Friday 25 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 15 - விடையருளப்படும் பிரார்த்தனை (அன்னா காமியன்ஸ்கா)

 செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “பற்றறுத்தல்” (non attachment) எனும் பிரிவில் போலீஷ் கவிஞரான அன்னா காமியன்ஸ்காவின் (1920-1986) “விடையருளப்படும் பிரார்த்தனை” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. 

o

என் வலைத்தளத்தில் வெளியான கவிதை மொழிபெயர்ப்புத் தொடர் இத்துடன் முடிவு பெறுகிறது. கடைசி கவிதை பிரார்த்தனையாக இருப்பதே இயற்கை. 

o

“அன்னா காமியன்ஸ்கா ஒரு கிறிஸ்தவர். பழைய ஏற்பாட்டோடும் புதிய ஏற்பாட்டோடும் வாழ்க்கையை ஆழமாய் முடிச்சிட்டுக் கொண்டவர். தன் முதிய வயதில் அவர் கூடுதல் அமைதியையும் கடவுள் உருவாக்கிய உலகின் மீதான ஏற்பையும் அடைந்தார். இதை மிக நல்ல கவிதையாய் நான் கருதுகிறேன்” – செஸ்லா மிலோஷ்


Friday 18 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் – 14 - எர்னஸ்ட் ஹெமிங்வேயிற்கு ஓர் இரங்கற்பா (தாமஸ் மெர்டன்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “மக்கள் மத்தியில் மக்கள்” (people among people) எனும் பிரிவில் அமெரிக்க டிராப்பிஸ்ட் துறவியான தாமஸ் மெர்டனின் "எர்னஸ்ட் ஹெமிங்வேயிற்கு ஓர் இரங்கற்பா" கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. 

"அமெரிக்க தேசம் கென்டக்கி மாகாணம் கெத்செமினே டிராப்பிஸ்ட் மடாலயத்தில் துறவியாக சேர்வதற்கு முன்பாகவே தாமஸ் மெர்டன்  எழுத்தாளராக இருந்தவர். எனவே தன் தலைமுறையின் எழுத்து நடையை வடிவமைத்த முன்னோடிகள் மேல் இயல்பாகவே அவருக்கு மரியாதை இருந்தது. உரைநடையில் மெர்டன் மேல் தீவிரப் பாதிப்பை செலுத்திய எர்னஸ்ட் ஹெமிங்வே அறுபத்தி மூன்று வயதில் தற்கொலை செய்து இறந்தார். அப்போது ஹெமிங்வேயின் ஆன்மாவுக்கு மெர்டன் செலுத்திய அஞ்சலி என்பது தன் இளமைப் பருவத்துக்கு அவர் கூறிய பிரிவு விடையும்கூட. அப்படியாக 'நான்' எனும் சாகசக்காரனுக்கு அவர் விடை கொடுத்தார். அந்த 'நான்' எனும் நபரிடமிருந்து தப்புவதற்காகத்தான், அவர்  மடாலயத்தில் புகலிடமே தேடினார்" - செஸ்லா மிலோஷ்


Tuesday 15 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 13 – நான் தீயை அஞ்சுகிறேன் (அன்னா ஸ்விர்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “வரலாறு” (history) எனும் பிரிவில் போலீஷ் கவிஞரான அன்னா ஸ்விர்ரின் (1909 – 1984) “நான் தீயை அஞ்சுகிறேன்”கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. எளிமையான குறுங்கவிதைகளை தேர்வு செய்து சிறிய எண்ணிக்கையில் நான் செய்திருக்கும் இந்த மொழிபெயர்ப்புகளில், அன்னா ஸ்விர் மட்டும் மூன்று தடவை இடம்பெற்றிருக்கிறார். இந்த புத்தகம் வழியே நான் கண்டுகொண்ட, எனக்கு மிக நெருக்கமாக தோன்றுகிற கவிஞர் அவர். 

“வார்சா நகரில் தீ பற்றிக் கொள்கிறது. முதலில் ஜெர்மானியர்கள் உருவாக்கிய கெட்டோவையும் பிறகு மீதி நகரையும் தீ விழுங்குகிறது. தீ பற்றிய தெருக்கள் வழியே ஒரு பெண் தனியாக ஓடுவது தன்னளவிலேயே ஓர் உருவகம். கட்டுப்படுத்தும் சூழ்நிலைக்கான உருவகம்” – செஸ்லா மிலோஷ்


Friday 11 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 12 – மகத்தான சிகரம் (முசோ சொசெகி)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “பொருளின் ரகசியம்” (secret of a thing) எனும் பிரிவில் ஜென் துறவியான ஜப்பானிய கவிஞர் முசோ சொசெகியின் (1275-1351) “மகத்தான சிகரம்” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது.  

“பல்வேறு மொழி கவிதைகளிலும் , எவ்வளவு தூரத்துக்கு, மலைகள் திரும்ப திரும்ப இடம்பெற்றபடி உள்ளன என்பது ஆச்சர்யத்திற்குரிய விஷயம். விவிலியத்திலேயே இது ஆரம்பமாகிவிட்டது. சிந்திப்பதற்குரிய புனித இருப்பாகவே மலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மலைகளின் தனித்த இருப்பு, மனித மனதின், உணர்ச்சிகளின் கலைந்து விலகும் தற்காலிக நிலைக்கு எதிரானதாய் உள்ளது” – செஸ்லா மிலோஷ்

Tuesday 8 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 11 – அவளுக்கு ஞாபகம் இல்லை (அன்னா ஸ்விர்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “பெண் சருமம்” (woman’s skin) எனும் பிரிவில் போலீஷ் கவிஞரான அன்னா ஸ்விர்ரின் (1909 – 1984) “அவளுக்கு ஞாபகம் இல்லை” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது.  

“பாவச் செயல்களை மனிதர்கள் கடக்கக்கூடிய பருவங்களாக எண்ணும் வில்லியம் பிளேக், அவற்றை உறுதியான இருப்பாக கருதவில்லை. அதே போன்ற கருணையும் மன்னிப்பும் அன்னா ஸ்விர்ரின் இந்த கவிதையிலும் உள்ளது” – செஸ்லா மிலோஷ்


Friday 4 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 10 – மீனவன் (ஹீ யாங் ஷூ)

 செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “இடங்கள்” (places) எனும் பிரிவில் சீனக் கவிஞரான ஹீ யாங் ஷூவின் (1007 – 1072) “மீனவன்” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது.  

“இந்த புத்தகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சீனக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அதற்கு காரணம், சீனக் கவிதைகளில் உள்ள காட்சித் தன்மையே. ஓவியருக்கும் கையெழுத்துக் கலைஞருக்கும் அணுக்கமான விதத்தில் அவற்றில் காட்சிகள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன. ‘மீனவன்’ கவிதை உண்மையாகவே ஓர் ஓவியம் போலத்தான் இருக்கிறது. சீனக் கலை சார்ந்த நூல்களில், இந்த கவிதை, தூரிகையால் மொழிபெயர்க்கப்படு பல தடவை ஓவியமாக பிறப்பெடுத்துள்ளது. தூறலும் பனியும், தெளிவான பார்வைக்கு தடையாய் மாறுகின்றன. இதன் மூலம் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவர் – அவதானிப்பவர்- அங்கே இருக்கிறார் என்பது நமக்கு நினைவூட்டப்படுகிறது” – செஸ்லா மிலோஷ்

Wednesday 2 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 9 – பேச்சு (வில்லியம் ஸ்டான்லி மெர்வின்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “மக்கள் மத்தியில் மக்கள்” (people among people) எனும் பிரிவில் அமெரிக்க கவிஞரான வில்லியம் ஸ்டான்லி மெர்வினின் (1927 – 2019) “பேச்சு” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது.  

“வாழ்வின் எல்லா தருணங்களிலும் நாம் மானுடத்தின் கடந்தகாலத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறோம். மானுடத்தின் கடந்த காலம் என்பது முதன்மையாக மொழியே. எனவே, பின்னனியில் இடைவிடாது ஒலிக்கும் கூட்டுக் குரல்களுடனே நாம் வாழ்ந்து வருவதால், இதுவரை பேசப்பட்ட அனைத்து விஷயங்களின் இருப்பையும் கற்பனை செய்வது சாத்தியமானதே ” – செஸ்லா மிலோஷ்


Tuesday 1 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 8 – கவிதை வாசிப்பு (அன்னா ஸ்விர்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “சூழ்நிலை” (situation) எனும் பிரிவில் போலீஷ் கவிஞரான அன்னா ஸ்விர்ரின் (1909 – 1984) “கவிதை வாசிப்பு” சேர்க்கப்பட்டுள்ளது.  



வெவ்வேறு காலக்கட்டங்களை சேர்ந்த வெவ்வேறு கவிஞர்களை மிலோஷ் தன் நூலில் தொகுத்திருக்கிறார். மேற்கத்திய படைப்புகள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்தாலும் சீனம் ஜப்பான் போன்ற கீழைத்தேய நாடுகளிலிருந்தும் கணிசமான அளவில் கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. லாவோ ட்சு, ரூமி போன்ற பண்டையக் குரல்களில் தொடங்கி நவீன ஆளுமைகளான வாலேஸ் ஸ்டீவன்ஸ், தாமஸ் டிரான்ஸ்ட்ரோமர் வரை நீளும் கவிஞர்களை வாசிக்கும்போது சமயங்களில் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. நூறு நூறு வருஷங்கள் வெட்டி வெட்டி மறையும்போது உண்டாகும் திணறல் அது.  அல்லது ஒரே இடத்தில் நூற்றாண்டுகளாக இருப்பதன் திணறல்.