Tuesday 3 April 2018

பாரஞ்சுமக்கிறவர்கள்

"ஒரு பாவி முழுமனதுடன் தன்னை நோக்கி பிரார்த்தனை செய்வதை ஒவ்வொருமுறை ஆகாயத்திலிருந்து பார்க்கும்தோறும் கடவுள் பேருவகை அடைகிறார். தன் குழந்தை முதன்முதலாகச் சிரிப்பதைக் காணும் அன்னையைப் போல்" 

- தஸ்தாவெய்ஸ்கி
 

மனித சமூகம் என்பது பல்வேறு நம்பிக்கைகளால் ஆனது; பல்வேறு மதிப்பீடுகளால் பிணைக்கப்பட்டது. ஆனால் இந்த நம்பிக்கைகள் என்பவையும் மதிப்பீடுகள் என்பவையும் உண்மையில் என்ன? அவற்றுக்குப் புறவயமான இறுதி விளக்கங்கள் உண்டா? அறம், நீதி, மன்னிப்பு, காதல் என நாம் நம் சமூகக் கதையாடல்களிலும் அன்றாடப் பேச்சுவழக்கிலும் பயன்படுத்துகிற எந்த அரூப கருத்துக்கும் திட்டவட்டமான வரையறைகளோ நிரந்தரமான விதிகளோ கிடையாது என்றே சொல்ல வேண்டும். புலன்களால் தொட்டு அறிய முடிகிற பொருட்களைப் போல் அவை மீற முடியாத அறிவியல் நியதிகளால் கட்டப்பட்டவை அல்ல. அணுக்களை பிளப்பதற்கும், இணைப்பதற்கும் அணுக்களின் ஆற்றலை கணிப்பதற்கும் நம்மிடையே அறிவியல் பகுப்புகள் உண்டு; முடிவுகள் உண்டு. ஆனால் குற்ற உணர்ச்சிக்கோ அல்லது மகிழ்ச்சிக்கோ அப்படி எந்த அளவீடும் கிடையாது. எனினும் நாம் விடாமல் அவற்றைப் பற்றிக்கொண்டிருக்கிறோம். அர்த்தம், லட்சியம் போன்ற இன்னப்பிற அரூப கருத்துக்களையும் அவற்றின் வழியாக உருவாக்கிக் கொள்கிறோம். 




பொதுவான விதிமுறைகள் இல்லாததனாலேயே இந்த நம்பிக்கைகளும் மதிப்பீடுகளும் தர்க்கம் மற்றும் காரணியத்துக்கு அப்பால் இருக்கின்றன. தோராயமாக இவற்றை இரு எதிர் நிலைகள் என்றே அழைக்கலாம். இவ்விரண்டுத்தரப்புகளுக்கும் இடையேயான முரணாலும் இடைவெளியாலும் தஸ்தாவெய்ஸ்கி பீடிக்கப்பட்டிருந்தார் என்றே கூறவேண்டும். அவரது "நிலவறைக்குறிப்புகள்" குறுநாவல் மனிதன், காரணியம் என்கிற இருமையை விசாரனைக்கு ஆட்படுத்துவதன் வழியே ஒரு தனிமனிதன் இயற்கை விதிகளின் எல்லைக்குட்பட்டவன் அல்ல என்பதையும் அவன் சுதந்திரமானவன் என்பதையும் நிறுவ முயற்சிக்கிறது; கூடவே தனிமனிதன் விதிகளுக்கு எதிரா மூர்க்கமாத் தீர்மாணத்துடன் இருப்பதால் அவன் செயலற்ற கையறு நிலையில் இருப்பவன் என்பதையும் அது அடிக்கோடாகச் சுட்டுகிறது. அசடன் நாவலில் இதே உரையாடல் அல்லது விவாதம் வேறொரு பரிமாணம் எடுத்து தனி மனிதன் என்பதிலிருந்து சமூகம் என்கிற அடுத்த அடுக்கிற்கு நகர்ந்திருப்பதையும், ஊடே அது நிலவறை குறிப்புகளை உட்செரித்துத் தன்னில் ஒரு பகுதியாக மாற்றியிருப்பதையும் நாம் காண்கிறோம். "தற்கொலை மட்டுமே என் சுயவிருப்பத்தால் (இயற்கையை மீறி) நானே தொடங்கி முடிக்கக்கூடிய ஒரே செயல்" என்று கூறுகிற இப்போலித்தில் நிலவறை மனிதனின் சாயலை நிச்சயம் அடையாளம் காணாமல் இருக்க முடியாது. இப்போலித் மட்டும் இன்னும் வாழ அனுமதிக்கப்பட்டிருந்தால் அவனும் நிலவறையின் இருட்டில்தான் தன் கதையைச் சொல்லத் தொடங்கியிருப்பான்.