இணைந்துவிடுகின்றன. தேவதச்சனின் கவிதைகளைச் சமவெளியின் கவிதைகள் என்று குறிப்பிடும் சபரிநாதன் அவை மதியத்தின் சிறுபொழுதோடு இணைந்தவை என்கிறார். என் வாசிப்பில் சபரியின் கவிதைகள் அதிகாலையின் பொன் கீறலுடனே எப்போதும் இணைந்திருக்கின்றன. [“அறுபடாது ஆயிரம் இரவுகள் நகர்ந்து தீர்ந்த பின் வந்துறைந்தது போல்... அப்படி ஒரு விடியல்”-சபரிநாதன் ]. அவ்வகையில் ஷங்கர்ராமசுர்பரமணியனின் “ஆயிரம் சந்தோஷ இலைகள்” தொகுப்பிலுள்ள கவிதைகளை ஏ.வி.மணிகண்டன் கோடிடுவது போலவே நானும் முன்மாலைப் பொழுதான அந்தியுடனே தைத்துக் கொள்கிறேன். [“ஷங்கரின் கவிதையில் இருக்கும் மெல்லுணர்வு சங்கப்பாடல்களில் வரும் நள்ளென்ற யாமத்தின் முன்மாலை பொழுது என்று விளங்குகிறது” -ஏ வி மணிகண்டன்]. பிரதானமாகச் சொல்லாட்சிகளினால் இல்லாமல் காட்சி சித்தரிப்புகள் வழியாகவே தன் எழுத்துக்களில் கவித்துவ உணர்ச்சிநிலையை வெளிப்படுத்துகிறார் ஷங்கர். அதனாலேயே குறுஞ்சித்தரிப்பு (micronarration) எனப்படுகிற கதை வடிவத்திற்கான சிறந்த உதாரணங்களாகவும் அவரது கவிதைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. 




ஷங்கர்ராமசுப்ரமணியன் தொன்னூறுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய கவிஞர். தொன்னூறுகள் என்பது இந்தியாவுக்கு மிக முக்கியமான ஒரு காலகட்டம். இந்தியா தவிர்க்கமுடியாத பொருளாதார சக்தியாக மேலெழுவதற்கான அடித்தளங்கள் போடப்பட்ட சமயம் அது. இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை நேருவிய சோஷியலிசத்திலிருந்து தாராளமயமாக்கல் நோக்கி அப்போதே வலுவாக நகர்கிறது. அது குறித்து நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இன்றுவரை நம் சூழலில் விமர்சனங்கள் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. தொன்னூறுகளின் இந்தியாவுடைய முக்கியமான இரு முகங்கள் சச்சினும் ஏ.ஆர்.ரஹ்மானும் என்பதை வைத்தே ஒரு காலமாற்றத்தின் சித்திரத்தை நாம் எளிதாக வரைந்து கொள்ளலாம். சச்சினோ ஏ.ஆர்.ரஹ்மானோ லட்சியவாதிகள் அல்ல; சமூக மாற்றம் பற்றிப் பேசியவர்கள் அல்ல; இரண்டு பேருமே தனிமனித சாதனையாளர்கள். சச்சினையும் ஏ.ஆர்.ரஹ்மானையும் தன் நாயகர்களாக ஏற்றுக் கொண்டதன் வழியே தொன்னூறுகளில் இந்தியா தனிமனித முன்னேற்றத்தை தன் கோஷமாகச் சுவீகரித்துக் கொண்டது என்றே சொல்லவேண்டும். லட்சியங்களின் சரிவு குறித்துக் கசப்புகளோடு இருந்த இளைஞர்கள் மறைந்து சுயமுன்னேற்றம் குறித்த கனவுகளோடு அடுத்தத் தலைமுறை இளைஞர்கள் புறப்பட ஆரம்பிக்கிறார்கள். இந்தியா நவீனமாகிறது. பிற்பாடு இந்த வளர்ச்சியின் விளைவாகப் பெருநகரங்கள் புது உருவம் அடையும். நுகர்வு கலாச்சாரம் பெருகும். சூழலியல் அழிவுகள் குறித்த கவலைகளும் கையறு நிலையும் உண்டாகும். உண்மைகள் குறித்துக் குழப்பம் ஏற்படும். நாம் இதைப் பின்நவீன உலகம் என்போம். இவை சமூக ரீதியான வரையறைகள்.