Monday 19 February 2018

மீன்களை அறிதல்


கோவை ஞானி பற்றிய இப்பதிவில் ஜெயமோகன் கார்ல் மார்க்ஸின் “அன்னியமாதல்” (alienation) கோட்பாட்டை இவ்வாறு விளக்குகிறார். தொழிற்சமூகத்தில் உழைப்பாளிக்கு தான் உற்பத்தி செய்கிற பொருளோடு இணக்கமான உளத் தொடர்பு எதுவும் இல்லை. அவன் அங்கே படைப்பாளி கிடையாது; ஒரு உற்பத்திக் கருவி மட்டுமே. எனவே அவனுக்கு படைப்பாளியின் இன்பம் கிடைப்பதில்லை. முதலாளித்துவ சமூகத்தின் இந்த எதிர்மறை விளைவே ‘அன்னியமாதல்’. கீரனூர் ஜாகிர்ராஜாவின் “மீன்காரத் தெரு” நாவலை வாசித்து முடித்ததும் எனக்கு உடனடியாக ஜெயமோகனின் பதிவு யோசனையில் எழுந்தது. இந்த நாவல் முதன்மையாக மீன்காரத் தெரு மேல் பங்களாத் தெரு நிகழ்த்துகிற சுரண்டல் குறித்தும் அப்பகுதிகளில் நிலவும் ஜாதிய வேறுபாடுகள் குறித்தும் பேசுகிறது. ஆனால் அதனூடே நகரும் இன்னொருச் சரடும் மேற்சொன்ன சுரண்டலுக்கும் பாகுபாட்டிற்கும் நிகரான முக்கியத்துவம் உடையது என்றே எண்ணுகிறேன். மீன்காரத் தெருவின் உள்ளே நிகழ்ந்துக் கொண்டிருக்கும் மாற்றம் அது. நாவலில் முன்னதை குறிப்பிடும்போது வெளிப்படுகிற உணர்ச்சிகரமும் அதன் விளைவாக அவ்வப்போது எழும் ஓசைமிகுதியும் பின்னதில் கொஞ்சமும் இல்லை. குறைவானத் தருணங்கள் எனினும் அது அமைதியுடன் மிக இயல்பாக எழுதப்பட்டுள்ளது.


ஷேக்காவின் மகன்கள் - காசீம் மற்றும் நைனா. காசீம் கட்சி பணியில் இருக்கிறான். நைனா கலகக்குணமும் ரௌடித்தனமும் குழப்பமான விகிதத்தில் சேர்ந்த வார்ப்பில் இருப்பவன். சமூக மாற்றத்திற்காகவும் பணம் படைத்தவர்களின் அதிகாரத் திமிருக்கு எதிராகவும் இருவரும் வெவ்வேறு விதங்களில் குரல் கொடுக்கிறார்கள்; இயன்ற வழிகளில் போராடுகிறார்கள் என நாவலில் இருந்து புரிந்துகொள்ளலாம். (போராட்டம் என்கிற சொல்லின் வழக்கமான அர்த்தத்தில் இல்லை என்றாலும் எதிர்ப்பின் வெளிப்பாடு அல்லது மாற்றத்தின் தேடல் என்கிற பொருளில்). இவ்வகையான ஆவேச எதிர்ப்பு நியாயமானது என்பதிலோ அவசியமானது என்பதிலோ இரண்டாவது கருத்து இருக்க முடியாது. ஆனால் இவர்கள் இருவரும் பார்க்கத் தவறுகிற ஒரு விஷயம் இருக்கிறது என்பதையும் அது ஷேக்காவின் –மீனைப் பற்றி தெரிந்தவர்- கண்களுக்கு மட்டுமே தெரிகிறது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.