கோவை ஞானி பற்றிய இப்பதிவில் ஜெயமோகன் கார்ல் மார்க்ஸின் “அன்னியமாதல்” (alienation) கோட்பாட்டை இவ்வாறு விளக்குகிறார். தொழிற்சமூகத்தில் உழைப்பாளிக்கு தான் உற்பத்தி செய்கிற பொருளோடு இணக்கமான உளத் தொடர்பு எதுவும் இல்லை. அவன் அங்கே படைப்பாளி கிடையாது; ஒரு உற்பத்திக் கருவி மட்டுமே. எனவே அவனுக்கு படைப்பாளியின் இன்பம் கிடைப்பதில்லை. முதலாளித்துவ சமூகத்தின் இந்த எதிர்மறை விளைவே ‘அன்னியமாதல்’. கீரனூர் ஜாகிர்ராஜாவின் “மீன்காரத் தெரு” நாவலை வாசித்து முடித்ததும் எனக்கு உடனடியாக ஜெயமோகனின் பதிவு யோசனையில் எழுந்தது. இந்த நாவல் முதன்மையாக மீன்காரத் தெரு மேல் பங்களாத் தெரு நிகழ்த்துகிற சுரண்டல் குறித்தும் அப்பகுதிகளில் நிலவும் ஜாதிய வேறுபாடுகள் குறித்தும் பேசுகிறது. ஆனால் அதனூடே நகரும் இன்னொருச் சரடும் மேற்சொன்ன சுரண்டலுக்கும் பாகுபாட்டிற்கும் நிகரான முக்கியத்துவம் உடையது என்றே எண்ணுகிறேன். மீன்காரத் தெருவின் உள்ளே நிகழ்ந்துக் கொண்டிருக்கும் மாற்றம் அது. நாவலில் முன்னதை குறிப்பிடும்போது வெளிப்படுகிற உணர்ச்சிகரமும் அதன் விளைவாக அவ்வப்போது எழும் ஓசைமிகுதியும் பின்னதில் கொஞ்சமும் இல்லை. குறைவானத் தருணங்கள் எனினும் அது அமைதியுடன் மிக இயல்பாக எழுதப்பட்டுள்ளது.
ஷேக்காவின் மகன்கள் - காசீம் மற்றும் நைனா. காசீம் கட்சி பணியில் இருக்கிறான். நைனா கலகக்குணமும் ரௌடித்தனமும் குழப்பமான விகிதத்தில் சேர்ந்த வார்ப்பில் இருப்பவன். சமூக மாற்றத்திற்காகவும் பணம் படைத்தவர்களின் அதிகாரத் திமிருக்கு எதிராகவும் இருவரும் வெவ்வேறு விதங்களில் குரல் கொடுக்கிறார்கள்; இயன்ற வழிகளில் போராடுகிறார்கள் என நாவலில் இருந்து புரிந்துகொள்ளலாம். (போராட்டம் என்கிற சொல்லின் வழக்கமான அர்த்தத்தில் இல்லை என்றாலும் எதிர்ப்பின் வெளிப்பாடு அல்லது மாற்றத்தின் தேடல் என்கிற பொருளில்). இவ்வகையான ஆவேச எதிர்ப்பு நியாயமானது என்பதிலோ அவசியமானது என்பதிலோ இரண்டாவது கருத்து இருக்க முடியாது. ஆனால் இவர்கள் இருவரும் பார்க்கத் தவறுகிற ஒரு விஷயம் இருக்கிறது என்பதையும் அது ஷேக்காவின் –மீனைப் பற்றி தெரிந்தவர்- கண்களுக்கு மட்டுமே தெரிகிறது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.
விலங்கு வேட்டையைப் போலவே மீன் பிடிப்பதும் மனிதர்களின் ஆதி பழக்கங்களில் ஒன்று. இயற்கையுடன் நெருக்கமான உறவு கொண்டது. ஷேக்காவிற்கும் மீன்பிடி குளத்திற்கும் உள்ள உறவை இவ்வகையில்தான் வகைப்படுத்த வேண்டும். (நீ என்னை அழிக்க முடியும்; ஆனால் தோற்கடிக்க முடியாது என்றுக் கூறி இயற்கையை வெல்ல முயற்சிக்கும் ஹெமிங்வேயின் கிழவன் அல்ல ஷேக்கா. இந்த இரண்டும் மீனவக் கிழவர்களுக்கும் நடுவே உள்ள தூரத்தில் பொதிந்திருக்கிறது இன்னொரு ரகசியம்). ஷேக்காவின் பிரதான கவலை பங்களாத் தெரு சார்ந்ததாக இல்லை. மாறாக தன் தெருவினர் இப்போது மீன் பிடிப்பதை நிறுத்திவிட்டது குறித்தே ஷேக்கா அதிகம் வருந்துகிறார். (படகோட்டி படம் பார்க்க நேர்ந்தால் மட்டும் மறுநாள் எல்லோரும் குளத்திற்கு மீன் பிடிக்க குழுமிவிடுகிறார்கள்). சமையலையும் பாட்டு பாடுவதையும் அவர்கள் தம் தொழில்களாக மாற்றிக் கொள்வதில் அவருக்கு உடன்பாடே இல்லை. மீன் பிடி தொழில் ஏன் சுணக்கம் பெற்றது என்பதற்கான காரணங்களை ஆசிரியர் நாவலில் குறிப்பிடாதபோதும் கற்பனையால் அவ்விடைவெளியை நெருடலின்றி நிரப்ப முடிகிறது.
குளத்தில் மீனை பிடிக்கையில் ஷேக்கா அடைகிற கட்டற்ற மகிழ்ச்சி என்பது ஆன்மத்தளத்தில் நிகழ்வது என்றால் மீன்கள் குறித்த அவரது அறிவை முன்வைத்து இந்த நாவலை அரசியல் கோணத்திலும் விரித்து வாசிக்கலாம். நாவலில் ஒருமுறை ஜக்கரியாவிற்கு மீன் பிடிக்கும்போது குளத்தில் கெண்டை குஞ்சு கிடைக்கிறது. ஆனால் அவன் அதை ஏதோ விசேஷ மீன் என நினைக்க ஷேக்கா அதை மறுத்து உண்மையை சொல்கிறார்.
"இது சாதாரண கெண்ட மீன் குஞ்சுதா. மீன பத்தி தெரிஞ்சவன் எவன வேன்னாலும் கேட்டுப்பாரு, என் ஆயிசுக்கு எத்தினி லட்சம் கெண்டக்குஞ்சுப் பார்த்தவன்"
ஜக்கரியவால் அதை ஏற்க முடியவில்லை. அவன் திருப்பூரார் என்கிற ஆலிமிடம் சென்று அதே மீன்க்குஞ்சு பற்றி கருத்து கேட்க திருப்பூரார் அது ஒரு தேவதை மீன் என்று பொய் சொல்லி அவனை ஏமாற்றி வேறு உணவு மீன்களை இலவசமாக பெற்றுக் கொள்கிறார். அடிப்படை அரசியல் விதிதான். நீங்கள் உங்களது வேர் பரவிய மண்ணுக்கு, ஞானத்திற்கு, நனவிலிக்கு அன்னியமாகும்போது அந்த அறியாமையிலும் தொலைவிலுமே உங்களுக்கு எதிரான ஆயுதத்தின் முனைத் தீட்டப்படுகிறது.
ஷேக்காவிடம் இல்லாத சமூக விழிப்புணர்வு நைனாவிடம் இருக்கிறது. அவன் தன் மக்களுக்கு எதிரான சுரண்டலை உணர்ந்திருக்கிறான். எனும்போதும் அவனை நேர்மறை சக்தியாக பார்க்க முடியாது. அவனது மூர்க்கமும் வேகமும் அழிவையே நிகழ்த்துகின்றன. ஏனெனில் அவன் மீன்களை அறிந்தவன் அல்ல. ஆனால் ஷேக்கா தன் பேரனுக்கு குளத்தையும் மரங்களையும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்துவிட்டதால் அவன் மற்றவர்களைப் போல் மீன்களுக்கு அன்னியனாக இருக்கப் போவதில்லை. அவனால் காசீமையும் நைனாவையும் - அவர்களது பலவீனங்களையும் - கடந்து நீண்ட தூரத்திற்கு பறக்க முடியும். அல்லது மீன்களைப் போல் ஆழத்தில் தியானிக்க முடியும்.
No comments:
Post a Comment