Sunday 16 June 2019

அச்செடுக்கமுடியாத இடைவெளிகள்



நாவல், சிறுகதை ஆகிய இரு புனைவு வடிவங்களுக்கும் நடுவிலான வேறுபாடு குறித்து பலரும் பல விதங்களில் பேசியிருக்கிறார்கள். நாவலை இதிகாசத்துடனும் சிறுகதையை கவிதையுடனும் ஒப்பிடுவது பரவலான வழக்கம். ["சிறுகதையை உரைநடை புனைவின் கவிதை என்றும் நாவலை அதன் இதிகாசம் என்றும் நாம் சொல்லலாம்" - வில்லியம் பாய்ட்]. இரண்டு வடிவங்களுடைய நோக்கங்களையும் இந்த ஒப்பீடு துல்லியமாகவே வரையறை செய்கிறது. நாவலில் பெரும்பாலும் விடுபடல்கள் இருப்பதில்லை. வாழ்க்கை அதன் ஒழுங்கின்மையோடு அப்படியே பதிவாகிறது. பல்வேறு முகங்களும் அனுபவச் சிதறல்களும் தடையின்றி குவிகின்றன. பெரிய நாவல்கள் என்றில்லை. பக்க அளவில் சிறிய நாவல்கள்கூட இந்த உத்தேசத்துடனே எழுதப்படுகின்றன. "ஒரு நாள்" நாவலை உதாரணமாக கூறலாம். க.நா.சுவின் இந்த நாவல் அளவில் சிறியது. பெங்களூரிலிருந்து சென்னை வரும் பயணத்தில் சமோசா டப்பாக்கள் நிரம்பிய ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வருவதற்குள் பாதி நாவலை கடந்துவிடலாம். எனினும் அந்நூல் நாவலுக்கான இலக்கணத்துடனே இருக்கிறது. ஒரே நாளில் நடக்கும் கதை என்றாலும் சாத்தனூர் அக்கிரகாரத்தை சேர்ந்த மனிதர்களின் வாழ்க்கையை முழுமையாக சொல்லிவிட அந்நாவல் முற்படுகிறது. க.நா.சு அவசர அவசரமாக சொல்லிச் செல்லும்போதும் வாழ்க்கையை பல கோணங்களில் நின்று பார்க்கும் முயற்சி அதில் வெளிப்படுகிறது. பலவீனமான தத்துவத் தேடலைக் கடந்தும் இந்நாவல் இனிய வாசிப்பனுவத்தை அளிப்பது இப்பண்பினாலேயே.  தியாகமும் வஞ்சகமுமாக எத்தனை விதமான மனிதர்கள் என்றும் எல்லாவற்றையும் பார்த்தபடி காவேரி எப்போதும் ஓடிக் கொண்டேயிருக்கிறது என்றுமே நாவலின் முடிவில் வியப்படைகிறோம். 

நாவல் எனும் வடிவத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாக இதை குறிப்பிடலாம். தன்னகத்தே எல்லா நிறங்களையும் கொண்டிருப்பது. உயரமான இல்டத்தில் நின்று செல்பேசியில் பனோரமா வியூ போட்டு பார்ப்பது போல்தான். தொட்டுத் தள்ளி ஒரே நேரத்தில் எல்லா திசைகளையும் பார்க்க முடிவதன் திகைப்பையே நாவல் வழங்குகிறது. ஆனால் சிறுகதையில் இருப்பது ஒட்டுமொத்தத்தின் திகைப்பு அல்ல. மாறாக நுட்பங்களின் அமைதி. நாவல் விவாதிக்கிறது; பரிசீலிக்கிறது. சிறுகதையோ தொலைந்த இடத்தில் ஒரு குட்டி பொருளை தேடி எடுக்கிறது. அந்தியில் திரைச்சீலையை விலக்கி வீட்டுக்குள் வெளிச்சம் நுழைய அனுமதிக்கிறது. சுந்தர ராமசாமியின் புகழ்பெற்ற “ஜன்னல்” கதையில் வரும் நோயுற்ற பையனால் தன் படுக்கைக்கு அருகே இருக்கும் ஜன்னல் வழியாக மட்டுமே உலகத்தை அறிய முடியும். ஜன்னல் வழியே கேட்கும் சப்தங்கள் மூலமாகவே அவன் வெளி உலகை கற்பனை செய்து கொள்கிறான். ஜன்னல் வழியே பார்க்கும் மலர் மூலமாகவே அவன் அழகை உணர்கிறான். அந்த ஜன்னல் இல்லாவிட்டால் அவனால் வாழ்க்கையை அர்த்தபடுத்திக் கொள்ள முடியாது. ஏனென்றால் ஜன்னலை விடுத்தால் அங்கு எஞ்சியிருப்பவை நோயும் இருட்டுமே. கற்பனையால் நிரப்பி வாழ்க்கைக்கு பொருள் அளிக்க அந்த ஜன்னலே அவனுக்கு உதவி செய்கிறது. சிறுகதைகளும் அப்படியான ஜன்னல்களையே நமக்கு அமைத்துத் தருகின்றன. ஜன்னலுக்கு வெளியே ஒற்றை மலரை வரைகின்றன. அந்த ஒரு பூவில் இருந்து நாம் அழகு எனும் பூரணத்தை உணர்ந்து கொள்கிறோம். அதனால்தான் புதுமைபித்தன் “சிறுகதை என்பது வாழ்க்கையின் சிறிய சாளரங்கள்” என்கிறார்.
 

இருப்பதிலிருந்து இல்லாததை கற்பனை செய்ய மட்டும் அல்ல; இருப்பதை அதன் இடைவெளிகளோடு சரியாக புரிந்துகொள்ளவும் நமக்கு கதைகள் தேவைப்படுகின்றன. கதைகளாக மாற்றாதவரை நம் அன்றாட அனுபவங்களையே நம்மால் சரியாக உள்வாங்கி புரிந்துகொள்ள இயலாது. நேர்ப்பேச்சில்கூட எல்லா நிஜ சம்பவங்களையும் கதைகளாகவே நாம் இன்னொருவரிடம் கூறுகிறோம். முரண்பாடு, உச்சக்கட்டம் முதலிய அனைத்து கதைக்கூறுகளும் பேச்சில் சேர்ந்துகொள்கிறது. நம் கதைகளில் பாத்திரமாகாத சகமனிதர்களுடன் உறவே சாத்தியம் இல்லை. கதை சொல்லல் வழியாகவே அனைத்து நிகழ்வுகளும் அர்த்தம் பெறுகின்றன. அல்லது அவற்றின் மீது நாம் அர்த்தம் ஏற்றுகிறோம். சில இடைவெளிகளை நிரப்பிக் கொள்கிறோம். சில இடைவெளிகளை உருவாக்குகிறோம். இந்த செயல் இல்லாவிட்டால் நம்மால் நட்பையோ காதலையோ பகிர முடியாது. துரோகங்களையும் ஏமாற்றங்களையும் கடக்க முடியாது. நம்மைவிட உயரமான மேன்மைகளை வாழ்க்கைக்குள் பொருத்த முடியாது.
 நம்முள் இருக்கும் கதை சொல்வதற்கான இந்த தீரா அவசத்தின் நவீன வடிவமே சிறுகதைகள். வாழ்க்கைத் தருணங்களை கற்பனையில் விரித்தும் நிரப்பியும் அர்த்தங்களை உருவாக்கித் கொள்ள பயன்படும் கருவிகள். பிரிட்டிஷ் எழுத்தாளர் வில்லியம் பாய்ட் சிறுகதைகளின் வரலாறு பற்றிய தன் கட்டுரையில் இப்படி எழுதுகிறார் – பல நூற்றாண்டுகளாக நாம் கதைகள் சொல்லி வந்ததாலேயே மிகவும் பிந்தி தோன்றினாலும் சிறுகதை எனும் வடிவத்தால் இலக்கியத்தில் உடனடியாக தன் உச்ச சாதனைகளை நிகழ்த்த முடிந்தது.