Tuesday 6 October 2020

மாயமாகும் நிலையின்மை

இலக்கியம் என்பது ஒருவகையில் நினைவுகளை மீட்டெடுக்கும் செயல். ஆனால் மெர்லின் ராபின்சன் சொல்வதுப் போல் நினைவுகள் தன்னிச்சையானவை. துண்டுப்பட்டவை. எனவே துல்லியமாக நினைவை மீட்டெடுப்பது யாருக்கும் சாத்தியம் கிடையாது.  எப்படி புறயதார்த்தத்தை மனிதர்கள் அறிந்துவிடவே முடியாதோ அதுப் போல. எனவே நினைவுகளை மீட்டெடுக்கும் முகாந்திரத்தில் இலக்கியம் நினைவுகளை கட்டியெழுப்புகிறது எனலாம். நினைவுகள் வழியே உணர்ச்சிகளை; விழுமியங்களை; கனவுகளை.  மார்சல் ப்ரூஸ்டின் நாவலான “தொலைந்த காலத்தைத் தேடி” (In search of lost time) உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நவீன காவியம் என்று அழைக்கப்படும் அந்த நூல் நினைவையும் காலத்தையும் பற்றிய மகத்தான ஆக்கங்களில் ஒன்று. ஏழு பகுதிகளை உடைய அத்தொடரில் முதல் பகுதியை மட்டுமே நான் வாசித்திருக்கிறேன் (எழுத்தாளர் லிடியா டேவிஸ் மொழிபெயர்ப்பு). கவித்துவத்திற்காகவும், சிக்கலான உணர்ச்சி நிலைகளின் வெளிப்பாட்டிற்காகவும் அறியப்பட்டும் அந்த நூல் மொழியின் கடினத்தன்மைக்காகவும் பெயர் பெற்றது. காற்புள்ளிகள், அரைப்புள்ளிகள் ஆகியவற்றின் இணைப்பில் வளர்ந்துக் கொண்டே போகும் நீண்ட வாக்கியங்கள், அடைப்புக்குறிக்குள் நீளும் பத்திகள் என பின் தொடர்வதற்கு கஷ்டமான உரைநடையுடையவர் ப்ரூஸ்ட். ஆனால் நினைவுகள் வழியே உலகை கட்டியெழுப்புவது என்பது நினைவுகளின் தொடர்பின்மைகள், காலக் குழப்பங்கள், உருமாற்றங்கள், நிறப் படிதல்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியதே. எனவே அந்த நடையும் பௌதீக நியதிகளை மீறிய மாயத்தன்மையோடு இருக்கிறது.