Wednesday 18 November 2020

முதல் மனிதன்


[1] கவிதை

கவிதை பற்றிய வரையறைகள் நூற்றாண்டுகளாக விவாதப் பொருளாகவே இருந்து வருகின்றன. கவிதையின் பயன்பாடு சார்ந்து மட்டுமில்லை; கவிதை என்றால் என்ன என்பதுகூட துல்லியமாகப் பதில் சொல்ல முடியாத கேள்வியாகவே இருக்கிறது. அல்லது அதன் எல்லா பதில்களிலும் எப்படியோ ஒரு விடுபடல் வந்துவிடுகிறது. பொதுவாக இலக்கியத்திற்கே அந்தக் குணம் உண்டு எனும்போதும் பிற எந்த இலக்கிய வடிவத்தைக் காட்டிலும் கவிதையே அதிகம் வெகுஜன புழக்கம் கொண்டிருக்கிறது. வார இதழ்கள் செல்வாக்கோடு இருந்த நாட்களில் சுஜாதா கணையாழியில் ஒரு நகைச்சுவை எழுதியிருந்தார்- ஒரு போஸ்ட் கார்ட் வாங்கினால் யாரும் கவிஞராகிவிடலாம் என்று. இதழ்களுக்கு ஓயாமல் கவிதை அனுப்பும் அந்த காலம் இன்றில்லை. எனினும் முகநூல், வாட்சாப் முதலிய இணைய ஊடகங்களில் இன்னமும் கவிதைகள் எழுதிக் குவிக்கப்படுகின்றன. ஏன் கவிதை பரவலாக எழுதப்படுகிறது என்பதும் எது கவிதை என்பதும் தனித்தனியே பேசப்பட வேண்டிய விஷயங்கள் அல்ல என நினைக்கிறேன்.

'சிறுகதை', 'நாவல்', 'கட்டுரை' போன்ற சொற்களை நாம் தினசரி வாழ்வில் கேட்பது அரிது. ஆனால் 'கவிதை' எனும் சொல் அப்படியல்ல. பல நேரங்களில் அது சாதாரணமாக உபயோகிக்கப்படுகிறது. கவிதையோடு பல விஷயங்கள் ஒப்புமை செய்யப்படுவதை நாம் தொடர்ந்து கேட்கிறோம். அழகிய பெண். அழகான நிலக் காட்சி. இனிய ஞாபகம். வித்தியாசமான வாக்கியம். உணர்ச்சிகரமான பேச்சுஇப்படி அழகானவையும், வித்தியாசமானவையும், உணர்ச்சிமிக்கவையும் நமக்கு ஏனோ கவிதையை நினைவுப்படுத்துகின்றன. அதாவது தினசரித்தன்மை விலகும் இடத்தில் தோன்றும் ஒவ்வொன்றையும் நாம் கவிதை என்று துணிந்து அடையாளப்படுத்துகிறோம். அப்படி எல்லாவற்றையும் ஒரேடியாக கவிதை என்று சொல்ல முடியாதுதான். அதே நேரம், அவற்றைக் குறிப்பிட, வேறெந்தச் சொல்லும் உடனடியாகத் தட்டுப்படுவதில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளவே வேண்டும். எல்லா மேலான அனுபவங்களையும் உணர்ச்சிகரமான மனநிலைகளையும் கவிதை என்று சொல்வது பொருத்தமற்றதன்று. சமூகமாக நம் ஆழ்மனதில் கவிதையின் இயல்பு அந்த அளவு பதிந்திருக்கிறது. கவிதை உதிப்பதற்கான தருணங்கள் வாழ்க்கைக்குள் எப்போதும் காத்திருப்பதனாலேயே அது பிரபலமான வடிவமாகவும் இருக்கிறது. முழுமையாக உள்வாங்க முடிந்திராவிட்டாலும், சிறிய உரசலாகவேனும் அத்தருணங்களை அனைவரும் எதிர்கொண்டிருப்போம். நம்மைச் சுற்றி,கவித, கவித என்று உச்சுக்கொட்டும் குரல்கள்தான் எத்தனை?