Tuesday 15 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 13 – நான் தீயை அஞ்சுகிறேன் (அன்னா ஸ்விர்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “வரலாறு” (history) எனும் பிரிவில் போலீஷ் கவிஞரான அன்னா ஸ்விர்ரின் (1909 – 1984) “நான் தீயை அஞ்சுகிறேன்”கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. எளிமையான குறுங்கவிதைகளை தேர்வு செய்து சிறிய எண்ணிக்கையில் நான் செய்திருக்கும் இந்த மொழிபெயர்ப்புகளில், அன்னா ஸ்விர் மட்டும் மூன்று தடவை இடம்பெற்றிருக்கிறார். இந்த புத்தகம் வழியே நான் கண்டுகொண்ட, எனக்கு மிக நெருக்கமாக தோன்றுகிற கவிஞர் அவர். 

“வார்சா நகரில் தீ பற்றிக் கொள்கிறது. முதலில் ஜெர்மானியர்கள் உருவாக்கிய கெட்டோவையும் பிறகு மீதி நகரையும் தீ விழுங்குகிறது. தீ பற்றிய தெருக்கள் வழியே ஒரு பெண் தனியாக ஓடுவது தன்னளவிலேயே ஓர் உருவகம். கட்டுப்படுத்தும் சூழ்நிலைக்கான உருவகம்” – செஸ்லா மிலோஷ்


நான் தீயை அஞ்சுகிறேன் 

தீ பற்றிய இந்த தெருவின் வழியே

ஓடிக் கொண்டிருக்கும் நான் 

ஏன் இவ்வளவு அஞ்சியிருக்கிறேன்?


இங்கே வேறு யாருமே இல்லை

வான் நோக்கி முழங்கி வளரும் தீ மட்டும் தான் இருக்கிறது

அந்த பெரும் ஓசைக்கூட குண்டு வெடிப்பல்ல

மூன்று மாடிகள் நொறுங்கி விழும் சத்தம்தான்


நிர்வாண ஜ்வாலைகள் தடை அகன்று நடனமிடுகின்றன

ஜன்னல் இடைவெளிகளில் நுழைந்து

கைகளை அசைக்கின்றன

நிர்வாண ஜ்வாலைகளை உளவு பார்ப்பது

ஓரு பாவச் செயல்

தடையற்ற தீயின் பேச்சை ஒட்டுக் கேட்பது

ஓரு பாவச் செயல்


நான் அந்த பேச்சிலிருந்துதான் தப்பித்து ஓடுகிறேன்

மனிதனுடைய பேச்சுக்கு முன்பாகவே

பூமியில் ஒலித்த தீயின் பேச்சிலிருந்து


No comments:

Post a Comment