மனிதனாக இருப்பது
காலவரிசைப்படி பார்த்தால் குற்றமும் தண்டனையும் (1866) நாவல்
நிலவறைக் குறிப்புகளுக்கும் (1864) அசடனுக்கும் (1869) நடுவே தாஸ்தாயெவ்ஸ்கியால்
எழுதப்படுகிறது. (இடைப்பட்ட வருடங்களில் அவர் எழுதிய இன்னொரு நாவல் சூதாடி.).
நிலவறை மனிதன், ரஸ்கல்நிகோவ், மிஷ்கின் ஆகிய மூவருக்கும் நடுவே உள்ள தொடர்பையும்
வேறுபாட்டையும் கவனிப்பது குற்றமும் தண்டனையும் நாவலை அதன் மையச் சரடை ஒட்டி
நெருக்கமாகப் புரிந்துகொள்ள உதவும் என நினைக்கிறேன். போலவே, தன் நாவல்களில்
உணர்ச்சிகரமான நாடகத் தருணங்களைக் கட்டமைத்து வெவ்வேறு தரப்புகளில் நின்று பல்வேறு
குரல்களில் பேசி தாஸ்தாயெவ்ஸ்கி பதில் கண்டடைய நினைத்த ஆதார கேள்வி குறித்த
தோராயமான சித்திரத்தையும் இதன் வழியே நாம் உருவாக்கிக் கொள்ளலாம்.
நிலவறை மனிதன், உலகின் அத்தனை இயக்கங்களிலிருந்தும் தன்னை
முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டவன். “நான் மனிதன்” என்று சதா அறிவித்துக் கொண்டே
இருந்தாலும் உண்மையில் சமூகம், குடும்பம் என்கிற அனைத்து மனிதக் கதையாடல்களுக்கும்
வெளியேதான் அவன் நின்று கொண்டிருக்கிறான். ஏற்றமாதிரியே அவன் வசிப்பிடமும்
பூமியில் இல்லை. பூமிக்கு கீழே இருக்கிறது. எலி வலைப் போன்றது அந்த நிலவறை. எனில்,
நிலவறை மனிதனுக்கு மறு எல்லையில் உள்ள மிஷ்கின் யார்? அவன் கிறிஸ்துவின் நவீன
உருவம் என்பதை நாம் அறிவோம். சிலுவையில் உறைந்த தச்சன் மகனின் மரபணுக்களைக் கொண்டே
தாஸ்தாயெவ்ஸ்கி மிஷ்கினை உருவாக்கி பழைய குளிராடைகள் அணிவித்துப் பீட்டர்ஸ்பெர்க்
செல்லும் ரயிலில் ஏற்றிவிடுகிறார். மூன்றாம் நாள் கண் விழிக்கவுள்ள தச்சன்
மகனுக்காக விண்ணுலகம் காத்திருக்கிறது என்றால், நிலவறை மனிதன் பதுங்கியிருக்கும்
இருளை பாதாள உலகம் என்றோ நரகம் என்றோதான் வரையறை செய்ய வேண்டியிருக்கிறது.
அவ்வகையில் நிலவறை மனிதன், மிஷ்கின் இருவருமே பூமியோடு சம்பந்தமில்லாத இரண்டு
எதிர்நிலைகளில் இருக்கிறார்கள். நீங்களோ நானோ அவர்களாக மாற முடியும் என்று ஒருவர்
சொல்லத் துணியும்போதே , அவர்கள் நீங்களோ நானோ இல்லை என்றும் இன்னொருவர் சொல்லத்
துணியலாம். ஆனால் ரஸ்கல்நிகோவை ஒருபோதும் அப்படிப் பிரித்து வைத்தோ விலகி நின்றோ
பார்க்க முடியாது. குழப்பங்களும் தத்தளிப்புகளும் உடைய "மனிதன்" ரஸ்கல்நிகோவ்.
குற்றத்திற்கான வேட்கையும் ஆற்றலும் உடையவன். மண்ணுலகில் வாழ விதிக்கப்படவன்.
ரஸ்கல்நிகோவ் வாடகைக்குத் தங்கியிருக்கும் அறை பற்றி நாவலில்
தொடர்ச்சியாகக் குறிப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. காற்று வராத புழுக்கம்
நிறைந்த அவ்விடத்தை அறை என்று அழைப்பதைவிட அலமாரி என்பதே பொருத்தமாக இருக்கும் என
நாவலின் ஆரம்பக் காட்சியிலேயே சொல்லப்படுகிறது. பிறகு மற்றொரு இடத்தில் அவன் அம்மா
அது சவப்பெட்டி போலிருப்பதாகக் கூறி வருந்துகிறார். நாவலில் இடம்பெற்றுள்ள
புகழ்பெற்ற வாக்குமூலக் காட்சியில் "சிறிய அறைகளும் தாழ்ந்த கூரைகளும் எவ்வளவு
தூரத்துக்கு ஆன்மாவையும் மனதையும் அழுத்தி நசுக்கும் என்பது பற்றி உனக்கு ஏதாவது
தெரியுமா?” என ரஸ்கல்நிகோவ் சோனியாவிடம் கேட்கிறான். பல விமர்சன கட்டுரைகளிலும்
அந்த அறை நாவலின் முக்கியப் படிமங்களில் ஒன்றாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாவல் மொழிபெயர்ப்பாளர் ஆலிவர் ரெடி ரஸ்கல்நிகோவுடைய மனதின் புறவடிவமே அந்த அறை
என்று முன்னுரையில் எழுதுகிறார். எனினும் இவற்றையெல்லாம் தாண்டி நாம் தவறாமல்
ஞாபகத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் - அது பூமிக்கடியில் உள்ள நிலவறையல்ல என்பதே.
பதுங்கிக் கொள்ளாத முடியாதவாறும் பிற மனிதர்களை அனுமதிக்கும்படியும் அது திறந்து
இருக்கிறது. நிலவறை மனிதன் போல் ரஸ்கல்நிகோவ் சாத்தியங்களை அடைத்து வைக்கவில்லை.
உலகின் இயக்கங்களோடு அவன் பிணைக்கப்பட்டிருக்கிறான். அதே சமயம் மிஷ்கின் மாதிரி
குற்றம் புக முடியாத புனித தடுப்பரண்களின் காவலும் ரஸ்கல்நிகோவுக்குக் கிடையாது.
எதிர்பார்ப்பின்றிப் பலருக்கும் உதவி செய்கிறபோதும் அவனிடம் கிறிஸ்துவின் சாயலை
கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதனால்தான் தொடக்கத்திலேயே ரஸ்லல்நிகோவ் வெறும்
மனிதன் மட்டுமே என்று கூறினேன். அவ்விதத்தில் குற்றமும் தண்டனையும் நாவலின் மொத்த
பரப்பையும் “மனிதனாக இருப்பது என்றால் என்ன?” என்கிற ஒற்றைக் கேள்விக்குள்
சுருக்கிவிடலாம்.
பசிக் கொண்ட ஆன்மா
நவீன காலகட்டத்தை (modernity) அதன் சரிவு திசையில் நின்று தீவிரமாக
எதிர்கொண்ட படைப்பாளிகளில் தாஸ்தாயெவ்ஸ்கி முக்கியமானவர். முன்னோடியும்கூட.
இறுக்கமும் தன்முனைப்பும்கூடிய நவீன காலகட்டத்தின் பகுத்தறிவுவாதம்
தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளில் தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
பொதுமைப்படுத்துதல், மையப்படுத்துதல் போன்ற நவீன காலகட்டத்தின் நியதிகள் எல்லாமே
அறிவியல் நெறிகளோடு தொடர்புடையவை. கடவுச்சீட்டுகளை வாங்கிப் பரிசோதனை செய்து
பார்த்தால் அவை ஒரே மாதிரி கணிதவியலில் இருந்து புறப்பட்டு வந்திருப்பதைக்
கண்டுபிடிக்கலாம். “இயற்கையின் புத்தகம் கணித எண்களாலேயே எழுதப்பட்டிருக்கிறது”
எனும் கலிலியோவின் வாக்கியத்தை நவீன காலகட்டத்தின் முதல் நிலை பிரகடனங்களில்
ஒன்றாகவே கூறுகிறார்கள். அப்போதைய அறிவியல் பொருள்முதல்வாதம் இப்பிரபஞ்சத்தை
அளவிடப்படக்கூடிய பொருட்களின் (quantifiable objects) தற்செயல் தொகுப்பாகவே
வகுத்தது. கணித விதிகளின்மூலமாகப் பொருட்களை அளவிடும் வழிமுறைகளையும்
சூத்திரங்களையும் வரையறுத்து அளித்தது. எண்களாலான இந்த அறிவியல் நோக்குச் சமூகக்
கட்டமைப்புகளில் நுழைந்து மனிதர்களை முக்கோணம் போல் அளக்கவும் வடிவமைக்கவும் முயற்சி
செய்யும்போதுதான், தாஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரங்கள் குறுக்கே நின்று வழியை
மறிக்கிறார்கள். அறிவார்ந்த விளக்கங்களை மீறும் அல்லது அத்தகைய விளக்கங்கள்
குழம்பும் செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். முக்கோணத்துக்குச்
செல்லுபடியாகும் மாறாத கணித விதிகள் மனிதர்களுக்குச் செல்லுபடியாவதில்லை
என்கிறார்கள்.
தொழிற்புரட்சியின் விளைவாதலால் இயந்திரமயப்பட்ட நோக்கு என்பது நவீன
காலகட்டத்தின் இயல்பான அம்சங்களில் ஒன்று. திருப்புளிகளைக் கொண்டு மனிதர்களைப்
பழுது நீக்கி சமூகத்தைச் சரி செய்துவிடலாம் எனும் கனவும் அதில் இருந்தே
வந்திருக்கக்கூடும். லண்டனில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட
பிரம்மாண்டமான பொருட்காட்சியான பளிங்கு அரண்மனை (crystal palace) இக்கனவின்
மாதிரியாகவே கருதப்படுகிறது. பளிங்கு அரண்மனையை நேரில் பார்த்த தாஸ்தாயெவ்ஸ்கி தன்
குறிப்புகளில், அந்த இடம் பசிக் கொண்ட ஆன்மாவைக்கூட மண்டியிட வைத்துவிடும் என்று
எழுதியிருக்கிறார். மேலும் நிலவறைக் குறிப்புகள் நாவலிலும் பளிங்கு அரண்மனை
குறித்த விமர்சனங்கள் பதிவாகியுள்ளன. அறிவியல் சார்ந்த நிர்ணயவாத (deterministic)
போக்கு தனிமனிதனின் சுதந்திர உணர்வையும், சிக்கலான விழைவுகளையும், காரணிய
தொடர்பற்ற செயல்களையும் புறக்கணித்துப் பொதுவான ஒற்றைச் சட்டகத்துக்குள்
எல்லோரையும் பொருத்த முயற்சிக்கிறது என்றால், மனிதனோ மனிதனாக இருப்பதனாலேயே எந்த
ஒற்றைச் சட்டகத்திற்குள்ளும் அடைபடாதவனாகவும், அனைத்து தர்க்க வரையறைகளையும்
மீறுகிறவனாகவும் இருக்கிறான். இந்த முரண்பாடு தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளில்
தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. இவ்விவாதத்தில் ஆசிரியரின் தரப்பு என்ன என்பதை
அறிந்துகொள்வதில் வாசகர்களாகிய நமக்கு அதிகம் குழப்பம் ஏற்படுவதில்லை. குற்றமும்
தண்டனையும் நாவலிலேயேகூட லெபஸ்யட்னிகோவ் பகுத்தறிவுவாதத்தின் பிரதிநிதியாக
இருப்பதையும் அதன் காரணமாகவே அவன் கொஞ்சம் பரிகாசத்துடன்
சித்தரிக்கப்பட்டிருப்பதையும் நாம் பார்க்கிறோம். “[.. ]அழ வேண்டியதில்லை என்று
ஒரு மனிதனை தர்க்கத்தால் நீங்கள் அறிவுறச் செய்துவிட்டால் அவன் அழுவதைச் சீக்கிரமே
நிறுத்திவிடுவான்” என்பதே அவன் வாதமாக இருக்கிறது. அந்தக் காட்சி முழுக்கவே
ரஸ்கல்நிகோவ் லெபஸ்னட்யிகோவை சலிப்போடும் சோர்வுடனுமே எதிர்கொள்கிறான். ஏனெனில்
அவனுக்கு உள்ளூரத் தெரியும், தர்க்கம் ஒரு மனிதனை என்னென்ன முடிவுகள் எடுக்க
வைக்கும் என்று; எப்படி ரத்தக் கறையோடு மயக்கத்தில் விழ வைக்கும் என்று.
இலக்கியம் தீர்மாணமான முடிவுகளுக்குரியது அல்ல. அதில் பெரும்பாலும்
கேள்விகளும் தேடல்களும் மௌனமாகத் தலையசைப்புகளுமே இருக்கின்றன. திட்டவட்டமான
பதில்கள் இல்லாததாலேயே தர்க்கத்திற்குப் பதிலாக அது உணர்ச்சிகரத்தை தேர்வு
செய்கிறது. நிரூபணவாத உண்மைகளைவிடவும் கவித்துவ உண்மைகளுக்கு முக்கியத்துவம்
கொடுக்கிறது. ஒற்றைத் தரப்பின் எதிர்வினை என்பது சமநிலை இல்லாத மிகையுணர்ச்சியாக
மாறவே வாய்ப்புகள் அதிகம். எனவேதான் பகுத்தறிவுவாதத்துக்கு எதிராகத் தனிமனிதனை
நிறுத்தியதோடு தாஸ்தாயெவ்ஸ்கி தன் தேடலை நிறைவு செய்துவிடவில்லை. மேற்கொண்டு
அந்தத் தனிமனிதனின் கைகளில் ஒரு கோடாரியையும் கொடுத்து அதையே இன்னொரு தொடக்கமாக
மாற்றுகிறார். மனிதனாக இருப்பது அ-காரணிய நிலையில் இருப்பது என்று கொள்வோமேயானால்
மனிதனுடைய செயல்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வது யார்? அவனுக்கு அற நியதிகளின்
கட்டுப்பாடு உண்டா? என இவ்விவாதத்தைச் சாத்தியமான எல்லைவரை - அசௌகரியமான
உண்மைகளையும் எதிர்கொள்ளும்விதமாக- விஸ்தரித்துக் கொண்டே செல்கிறார்.
மதிப்பீடுகளின் எல்லாக் கட்டுப்பாடுகளும் மறையும்போது மனிதர்கள் எந்தப்
பிடிமானமும் இல்லாதவர்களாகவும் வெறும் இச்சைகளால் உந்தப்படுகிறவர்களாகவும்
மாறுகிறார்கள். அத்தகைய சூழலில் எதிர்மறையான அழிவு சக்திகளே முளைத்துவர முடியும்.
தன் காலத்தில் ருஷ்யாவில் பிரசித்தி பெறத் துவங்கிய நிஹிலிசத்தை அப்படியான
ஆபத்துகளில் ஒன்றாகப் பார்த்த தாஸ்தாயெவ்ஸ்கி, புனைவுகளில் அதை அவ்வப்போது சாடவும்
செய்கிறார். ஒருபுறம் கணித விதிகளும் இயந்திரக் கூடங்களும். இன்னொருபுறம் மனிதனுள்
உறைந்திருக்கும் மிருக இயல்பும் சுயநலத்தின் மூர்க்கமான விசையும். இந்த இரண்டு
எதிர்முனைகளுக்கும் நடுவே ஒருகையில் பைபிளை நெஞ்சோடு அணைத்தபடியும் மறுகையில் நடுக்கத்துடன் சிலுவையைப் பிடித்தவாறும்
நின்று கொண்டிருக்கும் தாஸ்தாயெவ்ஸ்கியை அடிக்கடி அவர் படைப்புகளில் பார்க்க
முடிகிறது.
கடவுளாக இருப்பது
தாஸ்தாயெவ்ஸ்கி கிறிஸ்துவத்தின் மீது அபாரமான பற்றும்
நம்பிக்கையும் கொண்டவர் என்பது ரகசியமோ அல்லது புதிய கண்டுபிடிப்போ அல்ல. அரசுக்கு
எதிரான சதிக் குற்றத்தின் பேரில் கைது செய்யட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட
காலத்தில் கிறிஸ்துவத்தின் வழியாகவே தாஸ்தாயெவ்ஸ்கி மன பிறழ்வடையாமல் தப்பித்தார்
என்று கூறும் நபோகோவ், அங்கு அவர் தனக்காகக் கண்டுபிடித்துக் கொண்டது நரம்பியல்
கோளாறு போன்ற கிறிஸ்துவம் (neurotic christianism) என்று கேலியோடு விமர்சனமும்
செய்கிறார். தன் ஆழமான கிறிஸ்துவப் பிடிப்பின் காரணமாகத் தாஸ்தாயெவ்ஸ்கி சிலபோது
மரபுவாதியாகவும் அடையாளப்படுத்தபடுவதுண்டு ஆனால் ஆச்சர்யமாகத் தாஸ்தாயெவ்ஸ்கியின்
படைப்புகளில் கடவுளுக்கு எதிரான வாதங்களும் தீவிரத்துடனும் அசலான உணர்ச்சியுடனுமே
பதிவாகியிருக்கின்றன. ஜெயமோகன் அதையே விளையாட்டாகத் தாஸ்தாயெவ்ஸ்கி தன்
வாக்குச்சீட்டில் தானே மாற்றிக் குத்துகிறவர் என்று எழுதுகிறார். அதற்கு முக்கியக்
காரணம் நவீன காலகட்டத்தின் அறிவியல் நோக்கே. புறவயமாக அளவிட முடியாத எதுவும்
ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் தேதி முடிந்து முதலில் காலவதியாவது கடவுள்தான்.
நீட்ஷே வந்து இன்னும் கடவுளின் மரணத்தை அறிவிக்கவில்லை என்றாலும் ஏற்கனவே அறிவியல்
நோக்கில் சிருஷ்டிகர்த்தாவான கடவுள் மரணப் படுக்கைக்குச் சென்றுவிட்டார் என்றே கூற
வேண்டும். நீட்ஷே தன் பங்குக்குக் கடவுளின் சுவாசக் குழாயை மட்டுமே உருவ
வேண்டியிருந்தது. கடவுளில்லாத உலகம் என்பதே முதன்மை கோஷமாக இருந்த ஓர்
காலகட்டத்தில் தாஸ்தாயெவ்ஸ்கிக்குள் விழித்திருக்கும் புத்திஜீவிக்குக் கடவுளை
ஏற்றுக் கொள்வது அவ்வளவு எளிய காரியமாக இருந்திருக்க முடியாது. மேலும் தனிமனிதனின்
சுதந்திரத்தை முன்னிறுத்தும்போது எல்லா வகையான நிர்ணயவாத போக்குகளையுமே – அறிவியல்
சார்ந்ததோ அல்லது கடவுள் நம்பிக்கை சார்ந்ததோ- மறுக்க வேண்டியிருக்கிறது. அப்படிப்
பார்த்தால் தாஸ்தாயெவ்ஸ்கி உண்மையில் கடவுளின் முழு அதிகாரத்தையும் ஒப்புக் கொண்டதாகச்
சொல்ல முடியாது. தெருக் கம்பங்களில் கண்காணிப்புக் காமிரா போல் கடவுள் இருந்தால்
போதும் என நினைத்ததாகவே எண்ணத் தோன்றுகிறது.
(The Body of the Dead Christ in the Tomb and a detaill by Hans Holbein the Younger) |
நான் முதலில் சொன்ன “மனிதனாக இருப்பது என்றால் என்ன?” எனும்
கேள்வியை இடைப்பட்ட பிற பகுதிகளோடு இணைத்து சற்று விரிவாக்கி மறுபடியும் கேட்டுப்
பார்க்கலாம். “கடவுளில்லாத நவீன காலகட்டத்தில் அ-காரணிய மனிதனாக இருப்பது என்றால்
என்ன?”. .ஆம் இது இருத்தலியல்வாதத்தின் கேள்வியன்றி வேறில்லை. தாஸ்தாயெவ்ஸ்கி,
முதல் தலைமுறை இருத்தலியல் படைப்பாளிகளில் ஒருவர். உணர்ச்சிகளை
விலக்கிவைத்துவிட்டு கருத்துக்களின், பொருட்களின் தத்துவங்களையே (philosophy of
things and ideas) முதன்மையாகப் பேசிக் கொண்டிருந்த மேற்கின் அறிவுப்புலத்தில்
முதன்முறையாகத் தனிமனிதனின் இருப்பை உடனடியாகப் பதில் கண்டுபிடிக்க வேண்டிய
அத்தியாவசிய பிரச்சனையாக முன்வைத்தது இருத்தலியல்வாதம். மகத்தான சிந்தனைகளுக்குக்
கீழே அதே சிந்தனைகளின் பாரத்தால் நசுங்கிக் கொண்டிருக்கும் மனிதனை சுட்டிக் காட்டி
இந்த உலகில் மனிதன் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்த விசாரணைகளை அது
மேற்கொண்டது. தற்செயல்களின் தொகுப்பான இப்பிரபஞ்சத்தில், எல்லா அரூப
கருதுகோள்களும் முழுமைகளும் (abstract ideas and absolutes) அர்த்தமற்றதாகி காரணிய
அறிவும் சந்தேகத்துக்குள்ளாகும்போது மனிதன் செயலாற்ற முடியாதவன் ஆகிறான். உள்ளபடி
செயல் என்பதே வெறும் தேர்வாக மட்டும் எஞ்ச, பல்வேறு சாத்தியங்கள் நடுவே எந்தக்
காவல் தேவதையின் உதவியும் இல்லாமல் தனிமனிதன் அவனாக அந்தத் தேர்வை நிகழ்த்த
வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அசாதாரணப் பொறுப்பும் அநாதை உணர்வும் அவனைச்
சூழ்ந்துகொள்கின்றன. இந்த இருத்தலியல் பறதி அக்காலத்தின் பல படைப்புகளிலும்
வெளிப்பட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே நிலவறை மனிதன் பிடிவாதமாகச் செயலை
மறுப்பதை நாம் காண்கிறோம். அந்தப் பக்கம், மிஷ்கினும்கூட உண்மையில் ஒன்றுமே
செய்வது கிடையாது. இறுதிவரை நஸ்தாஸ்யாவை அவனால் காப்பாற்றவே முடியவில்லை.
இவர்களுக்கு மத்தியில்தான் ரஸ்கல்நிகோவை ஒரு செயலை மேற்கொள்கிறான். ஒரு தேர்வை
நிகழ்த்துகிறான். அதுவே அந்த “கொலை”.
கொலை செய்யாமல் இருப்பது எப்படி?
ரஸ்கல்நிகோவ் ஏன் அந்தக் கொலையைச் செய்தான்? இதற்கான பதிலில்
நம்பமுடியாத பின்னனி கதை எதுவும் இல்லை. எனினும் நூற்றியைம்பது ஆண்டுகள் கடந்தும்
அக்கேள்வி வசீகரிக்கக்கூடிய மர்மமாகவே இருக்கிறது. கொலைக்கான காரணங்களை
ரஸ்கல்நிகோவே வாக்குமூலமாகச் சொல்லிவிடுகிறபோதுக்கூட அதில் ரகசியத்தின் துடிப்பு
தீர்ந்துவிடவில்லை. ரஸ்கல்நிகோவின் வாக்குமூலத்தில் இரண்டு விஷயங்களை மிக
முக்கியமாக கவனிக்க வேண்டியிருக்கிறது. என்வரையில் அவையே கொலைக்கான அசல்
காரணங்கள். ஒரு காரணம் மிக நேரடியானது - ரஸ்கல்நிகோவ் நெப்போலியனாக மாறும்
விருப்பம் கொண்டிருந்தான் என்பது. இருத்தலியல்வாதம் மேல் வைக்கப்படும் மிகப் பெரிய
விமர்சனமே அதன் அபிரிதமான தனிமனித பார்வைதான். தனிமனிதனை மையத்தில் வைத்து
பேசுவதன் வழியே நான், மற்றமை எனும் இருமையை அது வெவ்வேறு விதங்களில் கட்டமைத்துக்
கொண்டேயிருக்கிறது. யோசித்துப் பார்த்தால் வாழ்க்கையிலிருந்து அல்ல;
மரணத்திலிருந்தே இருத்தலியல்வாதிகள் அறிதல் நோக்கி நகர்கிறார்கள் என்பதைக்
கவனிக்கலாம். இல்லாமல் போவதில் இருந்தே இருப்பு பற்றிய பிரக்ஞை கூர்மையாகிறது.
மரணத்தை எதிர்ப்பது என்பது நான் எனும் சுய பற்றின் உச்ச வெளிப்பாடே . ஏறத்தாழ
நூற்றாண்டு காலம் பல்வேறு அறிவுத் துறைகளில் அளப்பரிய செல்வாக்கை செலுத்திய
இருத்தலியல்வாதத்தை வெற்று அவநம்பிக்கைவாதம் என்றோ மேம்போக்கான தனிமனிதவாதம் என்றோ
ஒருபோதும் குறுக்கவோ ஒதுக்கவோ முடியாது. எனினும் இருத்தலியல்வாதத்தின்
பங்களிப்புகளை முழுமையாக ஏற்றுக்கொண்டபடியே அதன் பக்க விளைவுகளில் ஒன்றான அதீதமான
தன்மைய நோக்கின் சிக்கலையும் பேச வேண்டியிருக்கிறது.
"நான்" எனும் சுயபிரக்ஞை பலவகையிலும் தன்முனைப்போடும்
அகங்காரத்தோடும் நுட்பமான முடிச்சுகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, உலக
இலக்கியம் கண்ட மாபெரும் இருத்தலியல் நாயகர்களில் ஒருவனான ரஸ்கல்நிகோவ்
தன்முனைப்பு மற்றும் அகங்காரத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியவனாக
இருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. நாவல் முழுக்க ரஸ்கல்நிகோவ் பிறருக்கு உதவி
செய்தவாறே இருக்கிறான். மர்மல்தேவை வீட்டில் சேர்த்த பின்பு யாரிடமும் சொல்லாமல்
அங்குப் பணத்தை வைத்துவிட்டுத் திரும்புகிறான். அறிமுகமற்ற இளம்பெண்ணைச் சாலையில்
ஒரு தீயமனிதனிடமிருந்து காப்பாற்றிக் காவல் அதிகாரியிடம் ஒப்படைப்பதோடு அவளைப்
பத்திரமாக அழைத்துப் போவதற்கான செலவையும் ஏற்றுக் கொள்கிறான். இறுதியில்
நீதிமன்றம்கூட அவனுடைய உதவி செய்யும் குணத்தைப் பொருட்படுத்த நேர்கிறதெனும்போது
அவனுடைய உதவிகள் தன்னலமற்ற சேவைகளாகவும் பெருந்தன்மையின் அடையாளங்களாகவுமே கவனம்
பெற்றிருக்க வேண்டும். எனினும் ஒருமுறை கூட நம்மால் அவனைக் கருணை மிக்கவனாகக்
கற்பனை செய்ய முடிவதில்லை. கொலைகாரன் என்பது மட்டுமே அதற்குக் காரணம் கிடையாது.
ஏனென்றால் வேறு பல சந்தர்பங்களிலும் எந்தத் தயக்கமும் இல்லாமல்தான் அவன் மேல் நாம்
பரிதாபம் கொள்கிறோம். அப்படியானால் ஏன் அவன் கருணையாளனாக நம் மனதில் பதியவில்லை?
காரணம்- உதவி செய்வதில் இருக்கும் நாட்டம் போலவே உதவி பெறுவதில் அவனுக்கு
இருக்கக்கூடிய மனத்தடையும் உக்கிரமான மறுப்பும்தாம். வாசிப்பின்போது அவை நம்
கவனத்தை ஈர்க்கத் தவறுவதில்லை. ரஸ்முகின் தன் மொழிபெயர்ப்பு வேலையைப் பங்கிட்டுக்
கொடுக்கும்போது காரணமே இல்லாமல் ரஸ்கல்நிகோவ் அதை மறுக்கிறான். ரஸ்முகின்
மருத்துவரை கொண்டு அவனைக் குணப்படுத்த முயற்சிக்கும்போதுக்கூட அவனிடம் கசப்பே
வெளிப்படுகிறது. அவசியமான உதவிகளைக்கூடப் பொறுக்க முடியாதவனால் அவன் நிமித்தமாகவே
விருப்பமில்லாத மண வாழ்க்கைக்குத் தங்கை தயாராவதை செரிக்க முடிந்திருக்குமா என்ன?
கோடாரிக்கும் அவனுக்குமான தொலைவை குறைத்ததில் அவன் அம்மா எழுதிய கடிதத்துக்கு உள்ள
பங்கை அவனது அகங்காரத்துக்குப் பக்கத்தில் வைத்தே அளக்க முடியும்.
அகங்காரத்தாலும் மீறலின் ருசியை உணர்ந்துவிட்டதாலும் ரஸ்கல்நிகோவ் கடைசிவரையிலும் தன் கொலைக்காக நிஜமாக வருத்தப்படவே இல்லை எனக் குற்றமும் தண்டனையும் நாவல் பற்றிய தன் கட்டுரையில் எழுதுகிறார் ஹரால்ட் ப்ளூம். எதை உடைக்க முடியுமோ அதை மட்டும் உடைத்த ரஸ்கல்நிகோவ் தன்னை உடைக்கவில்லை என்றும் அவனைப் பொருத்தமட்டிலும் அதிகாரம் என்பது தன்னைத் தவிரப் பிற யாரை வேண்டுமானாலும் கொல்வதற்கான ஆற்றல் என்றும் அக்கட்டுரையில் குறிப்பிடப்படுகிறது ப்ளூமுடைய கருத்துக்கான ஆதாரங்கள் நாவல் முழுக்க விரவி கிடக்கின்றன. “நான் ஒரு மனிதரை கொலை செய்யவில்லை; ஒரு கொள்கையையே கொலை செய்தேன்” என்று சமாதானமாக நினைத்துக் கொள்ளும் ரஸ்கல்நிகோவ், கொள்கைக்குப் பக்கத்தில் இன்னொரு சடலம் கிடப்பது பற்றிச் சட்டை செய்ததாகவே தெரியவில்லை. அதே நேரம், ப்ளூம் எதிர்பார்ப்பது போல் ரஸ்கல்நிகோவ் தன்னை உடைப்பதற்கான வாய்ப்பும் நாவலில் வரவே செய்கிறது. சோன்யாவிடம் உண்மையைக் கூறுவதற்கு முன்னால் ரஸ்கல்நிகோவ் பலவிதமான உணர்ச்சி தடுமாற்றங்களுக்கு ஆளாகிறான். அப்போதைய தன் உளநிலை மிகச் சரியாக அந்த முதியபெண்மணியைக் கொலை செய்வதற்கு முந்தைய தருணத்தை –துல்லியமாகக் கோடாரியை பையிலிருந்து உருவும் சமயம்- ஒத்திருப்பதை உணர்ந்து அவன் திடுக்கிடுகிறான். குற்றத்தை ஒப்புக் கொண்டதன் மூலம் இம்முறை ரஸ்கல்நிகோவ் அகங்காரம் மிக்க தன் சுயத்தைக் கொலை செய்யத் துணிந்துவிட்டதாகவே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இறுதியில் சோன்யா அளிக்கும் கழுத்துச் சிலுவையை மறுப்பதன் வழியே அவன் மறுபடியும் தப்பித்துச் செல்லும் குறுக்கு பாதையையே தேர்வு செய்கிறான். தன் ஆழத்து இருளிடம் அவன் சமாதானம் செய்துகொள்ளவில்லை. அவன் தன்னை உடைத்துக் கொள்ளாது சிலுவைகளிடமிருந்து தப்பித்து ஓடும் அத்தகைய பல இடங்கள் நாவலில் உள்ளன. சோன்யா அதனாலேயே சொல்கிறாள் – ரஸ்கல்நிகோவ் கடவுளை விட்டு விலகிச் செல்ல முயன்றதால் கடவுளே வந்து அவனைப் பிடித்துக் கொண்டு போய்ச் சாத்தானிடம் ஒப்படைத்துவிட்டார் என்று. குற்ற ஒப்புதலுக்கு நிகரான பிரபல்யம் கொண்ட நாவலின் மற்றோர் காட்சி - சோன்யாவின் காலில் ரஸ்கல்நிகோவ் விழுந்து பணிவது. அதில்கூட ரஸ்கல்நிகோவ் தன் துயருக்காகவோ மீட்புக்காகவோ அவளிடம் பணியவில்லை. மாறாக “நான் உன் முன்னால் பணியவில்லை; அனைத்து மானுடத் துயரின் முன்னால் பணிகிறேன்” என்றே அவன் சொல்கிறான். “மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை” எனும் விவிலிய வரியையே ரஸ்கல்நிகோவ் நோக்கி சத்தமாகச் சொல்ல மனம் விரும்புகிறது.
உதவிகளை மறுப்பதன் வழியே மற்றமையுடனாக உறவையே மறுக்கும் தன்மைய
நோக்கே கதாநாயக விழைவாகவும் –நெப்போலியனாதல்- மாறி ரஸ்கல்நிகோவை கொலை செய்ய
வைக்கிறது. கதாநாயக விழைவு என்பது ஒருவகையில் கட்டுபடுத்தும் விழைவே. எல்லா
வன்முறைகளும் கட்டுப்படுத்தும் விழைவுகளில் இருந்தே பிறக்கின்றன. கொலைக்கான
மற்றொரு காரணம் நேரடியானது அல்ல. தான் வேலை செய்ய மறுத்து அறை மூலையிலேயே
ஒடுங்கிக் கொண்டிருந்ததது வெறுப்பினாலேயே என சோன்யாவிடம் சொல்கிறான் ரஸ்கல்நிகோவ்.
வெறுப்பினாலேயே அவன் செயலின்மைக்குள்ளும் தனிமைக்குள்ளும் விழுகிறான். இந்தக்
கடுமையான வெறுப்புணர்வே கொலைக்கான ஊற்றுமுகம். ரஸ்கல்நிகோவ் இங்கு சொல்லும்
வெறுப்பு வெளியே இருந்து வருவது அல்ல. எதன் பிரதிபலிப்பும் அல்ல. அது உயிராற்றலின்
திரிபு. அதை அனுக்கத்தில் பார்க்க, நாம் திரும்பவும் இருத்தலியல்வாதத்தின்
துணையையே நாட வேண்டும்.
தனிமனிதனின் இருப்புக்கு முந்தையவை எனக் கருத்து சார்ந்த எந்தத்
தர்க்க அமைப்போ அடிப்படைகளோ உலகில் இல்லை. ஆகவே சாரத்துக்கு மூத்தது இருப்பு
என்பதே இருத்தலியல்வாதத்தின் முதல் விதி என்கிறார் சார்த்தர். இதே கருத்தை
ரஸ்கல்நிகோவ் கச்சிதமான ஒற்றுமையோடு நாவலில் எடுத்துரைக்கிறான். “..மனிதன் மட்டும்
உண்மையிலேயே தீயவனாக இல்லாதிருக்கும்பட்சத்தில், அதாவது, மொத்த மனித இனமும்
தீமையானதாக இல்லாதிருக்கும்பட்சத்தில், இங்குள்ள மற்ற அனைத்துமே வெறும்
முன்முடிவுகள்தாம். நம்மீது பதிக்கப்பட்டுள்ள வெற்று அச்சங்கள்.”. சாரங்களுக்கு
எதிரான இந்தத் தரப்பு அடிப்படைகளை மறுப்பதால் நோக்கத்தை மறுப்பதாகவும் ஆகிறது.
ஏனெனில் அடிப்படையே நோக்கத்தைக் கற்பிக்கிறது. அவ்விதமாக நோக்கம் இல்லாத இடத்தில்
வெறுப்பு மட்டுமே இருக்க முடியும் என்பதையும் அந்த வெறுப்பு இறுகி இறுகி பச்சையம்
நுழைய முடியாத அகங்காரமாக உருமாறும் என்பதையும் அந்த அகங்காரமே பிறகு கொலை செய்ய
வைக்கும் என்பதையும் ரஸ்கல்நிகோவின் செயல் வழியே நாம் தெரிந்துகொள்கிறோம்.
ரொட்டித் துண்டுகளைத் தாண்டி மனிதர்களுக்குச் சமூகப் பாத்திரங்களும், மேன்மையான
அர்த்தங்களும், கதைகளும், கடவுள்களும் தேவையாக இருப்பது நோக்கத்தை உருவாக்கிக்
கொள்ளவும் வெற்றிடத்தில் படியும் வெறுப்பிலிருந்து தப்பித்துக் கொலை செய்யாமல்
இருக்கவுமே எனலாம். “எதுவும் இல்லாத இடத்தில் வெறுப்பு குடியேறும் என்பது
தாஸ்தாயெவ்ஸ்கியின் கண்டுபிடிப்புகளில் ஒன்று” எனச் சபரிநாதன் நிலவறைக்
குறிப்புகள் நாவல் பற்றிய கட்டுரையில் இதே விஷயத்தை முன்வைக்கிறார்.
( Isaak Levitan ஓவியம். கைதிகள் சைபீரியாவுக்கு அழைத்துச் செல்லப்படும் பாதை. Vladimir Highway) |
கருணை மடி
சமூகம் பற்றிய கவலைகளோடு விடாமல் பேசிக் கொண்டேயிருக்கும்
புத்திசாலி கதாபாத்திரங்களை எல்லாம் நாவலில் இருந்து சற்று தள்ளி வைத்துவிட்டால்
யாரெல்லாம் மீதம் எஞ்சுகிறார்கள்? தோராயமாகப் பட்டியலிட்டால்கூட முதல் வரிசையில்
சோன்யா, மர்மல்தேவின் மனைவி கத்ரீனா இவனோவ்னா, ரஸ்கல்நிகோவின் அன்னை, அவன் தங்கை
துன்யா, நஸ்தாஸ்யா எனப் பெண்களே இடம்பெறுவது எதேச்சையானது அல்ல. விடுதலையிலும்
கருணை, சரணடைதல் ஆகியவற்றின் அசைவுகளிலுமே தாஸ்தாயெவ்ஸ்கியின் கடவுள் இருக்கிறார்;
மனித சூழலுக்கு வெளியே இல்லை என்கிறார் ஏ.டி.நட்டால். அந்தக் கோணத்தில்
பார்க்கும்போது நாவலின் பெண் கதாபாத்திரங்களே தாஸ்தாயெவ்ஸ்கியின் கடவுளோடு
உரையாடக் கூடியவர்களாக இருக்க முடியும். நாவலில் இரண்டு அன்னைகளுமே தம்
பிள்ளைகளின் பொருட்டு ஓயாது துயருறுகிறார்கள். சகோதரனுக்காகத் துன்யா தன் வாழ்க்கைய
பணயம் வைக்கத் துணிகிறாள். மகளாகத் தியாகம் செய்யும் சோன்யா பாவிகளால்
கல்லெறியப்படுகிறாள். பணிப்பெண்ணான நஸ்தாஸ்யா காலி சமையலறையிலிருந்து எப்போதும்
எதையாவது உருவாக்கிக் கொண்டு வந்து ரஸ்கல்நிகோவின் பசியை ஆற்றுகிறாள்.
நாவலின் இரண்டு காட்சிகளை இங்கே உதாரணங்களாக எடுத்துக் கொள்ளலாம்.
முதலாவதாக - இறக்கும் தருவாயில் கத்ரீனா இவனோவ்னா தனக்குப் பாவ மன்னிப்பு
தேவையில்லை என்று சொல்வது. அனைத்து அவமானங்களுக்குப் பிறகும்கூட மரணத்தின் முன்
அவள் கண்ணியம் இழக்கவில்லை. தன் இறுதி மூச்சுகளின்போது, கடவுளையே மறுத்தபடி, மானுட
வாழ்க்கையை நிமிர்வோடு அவள் கை கொள்கிறாள். அப்படியாக மறுப்பின் ஊடாக அவள் கடவுளை
எதிர்கொண்டவள் ஆகிறாள். இரண்டாவது காட்சி - மர்மல்தேவின் மரணம். நாவலின் ஆரம்பப்
பகுதிகளில் மதுவிடுதியில் வைத்து நீண்ட தன்னுரை நிகழ்த்தும் மர்மல்தேவ், தன்
எல்லாக் கீழ்மைகளையும் மன்னித்துக் கடவுள் தன்னை ஏற்றுக் கொள்வார் என்று
உணர்ச்சிபூர்வமாகச் சொல்கிறான். [“ஏல்லோர் மீது பரிதாபம் காட்டியவர், நம் மீதும்
பரிதாபம் காட்டட்டும்; எல்லா மனிதர்களையும் பொருட்களையும் புரிந்துகொண்டவர் அவர்
ஒருவர் மட்டுமே; அவரே நீதிமான்”]. மரணத்துக்குப் பிறகு மர்மல்தேவை கடவுள் ஏற்றுக்
கொண்டாரா, அவன் விண்ணுலகம் சென்றானா என்பது பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது.
நிஜத்தில் தாஸ்தாவெய்ஸ்கிக்கும் சொர்கத்துக்குமே அதிகம் தொடர்பில்லை. ஒருவிதத்தில்
சொர்க்கத்தை மறுப்பதன் மூலமாகவே மனிதர்களை நரகங்களில் இருந்து அவர் மீட்டெடுக்கிறார்.
எனவே தாஸ்தாயெவ்ஸ்கியின் கருத்தை தெரிந்துகொள்வதற்குப் பதிலாக நாவலில் “அடுத்த
வாழ்க்கை” (future life) குறித்து ஸ்வைத்ரிகெய்லோவ் சொல்வதை இங்கே குறிப்பிடலாம்.
குற்றமும் தண்டனையும் நாவல் எப்படித் தொடர்ச்சியாகத் தன் அக்கறையைப் பூமியில்
நிகழும் மனித வாழ்க்கை பற்றியதாக வடிவமைத்து இறுதிவரை தக்கவைக்கவும்
செய்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அது உதவும். அல்லாவிட்டாலும் தேவாலய
ஊழியக்காரராகக் குறுக்கப்படும் ஆபத்திலிருந்தேனும் தாஸ்தாயெவ்ஸ்கியை காப்பாற்றும்.
“அடுத்த வாழ்க்கை” குறித்த விவாதத்தின்போது ரஸ்கல்நிகோவிடம் “[மரணத்துக்குப்
பிந்தைய] நித்யத்தை ஏன் பிரம்மாண்டமானதாகக் கற்பனை செய்ய வேண்டும்? […] அது ஏன்
எல்லா மூலைகளிலும் சிலந்திகள் உலவும் இடமாக இருக்கக்கூடாது?” என்று வினவுகிறான்
ஸ்வைத்ரிகெய்லோவ். அக்கேள்வி இந்த உலகத்துக்கு அப்பால் செல்லும் எல்லாப்
பாதைகளிலும் சுவர்களை எழுப்பி வழியை அடைத்துவிடுகிறது. “இங்கே இப்போது” பதில் சொல்
என்று சட்டையைப் பிடிக்கிறது. விளைவாக நாம் பூமியில் நின்று அதன் கேள்விகளுக்கு
மட்டும் பதில் தேட வேண்டிய நிர்பந்தத்தை அறிகிறோம். இதனால்தான் மர்மல்தேவின் மரணக்
காட்சி கூடுதல் முக்கியத்துவம் அடைகிறது. தான் விரும்பியது போலவே எல்லாக்
கீழ்மைகளையும் தாண்டி மர்மல்தேவ் மன்னித்து ஏற்றுக் கொள்ளவே படுகிறான். ஆனால் அது
கடவுளால் அல்ல; சோன்யாவால் நடக்கிறது. சோன்யாவிடம் பாவ மன்னிப்பு பெற்ற பிறகே அவன்
உயிர் பிரிகிறது. கத்ரீனா இவனோவ்னா மாதிரியே சோன்யாவும் கடவுளை எதிர்கொள்கிறாள். அல்லது அவளே கடவுளாகிறாள்
இன்றைய வாசிப்பில் ஒருவரின் பார்வைக்கு நாவலில் பிற யாரைவிடவும்
சோன்யாவே மிகுதியான கற்பனாவாத பண்புகள் உடையவளாகத் தோன்றக்கூடும். பணியச்
செய்யக்கூடிய அந்தப் பூரணம் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தக் கூடியது. விடுதலையையும்
சரணடைதலையும் ஒரே இடத்தில் பொருத்துவதன் குழப்பங்கள் அதில் இருக்கின்றன.
யாவற்றுக்கும் மேலாக, தியாகங்கள் மைய உரையாடலுக்கு வெளியே நிறுத்தி
வைக்கப்பட்டிருக்கும் காலகட்டம் நம்முடையது. எனவே நெருப்புக்குள் இறங்கி வெளியே
வராதவரை சோன்யாவை அப்படியே முழுமையாக நம்பி ஏற்றுக்கொள்வது நமக்குச் சிரமமே. ஆனால்
ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்லலாம் - ரஸ்கல்நிகோவிடம் வெளிப்படும்
கட்டுப்படுத்தும் விழைவு சோன்யாவிடம் சிறிதும் இல்லை. எனவே மீட்பு இருக்கிறதோ
இல்லையோ அங்கு வன்முறைக்கு மட்டும் வழி கிடையாது. உடன், புனிதராக
ஒப்புக்கொள்ளாவிட்டாலும் ரஸ்கல்நிகோவ் செய்வது போல் சோன்யாவை எளிய கிறிஸ்துவப்
பெண் எனும் முத்திரையில் அடக்கி புறக்கணிப்பது பிழையான செயல். வாக்குமூலக்
காட்சியில் அவள் கடவுள் குறித்தோ தண்டனை குறித்தோ அதிகம் பேசுவதில்லை என்பதை
நினைவுப்படுத்திப் பார்க்கலாம். மகிழ்ச்சி பற்றியே அவள் திரும்பத் திரும்பக்
கேட்கிறாள். வியப்பூட்டும்படியாக ஒரு கட்டத்தில் இந்த உலகத்திலேயே அவனைப் போல்
மகிழ்ச்சியற்ற வேறு மனிதன் இருக்கமுடியாது எனக் கூறுகிறாள். சோன்யாவை
பொருத்தவரையிலும் குற்றம் என்பது பாவம்தான்; என்றாலும் அவள் அதைக் கடவுளோடு
இணைக்கவில்லை. தனிமனிதனுடனே இணைக்கிறாள். அப்படியே அவளைக் கிறிஸ்துவப் பெண் என்று
மட்டுமே கருதினாலும்கூடக் கீர்ககார்டியன் நோக்கில் அவள் ஒரு வெற்றிகரமான
இருத்தலியல்வாதியே. நாம் நம்புகிற விஷயத்தின் ஆதாரபூர்வமான நிரூபணத்தைக்
காட்டிலும் நம் நம்பிக்கையின் உண்மைத்தன்மையே பிரதானமானது என்பதே அவருடைய
முக்கியக் கண்டடைதல். அத்தகைய நம்பிக்கை எதன் மேல் தோன்றுகிறதோ அதையே அவர் வாழவும்
சாகவும் பெறுமதியுள்ள உண்மை என்று வரையறுக்கிறார். ரஸ்கல்நிகோவ் கண்டுபிடித்தது
அத்தகைய அகவயமான உண்மையை அல்ல. அதனால்தான் அது அவனை நோக்கி உட்புறம்
திரும்பக்கூடியதாக இல்லாமல் தன்னையன்றி பிறரை கொலை செய்யக்கூடியதாக இருக்கிறது.
ஆனால் சோன்யாவின் உண்மைக்கு அந்த வலிமை உண்டு. ஏனெனில் அது முதலில் பலி வாங்கியதே
அவளுடைய உடலைத்தான்.
மர்மல்தேவ் சொல்கிறான். “ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் இரக்கத்துடன்
நடத்தப்படக்கூடிய ஒரு இடமாவது [உலகில்] இருக்க வேண்டும்” என. அது அன்னையரின் கருணை
மடியாக, கருப்பைகளின் வெதுவெதுப்பாக இல்லாமல் வேறெதுவாக இருக்க முடியும்? இதைத்
துல்லியமாக உணர்ந்துகொண்டவன் ரஸ்முகின் மட்டுமே. ஆகையால்தான் அவள் துன்யாவை
கண்டதும் அவள் முன்னால் பணிந்து வணங்கி விடுகிறான்.
தேடலின் முடிவில்
பகுத்தறிவும் சுதந்திரமும் - கடவுளும் சுதந்திரமும் - சுதந்திரமும்
மதிப்பீடுகளும் - கடவுளும் மனிதர்களும் - அகங்காரமும் சரணடைதலும் எனப் பல்வேறு
எதிர்நிலைகளை உருவாக்கி மனிதனாக இருப்பது என்றால் என்ன எனும் கேள்விக்குப் பதில்
தேட முயற்சி செய்கிறார் தாஸ்தாயேவ்ஸ்கி. ஏ.டி.நட்டால் சொல்வது போல் அந்த நீளமான
கதை இன்னமும் முடிவடையாமல்தான் இருக்கிறது. தயக்கமின்றி ஒரு முடிவை முன்வைப்பது
இங்கே சாத்தியம் கிடையாது. ஏனெனில் தாஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரங்கள் அவர்
அனுமதிக்கும் எல்லையை மீறி அதிகம் பேசிவிடுகின்றன. அவருக்குத் தெரியாத
உண்மைகளைக்கூடச் சட்டென வெளிப்படுத்திவிடுகின்றன. நாவலில் வெற்றிகரமாக
நிலைநிறுத்தப்பட்டிருப்பது இருத்தலியல்வாதமா அல்லது கிறிஸ்துவமா என்கிற கேள்வியைத்
தன் கட்டுரையில் விரிவாக ஆராயும் நட்டால் அதை இப்படி முடிக்கிறார் – “போலியாக ஒரு
முடிவை சொல்வது எளிது; ஆனால் அது நன்மை மீதும் உண்மை மீதும் ஒரே அளவிலான காதல்
கொண்டிருந்த தாஸ்தாயெவ்ஸ்கிக்கு செய்யும் அவமரியாதை”. நன்மைமீதும் உண்மைமீதும் சம
அளவில் காதல் கொண்டிருப்பதையே நாம் கலை நேர்மை என்கிறோம். கலை நேர்மையே தூய
மேதமையாக பரிணமிக்க முடியும் என்பதற்கான சாட்சியம் குற்றமும் தண்டனையும் நாவல்.
உதவியவை :
1. Existentialism : An Introduction – Kevin Aho
2. The Intellectual Probem – A.D.Nuttall
3. Introduction of Crime and Punishment. – Harold Bloom.
4. இருத்தலியலும் கசாக்கின் இதிகாசமும் – கஸ்தூரி ரங்கன்
* “ஏனெனில் அடிப்படையே நோக்கத்தைக் கற்பிக்கிறது.” எனும் கருத்து
கஸ்தூரி ரங்கனின் கட்டுரையில் இருந்தே எடுத்தாளப்பட்டுள்ளது.
5. வண்பாற்கண் வற்றல் மரம் – சபரிநாதன்
No comments:
Post a Comment