Tuesday 31 March 2020

இன்னும் நிகழாதவை இங்கு ஏற்கனவே வந்துவிட்டன!


குழப்பமான நாட்கள் இவை. ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றியே எல்லோரும் பேச வேண்டியிருக்கிறது. ஒரு மூடிய வட்டத்துக்குள் எல்லோரும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் அதே நேரம் மிகத் தனியாக இருக்க வேண்டிய நிலையிலும் உள்ளோம். வீடுகளுக்குள் தனியாக. பொது இடங்களில் உடல் தொடாமல். மூச்சு திரையிடப்பட்டு. வரைந்த கட்டங்களில் ஆறடி இடைவெளிவிட்டு. வினோதமான நாட்கள்.
© Moises Saman/Magnum Photos

கட்டாயத்தில் என்றாலும், இந்நாட்களில் ஒவ்வொருவரும் தன்னுடன் இருப்பதற்கான, தன் சுயத்தை எந்தத் தடுப்பும் இன்றி எதிர்கொள்வதற்கான வாய்ப்பு அமைந்திருக்கிறது. வாட்சாப் செய்திகள், யுடியூப் மீம்கள், டிக் டாக் நடனங்கள், நெட்ப்ளிக்ஸ் தொடர்கள் முதலியவை நம் பொழுதுகளை எடுத்துக்கொள்ளாமல் இல்லை. ஆனால் இவற்றுக்கு அப்பால் எங்கேயோ நம் இருப்பில் விழிப்புக் கூடியிருக்கிறது என்றே நினைக்கிறேன். ஏனெனில் நாம் எதிர்கொள்பவை ஆதாரமான சிக்கல்கள். உயிரினமாக நமக்கு நிகழ்ந்திருக்கும் ஆபத்தைச் சமூகமாகக் கையாள வேண்டும். விளைவாக நம் நனவிலியில் அடியோட்டமாய் இருக்கும் பழைய உணர்ச்சிகளை அவற்றின் அசல் நிலையில் சந்திக்க நேர்ந்துள்ளது. நிச்சயமின்மை குறித்த பதற்றம். பொது வெளி பற்றிய ஜாக்கிரதையுணர்வு. பொது வெளிக்கான தவிப்பு. உணவு சேமிப்பில், சுயபாதுகாப்பில் உள்ள மிருக சாயல். எங்கும் வெவ்வேறு அளவுகளில் இவை காணக் கிடைக்கின்றன.
தகவமைத்துக் கொள்ளுதல் உயிர் இயல்பு என்பதை அறிந்திருந்தாலும், முன்மாதிரியில்லாத – தற்காலிகமானது என்று இக்கணம் வரையில் நம்புகிற – இப்புதிய சமூக யதார்த்தத்துக்குக்கூட ஒருவிதத்தில் மனம் வேகமாகப் பழகுவதை, இந்த எல்லைகளுக்குள் ஓர் ஒழுங்கை உருவாக்க முயற்சிப்பதை பார்ப்பது விசித்திரமாக இருக்கிறது. தன்னியல்பில் நிகழ்ந்தாலும் அது முற்றிலும் எளிமையானதல்ல என்பதையும் உணர்தபடியே இருக்கிறேன். மோதல்கள் நிகழ்கின்றன. காயங்கள் ஏற்படுகின்றன.