Tuesday 31 March 2020

இன்னும் நிகழாதவை இங்கு ஏற்கனவே வந்துவிட்டன!


குழப்பமான நாட்கள் இவை. ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றியே எல்லோரும் பேச வேண்டியிருக்கிறது. ஒரு மூடிய வட்டத்துக்குள் எல்லோரும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் அதே நேரம் மிகத் தனியாக இருக்க வேண்டிய நிலையிலும் உள்ளோம். வீடுகளுக்குள் தனியாக. பொது இடங்களில் உடல் தொடாமல். மூச்சு திரையிடப்பட்டு. வரைந்த கட்டங்களில் ஆறடி இடைவெளிவிட்டு. வினோதமான நாட்கள்.
© Moises Saman/Magnum Photos

கட்டாயத்தில் என்றாலும், இந்நாட்களில் ஒவ்வொருவரும் தன்னுடன் இருப்பதற்கான, தன் சுயத்தை எந்தத் தடுப்பும் இன்றி எதிர்கொள்வதற்கான வாய்ப்பு அமைந்திருக்கிறது. வாட்சாப் செய்திகள், யுடியூப் மீம்கள், டிக் டாக் நடனங்கள், நெட்ப்ளிக்ஸ் தொடர்கள் முதலியவை நம் பொழுதுகளை எடுத்துக்கொள்ளாமல் இல்லை. ஆனால் இவற்றுக்கு அப்பால் எங்கேயோ நம் இருப்பில் விழிப்புக் கூடியிருக்கிறது என்றே நினைக்கிறேன். ஏனெனில் நாம் எதிர்கொள்பவை ஆதாரமான சிக்கல்கள். உயிரினமாக நமக்கு நிகழ்ந்திருக்கும் ஆபத்தைச் சமூகமாகக் கையாள வேண்டும். விளைவாக நம் நனவிலியில் அடியோட்டமாய் இருக்கும் பழைய உணர்ச்சிகளை அவற்றின் அசல் நிலையில் சந்திக்க நேர்ந்துள்ளது. நிச்சயமின்மை குறித்த பதற்றம். பொது வெளி பற்றிய ஜாக்கிரதையுணர்வு. பொது வெளிக்கான தவிப்பு. உணவு சேமிப்பில், சுயபாதுகாப்பில் உள்ள மிருக சாயல். எங்கும் வெவ்வேறு அளவுகளில் இவை காணக் கிடைக்கின்றன.
தகவமைத்துக் கொள்ளுதல் உயிர் இயல்பு என்பதை அறிந்திருந்தாலும், முன்மாதிரியில்லாத – தற்காலிகமானது என்று இக்கணம் வரையில் நம்புகிற – இப்புதிய சமூக யதார்த்தத்துக்குக்கூட ஒருவிதத்தில் மனம் வேகமாகப் பழகுவதை, இந்த எல்லைகளுக்குள் ஓர் ஒழுங்கை உருவாக்க முயற்சிப்பதை பார்ப்பது விசித்திரமாக இருக்கிறது. தன்னியல்பில் நிகழ்ந்தாலும் அது முற்றிலும் எளிமையானதல்ல என்பதையும் உணர்தபடியே இருக்கிறேன். மோதல்கள் நிகழ்கின்றன. காயங்கள் ஏற்படுகின்றன.

அன்றாடம் என்பதே அட்டவணைதான். மூன்று வேளை உணவு. நடுவே ஒரு குறிப்பிட்ட கடையில் தேநீர். பாலிட்டது அல்லது எலுமிச்சை சாறு போட்டது. அலுவலக வேலை. அலுவலக மேஜையில் சாமி படங்கள். அல்லது குழந்தையின் படங்கள். அல்லது ஏதாவது அமெரிக்கத் தொலைத் தொடரின் போஸ்டர்கள். நடுவே சிகரெட். இன்னொரு குறிப்பிட்ட கடையில் எண்ணெய் பட்சணம். உடல் எடையைக் கவனிப்பவர்களுக்குப் பழங்கள். உடற்பயிற்சிகள். தினசரி போகும் பேருந்து அல்லது ரயில். திங்கட்கிழமை தாமதம். வெள்ளிக்கிழமை பீர். இப்படி இடங்கள், ருசிகள், பழக்கங்கள், பொருட்கள் எல்லாம் சேர்ந்து காலத்தை வகுத்து ஒரு வரைபடமாக மூளையில் ஒட்டிவைத்திருக்கின்றன. அது அவகாசமின்றிக் கலையும்போது நாம் கட்டமைத்திருக்கும் யதார்த்தத்தின் ஒழுங்கும் குலைந்துவிடுகிறது. உடன், சமூகத்தின் கண்களில்லாத வெளிக்குள் நீடித்துப் புழங்க நேர்கையில், நம் குணாதிசயங்களும் பதமிழந்து தம் கச்சா வடிவுக்குத் திரும்ப முற்படுகின்றன. சோம்பல் முதல் சகிப்பின்மை வரை. ஏக்கம் முதல் மோகம் வரை.

சபரிநாதன் எழுதுகிறார்,
“சாம்பல்,நம் காலத்தின் நிறம்”. இப்போது கூடுதல் அடர்த்திப் பெற்றிருக்கும் சாம்பல் புகை எல்லாவற்றையும் மூடி மறைக்கிறது. அதற்குப் பின்னால் இருப்பது தெரியாமை. தெரியாமையில்தான் பிசாசுகள் வசிக்கின்றன. வைரஸ்கள் உலவுகின்றன. தெரியாமையில்தான் நாளை இருக்கிறது. அச்சம் இருக்கிறது. அவற்றை ஒரேடியாகத் தவிர்ப்பது சாத்தியமற்றது. உடன் தவிர்ப்பது என்பது ஒருபோதும் கடந்து செல்லுதல் ஆகாது. நிராகரிப்பு தெரியாமையின் இருப்பை மேலும் வலுப்படுத்தவேக்கூடும். இரவில் நிழல்கள் பூதாகரமாவது போல் அவை சட்டென்று பிரம்மாண்டமாகிவிடலாம். அதே சமயம், புராதானமான இவ்வுணர்ச்சி நிலைகளுக்கு மிக அருகில் நிற்பதும் அபாயகரமானது. நிறைவற்ற ஆவிகள் போல் அவை நம் உருவத்தை எடுத்துக் கொள்ளலாம். பிறகு கண்களில் வெளிச்சத்தைப் பறித்து நம் குரலில் பேசத் தொடங்கிவிடும். எதையும் அண்மையில் சந்திக்க முற்படும்போதே எங்கே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் அறிய வேண்டியிருக்கிறது. தாவோ சொல்கிறது, “பெயரிடுவது என்பதைப் பார்க்கும்போது / அதை எங்கே நிறுத்திக் கொள்வது என்று / ஒரு மனிதன் தெரிந்துகொள்ள வேண்டும்”.

விதிக்கப்பட்ட இத்தனிமை பழக்கத்தில் அமைந்து வந்தாலும் அவ்வப்போது கடுமையான பாரங்களையும் வெளிப்படுத்தவே செய்கிறது. கவனம் குவித்து ஒரு வேலையையும் செய்ய முடியவில்லை. புத்தக வாசிப்புத் தடைப்பட்டது. சொற்களும் கருத்துக்களும் நீர் பரப்பில் அலையென நிலைக்காது அசைந்துக் கொண்டேயிருந்தன. உறக்கம் சரியாக இல்லை. எனவே பகல் பொழுது முழுக்கச் சோர்வு மண்ட, பிரக்ஞையோ ஆழத்துள் மிதக்கலாகிற்று. கேளிக்கைகள் மீது மிதமிஞ்சிய நாட்டம் உருவானது. பெரும்பாலும் தனிமையை விரும்பியே நாடுகிறவன் என்பதால் அதன் இரண்டு முகங்களையும் முன்னமே அறிந்திருக்கிறேன். தனிமையின் பிரகாசம். சுழிப்பு. இரண்டுமே அருகருகே இருக்கின்றன. அதுவே அச்சத்தை இன்னும் கூட்டுகிறது.

இன்னொரு மனிதரை நேரில் பார்த்து சில தினங்கள் கடந்துவிட்ட நிலையில் உணவு குறித்த ஏக்கமும் பெருகலானது. நான் நல்ல உணவை சமைப்பதற்கான சாத்தியமும் சமீபத்தில் இருப்பது போல் தோன்றவில்லை. எல்லாச் சமையல் குறிப்புகளும் குழப்பவே செய்கின்றன. சரியான அளவையும் தேவையான அளவையும் எப்படி ஒன்றாகத் தேர்வது? கைகளை அடிக்கடி கழுவுகிறேன். ஒன்று. இரண்டு. மூன்று. மொத்தம் இருபது நொடிகள்.

அறையில் இரைந்து கிடக்கும் புத்தகங்கள், கலைந்திருக்கும் படுக்கை, பிளாஸ்டிக் கவர்கள், அடையாள அட்டை, பழைய துணிகள், காலி பற்பசை குழாய் முதலியவற்றுக்கு நடுவே சானிடைசர் பரிதாபகரமாக நின்று கொண்டிருக்கிறது. தன்னால் சுத்திகரிக்கவே முடியாத ஓர் இடத்துக்கு வந்துவிட்டது போல். தொடர்ந்து அறையை ஒருங்கு செய்ய முயற்சிக்கிறேன். ஆனால் பொருட்கள் வெகு சீக்கிரமே இடம் மாறிவிடுகின்றன. காணாமல் போகின்றன. வீடு தனி உயிராகத் தோற்றம் தருகிறது. தஸ்தாயெவ்ஸ்கியை நினைத்துக் கொள்கிறேன். வசிப்பிடங்கள் ஆன்மாவின் சவப்பெட்டிகளாக மாறமுடியும் என்பதை அவர்தான் கண்டுபிடித்தார்.
மறுபடியும் கைகளைக் கழுவுகிறேன். ஒன்று. இரண்டு. மூன்று. இருபது நொடிகள் என்பது உண்மையில் எவ்வளவு நேரம்?


© Mark Power | Magnum Photos

அரசு அமைப்புகள், குடிமை பரிவர்த்தனைகள், சமூகக் கட்டுமானங்கள் முதலியவை அமில சோதனைக்கு உள்ளாகும் சமயம் இது. நாம் பார்க்க மறுத்த இடைவெளிகளுக்குள் நாமே விழுந்து தொலைந்து போவதற்கான சந்தர்ப்பங்களும் வாய்க்கின்றன. எளிதில் முறிந்துவிடும் மெல்லிய இணைப்புகளுடனே இங்கே யாவும் –புறத்திலும் அகத்திலும்- இயங்கி வருகின்றன என்பதை உணரும்போது மிக மெல்லிய நரம்புகளாலான, ஆனால் ஒருபோதும் உடைந்துவிடாத இன்னொரு இருப்பு பற்றிய கவனம் மேலிட்டது - கவிதை. நாம் பார்த்து அறிந்த யதார்த்தம் தன் உருவத்தை மாற்றும்போது, சதா அரூபத்திலும் கனவு நிலையிலும் தரிக்கும் கவிதையிடம் தானே புகலிடம் கோர முடியும்?

கவிதையில் நாம் எப்போதும் பாதுகாப்பாகவே இருக்கிறோம். இதன் பொருள், கவிதை சமூகத்துடன் தொடர்பற்றிருக்கிறது என்பதல்ல. நிஜ உலகின் எல்லா அனுபவங்களும் கவிதையில் இருக்கின்றன. ஆனால் அவை தூய வடிவில் இருப்பதால் அங்கு வலி இருக்கும்போதும் அர்த்தம் இல்லாமல் ஆவதில்லை. அன்றாடத்தின் உண்மைகள் பயன்பாட்டினால் மதிப்பிடப்படுகின்றன. மரணங்களின் எண்ணிக்கை தினசரி தலைப்புச் செய்தியாகும் காலத்தில், அன்றாடமே திசையிழந்துவிடுகிறது. அதன் பயன்பாடுகளும் பரிசீலனைக்குள்ளாகின்றன. ஆனால் கவிதையோ அன்றாடத்துக்கு அப்பால், தனி இடத்தில் நின்று தன் உண்மையை வெளிப்படுத்துகிறது. ஊருக்கு வெளியே இருக்கும் தெய்வம் போல். கவிதை மட்டுமில்லாமல் பிற கலை இலக்கிய வடிவங்களின் அடிப்படையும் இதுதான். எனினும், மொழியில் கவிதைக்கே மந்திரமாகும் ஆற்றல் உள்ளது.
O
இரண்டு கவிதை நூல்களை இந்நாட்களில் தொடர்ந்து வாசித்தேன். டோமஸ் டிரான்ஸ்ட்ரோமரின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பான “முற்றுப்பெறாத சொர்க்கம்” (The half-finished heaven) மற்றும் மனுஷ்யபுத்திரனின் “இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்”. ஏற்கனவே வாசித்தவை எனினும் இப்போது மறுபடியும் அவ்வுலகங்களுக்குள் நுழைய விருப்பம் ஏற்பட்டது. அனிச்சையான தேர்வுகள்தாம். ஆனால் எந்தத் தேர்வுமே முற்றிலும் தற்செயலாய் நிகழ்வதில்லை. தொடர்ந்து யோசிக்கையில் இரண்டு எதிர் நிலை உலகங்கள் ஒன்றையொன்று சமன் செய்வதாகப் படுகிறது.
O

மனுஷ்யபுத்திரனின் இக்கவிதைகளில் பழக்கத்தின் தேய்மானங்கள் படிந்துள்ளன. மிகையுணர்ச்சிகள் தென்படுகின்றன. எனினும் அவருடைய அடிப்படை அக்கறைகள் கூர்மையோடு வெளிப்படும் பல கவிதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன.

இரவு காவலாளி, வாகன சாரதி, விதவை மனைவி, காதற் கொண்ட சிறுமி என வாழ்வின் வெவ்வேறு பக்கங்களைச் சேர்ந்த மனிதர்கள் மனுஷ்யபுத்திரனின் இக்கவிதைகளை நிறைத்திருக்கிறார்கள். ஆனால் வாழ்வின் அத்தனை நிறங்களோடும் அவர்கள் நடமாடுகிறார்கள் என்று சொல்ல முடியாது. நாம் அவர்களை ஒரு குறிப்பிட்ட தருணத்தில் – பெரும்பாலும் பாதுகாப்பற்றிருக்கையில் - மட்டுமே சந்திக்கிறோம். ரயில் நிலையத்தில் துயரமான ஓர் அன்னிய பெண்ணைச் சந்திப்பது போல். எப்படியோ அத்தருணத்தில் அவள் நமக்கு நெருக்கமாகி விடுகிறாள். ஏதோவோர் வகையில் நம் துயரத்தையும் அவள் மௌனமாக ஏற்றுக் கொள்கிறாள்.

மனுஷ்யபுத்திரனின் கவிதைகளைச் சார்ந்திருத்தலின் கவிதைகள் என்று குறிப்பிடலாம்.

"எனக்கு
வேண்டியதனைத்தையும்
நானே
ஒழுங்குபடுத்திக் கொள்கிறேன்
இந்த மாத்திரைகளை மட்டும்
யாராவது
எடுத்துத் தர வேண்டும்."
(சார்தல்)

ஒருவிதத்தில் மனித வாழ்க்கை என்பதே ஒருவரையொருவர் சார்ந்திருப்பது தான். சார்ந்திருத்தல் வரையறுக்க முடியாத விதிகளால் ஆனது. இரண்டு மனிதர்களுக்கிடையே ஒரு மாயக் கரம் எல்லைக் கோட்டை இல்லாமல் ஆக்குகிறது என்றால் இன்னொரு மாயக் கரம் திடீரென்று அங்கே ஓர் இரும்புச் சுவரை எழுப்பிவிடுகிறது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்காக என்னென்ன செய்ய முடியும் என்பதும், ஒரு மனிதன் இன்னொரு மனிதனை என்னென்ன செய்ய முடியும் என்பதும் தீர்வற்ற புதிர்களே. தியாகமும் துரோகமும் தம் நியாயத்தை அங்கிருந்தே பெற்றுக் கொள்கின்றன. அந்த மர்மத்தை புரிந்துகொள்ள முடியாதவையாகவும், திகைப்புடன் எதிர்கொள்பவையாகவும், அதன் பொருட்டின்மையை நோக்கி முறையிடுபவையாகவும் இக்கவிதைகள் உள்ளன.

“ஒரு அன்னிய இடத்தை
பயன்படுத்தும்போது
எல்லாவற்றையும்
நேர்த்தியாகக் கையாள்கிறோம்

எந்தச் சந்தேகமும் வராதபடி
எல்லாவற்றையும்
அதனதன் இடத்தில்
மறுபடி வைக்கிறோம்

ஒரு
ஈரத் துண்டை
என்ன செய்வதென்று மட்டும்
ஓரு போதும் தெரிவதில்லை”
(தடயம்)

இரண்டு மனிதர்கள் நடுவிலான இடைவெளியை ஒலி பெருக்கிகள் அறிவுறுத்தும் நாட்களில், ஒரு மனிதர் இன்னொரு மனிதரை தொடுவதன் அபாயங்களை விளம்பரச் செய்திகள் தெரிவிக்கும் நிலையில், தொடுதல் சார்ந்த, நெருக்கம் சார்ந்த மனிதர்களின் ஆதார ஏக்கத்தை இக்கவிதைகள் மறதிக்குள் விழுந்துவிடாமல் பார்த்துக் கொள்கின்றன. மனிதர்களின் அணுக்கமான புழக்கத்தை, ஒருவர்மீது ஒட்டிக் கொண்டிருக்கும் மற்றவரின் சாயல்களை நேரடியாக முன்வைப்பதன் மூலம் சார்ந்திருத்தலை –அதன் அத்தனை வன்முறையோடும்- அங்கீகரித்து அவற்றை அர்த்தப் பரப்புக்குள் கொண்டு வருகின்றன.

நவீன மனிதன் என்பவன் தனி மனிதன்; ஆனால் தனித்திருக்கும் ஆற்றல் இல்லாதவன் என்பது சென்ற நூறாண்டுகளின் முதன்மை அறிதல்களில் ஒன்று. மனித வாழ்க்கையின், உறவுகளின் உள்ளார்ந்த துயரை தன்னுள் பொதித்து வைத்திருக்கும் மனுஷ்யபுத்திரனின் கவிதை உலகு, தனிமைக்கு எதிரான பிரார்த்தனையால் ஆனதாக உள்ளது. தேவாலயத்தில் ஏற்றி வைக்கப்படும் மெழுகுவர்த்தி எல்லா மனிதர்களுக்குமான வெளிச்சமாவது போல் இப்பிரார்த்தனையும் எல்லோருக்குமானதாக மாறிவிடுகிறது.

“கார்த்திகை நாளில்
சின்னஞ் சிறுமகள்
ஓவ்வொரு அகல் விளக்காகத்
துடைத்து வைக்கிறாள்

என் இறந்த காலத்திற்கு
இனி நான் ஒருபோதும்
திரும்ப மாட்டேன்”
(அகல்)
O

நோபல் பரிசு பெற்ற ஸ்விடீஷ் மொழி கவிஞரான டோமஸ் டிரான்ஸ்ட்ரோமரின் படைப்புகள் இதன் எதிர்முனையில் குடில் கொண்டிருக்கின்றன. தனிமையைத் தியானிப்பவை, அவர் கவிதைகள். மனித உறவுகளிலிருந்து மட்டுமில்லை; மரங்களின், பறவைகளின், நீரில் மறையும் ஆமைகளின் இருப்பில் இருந்தும் அவை அர்த்தத்தை வரைந்தெடுத்துக் கொள்கின்றன. “நாம்/ பூமிக்குரியவர்கள்” என்பதே அவற்றின் சாரமாக இருக்கிறது. எனவே பூமியின் வயதில் புதைந்துள்ள ஞானத்தை அவை வெளிப்படுத்துகின்றன.

“முற்றுப்பெறாத சொர்க்கம்” கவிதை நூல் பற்றிய தன் கட்டுரையில் அமெரிக்க விமர்சகர் தெஜு கோல் “டோமஸ் டிரான்ஸ்ட்ரோமரை வாசிப்பதற்கான சிறந்த நேரம் என்பது இரவில், அமைதியில், தனிமையில் இருக்கிறது” என்று எழுதுகிறார். “இருளில் மட்டுமே வாசிக்க முடிகிற புத்தகம்” என்றே டிரான்ஸ்ட்ரோமரின் கவிதையொன்று முடிகிறது. ஆனால் நகரங்களும், தேசங்களும் தம் எல்லைகளை அச்சத்தில் மூடும்போதும் தனிமை என்பது இரவுக்குரியதாக மட்டும் இருப்பதில்லை. இப்போது நாளின் எந்தப் பொழுதிலும் டிரான்ஸ்ட்ரோமரின் கவிதைகளைப் படிக்கலாம். இன்றைய மனநிலைக்கு அவர் அவ்வளவு பொருத்தமானவராக இருக்கிறார்.

“நீல வெளிச்சம்
என் ஆடைகளில் இருந்து பாய்ந்து வெளியேறுகிறது.
குளிர்காலத்தின் நடுப்பகுதி.
பனிக்கட்டியாலான சிறுமேளமொன்று அதிர்ந்து கொண்டிருக்கிறது.
நான் என் கண்களை மூடுகிறேன்.
எங்கேயோ அமைதியான ஓர் உலகம் இருக்கிறது
ஓரு திறந்த வெளியும் இருக்கிறது
அங்கே மரித்தவர்கள்
எல்லையைத் தாண்டி கடத்திச் செல்லப்படுகிறார்கள்.”
(குளிர்காலத்தின் நடுப்பகுதி)

நாம் வீடுகளுக்குப் பதுங்கியிருக்கையில் உலகின் அளவு இன்னும் பெரிதாகிறது. கோவிட்-19 பரவலை ஒட்டி, மார்ச் 22ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு முதல்முறை அமுலில் வந்தபோது, நகரங்களில் நெடுநாள் கழித்துப் பறவைகளின் சத்தத்தை நீண்ட நேரம் கேட்க முடிந்தது. அதைப் பலரும் ஊடகங்களில் வியந்து பகிர்ந்தார்கள். தொடர்ந்து வந்த நாட்களில் சாலைகள் ஓய்வுக்குத் திரும்பின. நம் அமைதி பிற ஒலிகளை, நம் பங்கேற்பில்லாத வேறு உரையாடல்களைத் துல்லியப்படுத்தியது. மிருகங்கள் நகர் நுழைந்தன. உரிமைக்கோரல் ரத்தானதும், நாம் இன்னொரு பிரம்மாண்ட அமைப்பின் பகுதியாக இருக்க -சற்றைக்கென்றாலும்- அனுமதிக்கப்பட்டோம். அதாவது டோமஸ் டிரான்ஸ்ட்ரோமரின் பிரபஞ்சத்தினுள். அங்கேதான் “செடிகள் சிந்திக்கின்றன”. “மரம் மழையில் நடந்து செல்கிறது”.

அமெரிக்க நாவலாசிரியை மெர்லின் ராபின்சன் சிறுவயதில் காட்டுக்குள் சென்ற அனுபவம் பற்றி எழுதும்போது “அங்கே தவறாக இருந்த ஒரேயொரு விஷயம் என்னுடைய இருப்பு மட்டுமே” என்று குறிப்பிடுகிறார். “புனிதமான அந்த இடத்தில் நான் ஏற்றுக்கொள்ளப்பட்டது என் தனிமையினாலேயே”. மூன்று தினங்கள் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்து பிரதான சாலையை எட்டியபோது பெரிய காலி இடத்திற்குள் நுழைந்துவிட்ட திடுக்கிடல் உண்டானது. மனிதர்கள் இல்லாத எந்த வெளியிலும் காடுகளின் குணம் சேர்ந்துவிடுகிறது. அதே தூய்மை. அதே பயங்கரம். அண்ணாந்து பார்த்தேன். மேம்பாலம் வழக்கத்தைக் காட்டிலும் உயரமாக இருந்தது. மிகத் தூரத்தில் யாரோ ஓரிருவர் நடந்து சென்றார்கள். சட்டென்று ஒரு பைக் சாலையில் வந்தபோது அந்தச் சத்தத்தைத் தாங்க முடியவில்லை. மெர்லின் ராபின்சன் சொல்வது போல் என் தனிமை மட்டும் என்னுடன் இல்லாவிட்டால், நான் அங்கே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க மாட்டேன். உயிர் உறைந்து அவ்விடத்தின் ஓர் உறுப்பாக மாறியிருக்கக்கூடும். மின்கம்பம் போல். மூடியிருக்கும் அங்காடிகள் போல். தன்னிச்சையாக என் நடையில் பொறுமை கூடியது. வானே ஒரு பெரிய விழியாக மாறியிருப்பதாக உணர்ந்தேன்.

தெருவின் பிரம்மாண்ட வாழ்க்கை என்னைச் சுற்றிச் சுழல்கிறது;
அதற்கு எதுவும் நினைவில் இல்லை அது எதற்கும் ஆசைப்படவில்லை.
நெரிசலுக்கு மிக அடியில், பூமியின் ஆழத்தில்
இன்னும் பிறக்காத காடுகள் காத்திருக்கின்றன ஆயிரம் ஆண்டுகளாக.

அந்தத் தெருவால் என்னைப் பார்க்க முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது.
அதன் பார்வை மிகவும் மங்கிவிட்டது. சூரியனேக்கூட
நூலாலான சாம்பல் பந்து போலிருக்கிறது, அக்கருப்பு வெளியில்.
ஆனால் ஒரு நொடி, நான் எரிந்து ஒளிர்கிறேன். தெரு என்னைப் பார்க்கிறது.
(தெருவை கடத்தல்)

டோமஸ் டிரான்ஸ்ட்ரோமரின் கவிதைகள் புலனறிவுக்குப் புலப்படாத நம்பிக்கைகளையும் வியப்புகளையும் உயிர் தரித்திருப்பதன் தாளா கனத்தையும் ஆற்றல் மிக்கப் படிமங்களால் வெளிப்படுத்துகின்றன. தனிமனிதனின் சிக்கல்கள் அவர் கவிதைகளில் இல்லை. காதல் செய்வதுக்கூடப் பிரபஞ்ச நிகழ்வாகவே சுட்டப்படுகிறது. அங்கு இருப்பது நதிகளின், பாறைகளின் காலாதீதத்தன்மையே. நம்முடைய இன்று - சுமக்க முடியாத எடைகளால் அழுத்தப்பட்டிருக்கிறது. சாலைகளில் நிற்கிறார்கள் வீடற்றவர்கள். நம் இன்றில் அதன் அநாதத்தன்மை கூடியிருக்கிறது. தீர்க்க முடியாத தேவைகள் இன்றில் நிறைந்திருக்கின்றன. கூரையில் இருந்து உணவு வரை. முகக்கவசங்களில் இருந்து சுவாச இயந்திரங்கள் வரை. இன்றில் நின்றபடி அதைப் பார்க்கும்போது மூச்சு முட்டுவதை தவிர்க்க இயலாது. எல்லைக்குட்பட்டது மனித பிரக்ஞை. அது காலத்திலும் இடத்திலும் நிற்கவேண்டும். ஆனால் கவிதையின் பிரக்ஞையோ வாழ்க்கைக்கு முந்தையது. இசைப் போல். அதன் சொற்கள் ஒலிக்கின்றன,

“[என்] பணி : எந்த இடத்தில் இருக்கிறேனோ அங்கேயே இருப்பது
கம்பீரமும் அபத்தமும் மிக்க இந்த
பாத்திரத்தை ஏற்றியிருக்கையிலும் : நான் என்பது இன்னமும் அந்த இடம்தான்
படைப்புத் தன்னில் தன்னை நிகழ்த்திக் கொள்ளும் இடம்”
(காவல் பணி)
O
மனிதனாக இருப்பது இரட்டை நிலைகளில் இருப்பது என்றே கருதுகிறேன். தனக்கு வெளியே உள்ள ஒரு மகத்தான நினைவு நுழைந்து வெளியேறுவதற்கான சிறு ஊடகமாக இருப்பது. கூடவே, தன்னுள் இருக்கும் விழைவுக்கும் ஒப்புக் கொடுப்பது. முதல் நிலை தனிமையில் விழித்திருக்கிறது. ஏதுமில்லாத மௌனத்திற்குத் திரும்புகிறது. இன்னொன்று பசி வேட்கையில் திளைக்கிறது. இரைச்சலிடுகிறது. நெருக்கத்திற்கு ஏங்கித் துடிக்கிறது. உலகின் வேகத்திலும், பொது இணைப்பிலும் தற்போது விழுந்திருக்கும் இடைவேளை, இவ்விரண்டு நிலைகளையும் அணுக்கத்தில் எதிர்கொள்ள வைத்திருக்கிறது எனலாம். எளிய செயல் அல்ல அது. முக்கியமாக நம் பாதுகாப்பு அரண்கள் வலுவிழந்திருக்கும் சமயத்தில் அவற்றின் அரக்கத் தோற்றம் அச்சுறுத்தலாகவே மாறும். அதன் மூர்க்கத்தில் அமிழ்ந்துவிடாமல் இருக்க நாம் கவிதையையே நாட வேண்டியிருக்கிறது. ஏனெனில் கவிதை எப்போதும் எந்தத் தற்காப்பும் இல்லாமலேயே உணர்ச்சிகளை எதிர்கொள்கிறது. மேலும், கவிதையின் மயக்கம் என்பதே அனுபவத்தின் இரட்டை நிலைதான். “மொழி வெளிப்பாடு அடையும் இரட்டை நிலையை அதிகபட்சமாகக் கவிதை[யே] உணர்கிறது” என்கிறார் ஷங்கர்ராமசுப்ரமணியன்.
© Manikandan A V/ Flying Fish

நமக்குத் தெரியும் – வெற்றிடத்தில் எல்லாப் பொருட்களும் எடையிழந்துவிடும் என்பது. அனைத்தும் ஒரே வேகத்தில்தான் தரையிறங்கும் என்பது. கவிதை அத்தகையை வெற்றிடங்களால் ஆன நிலத்தையே உருவாக்குகிறது. டோமஸ் டிரான்ஸ்ட்ரோமரின் சொற்களில் சொல்ல வேண்டும் என்றால் அங்குப் பாறைகள் பனித்துளியைவிடவும் எடைமிக்கவை அல்ல. நம் முன்னால் கடும்பாறைகள் இருக்கும் நேரத்தில் இதை மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

O
"இன்னும் நிகழாதவை இங்கு ஏற்கனவே வந்துவிட்டன!"

(டோமஸ் டிரான்ஸ்டிரோமரின் "காவல் பணி" கவிதையில் இருந்து)

O


No comments:

Post a Comment