Thursday 6 September 2018

கடல் (சிறுகதை)

கடற்கரைக்கு இன்று கூட்டி போவதாக ஜானின் அப்பா கூறியிருந்தார். கல்லூரி விடுதியில் இருக்கும் பெரியம்மா மகன்  யாக்கோப் அண்ணாவையும் உடன் அழைத்துச் செல்லலாம் என்பது திட்டம். போனதடவை கடற்கரைக்குச் சென்றிருந்தபோதும் யாக்கோப் அண்னா கூட வந்திருந்தார். ஜானுடைய அப்பாவும் அம்மாவும் கரையில் சற்று மேடான பகுதியிலேயே அமர்ந்து கொள்ள ஜானும் யாக்கோப் அண்ணாவும்தான் அலைகளில் கால் நனைக்கக் கீழே இறங்கினார்கள்.யாக்கோப் அண்ணா அவன் கைகளை விடவே இல்லை. சிலபோது பிடி இறுக்கமாக இருந்தபோதும்கூட அவரது அண்மையின் விருப்பத்தால் அச்சிறுவலியை பொறுத்துக் கொண்டான்.

நீரலைகள் கரையேறி பின் வளைந்து இரைச்சலுடன் உள்வாங்கின. பாதங்களில் ஈர மணல் அழுந்தி ஒட்ட முழங்கால்களுக்குக் கீழே சில்லிட்டு விலகும் நுரைத் தீண்டல். இன்னும் சில அடிகள் முன்னோக்கி நடக்க முயற்சிக்க யாக்கோப் அண்ணா அவன் கைகளை அழுத்தி தடுத்தார். “கொஞ்ச தூரம் முன்னால போலாம்ணா”


“அலை வந்து தூக்கிட்டு போயிடும்”.


சுற்றிலும் பார்த்தான். பொங்கியும் தாவியும் வந்து கொண்டிருந்த அலைகளில் எல்லோரும் சிரித்துக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். “எல்லோரும் போறாங்களே”

PC : A V Manikandan

யாக்கோப் அண்ணாவின் கன்னங்கள் புன்னகையில் அகலமாகின. “பெரியவங்க போலாம்” என்று சொல்லி அவனை அள்ளித் தூக்கி அந்தரத்தில் நிறுத்தினார். நீர் கொப்பளிப்புகளோடு அலைகள் எழுந்து வந்து கொண்டிருக்க, அவற்றுக்குப் பின்னால் மெல்லிய அசைவுகளோடு பிரம்மாண்டமான நீல பரப்பு, கண் எல்லைவரை மினுங்கலாக விரிந்திருந்தது. யாக்கோப் அண்ணா மிரட்டல் தொனிக்கும் பொய்க்குரலில் “முன்னாடி போனா அலை பெருசா வந்து தூக்கிட்டு போயிடும்” என்றார். உப்பி எழும் அலைகளை உயரத்தில் இருந்து பார்க்க அவனுக்கும் கொஞ்சம் அச்சமாகவே இருந்தது. அவ்வச்சத்தினோடே “பெரியவங்க போனா மட்டும் தூக்கிட்டு போகாதா?” என்றான்.

“பெரியவங்களும் கொஞ்சம் வரைக்கும்தான் முன்னாடி போகலாம். அதுக்கு மேலப் போனா அலை தூக்கிட்டு போயிடும்”. சடுதியில் அவன் முகத்தில் உருவான கலக்கத்தைக் கண்டு சமாதானமாக “ஆனா தூரமா இருந்தா அலை வராது” என்று சொன்னார்.


“ஜான்.. யாக்கோப்..”. அம்மாவின் குரல் அலைகளின் சப்தத்திற்கு நடுவே தேய்ந்து ஒலித்தது. யாக்கோப் அண்ணா அவனை இறக்கிவிட்டார். “அம்மா கூப்பிடுறாங்க பார்”. கடற்கரை காற்றினால் நெற்றியில் ஒட்டியும் பிரிந்தும் அலைவுற்றுக் கொண்டிருந்த தலைமுடியையும் படபடத்த புடவையையும் சரி செய்தபடி நின்றிருந்த அம்மா அப்போது மிக அழகாக இருந்தார். அவன் ஓடிப் போய் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டான். “நான் உங்கள என் கண்ணு முன்னாடியேதான இருக்கச் சொன்னேன்..? அலை வந்து அடிச்சிட்டு போயிடும்”. அவனது கசங்கிய சட்டையை நீவிவிட்டபடி அம்மா சொன்னபோது “நாங்க தூரமா தள்ளிதான்மா இருந்தோம். தூரமா இருந்தா அலை வராது” என உற்சாகமாகப் பதில் அளித்தான்.