Sunday 25 December 2022

வலி, சபலம் மற்றும் மரணம்

(தன் "கிறிஸ்துவின் இறுதி சபலம்" நாவலுக்கு நீகாஸ் கசந்த்சாகீஸ் எழுதிய முன்னுரை)

கிறிஸ்துவின் இரட்டை இயல்பானது எப்போதுமே எனக்கு புரிந்துகொள்ள முடியாத மர்மமாகவே இருந்துள்ளது. கடவுளை அடைவதற்கான அல்லது கடவுளிடம் திரும்பி அவரோடு தன்னை அடையாளப்படுத்துவதற்கான மனிதனின் ஏக்கம் என்பது அடிப்படையான மானுட இயல்பாகவும் அதே நேரம் அதிமானுட அம்சத்துடனும் இருக்கிறது. கடவுளுக்கான நினைவேக்கத்தினை ஒரே சமயத்தில் மர்மமானதாகவும் வெளிப்படையானதாகவும் அறிகிறேன். அது என்னில் பெரிய காயங்களையும் பெருக்கெடுத்து பாயும் வசந்தங்களையும் திறக்கிறது.



இளமையிலிருந்தே என் ஆத்துமாவிற்கும் மாமிசத்திற்கும் நடுவே கருணையற்ற யுத்தம் இடைவிடாமல் நடக்கிறது. அந்த போராட்டமே என் ஆதார வேதனையாகவும், என் மகிழ்ச்சிகளுக்கும் துயரங்களுக்குமான தோற்றுவாயாகவும் இருக்கிறது.

Tuesday 13 December 2022

இடைவெளியும் தொடர்ச்சியும்

1.

 மலையாள விமர்சகர் பி.கெ.பாலகிருஷ்ணன் சிறுகதைக்கும் நாவலுக்குமான வேறுபாடு பற்றி சொல்லும்போது சிறுகதைக்கு ஒரு திட்டவட்டமான வடிவம் இருப்பதால், நல்ல சிறுகதை எழுதுவது எளிது என்றும் நாவல் வடிவமற்ற வடிவம் கொண்டிருப்பதால் அதிலேயே எழுத்தாளனின் மேதமையை கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறுகிறார். இதுவொரு சுவாரஸ்யமான அவதானிப்பு. சிறுகதை வெவ்வேறு வடிவங்களை தேர்ந்துக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்துக்கு இது பொருத்தமான அவதானிப்பா என்பது வேறு கேள்வி. ஆனால் கட்டாயம் சுவாரஸ்யமான அவதானிப்பு. யோசித்து பார்த்தால் ஆரம்பம் முதலாகவே சிறுகதைகள் சார்ந்து பல்வேறு சூத்திரங்கள் இலக்கியச் சூழலில் நிலைபெற்றிருப்பது ஞாபகம் வருகிறது. சிறுகதை என்பது ஒரே அமர்வில் வாசிக்கும் வகையில் இருக்க வேண்டும் எனும் எட்கர் ஆலன் போவின் புகழ்பெற்ற கூற்று, சிறுகதை என்பது ஒரு சிறு சம்பவம் என புதுமைப்பித்தன் சொன்னது - இப்படி சிறுகதைகள் சார்ந்து தெளிவாக வகுத்தளிக்கப்பட்ட பல வரையறைகள் படிக்க கிடைக்கின்றன. ஒருவிதத்தில் நவீன இலக்கியத்தில் சிறுகதைக்கு மட்டுமே குண அடிப்படையின்றி, வடிவ அடிப்படையில் இலக்கணம் மொழியப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். அதனால்தான் சுஜாதாவால்சிறுகதை என்பது ஒரு முரண்பாட்டைச் சித்தரிக்கும் உரைநடை இலக்கியம்என்று வகுத்துக் கொண்டு முரண்பாடுகளையும் திருப்பங்களையும் மட்டுமே முன்னிலைப்படுத்தி பல நல்ல கதைகளையும், பல மோசமான கதைகளையும் ஒரே நேரத்தில் எழுத முடிந்திருக்கிறது.