Monday 20 December 2021

ஆழத்தின் விதிகள்

செந்தில் ஜெகன்னாதனின் சிறுகதைகளை இணையத்தில் வாசித்தேன். தமிழ்ச் சூழலுக்கு நன்கு பரிச்சயமான வடிவத்தையே இக்கதைகள் வெளிப்பாட்டில் தேர்ந்திருக்கின்றன. பழக்கமானவையாகத் தோன்றுவதே இக்கதைகள் சார்ந்து வாசகரில் எழக்கூடிய முதல் அபிப்ராயமாகவும் இருக்கலாம். பெரும்பாலும் மனிதர்களை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் இக்கதைகளில் சமகாலப் புனைவுக் கூறுகள் அதிகம் இடம் பெறவில்லை. வரலாற்றுப் பார்வை, புனைவின் இயங்குமுறை சார்ந்த நோக்கு, தொன்ம மறுஉருவாக்கம், கலாச்சாரத் தலைகீழாக்கம், படிமச் செறிவு, உன்மத்த மனநிலை போன்ற அம்சங்களை இவற்றில் காண முடிவதில்லை. தோராயமாகச் சொன்னால் இவை பரிசோதனைக் கதைகள் கிடையாது. இதை ஒரு குறைபாடாக சொல்ல முடியாது. நோக்கமில்லாத பரிசோதனைகளைவிடவும் நேரடியாக எழுதப்படும் கதைகள்அவை பழைய வடிவில் இருந்தாலும்- மேலானவை என்பது என் எண்ணம். அந்த வகையில் இவை இயல்பான வடிவில் இருப்பதும் சாதகமானதே. எனினும் இக்கதைகள் அழகியல் ரீதியாகப் பூரணம் அடையாதிருப்பதனால் வாசகரில் பாதிப்பு ஏற்படுத்தத் தவறுவதாகப் படுகிறது. எனவே அவற்றில் அழகியல் ரீதியாக நான் உணரக்கூடிய இடைவெளிகளை முன்வைக்க விரும்புகிறேன். அதற்கு முன்னால் அழகியல் பற்றிய என் வரையறைகளையும் இலக்கிய அழகியல் வாசகரில் எப்படிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் சற்று விரிவாகவே பேச வேண்டும். படைப்பிலக்கிய வாசிப்பை நான் தொகுத்துப் புரிந்துகொள்ள அது ஒரு வாய்ப்பாக அமையக்கூடும்.