Thursday 6 September 2018

கடல் (சிறுகதை)

கடற்கரைக்கு இன்று கூட்டி போவதாக ஜானின் அப்பா கூறியிருந்தார். கல்லூரி விடுதியில் இருக்கும் பெரியம்மா மகன்  யாக்கோப் அண்ணாவையும் உடன் அழைத்துச் செல்லலாம் என்பது திட்டம். போனதடவை கடற்கரைக்குச் சென்றிருந்தபோதும் யாக்கோப் அண்னா கூட வந்திருந்தார். ஜானுடைய அப்பாவும் அம்மாவும் கரையில் சற்று மேடான பகுதியிலேயே அமர்ந்து கொள்ள ஜானும் யாக்கோப் அண்ணாவும்தான் அலைகளில் கால் நனைக்கக் கீழே இறங்கினார்கள்.யாக்கோப் அண்ணா அவன் கைகளை விடவே இல்லை. சிலபோது பிடி இறுக்கமாக இருந்தபோதும்கூட அவரது அண்மையின் விருப்பத்தால் அச்சிறுவலியை பொறுத்துக் கொண்டான்.

நீரலைகள் கரையேறி பின் வளைந்து இரைச்சலுடன் உள்வாங்கின. பாதங்களில் ஈர மணல் அழுந்தி ஒட்ட முழங்கால்களுக்குக் கீழே சில்லிட்டு விலகும் நுரைத் தீண்டல். இன்னும் சில அடிகள் முன்னோக்கி நடக்க முயற்சிக்க யாக்கோப் அண்ணா அவன் கைகளை அழுத்தி தடுத்தார். “கொஞ்ச தூரம் முன்னால போலாம்ணா”


“அலை வந்து தூக்கிட்டு போயிடும்”.


சுற்றிலும் பார்த்தான். பொங்கியும் தாவியும் வந்து கொண்டிருந்த அலைகளில் எல்லோரும் சிரித்துக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். “எல்லோரும் போறாங்களே”

PC : A V Manikandan

யாக்கோப் அண்ணாவின் கன்னங்கள் புன்னகையில் அகலமாகின. “பெரியவங்க போலாம்” என்று சொல்லி அவனை அள்ளித் தூக்கி அந்தரத்தில் நிறுத்தினார். நீர் கொப்பளிப்புகளோடு அலைகள் எழுந்து வந்து கொண்டிருக்க, அவற்றுக்குப் பின்னால் மெல்லிய அசைவுகளோடு பிரம்மாண்டமான நீல பரப்பு, கண் எல்லைவரை மினுங்கலாக விரிந்திருந்தது. யாக்கோப் அண்ணா மிரட்டல் தொனிக்கும் பொய்க்குரலில் “முன்னாடி போனா அலை பெருசா வந்து தூக்கிட்டு போயிடும்” என்றார். உப்பி எழும் அலைகளை உயரத்தில் இருந்து பார்க்க அவனுக்கும் கொஞ்சம் அச்சமாகவே இருந்தது. அவ்வச்சத்தினோடே “பெரியவங்க போனா மட்டும் தூக்கிட்டு போகாதா?” என்றான்.

“பெரியவங்களும் கொஞ்சம் வரைக்கும்தான் முன்னாடி போகலாம். அதுக்கு மேலப் போனா அலை தூக்கிட்டு போயிடும்”. சடுதியில் அவன் முகத்தில் உருவான கலக்கத்தைக் கண்டு சமாதானமாக “ஆனா தூரமா இருந்தா அலை வராது” என்று சொன்னார்.


“ஜான்.. யாக்கோப்..”. அம்மாவின் குரல் அலைகளின் சப்தத்திற்கு நடுவே தேய்ந்து ஒலித்தது. யாக்கோப் அண்ணா அவனை இறக்கிவிட்டார். “அம்மா கூப்பிடுறாங்க பார்”. கடற்கரை காற்றினால் நெற்றியில் ஒட்டியும் பிரிந்தும் அலைவுற்றுக் கொண்டிருந்த தலைமுடியையும் படபடத்த புடவையையும் சரி செய்தபடி நின்றிருந்த அம்மா அப்போது மிக அழகாக இருந்தார். அவன் ஓடிப் போய் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டான். “நான் உங்கள என் கண்ணு முன்னாடியேதான இருக்கச் சொன்னேன்..? அலை வந்து அடிச்சிட்டு போயிடும்”. அவனது கசங்கிய சட்டையை நீவிவிட்டபடி அம்மா சொன்னபோது “நாங்க தூரமா தள்ளிதான்மா இருந்தோம். தூரமா இருந்தா அலை வராது” என உற்சாகமாகப் பதில் அளித்தான்.


செருப்புகளைக் கைகளில் பிடித்தவாறு கால்களின் ஈரம் உலர, அவர்கள் கடற்கரையிலேயே சிறிது நேரம் உலவி கொண்டிருந்தார்கள். இருள் இறங்கிய கரைமணலின் மென்பரப்பு நிலவொளியின் தீற்றல்களுடன் படர்ந்திருக்க, புரளும் காற்றைத் துரத்திக் கொண்டு ஜான்வேகமாக ஓடினான். “பார்த்து.. பார்த்து” என்கிற அம்மாவின் எச்சரிக்கை குரல்அவனைத் தொடவேயில்லை. கடற்காற்றின் இனிய குளிர் உள்ளத்தில் ததும்பி குதூகலிக்க வைக்க, தள்ளுவண்டிகளில் விற்கப்பட்டுக் கொண்டிருந்த எல்லாவற்றையும் வாங்கிச் சாப்பிட வேண்டும் என அவனுள் விருப்பம் எழுந்தது. தெறிக்கும் நெருப்புப் பொட்டுகளோடு சோளம் வாட்டப்படும் வாசனையும் பஜ்ஜியும் மீனும் எண்ணெய்யில் பொறியும் மசாலா வாசனையும் ருசியின் நரம்பைத் தொட்டன. அவனது அப்பா எல்லோருக்கும் ஒரு தட்டு பஜ்ஜி வாங்கிக் கொடுத்துவிட்டு அருகில் குழித் தோண்டி நீர் இறைத்துக் கொண்டிருந்தவர்களிடம் போய் இரண்டு பாட்டில்கள் தண்ணீர் பெற்று வந்தார். பஜ்ஜி சாப்பிட்டு முடித்த பிறகு அவனுக்குப் பறக்கும் பொம்மைகள் மேல் ஆசை வர, முதலில் கடுமையோடு மறுத்த அப்பா பின் அவனது முக வாட்டத்தால் மனம் மாறி ஒரு பிளாஸ்டிக் ஹெலிகாப்டரை வாங்கிக் கொடுத்தார். “இப்படிலாம் அடம்பிடிக்குற பழக்கத்த முதல்ல நீ விட்டிரனும். புரியுதா? யாக்கோப் அண்ணாவ பாரு. எவ்வளவு அமைதியா இருக்காங்க.. சின்னவயசுல கூட அவங்க அம்மாகிட்ட எதுவும் வேனும்னு பிடிவாதம் புடிச்சது கிடையாது. அப்படி நல்ல பையனா இருக்கனும். சரியா?”.அவன் பொம்மையை நெஞ்சோடு பிடித்தபடி “சரி” என்று தலையாட்ட யாக்கோப் அண்ணா அவனைப் பின்னால் இருந்து வந்து அணைத்து தோளோடு உயர்த்தித் தன்னில் சாய்த்துக் கொண்டார்.
O
உறக்கத்தில் இருந்து விழித்துச் சில நிமிடங்கள் மந்தகாசத்துடன் படுக்கையிலேயே அமர்ந்திருந்தபோது ஜானுக்கு சட்டென்று கடற்கரை ஞாபகம் வந்தது. வேகமாக எழுந்து அம்மாவை தேடி ஓடினான். வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரம் தூங்கிவிட்டதில்அவனுக்கு அதிர்ச்சி. “அம்மா”

“ஏன்டா கத்துற?” என்று அம்மா அவனை முறைத்துவிட்டுத் தொலைபேசியில் தன் பேச்சை தொடர்ந்தார். “இல்லம்மா. இந்த ஊர் பீச்சுக்கு பக்கத்துலயே இல்ல. நீ பயப்படாத”.


“எப்ப பீச்சுக்கு போறோம்?”


“முதல்ல நீ பல்லு விளக்கு”. அம்மா குனிந்து அவன் கண்களை அழுத்தி துடைத்துவிட்டார். “இன்னைக்கு யாரும் பீச்சுக்கு போக முடியாது.” மீண்டும் தொலைபேசியில் சன்னமான குரலில் “இங்க பக்கத்துல ஐஜி ஆபீஸ்ல வேல பார்க்குற ஒருத்தரக் கூட்டிட்டு அவங்க அப்பா மறுபடியும் ஸ்டேஷனுக்குத்தான் போயிருக்காங்க” என்றார்.


கடற்கரைக்குப் போகவில்லை என்றதும் அவனுக்குக் கோபம் எழுந்தது. அம்மா பொய் சொல்கிறார் என நினைத்தான். அப்பா வீட்டிலிருப்பது போல் தெரியவில்லை. அம்மாவைமீண்டும் தீண்டி “யாக்கோப் அண்ணா எப்ப வர்றாங்க?” என்று கேட்டான்.


“எந்திருச்சதும் சும்மா தொணதொணன்னுட்டு. போய்ப் பல்லு விளக்கு”. அம்மாஅவனை விரட்டினார்.


அவன் அவ்விடத்தைவிட்டு விலக முற்பட்டான். வாசலில் நின்றிருந்த டைகர் வாலை சுழற்றி ஆட்டியபடி சுவரை வெறித்துக் கொண்டிருந்தது. அவன் அழைத்தபோது அது பதிலளிக்கவில்லை. அதை நெருங்கிச் செல்ல முனைய, அதற்குள் அது அங்கிருந்து விலகி நகர்ந்தது. தொடர்ந்து, தரையை மோப்பம் பிடித்தவாறு எல்லா அறைகளுக்குள்ளும் எட்டி எட்டி பார்த்தபடி வீட்டைச் சுற்றி வர ஆரம்பித்தது.


பல் துலக்கி முகம் கழுவி திரும்பியஅவனிடம் அம்மா “குளிக்கப் போறியா?” எனக் கேட்டபோது வேண்டுமென்றே மௌனமாக இருந்தான். முந்தைக்குச் சற்று நெகிழ்ந்திருந்த அம்மா துண்டை எடுத்து அவன் முக ஈரத்தை வழித்து “இப்ப என்ன உனக்கு?” என ஆதுரத்துடன் கேட்டார். பற்பசை மூச்சுடன் “இன்னைக்குப் பீச்சுக்கு கூட்டு போறேன்னு அப்பா சொன்னாங்கள்ல. அப்பா எங்க?” என்றான்


“இன்னைக்கு யாரும் பீச்சுக்கு போக முடியாது. கடற்கரையே முங்கிடுச்சு” என்று கூறிய அம்மா தொலைக்காட்சியை இயக்கி செய்தி சேனலை வைத்தார். “நீயே பாரு”


செய்தி காட்சிகளை ஜானால் நம்பவே முடியவில்லை. கடற்கரைக்கு என்னவோ ஆகிவிட்டிருந்தது. சென்றமுறை பார்த்த நீல வண்ணமே எங்கும் இல்லை. மூர்க்கத்துடன் சீறி முன்னேறிய அலைகளில் கருமையேற மிகப் பெரிய வாய் என அவை பிளந்து வந்து கரையைக் கவ்வின. பிறகு பெரும் ஓசையோடு மோதி உடைந்தன. கால்கள் புதையும் இளமணலினாலான கடற்கரையே மொத்தமாக மறைந்து எங்கும் கசங்கல் நீர் ஓடியது. தள்ளுவண்டிகள், பலூன்கள், குதிரை எனஅவன்அறிந்திருந்த கடற்கரையின் எந்தப் பகுதியையும் திரையில் கண்டுபிடிக்க முடியவில்லை. சுழித்துப் பெருகும் அலைகள் மட்டும்தான் நிறைந்திருந்தன. அனிச்சையாகப் பிரிந்த உதடுகளுடன் தொலைக்காட்சியை நெருங்கிச் சென்றான். அதைத் தொட்டு அலைகளுக்குள் நுழைவது போல்.


“இப்ப போனா. நம்மளும் மூழ்க வேண்டியதுதான். பரவாயில்லையா?” என்றார் அம்மா.


குழப்பத்தோடு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவன், பின்னால் வந்து அம்மாவின் புடவை தலைப்பை பற்றிச் சந்தேகத்துடன் “தூரமா இருந்தா அலை வரக்கூடாதுலம்மா?” என்று கேட்டான்.


“ஆமா வரக்கூடாதுதான்”. என்றார் அம்மா அயர்ச்சியோடு. தொடர்ந்து “பாவம் ஜனங்க.” என்று பெருமூச்சுவிட்டார். “இயேசப்பா.”


திடீரென்று மனதில் தட்டிய நினைவில் “யாக்கோப் அண்ணா எப்ப வர்றாங்க?” என அவன் திரும்ப வினவ, அம்மாவிடம் எந்த உணர்ச்சியும் எழவில்லை.


"நேத்தே இத உங்க அப்பாவை ஹால்ல மாட்ட சொன்னேன்." அவனது கேள்வியைப் புறக்கணித்துப் படுக்கையறைக்குச் சென்று திரும்பிய அம்மாவின் கைகளில் ஒரு படச்சட்டகம் இருந்தது. "கர்த்தர் மேல பயமில்லாம இருக்குறதாலதான் உலகத்துல எல்லாக் கெட்டதும் நடக்குது" என்றபடி அம்மா கூடத்தில் தொங்கவிட்ட படத்தில் குட்டி நாயொன்று பச்சை புற்களில் துள்ளி ஓட, அதனருகே பைபிள் வசனம்.


“இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்” (மத்தேயு 28:20).

O
வீட்டைச் சுற்றி கலைத்து வாசலுக்கருகே சாக்கில் படுத்திருந்த டைகர் பைக் சத்தம் கேட்டு ஒரு நொடி தலையை உயர்த்தி பின் கீழே இறக்கியது. கழுத்திலிருந்து சற்று வெளி நீண்டிருந்த அதன் முகத்தில் சோர்வின் அழுத்தம்; யோசனை தோற்றம். ஜான் ஓடி போய் ஜன்னல் வழியே எட்டி பார்த்தான். ஜானுடயை அப்பாவும் யாக்கோப் அண்ணாவும் வந்து கொண்டிருந்தார்கள். ஆர்வத்துடன் பாய்ச்சலாக வெளியே சென்று யாக்கோப் அண்ணாவுக்குப் பக்கத்தில் போக, அதற்குள் அப்பா பிடித்து “உள்ள போ.. உள்ள போ” என்றார்.  புரியாது விழித்தபடி கழுத்தை ஒடித்துப் பின்னால் பார்த்தான். தாழ்ந்த முகத்துடனும் தயங்கிய நடையோடும் தொடர்ந்து வந்து கொண்டிருந்த யாக்கோப் அண்ணாவின் உடலில் அசாதாரணமான ஒடுக்கம்.

“ஏன் நிக்குற? உட்காரு”. அப்பா கூடத்தில் நாற்காலியை சுட்டி யாக்கோப் அண்ணாவிடம் கூறினார். தலை குனிந்தபடியே யாக்கோப் அண்ணா உட்கார்ந்ததும் அம்மாவிடம் தனியே பேசிவிட்டு அப்பா வெளியேறி எங்கோ செல்ல, அம்மா சமையல்கூடத்தில் நுழைந்து தன் வேலையில் மும்முரமானார். சாக்கிலிருந்து எழுந்து தன் வெள்ளை உடலை உதறியபடி சில கணங்களுக்கு அசைவின்றி நின்றிருந்த டைகர் பிறகு யாக்கோப் அண்ணாவுக்கு அருகே வந்து பைபிள் வசனத்துக்குக் கீழாகச் சுவரை ஒட்டி படுத்துக் கொண்டது.


தன்னுடன் டைகரும் யாக்கோப் அண்ணாவும் மட்டுமே அவ்வறையில் எஞ்சியிருக்க, ஜானுக்கு படபடப்பு மிகுந்தபடியிருந்தது. “அண்ணா பீச்சு ஃபுல்லா தண்ணீ” என்று மனதில் ஒத்திகையாக அந்த வியப்பை மீள மீள நிகழ்த்திக் கொண்டேயிருந்தான். முதல் வாய்ப்புக் கிடைத்ததும் யாக்கோப் அண்ணாவிடம் அதை வெளிப்படுத்த வேண்டும் என்று அச்சொற்கள் நாக்கு முனையிலேயே தேங்கியிருந்தன. ஆனால் யாக்கோப் அண்ணா அவனை தலை நிமிர்த்திப் பார்க்கவில்லை. இரண்டு கைகளும் முகத்தில் பதிய கால்களை மர நாற்காலியின் கீழ்படியில் வைத்து கலைந்த தலைமுடியும் நெற்றியும் மட்டும் வெளியே தெரியும்விதமாக அவர் அங்கு மடங்கி உட்கார்ந்திருந்தார்.தன்னை அவர் கவனிக்க வேண்டும் என ஏக்கம் தோன்றியது. அவர் எதிர்கொண்டதும் விரைந்து போய்ப் பேச ஆரம்பித்துவிடலாம். “பீச்சு ஃபுல்லா தண்ணீ”.


திடீரென்று அவர் தன்னுடலை அசைத்து மேலும் குறுகிக் கொள்ள ஜான் உடனே பதற்றமுற்று தன்னையறியாமல் கண்களை வேறு பக்கம் திருப்பினான். யாக்கோப் அண்ணா இன்னமும் வழக்கமான பிரியத்துடன் பார்க்கவோ அல்லது அவனை நோக்கி எழுந்து வரவோ இல்லை. அவரிடம் பேசவேண்டும் எனும் ஆசை மறைந்து அவருடைய உதாசீனம் சீண்டலை உண்டு பண்ணத் துவங்கியது. அவர் தன்னைத் தவிர்ப்பதற்காக கோபம் வந்தது. ஏமாற்றத்தின் வெறுப்போடு அவன் கண்கள், இப்போது, கட்டில் கால்களை அடுத்துப் படுத்திருந்த டைகரை நோக்கி சென்றன. டைகரும் யாரையும் ஏறிடவில்லை. அதைப் பெயர் சொல்லி அழைக்க வேண்டும் என்று தோன்றிய உணர்வை வலிந்து கட்டுபடுத்த, முன்னங்கால்களுக்கு மேல் முகத்தைப் பதித்து ஆழத்தில் மிதக்கும் பழுப்பு கண்களோடு கிலேசத்தில் படுத்திருந்தது அது.

O
“ஜான்..”

அம்மாவின் அழைப்பைக் கேட்டதும் நாற்காலியை விட்டு எழுந்து யாக்கோப் அண்ணாவின் இருப்பை முதுகில் உணர்ந்தபடியே ஜான் சமையலறைக்குச் சென்றான். கேஸ் அடுப்பு மேடையில் சாப்பாடு தட்டு இருந்தது. “அவன்ட்ட கொடு”


தட்டை எடுத்துக் கொண்டு கூடத்திற்குப் போய் யாக்கோப் அண்ணாவுக்குப் பக்கத்தில் நின்று “அண்ணா.. சாப்பாடு”என்றான். முதலில் வீம்புடன் அழைத்தாலும் பிறகு, அவரது மேல்சட்டையின் வலதுபுற தோள்பட்டையில் கோடாகக் கிழிசல் இருப்பதையும் அவரது கீழ் தாடை சிவப்பு கட்டி கன்றிப் போயிருப்பதையும் இடது முழங்கையில் வீக்கத்துடன் இரத்தக் கோடுகள் காய்ந்திருப்பதையும் அருகாமையில் கவனித்ததும் உடல் கூசி பயம் அதிகரித்தது.


முகத்தைப் பாராது நீட்டிய தட்டை மட்டும் கண்ணோரம் நோக்கி “எனக்கு வேண்டாம்” என்றார் யாக்கோப் அண்ணா. பலவீனமான அக்குரல் காற்றொலியோடு வெளிவந்தது.


பதில் பேசாது தட்டை திரும்பச் சமையலறைக்குக் கொண்டு போனபோது அவனோடு கூட டைகரும் “புஸ்..புஸ்..” என்று முச்சுவிட்டவாறு ஓட்டமாக நடந்து வந்தது. பானையில் தண்ணீர் மோந்து கொண்டிருந்த அம்மா ஐயத்துடன் பார்த்தார். “என்ன?” 


“வேண்டாம்னு சொல்றாங்க.”.


அம்மாவின் நெற்றி சலிப்பில் மடங்கியது. “நீ மறுபடியும் போய்க் கொடு”. தண்ணீர் சொம்பை அவனது மறுகையில் வைத்தார். “இதயும் கொண்டு போ”


அவன் உடனே நகரவில்லை. “வேண்டாம்னு சொல்றாங்க”


“கொண்டு போன்னா கொண்டு போயேன்”. அசிரத்தையாகக் கூறிய அம்மா டைகரை கழுத்து பட்டையோடு பிடித்து இழுத்தார். “நீ இங்க கெட.“ என்று சொல்லி அதை பின்பக்கத்து இரும்பு கதவில் சங்கிலி போட்டு கட்டினார்.


“அம்மா உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாங்க”. இம்முறை எதிர்ப்பு சொல்லாது தட்டை பெற்றுக் கொண்டார் யாக்கோப் அண்ணா.


உடனே திரும்பி வேகமாக ஓடி சமையலறைக்குச் சென்று பாத்திரங்களைக் கழுவி கொண்டிருந்த அம்மாவுக்கு அருகில் நின்று கொண்டான். “திரும்பப் பசிக்குதா?” என்று அம்மா கேட்டதுக்குப் பதில் கூறவில்லை.


யாக்கோப் அண்ணா எச்சில் தட்டுடன் சமையலறைக்கு வர, அம்மா கழுவற்தொட்டியை விட்டு விலகி அவருக்கு வழிவிட்டார். கை கழுவிய பிறகு யோசனையோடு நின்ற யாக்கோப் அண்ணா, “சித்தி” என்று அம்மாவை திணறும் குரலில் அழைத்தார்.


அதை எதிர்பார்க்காத அம்மா தன் துணுக்குறலை வேகமாக மறைக்க வேண்டியிருந்தது. “ம் சொல்லு”


“நான் கிளம்புறேன்”


அவன் அம்மா கொஞ்சம் இளகி, ஆற்றுப்படுத்தும் விதமாக “சரி ஏதோ ஒருவாட்டி நடந்து போச்சு. இனி ஒழுங்கா இருக்கப் பாரு” என்று பேச யாக்கோப் அண்ணா இடைமறித்து “இல்ல சித்தி. நான் கிளம்புறேன்” என்றார் பிடிவாதத்துடன்.


“உங்க அம்மா வரவரைக்கும் மட்டும் நீ இங்க இருப்பா. போதும். இல்லாட்டி உங்க சித்தப்பா வரட்டு அவர்கிட்ட சொல்லிட்டுக் கிளம்பு” என அம்மா உடனே சீற்றத்துடன் கூற, யாக்கோப் அண்ணாவை மறுகணமே உட்சுருங்க வைத்தது. ஒடுங்கி தலையாட்டியவாறு கூடத்துக்குச் சென்று முன்னைப் போலவே அவர் நாற்காலியில் அமர்ந்து கொள்ள அம்மா தணிவான குரலில், “போய் முன்னாடி கேட்டை பூட்டி வை” என்றார். அவன் கூடத்தின் திசையில் சென்றதும் சங்கிலியில் கட்டியிருந்த டைகரை உள்ளே இழுத்து பின்கதவை பூட்டு போட்டு அடைத்தார்.

PC: A V Manikandan

O

“ஏன் கதவு பூட்டிருக்கு?”. அரை மணியில் திரும்பி வந்த அப்பா வாசலில் நின்றபடி கேட்க, அம்மா கதவை திறந்து அவரைப் படுக்கையறைக்குக் கூட்டிச் சென்று பேசினார். சிறிது நேரம் பொறுத்து கூடத்துக்குத் திரும்பி வந்த அப்பா யாக்கோப் அண்ணாவிடம் சென்று “ஏன் முகத்தைக் கூடக் கழுவாம உட்கார்ந்திருக்க?” என்று அக்கறையாகக் கேட்டார். “சரி. டாக்டர் கிட்ட போகலாம். வா”

“இல்ல.. பரவாயில்ல சித்தப்பா.”


“ம்ம். அப்ப மருந்து ஏதாவது போடு”. அம்மாவை தைலம் எடுத்து வரச் சொல்லி அதை அவரிடம் கொடுத்தார். “அப்புறம் சித்திக்கிட்ட என்னவோ கேட்டியாம்ல? சொல்லு. இப்ப என்ன பண்ணலாம்?”.


யாக்கோப் அண்ணா இடறியபடி “நான் கிளம்புறேன் சித்தப்பா” என்றார்.


டைகரின் குரைப்பொலி கேட்டுதான் ஜான் தன்னுணர்வுக்கே மீண்டான். யாக்கோப் அண்ணா கன்னத்தில் கை வைத்துப் பின்னால் சென்று நாற்காலியில் இடித்துக் கொண்டார்.ஜானுக்குத் தொண்டையில் அழுகை கட்டி கால்களில் உதறல் எடுத்தது. எல்லா இயக்கங்கங்களையும் உறையச் செய்வது போல் அப்படியொரு சத்தம். பிரமையடித்த ஸ்தம்பிப்பு. தைல பாட்டில் விழுந்து உருள, யாக்கோப் அண்ணாவின் கண்கள் நீர் சுரந்து செவ்வரியேறின. ஒரு பக்க கன்னம் தடித்த கைத்தடத்துடன் வீங்கியது. மென்கருப்பான அவர் முகமே சிவப்பு ரேகைகளுடன் உருக்குலைந்து விகாரமுற்றது. மிரட்சியிலும் வலியிலும் சமனற்றுத் தடுமாறினார். கேவலில் உடல் கட்டுபாட்டை மீறி விதிர்த்தபடியிருந்தது.


“உங்கம்மா வர்ற வரைக்கும் வாயை பொத்திட்டு இருக்கனும் என்ன?” என்று ஓரடி முன்னெடுத்து வைத்து உரும, யாக்கோப் அண்ணா கண்களை மூடி தன்னிச்சையாகப் பின்னகர்ந்து திரும்பவும் நாற்காலியில் முட்டிக் கொண்டார்.


“சரி சரி விடுங்க”. அம்மா, அப்பாவை சாந்தப்படுத்தி அழைத்துச் செல்லும் வரை ஜான் இருக்கைப் பிடியை வலுவாகப் பிடித்துக் கொண்டு அதில் ஒண்டிக் கொண்டிருந்தான்.


O

முன்னிரவில் ஜானின் பெரியம்மா வீடு வந்து சேர்ந்தார். இருளே அழைத்து வந்தது போல் சோகையான நடை மற்றும் உருவம். சங்கிலியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த டைகர் யாக்கோப் அண்ணாவின் நாற்காலிக்குப் பக்கமாகப் படுத்துக் கிடந்தது. பெரியம்மாவை கண்டதும் வாசலுக்கு ஓடிச் சென்று அவரது பாதங்களை முகர்ந்து பின் எம்பி குரைத்தது. அம்மா அதை அதட்டி அடக்க, பெரியம்மா துயர் மண்டிய முகத்தோடும் வெட்கி குன்றியவாறும் வீட்டினுள் நுழைந்தார். நாற்காலியை தவிர்த்துத் தரையில் அமர்ந்தவர் காபி குடித்து முடிக்கும் மட்டும் எதுவும் பேசவில்லை. அதையடுத்து சில கணங்களில் அழுவதும், சற்று ஓய்வதும், இமைகளின் கீழே உப்புத்தடம் காயும் முன்பாகவே மீண்டும் விசும்பலோடு அழத் துவங்குவதுமாக ஆற்றாமையில் தத்தளிக்கலானார். அவரது சிறிய உடல் அழுகையில் குலுங்கியபடி இருந்தது. ஜானுடைய அப்பாவும் அம்மாவும் மாறி மாறி சமாதானம் செய்ய முயன்றார்கள். “ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல. சுனாமினு போலீஸ்லாம் அந்த வேலைல பிசியா இருந்துட்டாங்க. கேஸ்லாம் கெடையாது. காசு கொடுத்ததும் விட்டுட்டான். நீங்க கவலைப்படாதீங்க”. எந்த சொற்களிலும் அவர் ஆறுதல் அடையவில்லை. தன்னைக் கைவிட்ட கடவுளை கண்ணீருடன் சபித்துக் கொண்டிருந்தவர் ஜானின் அப்பாவை கை எடுத்து கும்பிட்டு “உங்களுக்குதான் ரொம்பச் சிரமம். மன்னிக்கனும்” என்றார். “அதெல்லாம் ஒன்னு இல்லக்கா” என்று அம்மா அவரது கையைப் பிடித்துக் கீழே இறக்கிய பிறகும் அவரது கண்களில் நீர் மாயவில்லை. முந்தானையில் திட்டு திட்டாகக் கண்ணீர் படிந்திருந்தது. அப்பா வற்புறுத்தி கேட்டபோதும் இரவு சாப்பிடவும் அங்குத் தங்கி மறுநாள் புறப்படுவதற்கும் பெரியம்மா உடன்படவில்லை. போலவே, அங்கிருந்தவரைக்கும் அவர் யாக்கோப் அண்ணாவிடம் பேசவில்லை.

“நான் வரேன் அப்போ. ரொம்ப நன்றி.”பெரியம்மா முன்னால் போக யாக்கோப் அண்ணா பள்ளி முடிந்து வீடு திரும்பும் சிறுவன் போல் தொடர்ந்து சென்றார். சில அடிகள் நடந்திருப்பார்கள்; அதுவரைக்கும்ஜானருகே நின்றிருந்த டைகர், ஏதோ அரூபமான விசையால் உந்தப்படுவது போல் அடுத்த நொடியே அவசர அவசரமாக பின் தொடர்ந்து ஓட ஆரம்பித்தது. அம்மா “டைகர் நில்லு” என்று கத்த அந்தச் சத்தம் கேட்டு பெரியம்மாவும் யாக்கோப் அண்ணாவும் நின்று திரும்பி பார்தார்கள். தன்னைத் தொடர்ந்து வரும் டைகரை கவனித்த யாக்கோப் அண்ணா சில நொடிகள் திக்கடித்து நின்று பின் திடுமென ஆத்திரம் பெருக தார்ச்சாலையில் கிடந்த கற்களை எடுத்து டைகர் மீது மூர்க்கத்துடன் எறிய ஆரம்பித்தார். அவரது நடவடிக்கையை யாருமே யூகிக்கவில்லை. மூச்சிரைக்கக் கற்களை எறிந்துவிட்டு சோர்ந்து கண்ணீருடன் முழந்தாளில் சரிய பெரியம்மா அடக்கமாட்டாத அழுகையுடன் “யாக்கோப்பு” என்று அவரை அணைத்துக் கொண்டார் அவர்களுக்குச் சிறிது தூரம் தள்ளி தெருவிளக்கின் கீழே மஞ்சள் வெளிச்சத்தில் நிழல் உருவமாக டைகர் நின்றுக் கொண்டிருப்பதை ஜான் பார்த்தான்.


O


நன்றி : காலச்சுவடு


No comments:

Post a Comment