Tuesday 6 October 2020

மாயமாகும் நிலையின்மை

இலக்கியம் என்பது ஒருவகையில் நினைவுகளை மீட்டெடுக்கும் செயல். ஆனால் மெர்லின் ராபின்சன் சொல்வதுப் போல் நினைவுகள் தன்னிச்சையானவை. துண்டுப்பட்டவை. எனவே துல்லியமாக நினைவை மீட்டெடுப்பது யாருக்கும் சாத்தியம் கிடையாது.  எப்படி புறயதார்த்தத்தை மனிதர்கள் அறிந்துவிடவே முடியாதோ அதுப் போல. எனவே நினைவுகளை மீட்டெடுக்கும் முகாந்திரத்தில் இலக்கியம் நினைவுகளை கட்டியெழுப்புகிறது எனலாம். நினைவுகள் வழியே உணர்ச்சிகளை; விழுமியங்களை; கனவுகளை.  மார்சல் ப்ரூஸ்டின் நாவலான “தொலைந்த காலத்தைத் தேடி” (In search of lost time) உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நவீன காவியம் என்று அழைக்கப்படும் அந்த நூல் நினைவையும் காலத்தையும் பற்றிய மகத்தான ஆக்கங்களில் ஒன்று. ஏழு பகுதிகளை உடைய அத்தொடரில் முதல் பகுதியை மட்டுமே நான் வாசித்திருக்கிறேன் (எழுத்தாளர் லிடியா டேவிஸ் மொழிபெயர்ப்பு). கவித்துவத்திற்காகவும், சிக்கலான உணர்ச்சி நிலைகளின் வெளிப்பாட்டிற்காகவும் அறியப்பட்டும் அந்த நூல் மொழியின் கடினத்தன்மைக்காகவும் பெயர் பெற்றது. காற்புள்ளிகள், அரைப்புள்ளிகள் ஆகியவற்றின் இணைப்பில் வளர்ந்துக் கொண்டே போகும் நீண்ட வாக்கியங்கள், அடைப்புக்குறிக்குள் நீளும் பத்திகள் என பின் தொடர்வதற்கு கஷ்டமான உரைநடையுடையவர் ப்ரூஸ்ட். ஆனால் நினைவுகள் வழியே உலகை கட்டியெழுப்புவது என்பது நினைவுகளின் தொடர்பின்மைகள், காலக் குழப்பங்கள், உருமாற்றங்கள், நிறப் படிதல்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியதே. எனவே அந்த நடையும் பௌதீக நியதிகளை மீறிய மாயத்தன்மையோடு இருக்கிறது.


இந்த நாவல் பற்றி பேசும்போது “மேடலின் தருணம்” எனும் சொற்றொடர் அடிக்கடி குறிப்பிடப்படும். மேடலின் கேக் சாப்பிடுகையில் நாவலின் நாயகன் அதன் ருசி வழியே தன் கடந்தகாலத்தை தொட்டறிவான். ஆனால் அந்த ருசிலிருந்து கிளைப் பிரியும் உலகம் வெளியே இருந்து வரவில்லை. தன்னுள்ளிருந்தே பிறக்கிறது என்பதே அவனுடைய கண்டடைதல். அங்கிருந்தே ப்ரூஸ்ட்டும் இந்த நாவலை எழுதத் தொடங்குகிறார். பிரசித்தி பெற்ற இக்காட்சி, தன்னிச்சையான நினைவுகளுக்கு (Involuntary memory) உதாரணமாக கூறப்படுகிறது. உளப்பகுப்பாய்வில்கூட இதை பயன்படுத்துகிறார்கள். நேற்று திடீரென்று ப்ரூஸ்டின் மேடலின் தருணம் ஞாபகத்தில் வர அக்காட்சியை மட்டும் மொழிபெயர்க்கலாம் என்று தோன்றியது.



நாவலில் இருந்து,

இடைப்பட்ட வருடங்களில் காம்ப்ரே பற்றிய ஒரு நினைவும் என்னில் உயிர்க் கொண்டிருக்கவில்லை. குளிர்காலத்தில் ஒரு நாள் வீட்டுக்கு வந்தபோது என்னுடல் குளிர்ந்திருப்பதைக் கண்ட அம்மா எனக்கு தேநீர் அளித்தார். வழக்கமாக நான் தேநீர் அருந்துவதில்லை. எனவே முதலில் மறுத்தாலும் பிறகு எந்த விசேஷக் காரணமும் இல்லாமல் என் மனதை மாற்றிக் கொண்டேன். யாத்ரீகனின் அலங்கரிக்கப்பட்ட ஸ்காலப் ஷெல் போல் தோற்றமளித்த, ‘பெடிடெஸ் மேடலின்ஸ்’ என்று அழைக்கப்படும் உப்பலான சிறிய கேக்குகளுக்கு அம்மா அப்போது சொல்லியனுப்பினார். சோர்வூட்டும் மறுநாளுக்கான காத்திருப்பிலும், மந்தமான பொழுதுக்கு பிந்தைய களைப்பிலும் எந்திரகதியில், துண்டு கேக் முங்கிய ஒரு தேக்கரண்டி தேநீரை உதட்டினருகே சீக்கிரமாக கொண்டு வந்தேன். அந்த சூடான திரவமும் அதில் ஒட்டியிருந்த துகள்களும் என் நாக்கை தொட்ட கொஞ்ச நேரத்திலேயே என் உடம்பில் ஒரு நடுக்கம் பரவ தேநீர் பருகுவதை நிறுத்தினேன் – அங்கு நடந்துக் கொண்டிருந்த அசாதாரணமான மாற்றங்களை கவனிக்கும் பொருட்டு. தன் தொடக்கம் பற்றிய அறிதல் இல்லாத தனித்தனியே பிரிந்திருக்கக்கூடிய அழகிய இன்பமொன்று என் புலன்களை பற்றிக் கொண்டது. வாழ்க்கையின் விசித்திரங்கள் உடனடியாக பொருட்டின்மைக்குள் விழ, அதன் அழிவுகள் தீங்கிழந்தன, அதன் நிலையின்மை மாயமானது – இந்த புதிய உணர்ச்சிநிலை, விலைமதிப்பில்லாத சாரம் ஒன்றினால் காதல் என்னை நிரப்புவதுப் போன்ற விளைவை உண்டு செய்தது; அல்லது இந்த சாரம் என்னுள் நிறையவில்லை, நானே அதுவாகியிருந்தேன். சாதாரணமாகவும், தற்செயலகாவும், மரணிக்க போவதாகவும் நான் உணர்வது அப்போது நின்றுவிட்டது.  இந்த ஆற்றல்மிகு மகிழ்ச்சி எப்போது என்னிடம் வந்தது? தேநீர் மற்றும் கேக்கின் ருசியோடு அது இணைந்திருப்பது பற்றிய போதம் எனக்கு இருந்தாலும், அது அந்த சுவைகளையே முடிவில்லாமல் கடந்து செல்வதால் அவ்வியல்புகளோடு மட்டும் பிணைந்திருக்கவில்லை. அது எப்போது வந்தது? அது எதை முன்நிறுத்துகிறது? நான் எப்படி பிரிந்திருந்து அதை வரையறுப்பது?

இரண்டாவது வாய் பருகியபோது, அதில் முதலாவதைக் காட்டிலும் கூடுதலாக எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. மூன்றாவதோ இரண்டாவதைக் காட்டிலும் குறைவுப்பட்ட அனுபவத்தையே எனக்கு அளித்தது. இது நிறுத்துவதற்கான நேரம். இந்த பானம் தன் மந்திரத்தன்மையை இழந்துக் கொண்டு வருகிறது. என் தேடலுக்குரிய பொருள், அந்த உண்மை, இந்த கோப்பையில் இல்லை; என்னுள்ளே இருக்கிறது என்பது பட்டவர்த்தனம். என்னில் எழுப்பியுள்ளபோதும் தன்னில் அதை புரிந்துகொள்ளாத தேநீர் அதே சாட்சியத்தை, குறைந்துக் கொண்டே வரும் வலிமையோடு, முடிவில்லாமல் திரும்ப நிகழ்த்த மட்டுமே முடியும். அதை என்னாலும் பொருள் கொள்ள முடியவில்லை. ஆனால் குறைந்தபட்சம், திரும்பவும் அந்த தேநீரை அழைத்து வரச் சொல்லி அதை கண்டுபிடிக்க முடியும் என நம்பினேன். கச்சிதம் குலையாது, அதே நிகழ்காலத்தில். என் அறிவு விருத்திக்காக. கோப்பையை கீழே வைத்து என் மனதை ஆராய்ந்தேன். அது தானாகவே உண்மையை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் எப்படி? மனம்தான் எவ்வளவு பெரிய நிச்சயமின்மையை நரகத்தை அறிகிறது - தன்னில் ஒரு பகுதி தன் எல்லைகளுக்கு வெளியே கைவிடப்பட்டிருப்பதை உணரும்போது; தேடிக் கொண்டிருப்பவர் தேடிக் கடக்க வேண்டிய இருண்ட பிரதேசமாக தானே மாறும்போது; அங்கே அதன் கருவிகள் யாவும் செயலிழந்துவிடும்போது. தேடுதல்? இல்லை. அதைவிடவும் மேலான ஒன்று தேவை - படைத்தல். ஏதோவொன்றை, அது மிகத் தொலைவில் இல்லை, முகத்துக்கு முகம் சந்தித்தல். அது மாத்திரமே இதற்கு உருவத்தையும் உடலையும் கொடுக்க முடியும். அது மாத்திரமே இதை வெளிச்சத்துக்கு கொண்டு வர முடியும்.  

தன் இருப்பு பற்றி தர்க்கப்பூர்வமாக எந்த ஆதாரத்தையும் கொண்டு வராத, மகிழ்ச்சியான உணர்ச்சியை மட்டும் மிச்சம் வைத்துள்ள, தன் முன் பிற பிரக்ஞை நிலைகள் எல்லாவற்றையும் உருகி மறைய வைக்கிற, ஞாபகத்தில் தொலைந்த இந்த நிலை என்னவாக இருக்க முடியும் என்று என்னை நானே கேட்க ஆரம்பித்தேன். அதை மறுபடியும் தோன்றச் செய்ய நான் முடிவெடுத்தேன். என் சிந்தனைகளை தடம் பிடித்து அந்த முதல் தேக்கரண்டி தேநீர் பருகிய தருணத்துக்கு கொண்டுச் சென்றேன். புது வெளிச்சத்தால் ஒளிப் பெறாத அதே பழைய நிலையை நான் கண்டுபிடித்தேன். விரைந்து மறையும் உணர்ச்சிநிலையை மறுபடி தொடரவும், அதை கைப்பற்றவும் கூடுதலாக ஒரு முயற்சி எடுக்கும்படி மனதைத் தூண்டினேன். அந்த பாதையில் எந்த குறுக்கீடும் நேராதபடி ஒவ்வொரு தடையையும், ஒவ்வொரு கூடுதல் கருத்தையும் நான் அடைத்தேன். என் காதுகளை மூடிக் கொண்டு அடுத்த அறையில் இருந்து வரும் ஓசைகளில் கவனம் சென்றுவிடாதபடி பார்த்துக் கொண்டேன். பிறகு மனம் தோல்வியில் சோர்வடைவதை உணர்ந்து அதுவரை மறுத்திருந்த சிதறல்களில் திளைக்கும்படி அதை மடைமாற்றினேன். உச்சக்கட்ட முயற்சியை முன்னெடுப்பதற்கு முன்னால் பிற விஷயங்கள் பற்றி யோசிக்கவும், ஓய்வெடுத்து தன்னை புதுப்பித்துக் கொள்ளவும் மனதுக்கு அவகாசம் அளித்தேன். பிறகு, இரண்டாவது தடவையாக அதன் முன்னால் எல்லாவற்றையும் துடைத்து ஒரு காலி இடத்தை உருவாக்கினேன். மனக் கண் முன்பாக முதல் தேக்கரண்டி சுவையை நிறுத்தியபோது என்னுள் எதுவோ துவங்குவதை உணர்ந்தேன். தனக்குரிய இடத்தை மிச்சம் வைத்துவிட்டு மேலெழ முயற்சிக்கும் ஏதோவொன்று. மிகுந்த ஆழத்தில் நங்கூரம்போல் புதைந்திருக்கும் ஏதோவொன்று. அது என்னவென்று இன்னமும் எனக்கு தெரியவில்லை. ஆனால் அது மெல்ல மேலெழுவதை என்னால் அறிய முடிகிறது. அதற்கு தோன்றும் எதிர்ப்புகளை என்னால் அளவிட முடிகிறது. பிரம்மாண்டமான பகுதிகள் இடம்பெயர்வதன் எதிரொலியை என்னால் கேட்க முடிகிறது”

No comments:

Post a Comment