Friday 21 July 2023

"திருவருட்செல்வி" - சிறுகதை நூல் முன்னுரை

 [விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிடும் “திருவருட்செல்வி” நூலின் முன்னுரை]

ஏழு அல்லது எட்டு வயதில் முதல் முறையாக, புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்த நேரத்தில், என்ன வகையான உணர்ச்சி நிலைக்கு ஆட்பட்டேன் என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்தி பார்ப்பேன். சிறார் நூல்கள் ஒரு பெரிய கனவு வெளியை அப்போது உருவாக்கி கொடுத்தன.  ருஷ்ய நாடோடிக் கதைகள். ஈசாப் நீதிக் கதைகள். மரியாதை ராமன், தெனாலிராமன் கதைகள். மகாபாரதக் கதைகள். விளம்பர பிரசுரங்கள் போன்ற ஓடிசலான புத்தகங்கள் அவை.

அபிமன்யுவின் கதையை ,அப்படியான ஒரு குட்டி நூலில் வாசித்தது, எப்போதும் தொடர்ந்து வரும் ஞாபகமாக இருக்கிறது. அபிமன்யுவின் மரணத்தை வாசித்தபோது, குளிர் போல துயர் என்னில் இறங்கியது. ஆனால் கோபமேயில்லாத துயர். பச்சாதாபமோ முறையீடோக்கூட இல்லை. வெறும் துயர். ஒரு பெரிய கல் யானைப் போல துயர் எதிரே நிறைத்து நின்றிருந்தது. துயர்தானா என்று சந்தேகம் தோற்றுவிக்கும் வகையிலான துயர்.

அபிமன்யுவின் கதையை வாசித்த சிறுவனுக்கு அப்போது என்ன செயலில் ஈடுபட்டிருக்கிறோம் என்பது பற்றி எந்த அறிவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அனுபவம் மட்டுமே நிகழ்ந்தது. ஏன் கதைகள் வாசிக்கிறாய் என யாராவது கேட்டிருந்தால் அவனுக்கு பதில் சொல்ல தெரிந்திருக்காது. கதைகளால் என்ன பயன் என்று கேட்டால் அவன் குழம்பியிருப்பான். ஏனென்றால் கதைகளின் நீதியை அவன் ஒருபோதும் சரியாக கவனித்ததில்லை. பேசும் மிருகங்கள் மீதும் கதைகளின் விந்தை மீதுமே அவனுக்கு அக்கறை இருந்தது. ஆனால் அவனிடம் கதைகள் வாசிக்கத்தான் வேண்டுமா என்று கேட்டிருந்தால், மிக உறுதியாக ஆம் என்று பதில் சொல்லியிருப்பான். அது ஒரு முக்கியமான செயல் என்பதில் அவனிடம் வலுவான நம்பிக்கை இருந்தது. இன்றுவரையில் அந்த நம்பிக்கை மாறாமல் இருப்பதே, நான் எழுதுவதற்கான காரணம் என நினைக்கிறேன்.

ஐந்தாவது படிக்கும்போது அப்பா என்னை திருநின்றவூர் கிளை நூலகத்தில் உறுப்பினராக சேர்த்துவிட்டார். நூலகத்தில் இயல்பாகவே என்னுடைய ஆர்வம் புனைவின் மீது விழுந்தது. தமிழின் முக்கியமான புனைவாசிரியர்கள் பலரும், போதிய வெளிச்சம் இல்லாத அந்த நூலக அறையில், பழைய புத்தகங்களின் வாடை மிகுந்த அலமாரிகளிலேயே, பின்னாட்களில் அறிமுகமானார்கள். ஒவ்வொரு புத்தகத்தை படிக்கும்போதும் அடிப்படையான ஒரு வியப்பு என்னை விட்டு அகலவேயில்லை. மனிதர்கள் மொழியில் உருவாகிறார்கள். வீடுகளும் தெருக்களும் மொழியில் உருவாகின்றன. அவற்றை என்னால் அனுபவத்தில் உணர முடிகிறது. எவ்வளவு அழகானது மொழி? எவ்வளவு ஆழமானது நினைவு? எவ்வளவு மர்மமானது அனுபவம்?

“வாசிப்பனுபவம்” எனும் சொல்லை பின்னர் அறிய நேர்ந்தபோது இலக்கியம் பற்றிய முக்கியமான உண்மையினை அச்சொல் குறிப்பிடுவதாக எண்ணினேன். ஏனென்றால் அனுபவத்தை, ஒரு புராதானமான ஞானத்தின் விளைவாக, நம் மனம் பயன்பாட்டு நோக்கிலிருந்து விலக்கியே வைத்திருக்கிறது.  சமீபத்தில் பழைய கல்லூரி நண்பனோடு பேச நேர்ந்தபோது ஒரு ஞாபகத்தை பகிர்ந்துகொண்டான். கல்லூரியில் கல்விச் சுற்றுலா போன சமயம். நடுஇரவில் பேருந்து பழுதாகிவிட்டது. ஓட்டுநர் அதை சரி செய்கிறவரையில் யாருமில்லாத நெடுஞ்சாலையில் நட்சத்திரங்களுக்கு கீழே மனித முகங்கள் வெறும் அசைவுகளாக தெரியும் இருட்டில் ஒரு மணி நேரம் காத்து நின்றிருந்தோம். யாரும் யாரோடும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அந்த இரவை நினைவூட்டி “அதுவொரு நல்ல அனுபவம்” என்றான். மேற்கொண்டு அவன் ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் எனக்கு மேற்கொண்டும் புரிந்தது.

அனுபவம் நல்லது. எல்லா அனுபவங்களும் நல்லவை. எந்த அனுபவத்தின் முக்கியத்துவத்தையும் தர்க்கத்தால் தீர்மாணிக்க இயலாது. போலவே, அனுபவத்தின் பயன் என்ன என்றோ அர்த்தம் என்ன என்றோ கேட்கவே முடியாது. ஏனென்றால் அப்படி கேட்க, அந்த அனுபவத்தை இன்னொன்றாக மாற்றி புரிந்துகொள்ள வேண்டும். பாடத்தை மதிப்பெண்களாக மாற்றுவது போல. வேலையை பணமாக மாற்றுவது போல. திருமணத்தை குழந்தை வளர்ப்பாக மாற்றுவது போல. ஆனால் பாடம் படித்தபோது அம்மா கொண்டு வந்த வைத்த காபியின் சுவையை என்னவாக மாற்றுவது? வேலைக்கு செல்லும் வழியில் வேடிக்கை பார்த்த மரங்களையோ அல்லது பேருந்துக்கான காத்திருப்பையோ என்னவாக மாற்றுவது? திருமணத்தில் காதலின் அணுக்கத்தை என்னவாக மாற்றுவது? அதையே நாம் அனுபவம் என்கிறோம் போல.

வாழ்க்கையில் அனுபவத்தின் மதிப்பு என்ன? இக்கேள்வியே ஒருவகையில் குழப்பமானது. ஏனென்றால் வாழ்க்கை, அனுபவம் இரண்டு வேறு வேறல்ல. இதனாலேயே “இலக்கியத்தால் வாழ்க்கைக்கு என்ன பயன்?” எனும் கேள்வியும் குழப்பமானதாகிறது. இலக்கியத்தை அனுபவம் என்று சொல்லும்போது அந்த கேள்வியை இயல்பாக ரத்து செய்திட முடிகிறது. எந்த அனுபவத்தையும் போல இலக்கியமும் நம் ஈடுபாட்டை மட்டுமே கோருவதாக இருக்கிறது. நமக்கு புலப்படாத ஒரு சேகரத்தில் இணைகிறது. இலக்கியம் பற்றி பேசும்போது, சூசன் சொண்டாக் சொல்வது போல, அர்த்தக் கோரலை முதன்மைப்படுத்தாது அனுபவத்தின் தீவிரத்தையே தொடர்ந்து முன்வைக்க வேண்டும் என நினைக்கிறேன். சொந்த எதிர்பார்ப்புகளும் முன்முடிவுகளும் வாசிப்பின் தடைகளாவதையும் அவ்வழியில் கலைய முடியும்.

புதுமைப்பித்தனுடைய வரலாற்று சிறுகதைகளில் ஒன்று “கனவுப் பெண்”. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், செல்லம்மாள் முதலியவை போல அவ்வளவு புகழ்பெற்ற கதை அல்ல. ஆனால் எனக்கு மிகவும் விருப்பமான கதைகளில் ஒன்று. கதையில் சோழ அரசப் படை கடல் வழியே சீனம் நோக்கி பயணிக்கிறது. நாவாயில் அரசனோடு கவிஞனும் இருக்கிறான். நடுக்கடலில் நிலா வெளிச்சத்தில், கவிஞன் ஊர்வசி பற்றி பாடுகிறான். உடனே கடலில் ஊர்வசி தோன்றிவிடுகிறாள். கவிஞன், அரசன் இருவரும் அவளை பார்த்துவிடுகிறார்கள். அரசனின் கட்டளைப்படி ஊர்வசியை தொடர்ந்து கப்பல் தறிக்கெட்டு போய் பாறையில் மோதுகிறது. பாய்மரம் உடைந்து நீரில் மூழ்குகிறது. அரசனின் அதிகார மோகமும் போர் வெறியும் இறுதியில் இருட்டில் அணைகின்றன.  கிட்டத்தட்ட ஒரு கனவு போலவே அக்கதை எழுதப்பட்டிருக்கும்.

மொழி ,முதலில், அழகு சார்ந்த அனுபவமாகவே நிகழ்கிறது. சரி, தவறு சார்ந்ததாக அல்ல. அழகே இலக்கிய ஆக்கத்தின் நியதி. மொழி அனுபவம் என்பது அழகியல் அனுபவமே. ஒரு மதப் பற்றாளன் போல புதுமைப்பித்தன் மொழியை நம்பியிருக்க வேண்டும். ஒரு புனைவாசிரியனாக நானும் அந்த நம்பிக்கையை பகிர்ந்துக் கொள்கிறேன்.

O

என்னுடைய இத்தொகுப்பிலுள்ள கதைகளை மீண்டும் மொத்தமாக படிக்கும்போது அசோகமித்திரன் நினைவில் வந்தபடியே இருந்தார். இக்கதைகளின் பொதுவான உணர்ச்சி, அசோகமித்திரன் உலகோடு தொடர்புடையதல்ல. ஆனால் அசோகமித்திரனுக்கு மொழியின் இடைவெளிகள் சார்ந்தும் வாசகர்களின் கற்பனை சார்ந்தும் இருந்த புரிதல் எப்போதும் வியப்பூட்டுவது. மொழி விசித்திரமானது. ஒரு நிகழ்வை நாம் வெவ்வேறு வார்த்தைகளில் திரும்ப திரும்ப சொல்லும்போது அந்த நிகழ்வு பரிச்சயமாகிவிடுகிறது. எடையிழக்கிறது. பெருந்துயரங்களை எல்லாம்  அப்படி பேசிப் பேசியே கடக்கிறோம். இலக்கியத்திலோ நேரெதிரான விளைவு தேவைப்படுகிறது. எனவே மொழியை கட்டுப்பாடுடனே பயன்படுத்த வேண்டியுள்ளது. அசோகமித்திரன் அதை கற்றுத் தருகிறார்.

உணவு, ஆடை, ஊடகம் என்று எல்லா பொருட்களுமே மிகையாகியிருக்கிற காலத்தில் எழுத்தாளன் தன் அமைதியை தக்க வைப்பது அவசியமானது. உடனடி உணர்ச்சிகரமே உடனடியாக செல்லுபடியாவது. அசோகமித்திரன் போன்ற முன்னோடிகள் அந்த தேவையை நிராகரிக்க கற்றுத் தருகிறார்கள்.  அதே நேரம் அசோகமித்திரன் போன்ற நவீனத்துவ முன்னோடிகளின் கச்சிதமான சிறுகதை வடிவத்தின் பேரில் எனக்கு முரண்பாடும் இருக்கிறது. என் தேடலை ஒட்டி எழும் முரண்பாடு அது. விளைவாக “சாட்சி”, “நிழலின் அசைவு” போன்ற நெடுங்கதைகளையும் இத்தொகுப்பில் எழுதியிருக்கிறேன்.

புனைவெழுத்தின் ஆகப் பெரும் வசீகரம் - அடுத்த வரியில் நடக்கவிருப்பது எழுத்தாளனுக்கே தெரியாது என்பதே. இக்கதைகள் வெவ்வேறு விதங்களில் என்னை ஆச்சர்யப்படுத்தின. மிருகங்களோடு இயல்பான ஒட்டுதல் கொண்டவன் அல்ல நான். ஆனால் பல கதைகளிலும் தவிர்க்கவே முடியாத இருப்பாக நாய் இடம்பெற்றுள்ளது. அச்சம் மற்றும் பதற்றம் சார்ந்த நோய் கொண்டவர்களுக்கு, உளப்பகுப்பாய்வில் சிகிச்சைத் துணையாக நாய் வளர்க்க பரிந்துரைப்பார்கள். நாய் ஏன் ஒரு நேசத் துணை என்பதை கதைகள் வழியாகவே நான் கண்டுகொண்டேன். எல்லையற்ற நேசம் கொண்டிருப்பதாலேயே அது எல்லையற்ற துயரை சுமக்கிறது என்பதையும்.  

O

ஒரு புதிய எழுத்தாளனுக்கு அவசியம் கிடைக்க வேண்டியதும், அதிகம் அபாயகரமானதும் வாசக எதிர்வினையே. ஏன் அவசியம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. ஏன் அபாயம் என்றால், எந்த புதிய எழுத்தாளனும் அசலாக எதையாவது எழுதவே விரும்புவான். ஆனால் பொது வாசிப்பு பழக்கமானதையே விரும்பும். தன் விமர்சன மொழியை பரிசீலிக்காது. ஏற்கனவே அறிந்த சட்டகம் வழியாகவே எல்லாவற்றையும் அணுகும். அது அனுபவத்தில் பெரிய குறுக்கீடு. எனவே அசல் தன்மையே ஓர் ஆக்கத்துக்கு தடையாக மாறும். தமிழில் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அவனுக்கு அடுத்த தலைமுறையிலேயே விரிவான சிறந்த வாசிப்புகள் வந்திருப்பது தற்செயல் அல்ல.

பொது வாசிப்பிலிருந்து வரும் பாராட்டு,விமர்சனம் இரண்டையும் கவனத்துடனே அணுக வேண்டும். ஆனால் பொது வாசிப்பைக் கடந்த சூழல் தமிழில் எப்போதும் உண்டு. நம் மொழியின் நுட்பமான மனங்கள் செயல்படும் வெளி. முன்னோடி ஆளுமைகள் புழங்கும் தளம். அவர்கள் புதிய எழுத்தாளர்களை பெரும்பாலும் கைவிடுவதேயில்லை. இந்தியாவில் வேறெந்த மொழியிலாவது, வெவ்வேறு தலைமுறை எழுத்தாளர்கள் நடுவே இப்படியொரு தொடர்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. மேலை நாடுகளில் பல்கலைகழக வகுப்புகள் வழியே சாத்தியமாகும் ஓர் பிணைப்பை தமிழில் எந்த நிறுவன உதவியும் இல்லாமல் மூத்த எழுத்தாளர்கள் செய்துவருகிறார்கள். அடுத்த தலைமுறை எழுத்தாளர்களோடு தீவிரமான உரையாடல்களை முன்னெடுக்கிறார்கள். இலக்கிய ஆக்கங்கள் சார்ந்து கருத்து பரிமாறுகிறார்கள். அத்தகைய எழுத்தாளர்களோடு பேசி பழகும் வாய்ப்பு அமைந்தது என்னுடைய நற்பேறு. அவர்கள் எல்லோருக்குமே நன்றி சொல்ல வேண்டும்.

முதலில் ஜெயமோகனுக்கு நன்றி. அவர் வழியாகவே எழுத்தாளனாக எனக்கு கவனம் கிடைத்தது. ஓர் இயக்கமாக இப்படி பல எழுத்தாளர்களை ஜெயமோகன் கவனப்படுத்தி வருகிறார். நவீன நாவல் பற்றிய என் கட்டுரையை மையமாக வைத்து சென்னையில் ஓர் உரையாடல் அரங்கையே ஏற்படுத்தினார்.அவருடனான நீண்ட உரையாடல்கள் வாயிலாக, தனிப்பட்ட முறையில், நான் கற்றுக் கொண்டதும் மிகுதி. “சாட்சி” கதையை வாசித்துவிட்டு அவர் தொலைபேசியில் அழைத்து பாராட்டி பேசிய மாலைப் பொழுது ஞாபகம் இருக்கிறது. இந்த நூலுக்கான தலைப்பிலும் அவர் பங்கிருக்கிறது. சிறுகதை தொகுப்புக்கான தயாரிப்பை அறிந்து, சுருக்கமாக “திருவருட்செல்வி கதையில் ஒரு புன்னகை இருக்கிறது. இனிய கதை. தலைப்புக்கு ஏற்றது” என்றார். ஆசிரியர் நிலையில் இருக்கும் ஜெயமோகன் அவர்களின் விஷ்ணுபுரம் பதிப்பகம் மூலமாகவே இந்த நூல் வெளியாவது மனநிறைவை அளிக்கிறது.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள “கடல்”, “நீர்வழி” ஆகிய கதைகள், கவிஞர் சுகுமாரன் வழியாக, காலச்சுவடில் வெளிவந்தன. “கடல்” கதையை சுகுமாரன் பாராட்டி பேசியது அப்போது மிகுந்த ஊக்கம் அளித்தது. அவருக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்ல வேண்டும்.  

கவிஞர்கள் ஷங்கர்ராமசுப்ரமணியன், இசை, சபரிநாதன் ஆகியோர் இக்கதைகளின் முதல் வாசகர்களாக இருந்துள்ளனர். மூவருடைய நட்புக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன். “கிரேஸ் இல்லம்” கதையை வாசித்துவிட்டு ஷங்கர் என்னை அலைபேசியில் அழைக்கையில், முதல் தடவை அழைப்பை ஏற்க முடியவில்லை. பிறகு நான் அழைத்தபோது “நல்ல வேளை போன எடுக்கல. அழுதிருப்பேன்” என்றார். ஒரு மூத்த எழுத்தாளர் அவ்வளவு திறந்த மனதோடு இளையவர்களிடம் உரையாட வேண்டியதில்லை. தமிழில் அந்த சூழல் இருக்கிறது. தமிழ் சிற்றிதழ் மரபின் மதிப்பீடுகள் ஒட்டி சில பிடிவாதமான கொள்கைகள் உடையவர், ஷங்கர். வாழ்க்கை முறையாகவே அவற்றை பின்பற்றுபவர். அவருடனான உரையாடல்கள் தீராத சுயபரிசீலணைக்கான வழிகளை காட்டித் தந்திருக்கின்றன. ஒரு மூத்த சகோதரனின் இடத்தில் இருப்பவர், இசை.  என் இயல்பான துடுக்குத்தனங்களையும் மீறல்களையும் பொறுத்துக் கொள்ளும் அவர் அன்புக்கு நன்றி.

இக்கதைகள் எழுதிய காலத்தில் தஸ்தாயெவ்ஸ்கியின் இருப்பை அண்மையில் உணர்ந்தபடி இருந்தேன்.  தஸ்தாயெவ்ஸ்கியை தீவிரமாக வாசிக்க ஆரம்பித்திருந்த நேரத்தில்தான், “நிலவறை குறிப்புகள்” நாவலை முன்வைத்து சபரிநாதன் “வன்பாற்கண் வற்றல் மரம்” என்று ஒரு நீண்டக் கட்டுரை எழுதினார். என்னில் அது ஆழமான செல்வாக்கை செலுத்தியது. பிற்பாடு சபரியிடம் பேசி நட்பானபோதும், அக்கட்டுரைக்காக அவருக்கு நன்றி சொன்னதேயில்லை. இந்த சந்தர்ப்பத்தை அதற்கு உபயோகித்துக் கொள்கிறேன்.

புகைப்படக் கலைஞரும் கட்டுரையாசிரியருமான ஏ.வி.மணிகண்டன் இக்காலகட்டத்தில் எப்போதும் துணை நிற்கும் நட்பாகவுள்ளார். வானத்துக்கு கீழே நடக்கிற முக்கியமானதும் முக்கியமற்றதுமான அத்தனை விஷயங்கள் பற்றியும் பல மணி நேரங்கள் உரையாடிருக்கிறோம். நண்பர் என்பதைவிட அவரை வழிகாட்டி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். இக்கதைகளின் மேம்பாட்டிலும் அவருக்கு முக்கிய பங்கிருக்கிறது. நன்றி என்பது இங்கே நிச்சயம் சிறிய சொல்.

இத்தொகுப்பில் மூன்று கதைகள் “அகழ்” இணைய இதழில் வெளியாகின. இதழாசிரியரான சிறுகதை எழுத்தாளர், நண்பர் அனோஜன் பாலகிருஷ்ணனுக்கு நன்றி. அவர் “அகழ்” இதழில் எனக்கு அளித்திருக்கும் சுதந்திரம் அளப்பரியது. பிற கதைகளை வெளியிட்ட வல்லினம், பதாகை ஆகிய இதழ்களுக்கும், இந்நூலை பிழை திருத்தி உதவிய ஆனந்த் ஸ்ரீனிவாசனுக்கும், நூலை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் செந்தில், மீனாம்பிகை ஆகியோருக்கும் நன்றி.

எழுத்தாளனாக இருப்பதற்கு குடும்பத்திலிருந்து குறைந்தபட்ச விடுதலை தேவையாக இருக்கிறது.  அறைக்குள் தனிமை தேவையாக இருக்கிறது. முன்பு என் அப்பாவும் அம்மாவும் அதை சாத்தியப்படுத்தினார்கள். இப்போது மனைவி தீபா துணையாக இருக்கிறாள். என் கதைக்குள் முதல்முறையாக பூனைகள் பூரண வசீகரத்தோடு கள்ளமில்லாமல் நுழைந்தது அவள் வழியாகத்தான். அவளுக்கு பிரியமும் நன்றியும். இந்த நூலை என் அப்பாவுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். சிறுவயது முதலாகவே அறிவு சார்ந்த எல்லா விஷயங்களிலும் எனக்கு ஈடுபாடு இருக்க வேண்டும் என்று அப்பா விருப்பம் கொண்டிருந்ததை, இப்போது ஒவ்வொரு நாளும் ஆழமாக உணர முடிகிறது. புனைவை, அறிவாக அப்பா கருதினாரா தெரியவில்லை. ஆனால் அந்த ஈடுபாட்டை மதித்தார். புத்தகங்கள் மேல் பெருங்காதலை அவரே தோற்றுவித்தார். இது என் எளிய பதிலீடு.  


No comments:

Post a Comment