Saturday 27 January 2018

999 வாழ்க்கை

நான் சமீபத்தில் இரண்டு மேற்கோள்களை தனியே குறித்து வைத்துக் கொண்டேன்.

ஒன்று “தத்துவத்தின் கதை” நூலின் முன்னுரையில் வில் டூரண்ட் சொல்வது, “காலம் கடப்பதற்கு முன்னால் பெரிய விஷயங்களை பெரியவை என்றும் சிறிய விஷயங்களை சிறியவை என்றும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்”

இரண்டாவது ஜெயமோகனுடையது, “பெரிய வாழ்க்கைகள் நினைவில் நிறுத்தப்படவேண்டும். அன்றாடமென வந்துசூழும் சிறுமைகளுடன் போரிட அவையே படைக்கலமென்றாகின்றன.”


கடந்த சில மாதங்களாக பெரிய புத்தகங்களுடனே அதிகமாக பொழுது கழிவதாலும் நிறைய பெரிய வார்த்தைகளை கற்றுக்கொள்வதும் மறப்பதும் குழம்புவதுமாக இருப்பதாலும் பெரிய விஷயங்கள், பெரிய மனிதர்கள் என தரைக்கே வராத ஆசைகளோடு அலைவதாலும் இவ்விரண்டு மேற்கோள்களும் என்னில் உடனடியாக பற்றி ஏறிக் கொண்டன என நினைக்கிறேன். எனினும் இந்த பெரியவைகளுக்கு நடுவே நான் அவ்வப்போது உணரும் பயமும் மேற்கொள்ளும் அற்பத்தனங்களும் உண்டு. தலைக்கு மேல் சுழலும் கண்கள் உறங்கும் நேரத்தில் சிறியவைகளின் ஜமாவில் அடைக்கலம் சேர்ந்துக் கொள்வேன். பெரியவை, சிறியவை – இரண்டும் ஒன்றையொன்று பார்த்துவிடாமல் இருக்க, என் இரட்டை வாழ்க்கையை அவை கண்டுபிடித்திடாமல் இருக்க, இரண்டிடமும் எனக்கு ஒரு இரட்டைச் சகோதரன் உண்டு என்று பொய் சொல்லி வைத்திருக்கிறேன். ஒட்டுத் தாடியும் ஒட்டு மீசையும் பையிலேயே எப்போதும் இருக்கின்றன. இன்று அந்த திரைப்படத்தின் உச்சக்காட்சி.

பெரும் மரங்களின் பூங்காவில் பறவைகள் கிளைகளில் நுழைந்து இலைகளை கொத்தி எல்லா திசைகளிலும் “இருப்பு. இருப்பு” என சொல்லிக் கொண்டிருந்தன. என் கைகளில் கிடந்த பெரிய புத்தகமொன்று “மகத்துவம். லட்சியம்” என்று சொல்லிக் கொண்டிருந்தது. நானும் அவற்றிடம் “ஆம்.ஆம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே முதுகுக்கு பின்னால் ஒரு ஸ்கூட்டியின் ஹாரன் சத்தம். “எக்ஸ்க்யூஸ் மீ.மகத்தான லட்சியங்களே!”. இசையின் கவிதைக் குரலை மனதில் கேட்பதற்கு முன்பாகவே அந்த பூங்காக் காட்சி வேறேதோ ஒன்றின் நிழல் என்பது எனக்கு தெரியத் தொடங்கியிருந்தது. பின்பு அது இசையின் கவிதையில் வருகிற பூங்கா என்பதும் அங்கே ஒரு பைத்தியம் புத்தகத்தோடு திரியும் என்பதும் நினைவில் மேலெழ, நான் அந்த பெரிய புத்தகத்தின் முன்னால் என் மாறுவேஷத்தை கலைத்து பழியை ஏற்று கைக்கூப்பி மன்னிப்பு கேட்டேன். “நான் ஏமாற்ற நினைக்கவில்லை. ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை”.

முன்பெல்லாம் இசையோடு சேர்ந்து வாழ்க்கையை பார்த்து சிரிப்பதில் எனக்கு எந்த தடையும் இருந்தது இல்லை. ஆனால் இப்போது சிறிது பதற்றம் வருகிறது. “என் பெரும் பேராசைகளே இன்று போய் நாளை வாருங்கள்” என்று சபரி சொல்கிறார். எனக்கும் அவரைப் போல் விண்மீன்களோடு பேச வேண்டும் என்றே விருப்பம். ஆம். எல்லோரும் இங்கே சரஸ்வதி கடாட்சத்தைத்தான் எதிர்பார்க்கிறோம். ஆனால் மூதேவி வந்து வாய்க்கும்போது என்ன செய்வது? ஒன்றும் செய்ய முடியாது. வா, அந்த மூதேவியிடமாவது போய் அருள் கேட்டு பார்க்கலாம் என்கிறார் இசை. எனக்கு உண்மையில் இங்கு யாரை பார்த்து பயப்படுவது என்று தெரியவில்லை. எனினும் “மயிரப்புடுங்கியுடு” என்று எண்ணெய் வழிகிற, என் ஆயுளில் குறைந்தபட்சம் ஒரு நாளையேனும் பலி கேட்கக்கூடிய சிக்கன் ரைஸை இன்றிரவு வாங்கி சாப்பிட முடிவெடுத்துவிட்டேன்.

துயரத்தின் கழுத்துச் சதை மார்பில் துவள்கிறது
 - இசை

காலையில் எழுந்ததும் டீ குடிக்கப் போவேன்
பாதி டீ வரை சும்மாதான் குடிப்பேன்
பிறகு  "மயிரப்புடுங்கியுடு" என்று
இரண்டு வறுக்கிகளை வாங்கி நனைத்துத் தின்பேன்
ஒரு ஜிலேபியை தின்னும்
அந்த இரண்டு நிமிடங்களில்
இந்த வாழ்வு இனித்துச் சொட்டுகிறது
இனித்துச் சொட்டும் வாழ்வை
விட்டுவிடக் கூடாதென்பதற்காகத்தான்
காலையிலும், மதியத்திலும், இரவிலும்
இடையிடையும்
ஜிலேபிகளைத் தின்கிறேன்.
பால்யத்தை மீட்டுரு செய்யவே
கம்பர்கட்டுகளையும், கொடல் வத்தல் பாக்கெட்டுகளையும்
தின்கிறேன்.
ப்ரூ காஃபியும், பூண்டு மிக்சர் தட்டோடும்
நான் மொட்டைமாடியில் அமர்ந்திருக்கையில்
மந்தமாருதம் என்னை  விட்டெங்கோடிப்போகும்?
நான் ஒழுங்காக கோப்புகளை பார்க்கவே ஆசைப்படுகிறேன்
இந்த கேண்டீன் முதலாளி மணிக்கொருதரம்
காற்றில் சமோசாவை ஏவி விடுகிறான்
அது என் காதோரம் வந்து
பார்த்து பார்த்து என்னைத்தை கிழித்தாய்
என்று கேட்கிறது
இந்த நாட்டில் எவ்வளவோ சட்டங்கள் இருக்கின்றன
“இருசக்கர வாகனங்களில் காதலர்கள் இறுக்கி அணைத்தபடியே
பயணிக்கலாகாது “ என்று ஒரு சட்டமேனும் இல்லை.
ஒருத்தி தன் காதலனின் கன்னத்துள்
புகுந்து வெளிவந்ததைப் பார்த்த ராத்திரியில் தான்
நான் க்ரில்சிக்கனில் ஒரு முழுக்கோழி தின்றேன்
வாரத்திற்கு மூன்றுதரம்
முழுக்கோழி தின்னவேண்டும் என்பது என் தலையெழுத்து.
கடவுள் என் வலக்கையை
இயந்திரத்தின் இரும்புச்சக்கரங்களுக்கு கொடுத்துவிட்டு
இடக்கையில் இருட்டுக்கடை அல்வாவை வைத்தார்

No comments:

Post a Comment