Wednesday 20 December 2023

தேவிபாரதிக்கு வாழ்த்துக்கள்

Tuesday 28 November 2023

அகழ் மொழிபெயர்ப்புகள்

போனவாரம் "அகழ்" தளத்தில் மூன்று முக்கியமான மொழிபெயர்ப்புகளை வெளியிட்டோம். மொழிபெயர்த்து வழங்கிய நண்பர்கள் பாரி, ஜனா மற்றும் மணவாளன் மூவருக்கும் வாழ்த்துக்கள்.



0

பாஷவிஸ் சிங்கரின் "அறிவுரை" சிறுகதையை பாரி மொழிபெயர்த்திருக்கிறார். சிங்கரின் "காப்காவின் நண்பன்" போன்ற கதைகள் ஒரு வகை என்றால் "முட்டாள் கிம்பிள்" போன்ற கதைகள் இன்னொரு வகை. "அறிவுரை" கதையை இரண்டாவது வகையில் சேர்க்கலாம். நன்மை ஓர் எளிய உண்மை என்பதை அபாரமான உணர்வெழுச்சியுடன் வெளிப்படுத்துபவை சிங்கர் கதைகள். ஒரு நாடோடி நீதிக் கதையை நவீன கதையாக மாற்றும் தேர்ச்சி சிங்கருக்கே உரியது. அல்லது நவீன அழகியலை மறுத்தே நாடோடிக் கதையை சொல்கிறாரா என்றும் யோசிக்கலாம். "சந்தைத் தெருவில் ஸ்பினோசா", "வேன்வில்ட் காவா" ஆகியவற்றை தொடர்ந்து பாரி மொழிபெயர்த்து அகழில் வெளியாகியிருக்கும் சிங்கரின் மூன்றாவது கதை இது. 

0

Sunday 22 October 2023

பரிசீலணையும் தொடர்புறுத்தலும்

நேற்று (21/10/2023) நற்றுணை வாசக குழுமம் சார்பில் “திருவருட்செல்வி” சிறுகதை நூலுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. வெறும் பாராட்டு மொழியாக இல்லாமல், கருத்து மாறுபாடுகளும் விவாதிக்கப்பட்ட தீவிரமான கலந்துரையாடலாக அமைந்தது. கவிஞர் விக்கிரமாதித்யன் யதேச்சையாக நிகழ்வில் கலந்துகொண்டு இறுதிவரை பங்கேற்றது கூடுதல் மகிழ்ச்சி.  நிகழ்ச்சியை முன்னெடுத்த காளி பிரசாத்துக்கு நன்றி. வாழ்த்துரை வழங்கிய ஷங்கர்ராமசுப்ரமணியனுக்கும் விசேஷமாய் நன்றி சொல்ல வேண்டும். இக்கதைகளின் நிமித்தம் அவர் எப்போதும் உடனிருக்கிறார்.


என் ஏற்புரையின் எழுத்து வடிவம்.

000

"திருவருட்செல்வி" தொகுப்பு வெளியாகி சில மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், திரும்ப படிக்கும்போது அணுக்கமும் தொலைவும் ஒரு சேர எழுகின்றன. காய்ச்சலில் கிடந்த கடந்தகால நாட்களை ஞாபகப்படுத்தி பார்ப்பது போல. பலவீனப்பட்டு கைவிட்டது நம் உடல்தான் எனும் உணர்வும் ஆனால் அந்த உடல் இப்போது வேறு யாருடையதாகவோ மாறிவிட்டதான மயக்கமும் ஒருங்கே எழுகின்றன. சில இடங்களில் என் மொழியே, மறந்து போன பழைய கையெழுத்து மாதிரி இருக்கிறது. சில இடங்களில் இன்னமும் உள்ளங்கை வெப்பம் நீங்கியிருக்கவில்லை. 

கதைகளோடு ஓர் இடைவெளியும் உருவாகியிருக்கிறது. இயல்பாகவே மேம்படுத்தியிருக்க வேண்டிய இடங்கள் கண்களில் படுகின்றன.  ஒவ்வொரு கதையிலும் சில சொற்களை மாற்றலாம் என்றும் உரையாடல்களை திருத்தலாம் என்றும் வரிகளை மாற்றியடுக்கலாம் என்றும் படுகிறது. இப்படி இன்னும் துல்லியப்படுத்த வேண்டிய சிறுசிறு இடங்கள் நோக்கியே மனம் ஓடுகிறது. சார்லஸ் சிமிக் சொல்வது போல கல்லறையில் கூட எழுத்தாளன் பிழை திருத்தம் செய்ய விரும்புவான் போல. அதே நேரம் கவித்துவமும் உணர்ச்சி வேகமும் மிக்க பகுதிகளை படிக்கும்போது நிறைவும் தோன்றுகிறது. இதையும் இடைவெளியின் விளைவான தைரியத்திலேயே சொல்கிறேன்.

பிரதியை சீர் செய்வதில் எழுத்தாளனுக்கு தோன்றும் அவசம் கவனத்திற்குரியது. இந்த சீர்படுத்துதல் என்பது இலக்கண பிழை அல்லது எழுத்து பிழை சார்ந்த வறட்டு நோக்கல்ல. அப்படி சுத்தமாக எழுதப்படும் எத்தனையோ ஆக்கங்கள் மோசமானதாக இருந்துள்ளன. உள்ளார்ந்த நயத்தையே இங்கு சுட்டுகிறேன். தன் எழுத்தை உற்று நோக்கும் கண்களின் துடிப்பை. மனதுள் ஓடும் ஒலியமைப்பை. நினைவுகளின் படிமங்களின் வெளிப்பாட்டை.

உருவாக்கம் பற்றி பேசும்போதே தொடர்புறுத்தல் சார்ந்தும் எண்ணம் மோதுகிறது. இலக்கியத்தில் நிகழும் எழுத்தாள-வாசக தொடர்புறுத்தல் எப்போதும் என்னை ஆச்சர்யப்படுத்துகிறது. எத்தனை சரி செய்தாலும் சரி செய்ய சிறிய விஷயங்கள் இருந்தபடியுள்ளன. அவையெல்லாம் சரி செய்யப்படாதபோதும், துல்லியமான வாசக அனுபவமும் நிகழ்கிறது. வாசகர்கள் கதைகளின் மைய உணர்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள். இது எப்படி என்பது ஓர் ஆதார வியப்பே. அதே நேரம் இந்த இரண்டையும் தனித் தனியே பிரிக்கவும் முடிவதில்லை. ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. 

மனுஷ்யபுத்திரன் ஒரு பழைய கட்டுரையில் இப்படி சொல்லியிருப்பார். ஒரு நவீன கவிதை ஏன் புரியவில்லை என்பது விவாதத்திற்குரியதல்ல. ஒரு கவிதை ஏன் புரிகிறது என்பதே நாம் பேச வேண்டியது. இது எல்லா இலக்கிய வடிவங்களுக்கும் பொருந்தக்கூடியது. இலக்கிய வடிவங்கள் ரகசியத்தை லட்சியமாய் கொண்டிருக்கின்றன. மறைபிரதியில் இயங்குகின்றன. ஆனால் இரு நண்பர்களின் மௌனமான தலையசைப்பை போல துல்லியமாக புரிந்துகொள்ளவும்படுகின்றன. அந்த உறவை -அந்த மர்மத்தை- நாம் உரையாடல் பரப்புக்குள் கொண்டு வர வேண்டும்.

சுருக்கமாக சொன்னால் - சிரத்தையில்லாத உருவாக்கம் நிச்சயம் தொடர்புறுத்தப்படுவதில்லை ;ஆனால் தடுமாற்றங்களும் விடுபடல்களும் உருவாக்கத்தின் பகுதியாகின்றன. இது எப்படி? புதுமைப்பித்தனுக்கு தமிழ் எழுத தெரியவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவசர அவசரமாக எழுதப்பட்ட அவர் கதைகளில் நாம் உணரும் லயத்திற்கு என்ன பொருள்? தஸ்தாயெவ்ஸ்கியின் டயரிகளில் இருக்கும் அத்தனை அடித்தல் திருத்தல்களுக்கும் என்ன பொருள்? அந்த தொடர்புறுத்தலையே விந்தை என உணர்கிறேன்.

“தொடர்புறுத்தல்” என்று சொல்லும்போது, கதையை எழுதவும் கேட்கவும், புரிந்துகொள்ளவும் நமக்குள் மொழியை கடந்த ஒரு பாதை இருப்பதாகவே படுகிறது. இந்த தொகுப்பில் உள்ள பல கதைகள் என் வாழ்க்கையில் நடக்காதவை. என்னிடம் பகிரப்பட்டவை. சில அனுபவங்கள் நான் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தவை. வெவ்வேறு நபர்கள் இவற்றை வாழ்ந்திருக்கிறார்கள். சாட்சி கதை தஸ்தாயெவ்ஸ்கி எழுத்தின் மறு ஆக்கம். கதைகள் வழியே இப்படி வெவ்வேறு மனிதர்களின் குரலாக மாறுவது ஆழமான அனுபவமாய் இருக்கிறது. 

இன்னொரு மனிதரின் -அது சொந்த அப்பாவாகவோ மகளாகவோ இருந்தாலும்- உடல் வலியை என்னால் பகிர்ந்துகொள்ளவே முடியாதபோது, இன்னொரு மனிதரின் கதையை மட்டும் எழுத முடிவது உள்ளபடியே ஆச்சர்யமாக இருக்கிறது. இன்னொருவரை நம்மில் ஒரு பகுதியாக உணர்வதற்கு நமக்குள் ஆழத்தின் வழிகள் இருக்கின்றன போலும். அதற்கான கதவுகள் பரிணாமத்தில் உருவாகியிருக்கின்றன போலும். மற்றமையை கதையிலிருந்து பிரிக்கவே முடியாது. மற்றமையை ஏற்றுகொள்ளுவதை குறிக்கோளாய் மட்டுமின்றி தன் இருப்பின் நோக்கமாகவும் கொண்ட ஓர் ஆதி நிகழ்வே கதை.

இந்த ஆற்றல் மனிதர்களுக்கு இருப்பதனாலேயே துல்லியமான அமையாதபோதும் -திருத்தங்களுக்கு வாய்ப்பு இருக்கும்போதும்- ஒரு கதை வாசகர்களோடு உரையாட முடிகிறது என நினைக்கிறேன். நான் இங்கே சொல்ல வருவது - ஒரு கதைக்கு தொழில்நுட்பமே தேவை இல்லை என்றல்ல. உண்மையில் கதையின் தொழில்நுட்பம் அதிகமாய் பேசப்பட வேண்டியது என்றே வாதிடுகிறேன். ஆனால் கதை என்பது அது மட்டுமே இல்லை என்பதும், பல சமயங்களில் வடிவமும் மொழியும் சரியாக அமைந்தும் கதைகள் உவப்பற்றதாக போவதை கணக்கில் எடுக்கும்போது கதையின் பின்னுள்ள அரூப இருப்பை அங்கீகரிப்பது அவசியமாகிறது என்றும் சொல்ல தோன்றுகிறது. மொழியின் வடிவத்தின் மீதான பிரக்ஞையேக் கூட மொழியையும் வடிவத்தையும் கடப்பதன் நிமித்தமே தொழிற்படுகிறது.

மொழிக்கு அப்பால் கதைகளின் பின்னனியில் இருக்கக்கூடிய அரூபமான இருப்பையே நேர்மை, தேடல் என்று வெவ்வேறு வார்த்தைகளில் சுட்டுகிறோம். நான் தனிப்பட்ட முறையில் அதை "பரிசீலணை" எனும் வார்த்தையால் குறிப்பிட விரும்புகிறேன். பல நேரங்களில் பரிசீலணை என்பதை சந்தேகம் என்று நாம் புரிந்துகொண்டுவிடுகிறோம். ஆனால் சந்தேகத்தில் ஓர் எதிர்மறை அர்த்தம் இருக்கிறது. அவநம்பிக்கை இருக்கிறது. ஆனால் பரிசீலிப்பது அப்படியல்ல. அது ஆழமான நம்பிக்கை மற்றும் பற்றுறுதியில் இருந்தே பிறக்கிறது. ஒரு வார்த்தையை தேர்வு செய்வதில், ஓர் உணர்ச்சியை முன்வைப்பதில், இன்னொரு உணர்ச்சியை தவிர்ப்பதில் எழுத்தாளனிடம் தொடர்ந்து பரிசீலணை நடக்கிறது. தொழில்நுட்பமும் பரிசீலணையாகவே இருக்கிறது. ஒவ்வொரு பரிசீலணையும் சரியான தேர்வுக்கான நம்பிக்கையையும் தன்னுள் கொண்டிருக்கிறது. அது உண்மை மீதான நம்பிக்கையே. 

புதுமைப்பித்தனின் "செல்லம்மாள்",  தி.ஜானகிராமனின் " செய்தி", அசோகமித்திரனின் "காந்தி", ஜெயமோகனின் "திசைகளின் நடுவே" என்று எல்லா மகத்தான கதைகளிலும் ஒரு பொது அம்சமாக நான் கருதுவது இந்த பரிசீலணையே.  தீராத பரிசீலணையே உண்மையாகிறது; அழகாகிறது; கற்பனையின் தாவலாகவும் ஒழுங்காகவும் மாறுகிறது.

இப்படி சொல்லும்போது எழுத்தாளனை ஒரு பீடத்தில் வைப்பது போன்ற எண்ணம் வரலாம் - பரிசீலணையை அகத்தூய்மையோடு ஒப்புமை செய்துவிட வாய்ப்பிருப்பதால். ஆனால் நான் சொல்ல வருவது அதுவன்று. பெரும்பாலான எழுத்தாளர்களிடம் "இந்த கதை உண்மையா?" "அந்த கதையில் வரும் கதாபாத்திரம் நீங்களா?" என்று கேட்கும்போது அவர்கள் ரசிக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். கூசவும் கூடும். எனக்கு கூசியிருக்கிறது. எனில் பொதுவாக எண்ணுவது போல கதைகளின் வழியே தன் அடையாளத்தை விளம்பரப்பப்படுத்துவது எழுத்தாளர்களின் நோக்கமாக இருக்க முடியாது. அதே நேரம் "எழுத்தாளன் இறந்துவிட்டான்" என்று கதையை தன்னிடமிருந்து பறிக்கவும் அவன் அனுமதிப்பதில்லை. 

இந்த முரண் சுவாரசியமானது. தோராயமாக எழுத்தாளனுக்கு கதையின் பேசுபொருளை சொந்தம் கொண்டாடுவதில் பெரிய விருப்பம் இல்லை என்றும் அதன் அடிப்படை உணர்ச்சி தளத்தையும், பரிசீலணை களத்தையுமே முக்கியமாய் கருதுகிறான் என்றும் புரிந்துகொள்ளலாம். குறைந்தபட்சம் நான் அப்படிதான் எண்ணுகிறேன்.

இலக்கிய வாசிப்பிலுமே இந்த அம்சமே நம் முதன்மை அக்கறையாக இருக்க வேண்டும். பேசுபொருளோ வடிவமோ மட்டும் இலக்கியம் அல்ல என்பது நாம் எப்போதோ கண்டுபிடித்த உண்மைகள். ஆனால் அதை மறக்க ஆரம்பித்துவிட்டோமா என்று எண்ணும்படிக்கு இலக்கியம் சார்ந்த உரையாடலில் பேசுபொருட்களின் ஆதிக்கம் பெருகிவிட்டது. இன்னொருபுறம் கட்டுடைப்பின் நகல்களும் அலைகின்றன. போலவே, தனக்கு தெரிந்ததையும் சௌகரியமானதையும் மட்டுமே பிரதியில் எதிர்பார்க்கும் தன்முனைப்பை களங்கமற்ற வாசிப்பாய் கருதும் போலித்தனமும் பெருகியிருக்கிறது. வாசிப்பில் பரிசீலிக்கப்படாத ரசனை போல ஆபத்தானது வேறில்லை.

எழுத்தாளனைப் போலவே வாசகனுக்கும் விமர்சகனுக்கும் நம் காலத்தில் பரிசீலணை தேவையாக இருக்கிறது. எழுத்து, வாசிப்பு, விமர்சனம் என்று எல்லா இலக்கிய செயல்பாடுகளுமே தீராத சுய பரிசீலணைகளே. ஒரு கதை எதை பேசுகிறது என்று உள்ளட்டகம் சார்ந்தும், எப்படி பேசுகிறது என்று வடிவம் சார்ந்தும், எதற்காக பேசுகிறது என்று கட்டுடைத்தல் சார்ந்தும் உரையாடல்கள் நிகழ்வது சரியானதே. ஆனால் இவற்றில் அக்கறை கொண்டிருக்கும்போதே ஒரு கதை நம்மை என்ன செய்கிறது என்கிற கேள்வியை கைவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எழுத்தாளன் வாழ்க்கையை பரிசீலிக்க வேண்டும் என்றும் அதன் விளைவாக வடிவ மாற்றங்களை -மொழியிலும் அகத்திலும்- அனுமதிக்க வேண்டும் என்று சொல்லும்போது இலக்கிய சூழல் தன் விமர்சன மொழியை தொடர்ந்து பரிசீலிக்க வேண்டும் எனும் கோரிக்கையையும் சேர்க்க வேண்டியிருக்கிறது.

வாசிப்பில் பரிசீலணையானது முன்னோடிகளின் தொடர்ச்சியை பேணுவதே (மீறலும் தொடர்ச்சியே) என்பது என் வலுவான நம்பிக்கை. இலக்கிய செவ்வியல் தொகுதியை (Canon) பரிசீலணையைவிட்டு விலக்கிவிட முடியாது. ஏற்கனவே சொன்னது போல பரிசீலணை என்பது எதிர்மறையானதாக, விமர்சனமாக மட்டுமே இருக்க வேண்டும் என்றில்லை. மறதிக்குள் விழாமல் பார்த்துக் கொள்வதே பரிசீலணை. சிறப்பு மலர்கள், முழு நாள் கருத்தரங்குகள் என்று முன்னோடிகளுக்கு தொடர்ச்சியாக பாராட்டுக்கள், விழாக்கள் தமிழில் நடக்கின்றன. இது அவசியமானது. கடமையும் கூட. ஆனால் அதே அளவுக்கு அவசியமான இன்னொரு செயல் - அவர்கள் அடுத்த தலைமுறையின் மொழியிலும் நரம்புகளிலும் கலப்பது. அது நடக்காவிடில் எல்லா பாராட்டு கூட்டங்களும் காந்தி படத்துக்கு மாலை போட்டு சுவரில் மாட்டுவது போலவே ஆகிவிடும். அது காந்தியை வாழ்க்கைக்கு வெளியே நிறுத்தும் வழி. இன்று, எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் நடுவிலான இடைவெளிகள் இவ்வளவு குழம்பி போயிருப்பதற்கான காரணத்தை இந்த புள்ளியிலிருந்தும் தேட ஆரம்பிக்கலாம்.

கடைசியாக என் கதைகள் பற்றி ஒரு அபிப்ராயத்தை பகிர நினைக்கிறேன். என்னுடைய கதைகளை திரும்ப படிக்கும்போது அவை நிகழ்வுகளை முதன்மைபடுத்துவதேயில்லை என்று புரிகிறது. விவரனைகளிலும் சித்தரிப்புகளிலுமே அவை ஆர்வம் கொண்டிருப்பதாய் படுகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால் எல்லாவற்றையும் பார்ப்பதையே லட்சியமாக கொண்டிருக்கின்றன. இருண்ட மூலைகள். தனித்த அறைகள். ஆக்கிரமிக்கும் நிழல்கள். நாய்களின் அனாதை கண்கள். அடிபட்ட விலங்குகளின் சிதைந்த உடல்கள். இவற்றை கதைக்குள் ஒரு ஜோடி கண்கள் கூர்ந்து பார்த்துக் கொண்டேயிருக்கின்றன. நான் இப்போது வாசிக்கும் ஆங்கில நாவலில் ஒரு வரி வருகிறது. “விழியே கடவுளின் ஆக தனிமையான ஒரு படைப்பு”. எல்லாமே தோன்றி மறைவதை பார்த்துக் கொண்டேயிருக்கும் விழிகளை இந்த நூலில் கவனிக்கிறேன். என் முதுகுக்கு பின்னும் யாரோ ஒருவரின் கண்கள் நிலைத்திருப்பதான உணர்வு வருகிறது

ooo

திருவருட்செல்வி வாங்க, விஷ்ணுபுரம் பதிப்பகம்.
கிண்டில் பதிப்பு வாங்க

Friday 8 September 2023

சுஜாதாவின் “கணேஷ் – வசந்த்”

 எப்படி ஆரம்பித்தது தெரியவில்லை. ஒரு மாதத்தில் பத்துக்கு மேற்பட்ட கணேஷ்-வசந்த் நாவல்கள் வாசித்துவிட்டேன்.  “கிண்டில் அன்லிமிடெட்” ஒரு பொக்கிஷம்தான்.  மாதாமாதம் சந்தாவையும் வாசிப்பையும் கணக்கு போடும்போது லாபமா நஷ்டமா என்று குழப்பம் வந்தாலும் முக்கியமான பல நூல்கள் கிடைக்கின்றன. அரசு நூலகத்தில் ஒரே எழுத்தாளரின் நூல்களை வரிசையாக எடுத்து படிக்கும் அனுபவம் வாய்க்கிறது. தமிழில் “கிழக்கு” பதிப்பகம் அதிக எண்ணிக்கையில் பதிவேற்றியிருக்கிறது. சுஜாதாவின் பல புத்தகங்கள் கிடைக்கின்றன.  திரைப்படங்களுக்கு ஓ.டி.டி போல புத்தகங்களுக்கு இனி கிண்டில் அன்லிமிடெட். 

1968ல் தான் சுஜாதா முதல்முறையாக கணேஷ் எனும் கதாபாத்திரத்தை உருவாக்குகிறார். 1973ல் கணேஷின் உதவியாளராக வசந்த் சேர்ந்துகொள்கிறார். இந்த வக்கீல் இரட்டையர்களை வைத்து 25க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். 35 வருடங்கள் வயதே ஆகாமல், பல குற்றங்களை துப்பறிந்திருக்கிறார்கள். ஷெர்லாக் ஹோம்ஸ்- டாக்டர் வாட்சன் போல தமிழில் ஒரு துப்பறியும் ஜோடி. பீரும் ரெமி மார்டினும் குடித்தபடி சீரியல் கில்லர்களை கண்டுபிடிக்கிறார்கள். பண மோசடிளை வெளிக் கொண்டு வருகிறார்கள். சதி திட்டங்களை முறியடிக்கிறார்கள். சென்னை முழுக்க - பூந்தமல்லியிலிருந்து கடற்கரை சாலை வரை - சுற்றுகிறார்கள். நடுவே அவ்வப்போது நீதிமன்றத்தில் வழக்கு நடத்துகிறார்கள். புத்திசாலியான வக்கீல்கள். நீதி நியாயம் பற்றி பொதுவாக பேசிக் கொள்வது கிடையாது.

Thursday 3 August 2023

அகழ் ஜீலை இதழ் - டி.எஸ்.எலியட்டின் செவ்வியல்

அகழ் ஜீலை இதழில் எலியட்டின் “செவ்வியல் என்றால் என்ன?” கட்டுரை என் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. நீண்ட கட்டுரை. முதல் பகுதி மட்டும் இந்த இதழில் பிரசுரமாகியிருக்கிறது. அடுத்த இதழில் இரண்டாவது பகுதி வாசிக்கக் கிடைக்கும். ஏப்ரலில் டெர்ரி ஈகிள்டனின் “இலக்கியம் என்றால் என்ன?” கட்டுரை வெளியாகியிருந்தது. இப்போது இன்னொரு கட்டுரை. இரண்டுமே இலக்கியத்தின் அடிப்படைகளை பேசுபவை. 2018 வாக்கில் கறட்டு வடிவில் ஏற்கனவே மொழிபெயர்த்து வைத்திருந்தவை.



Friday 21 July 2023

"திருவருட்செல்வி" - சிறுகதை நூல் முன்னுரை

 [விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிடும் “திருவருட்செல்வி” நூலின் முன்னுரை]

ஏழு அல்லது எட்டு வயதில் முதல் முறையாக, புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்த நேரத்தில், என்ன வகையான உணர்ச்சி நிலைக்கு ஆட்பட்டேன் என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்தி பார்ப்பேன். சிறார் நூல்கள் ஒரு பெரிய கனவு வெளியை அப்போது உருவாக்கி கொடுத்தன.  ருஷ்ய நாடோடிக் கதைகள். ஈசாப் நீதிக் கதைகள். மரியாதை ராமன், தெனாலிராமன் கதைகள். மகாபாரதக் கதைகள். விளம்பர பிரசுரங்கள் போன்ற ஓடிசலான புத்தகங்கள் அவை.

அபிமன்யுவின் கதையை ,அப்படியான ஒரு குட்டி நூலில் வாசித்தது, எப்போதும் தொடர்ந்து வரும் ஞாபகமாக இருக்கிறது. அபிமன்யுவின் மரணத்தை வாசித்தபோது, குளிர் போல துயர் என்னில் இறங்கியது. ஆனால் கோபமேயில்லாத துயர். பச்சாதாபமோ முறையீடோக்கூட இல்லை. வெறும் துயர். ஒரு பெரிய கல் யானைப் போல துயர் எதிரே நிறைத்து நின்றிருந்தது. துயர்தானா என்று சந்தேகம் தோற்றுவிக்கும் வகையிலான துயர்.

அபிமன்யுவின் கதையை வாசித்த சிறுவனுக்கு அப்போது என்ன செயலில் ஈடுபட்டிருக்கிறோம் என்பது பற்றி எந்த அறிவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அனுபவம் மட்டுமே நிகழ்ந்தது. ஏன் கதைகள் வாசிக்கிறாய் என யாராவது கேட்டிருந்தால் அவனுக்கு பதில் சொல்ல தெரிந்திருக்காது. கதைகளால் என்ன பயன் என்று கேட்டால் அவன் குழம்பியிருப்பான். ஏனென்றால் கதைகளின் நீதியை அவன் ஒருபோதும் சரியாக கவனித்ததில்லை. பேசும் மிருகங்கள் மீதும் கதைகளின் விந்தை மீதுமே அவனுக்கு அக்கறை இருந்தது. ஆனால் அவனிடம் கதைகள் வாசிக்கத்தான் வேண்டுமா என்று கேட்டிருந்தால், மிக உறுதியாக ஆம் என்று பதில் சொல்லியிருப்பான். அது ஒரு முக்கியமான செயல் என்பதில் அவனிடம் வலுவான நம்பிக்கை இருந்தது. இன்றுவரையில் அந்த நம்பிக்கை மாறாமல் இருப்பதே, நான் எழுதுவதற்கான காரணம் என நினைக்கிறேன்.

"திருவருட்செல்வி" - கோவை புத்தக கண்காட்சியில்

 கோவை புத்தக கண்காட்சி இன்று துவங்குகிறது. என்னுடைய சிறுகதை நூலான "திருவருட்செல்வி" விஷ்ணுபுரம் அரங்கில் கிடைக்கும். 

Thursday 29 June 2023

"அகழ்" இதழும் என் புதிய சிறுகதை நூலும்

 “அகழ்” ஜூன் இதழில் வெளியான கவிஞர் சுகுமாரனின் நேர்காணல் மிக பரவலாக வாசிக்கப்பட்டு வருகிறது. அந்த நேர்காணலை மேற்கொள்ளும்போதே அது சூழலில் கவனிக்கப்பட்டு வரவேற்பை பெறும் என்பது தெரியும். ஆனால் இவ்வளவு தூரம் வாசிக்கப்படும் என்று எண்ணியிருக்கவில்லை. சுகுமாரனுடைய வாசகர்கள் பலரும் அவரை இன்னும் அணுக்கமாக அறிய முடிந்ததாக குறிப்பிட்டிருந்தார்கள். எழுத்தாளனை மேலும் நெருக்கமாக அறியவும் அவன் கருத்துக்களுக்கு செவி மடுக்கவும் இவ்வளவு பேர் இருப்பது நம்பிக்கையளிக்கிறது. நேர்காணலை பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. சுகுமாரனே போனில் அழைத்திருந்தார். “நான் பாட்டுக்கு சிவனேன்னு இருந்தேன். நீங்க ஒரு பேட்டி எடுத்திட்டு, காலையில இருந்து போனை கீழே வைக்க முடியல” என்றார். நிறைவாக இருந்தது. 



Sunday 23 April 2023

அகழ் – ஏப்ரல் இதழ்

அகழ் ஏப்ரல் இதழ் வெளியாகிவிட்டது. பிப்ரவரி, மார்ச் இரண்டு மாத வெளியீடுகளிலும் பங்களிப்பாற்றியிருந்தாலும் இந்த இதழுடனே அதிகாரபூர்வமாக “அகழ்”-இல் ஆலோசகராக இணைகிறேன். பொதுவாக சிற்றிதழ் என்பது நண்பர்களால் நடத்தப்படுவது. சூழலின் தேவைகளாலும் எதிர்வினைகளாலும் வடிவமைக்கப்படுவது. எனவே எல்லோருடைய ஆலோசனைகளும் முக்கியம். “அகழ்” இதழாசிரியர்களில் ஒருவரான அனோஜனுடனான நட்பின் காரணமாக எனக்கு சற்று கூடுதல் உரிமை கிடைத்திருக்கிறது. இதழின் வடிவம் மற்றும் வெளிப்பாடு சார்ந்த பொதுவான திட்டமிடல்களில் நானும் பங்களிப்பாற்றுகிறேன். முக்கியமாக கட்டுரைகள் மற்றும் மொழிபெயர்ப்புகளில் தேர்வுகளை முன்வைக்கிறேன். 

O



இவ்விதழில் புகைப்பட கலைஞரும் நண்பருமான ஏ.வி.மணிகண்டன் “வெற்றுவெளியின் தோரணவாயில்” எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். காண்பியல் கலை சார்ந்து மணி “அகழ்” இதழில் எழுதும் மூன்றாவது கட்டுரை இது. புகைப்படம் பற்றிய பொது முடிவுகளை கேள்விக்குட்படுத்துபடும்படியும் கீழை நாட்டு தத்துவ பின்புலத்தில் புகைப்படக் கலையை ஆராயும்படியும் அவர் கட்டுரைகள் அமைந்துள்ளன. புகைப்படமும் கவிதையும் ஒன்றுக்கொன்று நெருக்கமான கலை வடிவங்கள் எனும் கருத்தை அவர் தொடர்ந்து முன்வைக்கிறார். அவ்விரண்டு கலை வடிவங்களுக்குமே வெளியே இருந்து சட்டகத்தை உருவாக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அச்சட்டகம் புகைப்படமோ கவிதையோ ஆகாது. அதை இக்கட்டுரையில் மேலும் விரிவாக பேசியிருக்கிறார் மணி. 

“ததாகதா என்பது ஒன்றை சுட்டும் விரல் மட்டுமே. அது சுட்டும் பொருளோடு சேர்த்து ஒட்டப்பட்டிருக்கிறது. உற்று நோக்கும் தருணத்தில் நாம் காண்பது சுட்டப்படுவதையே. சுட்டும் விரலை அல்ல”. 

O

அழகிய மணவாளன் கதகளியை மையமாக வைத்து “மாய கொந்தளிப்பு” என்றொரு கட்டுரை எழுதியுள்ளார். நிகழ்த்துக் கலை சார்ந்து அதிகம் கட்டுரைகள் இல்லாத சூழலில் மணவாளனின் எழுத்து ஒரு நல்வரவு. கலை விமர்சனத்தில் சமூக வரலாற்று பின்னனியோ அல்லது அழகியல் பின்னனியோ இருக்க வேண்டியது அவசியம். கூடவே தனிப்பட்ட ரசனையும் இருக்க வேண்டும். வெறுமனே பின்னனி மட்டும் இருக்கும்போது அது வறட்டுத்தனமாக மாறிவிடலாம். பரிசீலணையில்லாத தனிப்பட்ட ரசனையோ வெற்று சுய-விழைவாக தொனிக்கலாம். மணவாளனின் கட்டுரையில் இரண்டுக்கும் நடுவே ஒரு சமநிலை அமைந்துள்ளது. 

O

டெர்ரி ஈகிள்டனின் பேட்டியும், “இலக்கியம் என்றால் என்ன?” எனும் கட்டுரையும் பிரசுரமாகியுள்ளன. கட்டுரையை நான் மொழிபெயர்த்திருக்கிறேன். டெர்ரி ஈகிள்டன் எனக்கு மிக விருப்பமான ஓர் ஆளுமை. என் இருபதுகளின் தொடக்கத்தில் இலக்கியக் கோட்பாடுகள் சார்ந்து எனக்கு ஆர்வம் உருவானது. கவிஞர் சபரிநாதனிடம் அப்போது அது பற்றிய பேசியபோது டெர்ரி ஈகிள்டனின் “இலக்கிய கோட்பாடு: ஓர் அறிமுகம்” நூலை பரிந்துரைத்தார். உடனே அதை வாசித்தேன். அந்நூல் எனக்கு பெரிய அளவில் உதவியது. 

இலக்கிய கோட்பாடுகள் சார்ந்து நம் சூழலில் இருவகை பார்வைகள் உள்ளன. அவை பயனில்லாதவை என்பதோடு படைப்பிலக்கியத்துக்கே எதிரானவை என்பது ஒரு பார்வை. அவை சர்வயோக நிவாரணிகள் என்பது இன்னொரு பார்வை. இரண்டுமே முன்முடிவுகள் கொண்டவை. ஓர் அப்பாவித்தனமான “தூய” உலகை கற்பனை செய்வது, படைப்பிலக்கியவாதிகளை எல்லைக்குள் அடக்கும். ஒரு புனைவாசிரியனாக உண்மைக்கு நெருக்கத்தில் இருக்கவே நான் விரும்புகிறேன். கற்பிதங்களை கலைய முற்படுகிறேன். அதே நேரம்,  படைப்பிலக்கியவாதிகளுக்கு எதிரான கோட்பாட்டாளர்களின் தந்திரங்களும் கண்டனத்திற்குரியவை. இந்நிலையில் இரண்டுக்கும் நடுவே சமநிலையோடு ஓர் எழுத்தாளன் இயங்க, டெர்ரி ஈகிள்டன் போன்ற ஆளுமைகள் உதவுகிறார்கள்.  

சமகாலத்தின் முக்கியமான பொது அறிவுஜீவிகளில் ஒருவரான, டெர்ரி ஈகிள்டன் ஒரு மார்க்ஸியர். அதனாலேயே அவருடைய எழுத்து யதார்த்தத்தில் ஆழமான வேரூன்றியிருக்கும். எந்த கருத்தியல் தரப்பு பற்றி பேசினாலும் சமூக அரசியல் காரணிகள் மேல் எப்போதும் பிடிமானம் கொண்டிருக்கும்.  பொதுவாக கலாச்சார கோட்பாட்டாளர்கள் மீது வைக்கப்படும் விமர்சனம் - அவர்கள் மூட்டமான மொழியில் எழுதுகிறார்கள் என்பதே. ஈகிள்டனின் எழுத்துக்கள் மேல் அக்குற்றச்சாட்டை வைக்க முடியாது. அழகும் நகைச்சுவையும் கலந்த தெளிவான நடை அவருடையது. அதே நேரம் எளிமையின் பொருட்டு தீவிரத்தை அவர் கைவிடுவதில்லை.  நவமார்க்ஸியர்கள் எல்லோருமே பின்-நவீனத்துவத்தின்மேல் கடும் விமர்சனம் உடையவர்கள். டெர்ரி ஈகிள்டனும் அப்படியே. 

இலக்கியம் பற்றிய டெர்ரி ஈகிள்டனின் எல்லா கருத்துக்களோடும் எனக்கு உடன்பாடில்லை. நான் மொழிபெயர்த்திருக்கும் இக்கட்டுரையிலேயே "இலக்கியம் என்று ஒன்றில்லை" என அவர் வாதாடுகிறார். நான் அதை ஏற்றுக் கொண்டால் எழுதுவதையே நிறுத்திவிட வேண்டும். அப்படி ஒரு முடிவு எடுக்க எனக்கு எந்த திட்டமும் இல்லை. ஆனால் “இலக்கியம் என்றால் என்ன?” எனும் கேள்விக்கு என் வரையில் ஒரு பதிலை தேடுவதற்கான கட்டாயத்தை பல வருடங்களுக்கு முன்னால் இக்கட்டுரை ஏற்படுத்தியது. அப்பதிலை கண்டுகொள்ளவும் செய்தேன் என்பதற்காகவே டெர்ரி ஈகிள்டனுக்கு நன்றி சொல்ல வேண்டும். சுயவிசாரனையையே அவர் தொடர்ந்து குறிப்பிடுகிறார். அதை எப்போதும் பின்பற்ற விரும்புகிறேன்.

O

“அர்த்த மண்டபம்” என்று ஒரு புதிய பகுதி “அகழ்” இதழில் தொடங்கப்பட்டுள்ளது. பல ஆங்கில இணைய இதழ்களில், எழுத்தாளர்களின் குரல்கள் கேட்க கிடைக்கின்றன. கட்டுரைகள், கவிதைகள், கதைகள் முதலியவற்றை எழுத்தாள்ர்களின் குரல்களில் பதிவேற்றுகிறார்கள். அதை “அகழ்” இதழிலும் செய்யலாம் என்று அனோஜனிடம் கூறினேன். அவர் தொடர்ந்து முன்னெடுத்ததில் “அர்த்த மண்டபம்” உருவானது. கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் தலைப்பை பரிந்துரைத்தார். தலையங்கத்தில் இருந்து குறிப்பு,

“இந்த இதழிலில் இருந்து ‘அர்த்தமண்டபம்’ என்று ஒரு புதிய பகுதி தொடங்கப்படுகிறது. வெவ்வேறு எழுத்தாளர்களை அவர்களுக்கு விருப்பமான கவிதைகளை வாசிக்கச் சொல்லி, பதிவேற்றத் திட்டமிட்டுள்ளோம். அக்குரல்பதிவை “அகழ்” இதழில் உள்ள ஒலிப்பானில் கேட்கலாம். மின்னிதழ் என்பதால் தொழில்நுட்ப சாத்தியங்களையும் பரிசீலித்து பார்க்கும் விழைவில் இதை தொடங்கியிருக்கிறோம்.”

"அர்த்த மண்டபம்"

O

கடந்த மூன்று “அகழ்” இதழ்களிலும் தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதி வந்தேன். இம்முறை அது தவறிவிட்டது. அடுத்த இதழில் அதை நிகர் செய்துவிட வேண்டும்.


Tuesday 4 April 2023

திருவருட்செல்வி (சிறுகதை)

அலுவலகம் முடிந்து, ஹாஸ்டலுக்கு வந்த செல்வி, வேகவேகமாக நடந்தாள். அவள் முதுகுப்பை தனியே துள்ளி ஓடுவது போல நெளிந்தது. எதிர் திசையில் இழுத்தது. மூச்சிரைப்பு போல ஒரு குரல் தொடர, கீழ்த்தளத்தில் மாடிப்படியை ஒட்டியிருந்த தன் அறைக்குள் சென்று கதவை சாத்தினாள். ஹெட்போனை காதுகளிலிருந்து அகற்றிவிட்டு, முதுகுப் பையைக் கழற்றி மேஜையில் வைத்தாள். ஜிப்பைத் திறந்து உள்ளிருக்கும் பூனையைத் தன் மெலிந்த கைகளால் தூக்கி தரையில் விட்டாள். ஆரஞ்சு நிறக் கோடுகள் கொண்ட பூனை தலையை உலுக்கியது. பின்னர் குட்டி உறுமலோடு உடலை அசைத்துவிட்டு, செல்வியை சட்டை செய்யாது, புதிய இடம் பற்றியும் எந்த தயக்கமும் இல்லாமல் வாலை நிமிர்த்தி நேரே நடை போட்டது. 

தொடர்ந்து படிக்க:https://akazhonline.com/?p=4311

நிழலின் அசைவு (நெடுங்கதை)

 ஒவ்வொரு வீடாகவும் ஒவ்வொரு உடலாகவும் ஆக்கிரமிக்கப்பட்டு வந்த வேளையில், பெங்களூர் நகர் முழுக்க ஆளில்லாத ஏரிகளிலும், பூங்காங்களிலும், உயரமான கண்ணாடி கட்டிடங்களிலும் வினோத அமைதி படிந்திருந்தது. ஊரடங்கி மனித நடமாட்டமே இல்லை. மனிதர்களில்லாத சாலைகளையும் மேம்பாலங்களையும் பார்த்து நாய்கள் குரைக்க, போலீஸ் வாகனங்கள் எல்லா பகுதிகளிலும் ரோந்து போய்க் கொண்டிருந்தன.

தொடர்ந்து படிக்க: https://akazhonline.com/?p=4219

கிரேஸ் இல்லம் (சிறுகதை)

ஜான் என்று குடும்பத்தினராலும் ஹெலன் மிஸ் வீட்டுக்காரர் என்று அந்த சுற்று வட்டத்திலும் அழைக்கப்படுகிற திரு.ஜான்சன் தேவராஜ், இன்னும் இரண்டு தினங்களில் காலி செய்ய போகும் “கிரேஸ் இல்லம்” எனும் தங்கள் பழைய வீட்டின் முன் வாசலில் – நாற்காலி, தொலைக்காட்சி மேஜை, துருவேறிய சைக்கிள் என்று அடுக்கி வைக்கப்பட்ட பொருட்களின் நடுவே நின்று – “த்சு.த்சு” என குரல் கொடுத்து பவுல் எனும் தவிட்டு நிற வளர்ப்பு நாயை தேடினார். 

தொடர்ந்து படிக்க : https://akazhonline.com/?p=4056