"நான் பேசுவதற்கு விரும்புபவன். என் கவிதைகள் என்னைப் பேசாத
இடத்திற்கு இழுத்துப்போகிறதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்"
-ஷங்கர்ராமசுப்ரமணியன்
நோக்கம் (purpose) அவசியமில்லாத ஒரே இலக்கிய வடிவம் என்று
கவிதையைக் குறிப்பிடுவார்கள். கவிதைக்கென்று தீர்மாணமான ஒரு கருத்தோ, தரப்போ,
திட்டமோ இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. அடிப்படையில் மொழி எனும் அமைப்பு மட்டுமே
அதற்குப் போதுமானது. மொழியின் நிச்சயமின்மைகளுக்குள் குழந்தைப் போல் கவிதை
சுதந்திரத்துடன் ஓடி அலைகிறது. பொம்மை பாகங்களை இணைத்து ரயில்வே தண்டவாளத்தை
எழுப்புவது போல் அது மொழியுடன் விளையாடுகிறது. பல சமயம் அதிலேயே நிஜ
ரயில்களைக்கூடத் தோன்ற வைக்கிறது. புனைக்கதைகள் போலில்லாமல் முதன்மையாக
மொழிக்குள்ளேயே நிகழ்வதனாலேயே கவிதை, ஒரு வகையில் வடிவவாதிகளின் (Formalists)
இலக்கிய வரையறைக்குள் கச்சிதமாகப் பொருந்துகிறது என்று கூறலாம். வடிவவாதிகளின்
கூற்றுப்படியே, பரிச்சயமான ஒன்றை -பொருளோ, காட்சியோ, அனுபவமோ- மொழிக் கட்டமைப்பின்
மூலமாக முற்றிலும் புதிதாக உருமாற்றி அளிக்கிறது கவிதை. வீடு திரும்பும் வழக்கமான
பாதையிலிருந்து விலகி, வேண்டுமென்றே தெரு மாறி செல்லும்போது ஏற்படும் விடுதலை உணர்ச்சி
போல். அல்லது திகைப்பு போல்.
நோக்கம் இல்லாவிட்டாலும் கவிதைக்கு விளைவு உண்டு. அதையே கவித்துவ
மனநிலை என்றும் உணர்ச்சிநிலை என்றும் சொல்கிறோம். “கவிதை என்பது கவித்துவ மனநிலையை உற்பத்தி செய்யும் இயந்திரம்” என்கிறார் பால் வெலரி.
மொழியில் கவிதை தன்னை வெளிப்படுத்துவதன் மூலமாக அல்லது நிகழ்த்திக் கொள்வதன்
மூலமாக ஒரு குறிப்பிட்ட மன அல்லது உணர்ச்சி நிலையை உருவாக்குகிறது. எனவே ஒரு
குறிப்பிட்ட கவிஞர் பற்றிப் பேசுவது என்பது ஒருவகையில் அந்தக் குறிப்பிட்ட
கவித்துவ நிலையைப் பற்றிப் பேசுவதே. எல்லா மனநிலைகளோடும் உணர்ச்சி நிலைகளோடும்
எப்படியோ பொழுதுகளும் இயல்பாக இணைந்துவிடுகின்றன. தேவதச்சனின் கவிதைகளைச்
சமவெளியின் கவிதைகள் என்று குறிப்பிடும் சபரிநாதன் அவை மதியத்தின் சிறுபொழுதோடு
இணைந்தவை என்கிறார். என் வாசிப்பில் சபரியின் கவிதைகள் அதிகாலையின் பொன் கீறலுடனே
எப்போதும் இணைந்திருக்கின்றன. [“அறுபடாது ஆயிரம் இரவுகள் நகர்ந்து தீர்ந்த பின்
வந்துறைந்தது போல்... அப்படி ஒரு விடியல்”-சபரிநாதன் ]. அவ்வகையில்
ஷங்கர்ராமசுர்பரமணியனின் “ஆயிரம் சந்தோஷ இலைகள்” தொகுப்பிலுள்ள கவிதைகளை
ஏ.வி.மணிகண்டன் கோடிடுவது போலவே நானும் முன்மாலைப் பொழுதான அந்தியுடனே தைத்துக்
கொள்கிறேன். [“ஷங்கரின் கவிதையில் இருக்கும் மெல்லுணர்வு சங்கப்பாடல்களில்
வரும் நள்ளென்ற யாமத்தின் முன்மாலை பொழுது என்று விளங்குகிறது” -ஏ வி மணிகண்டன்].
பிரதானமாகச் சொல்லாட்சிகளினால் இல்லாமல் காட்சி சித்தரிப்புகள் வழியாகவே தன்
எழுத்துக்களில் கவித்துவ உணர்ச்சிநிலையை வெளிப்படுத்துகிறார் ஷங்கர். அதனாலேயே
குறுஞ்சித்தரிப்பு (micronarration) எனப்படுகிற கதை வடிவத்திற்கான சிறந்த
உதாரணங்களாகவும் அவரது கவிதைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
ஷங்கர்ராமசுப்ரமணியன்
தொன்னூறுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய கவிஞர். தொன்னூறுகள் என்பது
இந்தியாவுக்கு மிக முக்கியமான ஒரு காலகட்டம். இந்தியா தவிர்க்கமுடியாத பொருளாதார
சக்தியாக மேலெழுவதற்கான அடித்தளங்கள் போடப்பட்ட சமயம் அது. இந்தியாவின்
பொருளாதாரக் கொள்கை நேருவிய சோஷியலிசத்திலிருந்து தாராளமயமாக்கல் நோக்கி அப்போதே
வலுவாக நகர்கிறது. அது குறித்து நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இன்றுவரை நம்
சூழலில் விமர்சனங்கள் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. தொன்னூறுகளின்
இந்தியாவுடைய முக்கியமான இரு முகங்கள் சச்சினும் ஏ.ஆர்.ரஹ்மானும் என்பதை வைத்தே
ஒரு காலமாற்றத்தின் சித்திரத்தை நாம் எளிதாக வரைந்து கொள்ளலாம். சச்சினோ
ஏ.ஆர்.ரஹ்மானோ லட்சியவாதிகள் அல்ல; சமூக மாற்றம் பற்றிப் பேசியவர்கள் அல்ல; இரண்டு
பேருமே தனிமனித சாதனையாளர்கள். சச்சினையும் ஏ.ஆர்.ரஹ்மானையும் தன் நாயகர்களாக
ஏற்றுக் கொண்டதன் வழியே தொன்னூறுகளில் இந்தியா தனிமனித முன்னேற்றத்தை தன் கோஷமாகச்
சுவீகரித்துக் கொண்டது என்றே சொல்லவேண்டும். லட்சியங்களின் சரிவு குறித்துக்
கசப்புகளோடு இருந்த இளைஞர்கள் மறைந்து சுயமுன்னேற்றம் குறித்த கனவுகளோடு அடுத்தத்
தலைமுறை இளைஞர்கள் புறப்பட ஆரம்பிக்கிறார்கள். இந்தியா நவீனமாகிறது. பிற்பாடு இந்த
வளர்ச்சியின் விளைவாகப் பெருநகரங்கள் புது உருவம் அடையும். நுகர்வு கலாச்சாரம்
பெருகும். சூழலியல் அழிவுகள் குறித்த கவலைகளும் கையறு நிலையும் உண்டாகும்.
உண்மைகள் குறித்துக் குழப்பம் ஏற்படும். நாம் இதைப் பின்நவீன உலகம் என்போம். இவை
சமூக ரீதியான வரையறைகள்.
தமிழ் கவிதை வரையறையில் நவீனத்துவத்தின் கசப்புக்கும்
பின்நவீனத்துவப் பகடிக்கும் இடையிலான காலம் என்று தொன்னூறுகளைத் தோராயமாகக்
குறிப்பிடலாம். எரியும் பகலுக்கும் மதுக்கோப்பைகளின் இரவுக்கும் நடுவில் உள்ள
அந்திப் போன்றது அக்காலம். அதன் பிரதான அடையாளங்களில் ஒன்றாகவே ஷங்கரின்
படைப்புலகத்தை நான் கருதுகிறேன். “காலணிகளற்று / நடப்பவனைப் போல் / நகரத்தில் பாதுகாப்பின்மையுடன் /
உலவுபவன் என் ஊர் என / நான் அறிவேன்” என்பது போல் நகரின் தனிமை பற்றி ஷங்கர் எழுதியிருக்கும்போதும்
கிராமம் குறித்த நினைவேக்கத்தின் கற்பனாவாதம் அவரது கவிதைகளில் முற்றிலுமாக இல்லை
என்பதைக் கணக்கில் கொள்கையில் மேற்கூறிய சமூக மாற்றத்தின் சிறு ஒத்திசைவை அவற்றில்
உணர முடிகிறது. போலவே, பின்நவீனத்துவப் பகடியிலிருந்து ஷங்கரது கவிதைளிலுள்ள
பகடியை வேறுபடுத்தும் முக்கிய அம்சம், நவீனத்துவத்திலிருந்து வடிகட்டி எஞ்சிய
கசப்பே. அவரது கவிதைகள் லட்சியங்களின் தோல்வியை நோக்கி ஆக்ரோஷத்துடன் கத்துவதும்
இல்லை; ஒரேடியாகக் கைகொட்டி சிரிப்பதும் இல்லை. இந்த இரண்டு நிலைகளுக்கும் நடுவில்
அவை மிதக்கின்றன. அவரது கவிதைகளில் வருகிற “கே” என்கிற கதாபாத்திரம் நம்மைப்
புன்னகைக்க வைக்கும்போதும் அதை அவர் முழுக்க ஒரு கேலிச்சித்திரமாகவும்
வடிவமைக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இப்பண்பினாலேயே ஜெயமோகன் ஷங்கரின்
கவிதைகள் குறித்து “புன்னகைக்குப்பின்
அடியில் மெல்ல கசப்பை விட்டுச்செல்லும் அழகிய சித்தரிப்புகள்” என்று எழுதுகிறார்.
வரலாற்றுக் கோணத்தில் மட்டுமில்லாது தன்னியல்பாகவும் ஷங்கரின்
கவிதைகள் அந்தியின் குணத்தையே கொண்டிருக்கின்றன. பகல் பொழுது வேலையிடங்களுக்கானது;
அலைதலுக்கும் வியர்வைக்குமானது. இரவு மறைவிடங்களுக்கானது; உடல்களில் அடங்குவது.
ஆனால் பறவைகள் கூடடைய திரும்பும் அந்திக்கோ தனியே செயல் என்று எதுவும் கிடையாது.
அது தியானிக்கும் மௌனம் மட்டுமே உடையது. ஷங்கர் அங்கிருந்தே தன் கவிதைகளை
எழுதுகிறார். அதனாலேயே அவரது கவிதைகளில் காலத்தில் உறைந்திருக்கும் செயலின்மையின்
பிரம்மாண்டத்தை உணர முடிகிறது. “இயக்கம்தான் பிராயமோ” என்றே அவை வியப்புறுகின்றன.
விளைவாக, ”நான் தனிமையிலிருந்து
வந்தவன் / தனிமைக்குள் போகிறேன்” என்று ஷங்கர் வெளிப்படுத்துகிற
தனிமை உணர்வு ஒரு தனிமனிதனின் குரலாக ஒலிக்காமல் இந்த ஒட்டுமொத்த இயக்கத்தையும் வெளியே
இருந்து பார்க்கும் திடுக்கிடலாக, ஒடுக்கமாக, துக்கமாக நிலைக்கொள்கிறது. லௌகீக
முறைப்பாடற்ற துயர்; எனவே அது நித்தியத்துவம் கொண்டதாக உள்ளது. அன்றாடத்தின்
தேவைகளுடனோ ஆணவ நிறைவுடனோ அது தன்னை முடிச்சிட்டுக் கொள்ளக் கொஞ்சமும்
முனைவதில்லை. இவ்விடத்தில் வெறுமனே துயர் என்று குறிப்பிடும்பொழுது அதில் ஏனோ வன்முறையின்
தொனி கலந்துவிடுகிறது; வலியும் ஊடுருவுகிறது. ஆனால் வலியோ வன்முறையோ இல்லாதது
என்றே ஷங்கரின் கவிதைகளில் தென்படும் துயரை நான் வகைப்படுத்துவேன். அது அந்தியின்
சாஸ்வதமான ஆரஞ்சு நிறத் துயர். “ஞாபகங்களெங்கும்/ ஒரு
கண்ணீர்த் துளி படர்ந்திருக்கிறது.” என்று அவர் கவிதையில்
எழுதும்போதுக்கூட அதில் கண்ணீரின் உப்பு ருசி சேர்வதில்லை
இந்தத் துயருக்கு உண்மையில் பெரிய காரணமோ கனத்த சம்பவங்களோக்கூடத்
தேவைப்படுவது கிடையாது. “குறைவுபட்ட
பொருள்தானோ/ ஆனந்தம்/ உயிர் போலவோ/ துடிக்கும் பேதைமையில்/ மலரும் பூவா” என்று ஆனந்தத்தின்
போதாமையைப் பாடும் ஷங்கரின் கவிதை பின்னர் “காற்றில்
ஆடிக்கொண்டிருக்கும் துணிகளைப் பார்க்கும்போது துயரமாய் இருந்தது” என்று சாதாரணமாக மொட்டை
மாட்டியில் நின்றபடி தளும்பும் துயரின் வெறுமைக்குள் குதிக்கிறது. வெறுமை என்கிற சொல்லில்
உள்ள எதிர்மறை உணர்வைத் தவிர்க்க அதை “ஓன்றுமற்றது” என்கிற சொல்லால் அழைக்க
விரும்புகிறேன். “ஒன்றுமற்றதை/ எனது
கோப்பையிலிருந்து/ பருகத் தொடங்கிவிட்டேன்/ போதை/தலை/ கொள்ளவில்லை” என ஒன்றுமற்றதை பருகி ஒன்றுமற்றதிற்குள்ளேயே
விழும் கவிதைகள் இவை. அந்த விதத்தில் ஷங்கருடைய கவிதைகள் ஜென் நிலைக்கு அருகில்
வருகின்றன எனச் சொல்லலாம். “மனமும் இல்லை;
புத்தாவும் இல்லை; ஒன்றுமே இல்லை” என்பது பிரபலமான ஜென் வாக்கியம்.
இழப்பு மற்றும் துயரின் விழிப்பு நிலையைப் பொருத்தமட்டில் ஷங்கருடைய கவிதைகள் ஜென்னோடு
இயைந்து போகிறபோதும் ஜென்னின் விடுதலை கூறு இக்கவிதைகளில் இல்லை என்பதே என்
அபிப்ராயம். ஷங்கரிடம் கூடுதலாக ஓர் ஏக்க பெருமூச்சு உண்டு. எனவே இக்கவிதைகளை ஜென்
நோக்கிய எத்தனம்; ஓர் இறகுப் பயணம் என்று சொல்வது ஒருவேளை இன்னும்கூடப் பொருத்தமாக
இருக்கும். மரபான ஜென் படிமங்களால் அல்லாமல் நவீன வாழ்வின் சித்தரிப்புகள் மூலமாக
அவர் இதைச் சாத்தியப்படுத்தியிருப்பது மிக முக்கியமான பங்களிப்பு என்றே படுகிறது.
நவீன மனிதனின் கசப்பு என்பது பெரும்பாலும் தன்மையப்பட்டதே. சுயம்
பற்றிய அவனது வலுவான கற்பிதமே நானும் உலகமும் என்கிற சமனற்ற இருமையை
உருவாக்குகிறது. தான் அல்லாத எல்லாவற்றையும் எதிர்தரப்பில் நிறுத்துகிறது. அல்லது
தான் அல்லாத எல்லாவற்றின் மேலும் தன்னையே நிறுவி கொண்டு சீறவும் வருந்தவும்
செய்கிறது. அதன் ஆதாரவோட்டத்தினுள் அகங்காரத்தின் நாக்கு ஓசையிட்டபடியே
இருக்கிறது. “ஆயிரம் சந்தோஷ இலைகள்” தொகுப்பின் முதன்மையான சிற்ப்பியல்பு என்று
தன்னை அடையாளமின்றித் திரவப் பதமாக்குகிற, தன் சட்டைப் பைக்குள் உலகத்தைச் சுருக்க
முனையாத நெகிழ்வுத் தன்மையையே சுட்டவேண்டும்.
அந்த நெகிழ்வுத் தன்மையினாலேயே ஷங்கர் மனிதர்களின் குட்டி இருப்பை மீறி நாய்களையும் பூனைகளையும் தெர்மக்கோலின் நடனத்தையும் பாலீதீன் பைகளையும் தொடர்ந்து செல்பவராக இருக்கிறார். ”உன் வெற்றிடத்தை / தன் வெற்றிடங்களால் நிரப்பும்/ நகர் முழுக்க உலவும்/ பாலீதின் பைகள் உன்னை எங்கு/ அழைத்துச் செல்கின்றன?”. நேர்த்தியான ஒரு புகைப்படக் கலைஞன் என உலகம் தன் திடத்தன்மையை இழந்து நெகிழ்ந்திருக்கும் பொழுதுகளைத் துல்லியமாக வெட்டி முன்னால் வைக்கிறார். “சற்று முன்னர்ச் சமுத்திரத்தில் உயிர்த்து / இப்போது / கருத்த முதியவளின் / எடைத்தராசில் / துடிப்பு நீங்கி / துயிலும் மீன்களின்மீது / ஈக்கள் போல் படரும் / கதிரே / உனக்கு வந்தனம்..”.
மேலும் அவரது கவிதைகளில் பெண் கதாபாத்திரங்கள் தொடர்ந்து காத்திரமாக
இடம்பெறுவதையும், அதிலும் அம்மாவை ஒரு நிரந்தர இருப்பாக அவர் மாற்றியிருப்பதையும்
இந்த நெகிழ்வுத்தன்மையுடனே இணைக்க வேண்டியிருக்கிறது. ஷங்கரின் உலகில் வரும் அப்பா
செயலின் வடிவம். “அப்பா செயலால் நிரம்பி
/ மணலைச் சலித்த / மேற்குடுவை.”. அவரை மறுத்து செயலற்ற அபோத கட்டத்துக்கு இட்டுச் செல்லும்
மென்னுணர்வின் வழித்துணை என அம்மாவின் இருப்பை இக்கவிதைகளில் அடையாளப்படுத்தலாம். ஆண்மையின் அகங்காரத்திற்கு
எதிராகத் தராசின் மறுத்தட்டில் ஷங்கர் மென்னுணர்வை வைக்க, ஆச்சர்யமாக மென்னுணர்வு
அகங்காரத்தைத் தோற்கடிக்கவும் செய்கிறது. அப்பாவின் அச்சுறுத்தும் பெரிய மீசையைச்
சிறுவன் கத்திரித்தது போல். ஷங்கரது நேர்க்காணலை வாசிக்கும்போது அவர் அகங்கார
மறுப்பையும் அதற்கு மாற்றாகச் சுயம் கரைந்த தியான நிலையையும் திட்டமிடலுடனே
பிரதிநிதித்துவம் செய்வதையும் அதற்கு அவர் நகுலனை தன் முன்மாதிரியாக
ஏற்றிருப்பதையும் தெரிந்து கொள்கிறோம். “அந்த இடத்தில் சுயம்
நசிப்பு என்கிற அழகான ஒரு இடத்திற்கு அவர் (நகுலன்) போகிறார். சுயம் நசிப்பு
என்பது எதிர்மறை பொருளில் இல்லை. சுயத்தை மிதக்கவிடுவது. சுயத்தை அப்படியே கழட்டி போடுவது.அங்குதான்
கோட்ஸ்டாண்டு கவிதைகள் பிறக்கிறது.”
சுயமற்றிருப்பதை அரூபமாக மட்டுமில்லாமல் பௌதீகமாகவும் ஷங்கர்
இக்கவிதைகளில் சாதித்திருக்கிறார் என்பது இத்தொகுப்பின் மற்றொரு விசேஷ இயல்பு. அது
தற்காலத்தில் மிகுதியான பொருத்தபாடு கொண்டது என நான் எண்ணுகிறேன். ஷங்கருடைய
கவிதைகளில் உடலும் காமமும் இடம்பெற்றிருக்கும்போது அங்குப் புலன் உணர்ச்சி என்பதே
இல்லை. உடல் உறுப்புகள் பற்றி எழுதும்போதுக்கூட அவை பௌதீகமாக உருவம் பெறுவதில்லை.
மாறாக ஒளியைப் போல் நழுவி செல்கின்றன. உடலை அப்படி மிக இயல்பாகக் கடந்ததன் வழியாக
உறவுகளில் உடலை அடைவதற்கான –புறவயமான வென்றெடுத்தல் என்ற அர்த்தத்தில்-
மூர்க்கத்தையும் போராட்டத்தையும் ஷங்கர் நேர்த்தியாகத் தாண்டிவிடுகிறார். அதே
மாதிரி புலன் உணர்ச்சியை அழித்ததினால் அனைத்து உறவு நாடகங்களையும் உடைத்து கால இட
வெளியையும் இல்லாமல் செய்கிறார். அப்படியாக அவர் கவிதைகளில் உடலும்கூட
அபௌதீகமாகிறது.
கலையின் அடிப்படை நோக்கங்களில் ஒன்று உடலின் எல்லையை மீறும் அனுபவங்களை
அளிப்பது என்பார்கள். பிரபஞ்சத்தின் எல்லையின்மைக்கு
முன்னால் பருவடிவான மனித உடல் மண்துகள் போல் மிகச் சிறியது. இந்த உடலால்
அறியக்கூடியவையும் மிகச் சிறியவையே. இவ்வுலகின் எந்த இன்பத்தையும் மனித உடல்
மொத்தமாக அடைந்துவிட முடியாது. ஆனால் மனிதர்களுடைய ஆதார குணம் எல்லைக்குள்
அடங்குவதில்லை. அது விரிவடையத் துடிக்கிறது. மனிதனுக்குள் இருக்கும் இந்த
உயிர்த்துடிப்பை கலை தக்கவைத்து அதை மலரச் செய்ய முனைகிறது என்றால் நவீன உலகின்
வணிக மற்றும் கேளிக்கை கலாச்சாரம் அதைச் சுரண்டல் வயலாகப் பார்க்கிறது எனலாம். தன்
தேடலால் அவன் நிறைக்க வேண்டிய வெற்றிடத்தைச் சமகாலச் சூழல் பொருட்களால் நிரப்பச்
சொல்கிறது. என் நண்பர் ஒருவர் உரையாடலின்போது சொன்னார். “இன்றைக்கு மனிதனுக்கு
இருக்கும் மிகப் பெரிய சிக்கலே நுகர்வு கலாச்சாரம் வழங்கும் மகிழ்ச்சிக்கான
எண்ணற்ற வழிமுறைகளையும் உபகரணங்களையும் மொத்தமாக அனுபவிக்க ஒரு உடல் போதவில்லை
என்பதே”.
நாமும் எல்லா விளம்பர பலகைகளிலும் சிரிக்கும் முகங்களைத்தானே பார்க்கிறோம். எனக்கு
இன்னொரு நண்பனை தெரியும். குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையேனும் அவன் சில
ஆயிரங்கள் செலவழித்துப் புதிய காலணிகள் வாங்கிவிடுவான். .அவனுக்கு இரண்டு கால்களை
மட்டுமே அளித்தது இயற்கை இழைத்த மாபெரும் அநீதி என்று நான் எண்ணுவதுண்டு. இந்த
நிலையில்தான் ஷங்கரின் கவிதைகள் கலையின் அசலான சாத்தியக்கூறுகளைத் தைரியமாகத்
திறந்து காண்பிப்பதன் வழியே கலையின் அடிநாதமான பணியைப் -துய்த்தலற்ற மலர்தல்-
பூர்த்திச் செய்கின்றன. “இப்பூமியில் சற்றுமுன்
/ முளைத்திருக்கும் புற்கள் / அருவி / சாயங்காலம் / அலாதியாகச் சிவந்திருக்க்கும்
வீடுகள் / கடல் ஆசை / அலைகள் அழகு / இவற்றையெல்லாம் குதிரைகள் கடக்கின்றன / தொட
இயலாத துக்கம் எனக்கு”. இந்தத் தொடமுடியாத துக்கம் ஒரு மாயக் கணத்தில் கவிதைக்குள்ளேயே
தொடும் கட்டாயமில்லாத நிறைவாக அல்லது தொட்டாலும் தீராத முழுமையாகப் பேருருவம்
கொண்டு நம்மை அந்தரத்திற்கு உயர்த்துகிறது. நீங்கள் தரைமேல் நடப்பதற்கு
மட்டும்தான் உயர் ரகக் காலணிகள் பயன்பட முடியும் அல்லவா?
“பலூனில் நான் ஒரு கோடாரி செய்வேன்” என்று தொடங்கும் ஷங்கரின்
தலைப்பற்ற கவிதை இத்தொகுப்பிலுள்ள மிகச் சிறந்த கவிதைகளில் ஒன்று. ஷங்கருடைய கவிதைகளின்
சாரமாக நான் நினைப்பதை “பலூன் கோடாரி” எனும் படிமமாக மாற்றியே தொகுத்துக்
கொண்டிருக்கிறேன். பலூனும் கோடாரியும் இருவேறு கருவிகள். ஒன்றில் குழந்தைகளின்
நிஷ்களங்கமான சிரிப்பும் அழுகையும், இன்னொன்றில் மோதி பிளக்கும் அழுத்தமும்
அழிவின் நினைவும் புதைந்திருக்கின்றன. வரலாறும் வாழ்க்கையும் பலூனை கோடாரியாக
மாற்றும் ஏமாற்றத்தையே நமக்கு வழங்குகின்றன. முதலில் கவிஞனும்கூட “என் வன்மம் /
அவ்வளவையும் / அதில் / காற்றாய் நிரப்புவேன்” என்றே சொல்கிறான்.
ஆனால் கோடாரியால் செய்யக்கூடியது ஏதுமில்லை. நதியின் தேவதை தங்கத்திலும்
வெள்ளியிலும் கோடாரிகளை பெருக்கிக் கொடுத்தாலும். நீங்கள் அவற்றைக் கொண்டும்
திரும்பவும் மரங்களைத்தான் வெட்ட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அத்தனை கனமுடைய
கோடாரியால் என்றைக்குமே மண்ணை உதற முடியாது. அதை
உள்ளுணர்வால் கண்டடையும் கவிஞன் இறுதியில் சொல்கிறான். “என் கோடாரியுடன் /
நான் காற்றில் பறப்பேன்”. கோடாரி இப்போது மீண்டும் பலூனாகிவிடுகிறது. அது உயர உயர
பறக்கட்டும். ஒருபோதும் உடையாதிருக்கட்டும்.
இந்த அந்தி
-ஷங்கர்ராமசுப்ரமணியன்
முதிய கருவேப்பிலைச்செடியின் கீழே
ஓரு அந்தி கவிழ்கிறது.
மூலைக் கழிப்பறைக்கும்
ஈரப் புழக்கடைக்கும் இடையே நின்று
இச்செடி
உள்ளங்கையளவு சோகத்தை
இருட்டோடு சேர்த்து
அனைவருக்கும் பகிர்கிறது
காபிப்பொடி நீரில் அவியும் மணம்
துண்டிக்க
தன் பிராயக் கால வீட்டின் நினைவைத்
தொடரும் பெண்ணின் கண்ணீர்த்துளி
உலர்ந்த அவள் முகத்தில்
இந்த அந்தி சில்லிடும்.
குழந்தைகள்
விடைபெற்றுச் செல்லும்
ஓவ்வொரு பொழுதும்
நடுங்கும் முதுமையின் கரங்களில்
விசனத்துடன்
இந்த அந்தி கனக்கும்.
ஓரு கருப்பு வண்ணத்துப்பூச்சி
அந்தியின்
இடைவெளிகள் மேல்
பறக்கிறது.
கடைசித்துளி சிறுநீர் பிரியும் க்ஷணத்தில்
அந்தி
நம்மிடம் விடைபெறுவதும்
கருவேப்பிலைச் செடி
தன் இலைகளோடு
இருள்மசங்கலில்
மறைந்து கரைவதும்
பறவைகளின் உருமறைந்த இரைச்சலும்
ஓரு சின்னஞ்சிறிய
வழி அனுப்புதலின் பொருட்டா.
No comments:
Post a Comment