Thursday 29 June 2023

"அகழ்" இதழும் என் புதிய சிறுகதை நூலும்

 “அகழ்” ஜூன் இதழில் வெளியான கவிஞர் சுகுமாரனின் நேர்காணல் மிக பரவலாக வாசிக்கப்பட்டு வருகிறது. அந்த நேர்காணலை மேற்கொள்ளும்போதே அது சூழலில் கவனிக்கப்பட்டு வரவேற்பை பெறும் என்பது தெரியும். ஆனால் இவ்வளவு தூரம் வாசிக்கப்படும் என்று எண்ணியிருக்கவில்லை. சுகுமாரனுடைய வாசகர்கள் பலரும் அவரை இன்னும் அணுக்கமாக அறிய முடிந்ததாக குறிப்பிட்டிருந்தார்கள். எழுத்தாளனை மேலும் நெருக்கமாக அறியவும் அவன் கருத்துக்களுக்கு செவி மடுக்கவும் இவ்வளவு பேர் இருப்பது நம்பிக்கையளிக்கிறது. நேர்காணலை பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. சுகுமாரனே போனில் அழைத்திருந்தார். “நான் பாட்டுக்கு சிவனேன்னு இருந்தேன். நீங்க ஒரு பேட்டி எடுத்திட்டு, காலையில இருந்து போனை கீழே வைக்க முடியல” என்றார். நிறைவாக இருந்தது. 



இந்த நேர்காணல் சம்பந்தமாக கூடுதலாக ஒரு விஷயம் மட்டும் சொல்லத் தோன்றுகிறது. சில மாதங்கள் முன்னால் சுகுமாரனின் “கோடைக்கால குறிப்புகள்” கவிதை நூலை முன்வைத்து நண்பர்கள் நடுவே ஓர் உரையாடல் நிகழ்ந்தது. அதையொட்டி ஓர் அதிகாலை அந்த நூலை படிக்க நேர்ந்தபோது,  என் கல்லூரி காலத்தில் முதல் வாசிப்பில் ஏற்பட்ட அதே தவிப்பை அதே அளவில் மீண்டும் உணர்ந்தேன். அந்த அதிகாலையில்தான் இந்நேர்காணலுக்கான விருப்பம் என்னில் துளிர்த்திருக்க வேண்டும்.

சுகுமாரன் நீண்ட காலம், தீவிரம் குறையாமல், இலக்கியத்தில் இயங்குவதில் எனக்கு எப்போதும் மதிப்புண்டு. எழுத்தாளனாகவும் வாசகனாகவும் அவரோடு நான் முரண்படும் இடங்களும் இருக்கின்றன. சில நேரங்களில் இலக்கியவாதியாக இல்லாமல் பத்திரிக்கை ஆசிரியராக அவர் எழுத்தாளர்களை மதிப்பிடுவதாக எனக்கு தோன்றியிருக்கிறது. அந்த வகையில் சில எழுத்தாளர்கள் மீதான அவர் பாராட்டுகளும், சிலர் மீதான விமர்சனங்களும் விவாதத்திற்குரியனவே. அவர் கவனமாக எண்ணியெடுத்து வார்த்தைகளை உபயோகிப்பதும் சிறு விலக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது.   படைப்பிலக்கியவாதியின் வழி தர்க்கம் இல்லையென்பதால் அவனிடம் சில மீறல்கள் இருக்க வேண்டியுள்ளது. (ஜெயமோகன் இக்கருத்தை சூழலில் தொடர்ந்து முன்வைக்கிறார்)

மேற்சொன்னவை தனிநபர் ரசனை சார்ந்த, தவிர்க்கவே முடியாத, இடைவெளிகள். சுகுமாரன் மீதான என் மதிப்பு அவற்றால் பாதிக்கப்படுவதில்லை. அவர் பல எழுத்தாளர்களை சூழலில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். குறுகிய எல்லைக்குள் அடங்காத, பலதரப்பட்ட அறிமுகங்கள். அவை சூழலை வளப்படுத்தியிருக்கின்றன. 

சுகுமாரன் இப்போதுவரை சலிக்காமல் வாசிக்கிறார். தன்னை இன்னமும் இலக்கிய மாணவனாக கருதுகிறார். தீவிர இலக்கியம் எனும் இயக்கத்தில் நம்பிக்கையோடிருக்கிறார். அது நம்மிலும் பற்றிக் கொள்கிறது. ஓர் எழுத்தாளன் மிக எளிதாக தன் வாழ்வின் எந்த திருப்பத்திலும் தொலைந்துபோய்விட முடியும். காலப்போக்கில் தன் இளமையின் நிழலாக மட்டும் எஞ்சிட முடியும். அது ஒரு கொடுங்கனவு. ஆனால் சுகுமாரன் இப்போதும் அடுத்தடுத்த தலைமுறை எழுத்தாளர்களோடு உரையாடுகிறார். அந்த அர்ப்பணிப்புக்கு தொப்பியை தாழ்த்தி வணக்கம் வைக்க வேண்டியது அவசியம். இந்நேர்காணலில் அதுவே நடந்திருக்கிறது. இதை பாராட்டி பேசுகிற நண்பர்களும் வெவ்வேறு வார்த்தைகளில் அதையே செய்கிறார்கள்.

O

ஜீலை கோவை புத்தக கண்காட்சியில் என்னுடைய புதிய சிறுகதை நூலான “திருவருட்செல்வி”, விஷ்ணுபுரம் பதிக்கப்பத்தால் வெளியிடப்படப்படுகிறது. கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் அந்த நூல் பற்றி எழுதிய அறிமுக கட்டுரையும் “அகழ்” இதழில் வெளியாகியிருக்கிறது. நண்பர்கள் இணைப்பில் படிக்கலாம். 

"ஆமாம், விழிப்பும் விமர்சனமும் வேறு வேறு அல்ல"

இவ்விதழில் பிரசுரமாகியிருக்கும் ஏடா லிமோனின் கவிதைகளில் இந்த வரிகள் எனக்கு மிக பிடித்திருந்தன.

“நாய் ஓர் அழகிய செயலில் ஈடுபடுகிறது.
அது காத்திருக்கிறது.
தன் அசைவை நிறுத்தி அது தீர்மாணிக்கிறது,
காத்திருப்பது ஓர் அவசியமான செயல்.

ஏடா லிமோன் கவிதைகள்

No comments:

Post a Comment