Tuesday, 3 April 2018

பாரஞ்சுமக்கிறவர்கள்

"ஒரு பாவி முழுமனதுடன் தன்னை நோக்கி பிரார்த்தனை செய்வதை ஒவ்வொருமுறை ஆகாயத்திலிருந்து பார்க்கும்தோறும் கடவுள் பேருவகை அடைகிறார். தன் குழந்தை முதன்முதலாகச் சிரிப்பதைக் காணும் அன்னையைப் போல்" 

- தஸ்தாவெய்ஸ்கி
 

மனித சமூகம் என்பது பல்வேறு நம்பிக்கைகளால் ஆனது; பல்வேறு மதிப்பீடுகளால் பிணைக்கப்பட்டது. ஆனால் இந்த நம்பிக்கைகள் என்பவையும் மதிப்பீடுகள் என்பவையும் உண்மையில் என்ன? அவற்றுக்குப் புறவயமான இறுதி விளக்கங்கள் உண்டா? அறம், நீதி, மன்னிப்பு, காதல் என நாம் நம் சமூகக் கதையாடல்களிலும் அன்றாடப் பேச்சுவழக்கிலும் பயன்படுத்துகிற எந்த அரூப கருத்துக்கும் திட்டவட்டமான வரையறைகளோ நிரந்தரமான விதிகளோ கிடையாது என்றே சொல்ல வேண்டும். புலன்களால் தொட்டு அறிய முடிகிற பொருட்களைப் போல் அவை மீற முடியாத அறிவியல் நியதிகளால் கட்டப்பட்டவை அல்ல. அணுக்களை பிளப்பதற்கும், இணைப்பதற்கும் அணுக்களின் ஆற்றலை கணிப்பதற்கும் நம்மிடையே அறிவியல் பகுப்புகள் உண்டு; முடிவுகள் உண்டு. ஆனால் குற்ற உணர்ச்சிக்கோ அல்லது மகிழ்ச்சிக்கோ அப்படி எந்த அளவீடும் கிடையாது. எனினும் நாம் விடாமல் அவற்றைப் பற்றிக்கொண்டிருக்கிறோம். அர்த்தம், லட்சியம் போன்ற இன்னப்பிற அரூப கருத்துக்களையும் அவற்றின் வழியாக உருவாக்கிக் கொள்கிறோம். 




பொதுவான விதிமுறைகள் இல்லாததனாலேயே இந்த நம்பிக்கைகளும் மதிப்பீடுகளும் தர்க்கம் மற்றும் காரணியத்துக்கு அப்பால் இருக்கின்றன. தோராயமாக இவற்றை இரு எதிர் நிலைகள் என்றே அழைக்கலாம். இவ்விரண்டுத்தரப்புகளுக்கும் இடையேயான முரணாலும் இடைவெளியாலும் தஸ்தாவெய்ஸ்கி பீடிக்கப்பட்டிருந்தார் என்றே கூறவேண்டும். அவரது "நிலவறைக்குறிப்புகள்" குறுநாவல் மனிதன், காரணியம் என்கிற இருமையை விசாரனைக்கு ஆட்படுத்துவதன் வழியே ஒரு தனிமனிதன் இயற்கை விதிகளின் எல்லைக்குட்பட்டவன் அல்ல என்பதையும் அவன் சுதந்திரமானவன் என்பதையும் நிறுவ முயற்சிக்கிறது; கூடவே தனிமனிதன் விதிகளுக்கு எதிரா மூர்க்கமாத் தீர்மாணத்துடன் இருப்பதால் அவன் செயலற்ற கையறு நிலையில் இருப்பவன் என்பதையும் அது அடிக்கோடாகச் சுட்டுகிறது. அசடன் நாவலில் இதே உரையாடல் அல்லது விவாதம் வேறொரு பரிமாணம் எடுத்து தனி மனிதன் என்பதிலிருந்து சமூகம் என்கிற அடுத்த அடுக்கிற்கு நகர்ந்திருப்பதையும், ஊடே அது நிலவறை குறிப்புகளை உட்செரித்துத் தன்னில் ஒரு பகுதியாக மாற்றியிருப்பதையும் நாம் காண்கிறோம். "தற்கொலை மட்டுமே என் சுயவிருப்பத்தால் (இயற்கையை மீறி) நானே தொடங்கி முடிக்கக்கூடிய ஒரே செயல்" என்று கூறுகிற இப்போலித்தில் நிலவறை மனிதனின் சாயலை நிச்சயம் அடையாளம் காணாமல் இருக்க முடியாது. இப்போலித் மட்டும் இன்னும் வாழ அனுமதிக்கப்பட்டிருந்தால் அவனும் நிலவறையின் இருட்டில்தான் தன் கதையைச் சொல்லத் தொடங்கியிருப்பான். 


தஸ்தாவெய்ஸ்கி பற்றிய பெரும்பாலான கட்டுரைகளில் அவரது சமகால அரசியல் மற்றும் சமூகச் சூழல் குறித்த இரு கருத்துக்கள் அவசியம் இடம்பெறுவதை யாரும் கவனிக்கலாம். ஒன்று, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிகழ்ந்த அரசியல், கலாச்சார மாற்றங்கள் மற்றும் அறிவியல் முன்னேற்றங்கள். மனித அறிவை முதன்மையாகக் கொண்ட நவீன யுகம் பிற ஐரோப்பிய தேசங்களின் மார்க்கமாக ரஷ்யாவிற்குள் நூறு வேர்களில் ஊடுருவும் காலத்தில்தான் தஸ்தாவெய்ஸ்கி எழுதுகிறார். இரண்டாவது, ரஷ்யாவின் மரபில் மிக வலுவாகத் தடம் ஊன்றியிருக்கும் கிறிஸ்துவ மதம். அசடன் நாவலில் பல இடங்களிலும் தஸ்தாவெய்ஸ்கி ரஷ்யாவின் சாரம் எனக் குறிப்பிடுவது கிறிஸ்துவத்தின்  மதிப்பீடுகளையே. (அது மேற்கு ஐரோப்பாவின் ரோமன் கத்தோலிக்ககத்திலிருந்து வேறுபட்டது; அசடன் நாவலிலேயே ரோமன் கத்தோலிக்கம் பற்றிய கடுமையான விமர்சனங்கள் உள்ளன). தஸ்தாவெய்ஸ்கியை பீடித்திருந்த சந்தேகங்களுக்கும் அவரால் மிகத் தெளிவாகவே கணிக்க முடிந்திருந்த ரஷ்யாவின் வருங்காலம் குறித்த அச்சத்திற்குமான ஆதார ஊற்று என்பது இந்த முரண்பாடுதான். தன் பழைய உடலை ரத்தம் வழிய உரித்து எடுத்துவிட்டு புதிய உடலுக்குள் நுழைய எத்தனிக்கும் ரஷ்யாவின் போராட்டம் என்று இதைக் குறிப்பிடலாம். 

தர்க்கமும் காரணியமும் மிக்கத் தீவிரமான தத்துவ நிலைப்பாடுகளை, அரசியல் மாற்றங்களை அசடனில் தஸ்தாவெய்ஸ்கி ஏன் மறுதலிக்கிறார் என்பதற்கான விடையை நாம் கழுதை மேல் வந்த மிஷ்கினின் முன்னோடியிடம் தேடுவதே பொருத்தமாக இருக்கும். அவரை நாம் புதிய ஏற்பாட்டில் கண்டுபிடிக்கிறோம்தச்சன் மகன் பட்டணத்திற்குள் பிரவேசிக்க, பட்டண மக்கள் படுக்கையில் கிடக்கும் ஒரு திமிர்வாதக்காரனை அவரிடம் அழைத்துவருகிறார்கள். அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு தச்சன் மகன் நோயாளியை சொஸ்தப்படுத்த சித்தமாகிறார். அதன் நிமித்தம் நோயாளியின் பாவங்களை மன்னித்து அருள்கிறார். தேவபாரகர்களுக்கோ அதிர்ச்சி. மனிதர்களுடைய பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உள்ளவன் தேவன் ஒருவன் மட்டுமே. அதை ஒரு மனிதன் செய்வது தேவதூஷணை என்று அவர்கள் மனதில் எண்ண, மனிதக்குமாரனாகிய தச்சன் மகன் அவர்களுடைய எண்ணத்தை உய்த்தறிந்து இப்படிப் பதில்மொழிகிறார் “நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன? உன்பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?” 

சட்டத்தின் விதிகளில் குற்றமும் தண்டனையும் நிரூபணங்கள் அனுமதிக்கும் விடுதலையும் பற்றிய சொற்கள் உண்டே தவிர அதன் கதையாடல்களில் குற்ற உணர்ச்சிக்கோ மன்னிப்பிற்கோ ஆன்ம விடுதலைக்கோ இடம் கிடையாது. போலவேதான் நவீன யுகத்தின் மருத்துவமும். நவீனமருத்துவம் நோயை உடலில் அடையாளம் கண்டு அதை வெற்றிகரமாகக் குணப்படுத்துவதையே தன் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. அதற்கு எழுந்து நடவென்று சொல்வதே எளிது. பாவங்களை அது மதிப்பிடுவதில்லை; மன்னிப்பதும் இல்லை. பாவங்கள் மன்னிக்கப்படாமலேயே நோய்கள் குணமாவதும் குற்ற உணர்ச்சியின்றியே கைதிகள் சிறையில் இருப்பதும் மிக ஆழமான கிறிஸ்துவப் பிடிப்புள்ள தஸ்தாவெய்ஸ்கியிடம் என்ன மாதிரியான தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கும் என்பதைச் சுலபத்தில் கற்பனை செய்யலாம். 

தஸ்தாவெய்ஸ்கி கற்பனாவாத எழுத்தை தன் வெளிப்பாட்டு முறையாக கொண்டவர். கற்பனாவாதத்தின் இயல்பு குறித்த தன் வரையறையில் ஜெயமோகன் இப்படி சொல்கிறார் - "(கற்பனாவாதம்) எதை நோக்கி கைநீட்டுகிறதோ அது ஒருபோதும் சிக்குவதில்லை". கற்பனாவாதம் என்பது கனவும் லட்சியமும்கூடிய உத்வேக நிலைதான். எனவே அது மண்ணில் நிற்காமல் அந்தரத்திலேயே எப்போதும் மிதக்கிறது. ஆனால் அது இனிய பகல் கனவு அல்ல என்பதையே அசடன் வாசிக்கிறபோது நாம் தெரிந்து கொள்கிறோம். மிஷ்கின் தன் கனவின் நிமித்தம் ஓயாமல் துன்பப்படுகிறான். வருந்தி அழுகிறான்.  பெரும் அழிவுக்கான முன் தடயங்களைத் தன்னால் உணர முடிகிற, மதிப்பீடுகள் சரிந்து கொண்டிருக்கிற, கடவுளுக்குப் பதிலாக மனிதர்கள் வன்முறையைத் தேர்வு செய்கிற உலகத்திற்குள்தான் மிஷ்கினை தஸ்தாவெய்ஸ்கி களமிறக்குகிறார் - அவன் சிலுவைதான் சுமக்க வேண்டி வரும் என்பதை அறிந்தும். எல்லா லட்சியவாதிகளையும் ,எல்லாக் கற்பனாவாதிகளையும் போலத் தஸ்தாவெய்ஸ்கியும் ஒரு மேன்மையான உலகுக்கான அறைகூவலையே அசடன் நாவல் வழியாக விடுக்கிறார் எனலாம். 



அசடன் நாவலில் இடம்பெற்றுள்ள மிஷ்கினுடைய இரண்டு வசனங்களை இங்கு உதாரணங்களாகச் சுட்ட வேண்டும். 

யெவ்கனிடம் மிஷ்கின் சொல்வது -"மன்னிப்பு அளிப்பவன் தானும் மன்னிப்பை பெறத் தயாராக இருக்க வேண்டும்". (நஸ்தாஸ்யாவை துயரிலிருந்து மீட்க நினைக்கிறான் மிஷ்கின். ஆனால் அவளது பிறந்த நாள் நிகழ்வில் இருவரும் தனியே சந்திக்கும்போது அவளை "பூரணத்துவம்" என்று சொல்லி தன்னை மன்னிக்கும்படியே அவளிடம் கோருகிறான்.) 

இப்போலித், தான் எப்படி அர்த்தபூர்வமான வகையில் மரணிப்பது என்று மிஷ்கினிடம் கேட்கும்போது அவன் அளிக்கும் பதில் “எங்களை மன்னித்துக் கடந்து செல்".
 

இவ்விரண்டு வசனங்களுக்குமே தர்க்கரீதியாக எந்த விளக்கமும் அளிக்க முடியாது. அப்படி அளித்தால் அது அவற்றின் தீவிரத்தையே குலைக்கக்கூடும். ஏனெனில் அவை வெளிப்படுத்துவது நேர்மையான உணர்ச்சிகரத்தை மட்டுமே. உடல் சுகவீனம் மறைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்கிற தச்சன் மகனின் ஞானத்தில் இருப்பது தர்க்கம் அல்ல. அது உணர்ச்சிகரமான அறிதல் மட்டுமே. கற்பனாவாத எழுத்தின் பிரதான இயல்பான உணர்ச்சிகரம் என்பது தர்க்கத்தின், அறிவின் சமநிலைக்கு நேர் எதிரானது. நம்பிக்கைகளையும், மதிப்பீடுகளையும் அறிவின் மொழியில் பேசச் சொன்னால் அவை நிச்சயம் தடுமாறி தோற்றுவிடும். கான்யா, நஸ்தாஸ்யா, இப்போலித் என நாவலில் வருகிற பெரும்பாலான கதாபாத்திரங்கள் ஆசையாலும் அகங்காரத்தாலும் அறிவாலும் தூண்டப்பெற்றவர்களாக இருப்பதனாலேயே அவர்கள் யாராலும் உணர்ச்சிகரத்தின் முன் பணிய முடியவில்லை. கான்யா முதலில் மனமுடைந்து திருந்துகிறபோதும் பிற்பாடு மீண்டும் அவன் சுயநலத்திற்கே பலியாகிறான். மிஷ்கினால் மட்டுமே அந்த இருட்டிலும் வெளிச்சத்தைப் பார்க்க இயல்கிறது. ஏனெனில் அவன் மட்டுமே பாவங்களுக்காகப் பிரார்த்தனை செய்பவன். மிஷ்கின் புத்திஜீவியாக இல்லாமல் அசடான இருப்பதனாலேயே அவனது சொற்கள் அசலாக இருக்கின்றன; நம்மை நெருக்கத்தில் தீண்டுகின்றன. அவன் நடுக்கத்துடன் பேசுவதனாலேயே நமக்கும் அச்சம் ஏற்படுகிறது. (நாவலில் மனிதர்களுடைய உணர்ச்சிகர நிலைகளை புரிந்துகொள்ளக்கூடியவராக வரும் இன்னொருவர் திருமதி.இபான்சின். தஸ்தாவெய்ஸ்கி கல்விமான்களையும் ஞானிகளையும் மறுத்து முன்வைக்கும் பாலகரின் அடையாளம் அவர்). 

கற்பனாவாதம் என்பது உணர்ச்சிகரமான கனவு என்பதாலேயே யதார்த்தம் பற்றிய தன்னுணர்வு மீண்டதும் அது அதிர்ச்சியூட்டும் விலகலை உண்டாக்குகிறது என்பதைச் சொல்லாமல் தவிர்ப்பதற்கில்லை. சிலுவையை தாங்கும் கெதியோ அல்லது உயிர்த்தெழுகிற சக்தியோ இல்லாத எளிய மனிதர்கள் நாம். எனவே இப்பெருநாடகத்தின் முடிவில்  உலகம் முன்னர்த் தச்சன் மகனிடம் கேட்ட கேள்வியையே நாம் இப்போது மிஷ்கினிடமும் கேட்க வேண்டி வருகிறது. "நீங்கள் வாக்களிக்கும் பரலோக ராஜ்ஜியம் மண்ணில் முளைக்காதா?". அது அறிவின் கேள்வி என்பது நமக்குத் தெரியாமல் இல்லை. நஸ்டாஸ்யாவின் சடலத்தைப் பார்த்ததும் உடனடியாக நம் அறிவு விழித்துக் கொண்டுவிட்டது. நம் மீது அணிவிக்கப்பட்டிருக்கும் புனித அங்கியை வேகவேகமாகக் கழற்றியெறிகிறோம். அதைத் தேர்வு செய்து அணிந்ததே நாம்தான் என்பதே நமக்கு ஞாபகத்தில் இல்லை. மிஷ்கினை வதைக்கும்பொருட்டு அவன் பார்த்து பார்த்தும் தீராத, அவனை உலுக்கி சிதைக்கிற உலகின் குரூரங்களை மீண்டும் மீண்டும் அவனுக்குக் காண்பிக்கிறோம். கண்ணீரை மறைத்துவிட்டு "உணர்ச்சிகரத்தின் பசப்பல் வேண்டியதில்லை; தர்க்கபூர்வமாக மட்டும் பதில் சொல்" என்று அவனிடம் சண்டையிடுகிறோம். அதுவரையிலும் மிஷ்கினுடனே இருந்தவர்கள் சட்டென்று பதறி விலகுகிறோம். அல்லது அவனை ரொட்டி துண்டுக்காக விலை பேசுகிறோம். பாவப்பட்ட உயிர்களான நமக்கு வயிற்றுப்பாடு முக்கியம். "ஜீவனுக்குப் போகிற வழியோ இடுக்கமாய் இருக்கிறது; அதன் தனிமை மூச்சு முட்டலை ஏற்படுத்துகிறது" என்று சொல்லி எதிர்திசையில் திரும்பிக் கொள்கிறோம். நம் முன்னிருப்பது எண்ணெய் கொப்பரைக்குப் போகும் வழிதான் என்றாலும் அந்த பாதையில் குருதித்தடங்கள் இல்லை. அவ்வப்போது நம் நெஞ்சிலும் குற்ற உணர்ச்சி கரிக்கவே செய்கிறது. பைத்திய விடுதியில் தனியாக இருக்கும் மிஷ்கினோ சிறை ஜன்னலிலும் வெளிச்சம் சாத்தியம் என்று சொன்னவன். அவன் எப்படியும் திரும்பி வந்துவிடுவான் என்கிற பயமும் நம்மில் எழுகிறது. அப்போது நாம் இப்போலித் போல் "தான் புரிந்துகொள்ள அனுமதிக்கப்படாத ஒன்றுக்கு மனிதன் பதில் கண்டடைவது கடினமானது" என்றும் யெவ்கனி போல் "பொய்யில் ஆரம்பிப்பது பொய்யில்தான் முடிய வேண்டும்" என்றும் சொல்லிக்கொள்கிறோம். "ஆனால்.." என்று தொடங்கும் உளக்குரல் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. அது மிகவும் பலவீனமானது. சும்மா "உஷ்" என்று அதட்டியதும் அமைதியாக தலையைக் கவிழ்த்திவிடும். 


No comments:

Post a Comment