Wednesday, 20 April 2022

குணச்சித்திரன் பராக்

‘உடைந்து எழும் நறுமணம்’ தொகுப்பின் முன்னுரையை இசை இப்படித் தொடங்குகிறார்:  “என் கவிதைகளின் அடையாளமாகச் சொல்லப்பட்ட பகடி இயல்பு சமீபத்திய தொகுதிகளில் படிப்படியாகக் குறைந்து இதில் மேலும் அருகியுள்ளது.” ஒரு கவிஞரின் அடையாளம் ஏன் உருமாறுகிறது? அது முழுக்கமுழுக்க அவருடைய தேர்வுதானா? பொதுப்போக்காக மாறி பகடி சலிப்புத் தட்ட ஆரம்பித்திருக்கும் சூழலில் கவிஞர் தன் அடையாளத்தைத் துறக்க வேண்டியது காலத்தின் நிர்ப்பந்தமா? இப்படி வெவ்வேறு கேள்விகளை கேட்பது சுவாரஸ்யமான விசாரங்களுக்கு வழி வகுக்கும். ஆனால் மற்ற விஷயங்களைக் காட்டிலும், இந்தத் திசைமாற்றம் இசையின் இதுவரையிலான கவிதைகளைத் தொகுத்துப் புரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறது. திருப்பத்தில் நுழைவதற்கு முன்னால் வந்த வழியை ஒருதடவை சரி பார்த்துக் கொள்வதுபோல. மேலும், ஒரு குறிப்பிட்ட கவிஞரின் கவிதைகளைப் புரிந்துகொள்வது என்பது அக்கவிதைகள் உருவாகி நிலைப்பதற்கு காரணமாய் இருக்கக்கூடிய சூழலையும் புரிந்துக்கொள்வதுதான். 


O

நீர்வழி (சிறுகதை)

தண்ணீர் உள்ளே வந்துவிடுமோ என்று பயந்து பயந்து வீட்டுக் கதவை திறக்க வேண்டியிருந்தது. ஓரடிக்கு வாசல் சட்டத்தில் செங்குத்தாக பலகை வைத்து அடைத்திருந்தபோதும் பயம் இருந்தது. மழைநீர் வாசல் படி வரை வந்துவிட்டது. இரவு முழுக்க மழை அப்படிக் கொட்டித் தீர்ந்திருந்தது. மழை ஓய்ந்த அமைதியும் மழையையே நினைவூட்டியது. சிறுவன் பலகையை தாண்டி வீட்டைவிட்டு வெளியே வந்து தண்ணீரில் இறங்கினான். அரைக்கால் சட்டை போட்டிருந்ததால் நீரின் சில்லிடும் குளுமை அவன் கால் மயிர்களை சிலிர்க்க வைத்தது. படியில் இறங்கி சாலைக்கு வந்தபோது முட்டிக்காலுக்கு மேலே தண்ணீர் போனது. அவன் கூசியபடி சிரித்து அம்மாவை பார்த்தான். புடவையை லேசாக உயர்த்தி பிடித்தபடி காலைத் தூக்கி பலகையை கடந்து அம்மாவும் தண்ணீரில் இறங்கினாள். வீட்டைப் பூட்டிவிட்டு சிறுவன் கையை பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள். ஏரி வளர்ந்து அப்பகுதி தெருக்களை பாதி மூழ்கடித்திருந்தது. வீடுகள் தண்ணீரில் புதைந்திருந்தன. சாலையும் முங்கியிருந்தது. நிலம் கீழே நீரை உறிந்துத் தீர்க்க முயன்றுக் கொண்டிருந்தது. அம்மா ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக எடுத்து வைத்தாள். தண்ணீரில் என்னென்னவோ மிதந்து வந்தன. காட்டாமணி செடியின் பழுத்த இலை. பழையத் துணி. மரத் துண்டு. ஆளில்லாத தெர்மக்கோல் படகு. சிறுவன் அதை எட்டி பிடிக்க முயன்று தண்ணீரை வாத்துப் போல் அறைந்தான். தடுமாறி கிழே விழப் பார்த்தவனை அம்மா தூக்கி நிறுத்தினாள்.   

Friday, 25 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 15 - விடையருளப்படும் பிரார்த்தனை (அன்னா காமியன்ஸ்கா)

 செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “பற்றறுத்தல்” (non attachment) எனும் பிரிவில் போலீஷ் கவிஞரான அன்னா காமியன்ஸ்காவின் (1920-1986) “விடையருளப்படும் பிரார்த்தனை” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. 

o

என் வலைத்தளத்தில் வெளியான கவிதை மொழிபெயர்ப்புத் தொடர் இத்துடன் முடிவு பெறுகிறது. கடைசி கவிதை பிரார்த்தனையாக இருப்பதே இயற்கை. 

o

“அன்னா காமியன்ஸ்கா ஒரு கிறிஸ்தவர். பழைய ஏற்பாட்டோடும் புதிய ஏற்பாட்டோடும் வாழ்க்கையை ஆழமாய் முடிச்சிட்டுக் கொண்டவர். தன் முதிய வயதில் அவர் கூடுதல் அமைதியையும் கடவுள் உருவாக்கிய உலகின் மீதான ஏற்பையும் அடைந்தார். இதை மிக நல்ல கவிதையாய் நான் கருதுகிறேன்” – செஸ்லா மிலோஷ்


Friday, 18 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் – 14 - எர்னஸ்ட் ஹெமிங்வேயிற்கு ஓர் இரங்கற்பா (தாமஸ் மெர்டன்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “மக்கள் மத்தியில் மக்கள்” (people among people) எனும் பிரிவில் அமெரிக்க டிராப்பிஸ்ட் துறவியான தாமஸ் மெர்டனின் "எர்னஸ்ட் ஹெமிங்வேயிற்கு ஓர் இரங்கற்பா" கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. 

"அமெரிக்க தேசம் கென்டக்கி மாகாணம் கெத்செமினே டிராப்பிஸ்ட் மடாலயத்தில் துறவியாக சேர்வதற்கு முன்பாகவே தாமஸ் மெர்டன்  எழுத்தாளராக இருந்தவர். எனவே தன் தலைமுறையின் எழுத்து நடையை வடிவமைத்த முன்னோடிகள் மேல் இயல்பாகவே அவருக்கு மரியாதை இருந்தது. உரைநடையில் மெர்டன் மேல் தீவிரப் பாதிப்பை செலுத்திய எர்னஸ்ட் ஹெமிங்வே அறுபத்தி மூன்று வயதில் தற்கொலை செய்து இறந்தார். அப்போது ஹெமிங்வேயின் ஆன்மாவுக்கு மெர்டன் செலுத்திய அஞ்சலி என்பது தன் இளமைப் பருவத்துக்கு அவர் கூறிய பிரிவு விடையும்கூட. அப்படியாக 'நான்' எனும் சாகசக்காரனுக்கு அவர் விடை கொடுத்தார். அந்த 'நான்' எனும் நபரிடமிருந்து தப்புவதற்காகத்தான், அவர்  மடாலயத்தில் புகலிடமே தேடினார்" - செஸ்லா மிலோஷ்


Tuesday, 15 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 13 – நான் தீயை அஞ்சுகிறேன் (அன்னா ஸ்விர்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “வரலாறு” (history) எனும் பிரிவில் போலீஷ் கவிஞரான அன்னா ஸ்விர்ரின் (1909 – 1984) “நான் தீயை அஞ்சுகிறேன்”கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. எளிமையான குறுங்கவிதைகளை தேர்வு செய்து சிறிய எண்ணிக்கையில் நான் செய்திருக்கும் இந்த மொழிபெயர்ப்புகளில், அன்னா ஸ்விர் மட்டும் மூன்று தடவை இடம்பெற்றிருக்கிறார். இந்த புத்தகம் வழியே நான் கண்டுகொண்ட, எனக்கு மிக நெருக்கமாக தோன்றுகிற கவிஞர் அவர். 

“வார்சா நகரில் தீ பற்றிக் கொள்கிறது. முதலில் ஜெர்மானியர்கள் உருவாக்கிய கெட்டோவையும் பிறகு மீதி நகரையும் தீ விழுங்குகிறது. தீ பற்றிய தெருக்கள் வழியே ஒரு பெண் தனியாக ஓடுவது தன்னளவிலேயே ஓர் உருவகம். கட்டுப்படுத்தும் சூழ்நிலைக்கான உருவகம்” – செஸ்லா மிலோஷ்