Friday 18 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் – 14 - எர்னஸ்ட் ஹெமிங்வேயிற்கு ஓர் இரங்கற்பா (தாமஸ் மெர்டன்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “மக்கள் மத்தியில் மக்கள்” (people among people) எனும் பிரிவில் அமெரிக்க டிராப்பிஸ்ட் துறவியான தாமஸ் மெர்டனின் "எர்னஸ்ட் ஹெமிங்வேயிற்கு ஓர் இரங்கற்பா" கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. 

"அமெரிக்க தேசம் கென்டக்கி மாகாணம் கெத்செமினே டிராப்பிஸ்ட் மடாலயத்தில் துறவியாக சேர்வதற்கு முன்பாகவே தாமஸ் மெர்டன்  எழுத்தாளராக இருந்தவர். எனவே தன் தலைமுறையின் எழுத்து நடையை வடிவமைத்த முன்னோடிகள் மேல் இயல்பாகவே அவருக்கு மரியாதை இருந்தது. உரைநடையில் மெர்டன் மேல் தீவிரப் பாதிப்பை செலுத்திய எர்னஸ்ட் ஹெமிங்வே அறுபத்தி மூன்று வயதில் தற்கொலை செய்து இறந்தார். அப்போது ஹெமிங்வேயின் ஆன்மாவுக்கு மெர்டன் செலுத்திய அஞ்சலி என்பது தன் இளமைப் பருவத்துக்கு அவர் கூறிய பிரிவு விடையும்கூட. அப்படியாக 'நான்' எனும் சாகசக்காரனுக்கு அவர் விடை கொடுத்தார். அந்த 'நான்' எனும் நபரிடமிருந்து தப்புவதற்காகத்தான், அவர்  மடாலயத்தில் புகலிடமே தேடினார்" - செஸ்லா மிலோஷ்


எர்னஸ்ட் ஹெமிங்வேயிற்கு ஓர் இரங்கற்பா

இப்போது,  நீ மரணித்திருக்கும் இந்த இரவில்,
மடப்பள்ளிகளில் முதல்முறையாக உன் பெயர் குறிப்பிடப்படுகிறது, நீ விழுந்துவிடவேண்டாம்
இருட்டில்

இப்போது, உண்மையான மணியோசையோடு, உன் கதை முடிவை எட்டிவிட்டது. இப்போது, 
இறந்தவர்களோடு பரிச்சயம் கொண்ட மடாலய ஆண்களும், இரங்கற் பா ஆசிரியர்களும் 
உன்னை தம் அலுவலகங்களில் சேர்க்கிறார்கள்.  

தேசங்களின் எல்லையிலுள்ள மகத்தான இருள் நிலையங்களில் 
காத்திருக்கும் ஆயிரம் ஆயிரம் பேர்களில் நீயும் அடையாளம் கரைந்து நிற்கிறாய்.
பிரார்த்தனையில் மட்டும் புலப்படுகிற அந்த இடத்தில்,
எரியும் தீ, இரக்கமற்றதாகவோ முடிவற்றதாகவோ இருக்காது என 
நாங்கள் நம்புகிறோம்

குறுகிய காலத்தில் எங்களிடையே நீ கடந்து செல்கிறாய். உன் புத்தகங்களும்
எழுத்துக்களும் இப்போது ஆலோசிக்கப்படவில்லை. எங்கள் பிரார்த்தனைகளே
இரங்கல் கீதங்கள்.

தொலைதூர ஊரில், முன்னர் அறிந்த நண்பனொருவனை,
கைதிகளின் கூட்டத்திலோ அல்லது இடம்பெயர்ந்த மனிதர்களின் நடுவிலோ
அடையாளம் காண்பது போல் சிலர் உன்னை தலை தூக்கி பார்க்கிறார்கள். 
மறக்கப்பட்ட போருக்கு பிறகு, நீ மகத்துவப்படுத்திய ஒரு சொற்றொடரின் மேலே
அவர்களுக்கும் சூரியன் உதித்தது. அவர்கள் உன்னை மறக்கவில்லை. அவர்கள் மௌனத்தில்,
நீ இன்னும் பிரபலமாய் இருக்கிறாய். அங்கே எந்த சம்பிரதாய நிழலும் கிடையாது.

மடாலய கோபுரத்தில் எவ்வளவு பொறுமையாக இந்த மணி அசைகிறது
ஒரு முழு தலைமுறைக்குமாக
தயார் நிலையில் இல்லாத ஒரு சாம்ராஜ்யத்தின் அவசர மரணத்துக்காக
சாகசக்கார சுயம் எனும் அந்த துணிச்சலான மாயைக்காக.

ஒரு வெடிச் சத்தத்தோடு மொத்த வேட்டையும் முடிவுக்கு வந்துவிட்டது!


No comments:

Post a Comment