Saturday 12 January 2019

மனிதனாக இருப்பது என்றால் என்ன? அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி?


மனிதனாக இருப்பது
காலவரிசைப்படி பார்த்தால் குற்றமும் தண்டனையும் (1866) நாவல் நிலவறைக் குறிப்புகளுக்கும் (1864) அசடனுக்கும் (1869) நடுவே தாஸ்தாயெவ்ஸ்கியால் எழுதப்படுகிறது. (இடைப்பட்ட வருடங்களில் அவர் எழுதிய இன்னொரு நாவல் சூதாடி.). நிலவறை மனிதன், ரஸ்கல்நிகோவ், மிஷ்கின் ஆகிய மூவருக்கும் நடுவே உள்ள தொடர்பையும் வேறுபாட்டையும் கவனிப்பது குற்றமும் தண்டனையும் நாவலை அதன் மையச் சரடை ஒட்டி நெருக்கமாகப் புரிந்துகொள்ள உதவும் என நினைக்கிறேன். போலவே, தன் நாவல்களில் உணர்ச்சிகரமான நாடகத் தருணங்களைக் கட்டமைத்து வெவ்வேறு தரப்புகளில் நின்று பல்வேறு குரல்களில் பேசி தாஸ்தாயெவ்ஸ்கி பதில் கண்டடைய நினைத்த ஆதார கேள்வி குறித்த தோராயமான சித்திரத்தையும் இதன் வழியே நாம் உருவாக்கிக் கொள்ளலாம். 


நிலவறை மனிதன், உலகின் அத்தனை இயக்கங்களிலிருந்தும் தன்னை முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டவன். “நான் மனிதன்” என்று சதா அறிவித்துக் கொண்டே இருந்தாலும் உண்மையில் சமூகம், குடும்பம் என்கிற அனைத்து மனிதக் கதையாடல்களுக்கும் வெளியேதான் அவன் நின்று கொண்டிருக்கிறான். ஏற்றமாதிரியே அவன் வசிப்பிடமும் பூமியில் இல்லை. பூமிக்கு கீழே இருக்கிறது. எலி வலைப் போன்றது அந்த நிலவறை. எனில், நிலவறை மனிதனுக்கு மறு எல்லையில் உள்ள மிஷ்கின் யார்? அவன் கிறிஸ்துவின் நவீன உருவம் என்பதை நாம் அறிவோம். சிலுவையில் உறைந்த தச்சன் மகனின் மரபணுக்களைக் கொண்டே தாஸ்தாயெவ்ஸ்கி மிஷ்கினை உருவாக்கி பழைய குளிராடைகள் அணிவித்துப் பீட்டர்ஸ்பெர்க் செல்லும் ரயிலில் ஏற்றிவிடுகிறார். மூன்றாம் நாள் கண் விழிக்கவுள்ள தச்சன் மகனுக்காக விண்ணுலகம் காத்திருக்கிறது என்றால், நிலவறை மனிதன் பதுங்கியிருக்கும் இருளை பாதாள உலகம் என்றோ நரகம் என்றோதான் வரையறை செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வகையில் நிலவறை மனிதன், மிஷ்கின் இருவருமே பூமியோடு சம்பந்தமில்லாத இரண்டு எதிர்நிலைகளில் இருக்கிறார்கள். நீங்களோ நானோ அவர்களாக மாற முடியும் என்று ஒருவர் சொல்லத் துணியும்போதே , அவர்கள் நீங்களோ நானோ இல்லை என்றும் இன்னொருவர் சொல்லத் துணியலாம். ஆனால் ரஸ்கல்நிகோவை ஒருபோதும் அப்படிப் பிரித்து வைத்தோ விலகி நின்றோ பார்க்க முடியாது. குழப்பங்களும் தத்தளிப்புகளும் உடைய "மனிதன்" ரஸ்கல்நிகோவ். குற்றத்திற்கான வேட்கையும் ஆற்றலும் உடையவன். மண்ணுலகில் வாழ விதிக்கப்படவன்.