அசுவாரஸ்யமாக போய்க் கொண்டிருந்த பேட்டியில் அப்படியொரு திருப்பம் வரும் என்று யாருமே கற்பனை செய்திருக்க மாட்டார்கள். யோவான் திடீரென்று இருக்கையை விட்டு எழுந்து உருக்கமான பிரசங்கம் போல் தன்போக்கில் பேசத் தொடங்கிவிட்டான். இம்மான் தொகுப்பாளரையும் இயக்குனரையும் பார்த்தான். அவர்கள் முகம் பீதியோடிருந்தது. தன் முகமும் அப்படிதான் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான். காமிரா எல்லாவற்றையும் பதிவு செய்துக் கொண்டிருந்தது.
தொகுப்பாளர் கடைசியாய் கேட்ட கேள்வி. “உங்களுக்கு மாய பென்சில் கிடைத்தால் என்ன வரைவீர்கள்?”.
யோவான் அதற்குள் தன்னை இழந்திருந்தான். அவனே அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவனுள் ஏற்கனவே தேங்கியிருந்த ஏமாற்றம், இப்போது வெளியே எல்லா இடங்களிலும் பதியலாகிற்று. தொகுப்பாளருடைய போலியான இனிமை எரிச்சல் மூட்டியது. அவனுக்கு எல்லாமே மலினமானவையாக தோன்றின. அரங்கின் பிரகாசமான வெளிச்சம். பச்சை விரிப்பு. ஏசி குளிர். அங்கு உலவிய நறுமணம். எதுவுமே இயல்பானதாக இல்லை. அறை வாசனை பாஸ்டர் டேனியலை ஞாபகப்படுத்தியது. பாஸ்டரின் இறுகிய சொற்கள். தண்டனை. அப்பா. சிகரெட் புகை. இருள். உடல். செம்புள்ளிகள் மினுங்கும் மென்சருமம். பிளவுண்ட காயம். இரத்தம். சிவப்பு நிறம். மது. அருள் ஜோசப். இரத்த வாடை. பிசாசு. அற்புதம். மாலா. தழும்பு.நெருப்பு. தண்ணீர். ஞானஸ்நானம். குழந்தை. பேதமை. இழப்பு. செல்வன். தேவாலயம். ஜெபமாலை. அம்மா. சிலுவை. இரத்தம். தச்சன்மகனின் துயர் மிகுந்த அழைப்பு. எலோயி. அவன் மனம் ஒரு முடிவடையாத வலிச் சுழலில் சிக்குண்டது. நேற்றிரவு வீடு திரும்பியபோதே அவனால் பைபிள் வாசிக்கவோ அல்லது ஜெபம் மேற்கொள்ளவோ இயலவில்லை. இயலாமையையும் ஏக்கத்தையும் குடித்தபடி அவனுள்ளே என்னவோ வளர்ந்துக் கொண்டிருந்தது. அது இப்போது வெளிப்பட்டது.
“உங்களுக்கு மாய பென்சில் கிடைத்தால் என்ன வரைவீர்கள்?”
இம்மானை நோக்கி கேட்கப்பட்ட கேள்வி. ஆனால் யோவான் குறுக்கிட்டு அழுத்தமாக “சிலுவை. சிலுவைதான் வரைய வேண்டும். சிலுவை சுமக்கும் சீஷர்களுக்கே கிறிஸ்து அழைப்பு விடுத்தார்” என்றான்.
இம்மான் அதிர்ச்சியில் செயலிழக்க, யோவான் எழுந்து நின்று ஆவேசமாக பேசத் தொடங்கினான். காலர் மைக் உரசி அவ்வப்போது இரைச்சல் எழுந்தது. அவன் பேசுவதை முழுமையாக உள்வாங்க முடியவில்லை. பழி கூறுவது போலவும் எச்சரிக்கை செய்வது போலவும் இருந்தது. அதே நேரம் பிரார்த்தனைப் போலவும் மன்னிப்புக் கோரல் போலவும் ஒலித்தது. திரும்ப திரும்ப “உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோம்” என்றான். தொகுப்பாளரிடமும் இயக்குனரிடமும் பழைய பீதி அகன்று ஒருவித குறுகுறுப்பு மேலிட்டிருந்தது. அவர்கள் யோவானை கட்டுபடுத்த முயற்சிக்கவில்லை. காமிரா மேன் லென்ஸை மாற்றி
தொடர்ந்து பதிவெடுத்துக் கொண்டிருந்தார். இம்மான் யோவானை சமாதானம் செய்ய நினைத்து அவனைத் தொட்டு உட்கார வைக்க முயன்றான். ஆனால் யோவான் அவன் கையைத் தட்டிவிட்டு தன் பேச்சை தொடர்ந்தான். சரீரத்துக்கு வெளிச்சமாயிருக்க வேண்டிய நம் கண்கள் இச்சை படிந்து இருளேறிவிட்டன; நம் நாவுகள் நீதிகேட்டையே வசனிக்கின்றன. நம் தகப்பனின் கரங்களில் ஜீவனை ஒப்புக் கொடுக்க வேண்டும் என்று கட்டளை போல் சொன்னான்.
இம்மானுக்கு அச்சமாகவும் குழப்பமாகவும் இருந்தது. என்ன ஆயிற்று யோவானுக்கு? யோவான் போதகராகும் முயற்சியில் இருப்பதை அவன் அறிந்திருந்தான். ஒருவேளை அந்த விருப்பமே பாதிப்பாகிவிட்டதா? முதலில் அந்த விருப்பமே அனாவசியமானது ; முன்யோசனையில்லாதது என்று அவனுக்கு பட்டது. சட்டென்று ஒரு மிரட்சி. போதகராகும் யோவானின் விருப்பத்தையும் முயற்சியையும் இம்மானிடம் யாருமே குறிப்பிட்டவில்லை. பெங்களூரில் இருக்கும்போது அவன் தன் அம்மாவிடம் பேசுவதேக் கிடையாது. எனில் தனக்கு எப்படி அவை தெரிய வந்தன என திடுக்கிட்டான். அவன் தன் சகோதரனை பார்த்தான். அவர்கள் மத்தியிலேயே அவன் இல்லை. அதன் பிறகு கண் பிரியாமல் அவன் ஒவ்வொரு அசைவையும் கவனித்தான் இம்மான்.
யோவானின் குரல் உயர்ந்து கொண்டே போயிற்று. இரண்டு கைகளும் அகல விரிந்திருந்தன. மேகத்தின்மேல் மனிதக் குமாரன் வருகிறார்; மின்னல்வெட்டுப் போல் பிரம்மாண்டமான வெளிச்சத்தோடு தோன்றவிருக்கிறார். யோவான் நடுங்கியபடி சொன்னான். தன் சொற்களைக் கேட்டு அவனே அஞ்சியதுப் போலிருந்தது. அந்த அச்சம் இம்மானையும் தொற்றியது. சில நொடிகள் அங்கு பாரமான மௌனம் நீடித்தது. தொகுப்பாளர் துணிச்சல் பெற்று மெல்ல குரலெடுத்தார். ஆனால் அவரை இடைவெட்டி யோவானே மீண்டும் பேசத் தொடங்கினான். அவன் தாடைப் பகுதி அதிர்ந்துக் கொண்டிருந்தது. நெற்றியில் வியர்வை துளிர்த்தது. தாங்கவொண்ணா குரூரத்தை அல்லது மேன்மையை கண்டது மாதிரி அவன் பதபதைத்தான். பிறகு சொன்னான், நாம் கிறிஸ்துவின் முன்னால் மண்டியிட வேண்டும். குருதி வடியும் அவர் பாதங்களில் முகம் புதைக்க தயாராக இருக்கவேண்டும். பரிசேயர் ஊரைச் சேர்ந்த பாவியாகிய ஸ்தீரியைப் போல் நாமும் நம் கண்ணீரால் அவர் பாதங்களை கழுவ வேண்டும். ஆறா காயத்தில் முத்தமிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும். வழி மாறிய ஆட்டுக்குடியை அள்ளியெடுப்பதுப் போல் அவர் நம்மை ஏற்றுக் கொள்வார். ஏனெனில் அவர் நல்லவர்.
குரல் இடறி வார்த்தைகள் உடைந்தன. கண்ணீரை துடைக்கக்கூடச் செய்யாமல் அவன் மைக்கை கழற்றி மேஜையில் வைத்துவிட்டு வேகமாக வெளியேற, இம்மான் அவனை பின்தொடர்ந்தான்.
***
“FORMER
CHILD ACTOR BREAKS DOWN IN A TALK SHOW”. காணொளியை முழுமையாக காண இங்கே சொடுக்கவும். #MagicPencil
மறுநாள் மதியம், இம்மான் இக்குறிப்பை இணையத்தில் பார்த்தான். காலையிலேயே பதிவேற்றம் நடந்திருக்க வேண்டும். சிறுவயது புகைப்படமொன்றை காணொளியின் முகப்பில் சேர்த்திருந்தார்கள். வலதுபுறம், கண் கலங்க நின்றிருக்கும் யோவான். இடது பக்கத்தில் மாய பென்சிலில் எதையோ வரைந்தபடி இருக்கும் சிறுவன். அது இம்மானின்
புகைப்படம். திரைத் தேர்வின்போது இயக்குநர் எடுத்தது. சேனல்காரர்கள் அதை யோவான் என்று நினைத்து அதில் இணைத்திருக்க
வேண்டும். இரண்டு படங்களையும் சேர்த்து பார்க்கையில் நிஜமாகவே பரிதாபமாக இருந்தது. அப்பாவியான சிறுவன் வளர்ந்து தோற்றுப் போன இளைஞனாக மாறியது போல்.
பேட்டியின் இறுதியில் யோவான் உணர்ச்சிகரமாக பேசியது யுடியூப் சேனல்காரர்களுக்கு லாபகரமாக மாறியிருந்தது. சுரத்தில்லாததாக அவர்கள் எண்ணிய பேட்டி, பார்வையாளர்களுக்கு கிளர்ச்சியூட்டும் உள்ளடக்கத்தோடு அமைந்துவிட்டது. காணொளி வைரலாக சுற்றியது. பழைய நண்பர்கள் இம்மானுக்கே சுட்டியனுப்பி நலம் விசாரித்தார்கள். இம்மானால் அதை முழுமையாக பார்க்க முடியவில்லை. பின்னனியில்
வயலின் சோகமாக இரைந்துக் கொண்டிருந்தது. அந்த வயலின் யோவானுடயை குரலை அவனுடையதல்லாததாக
மாற்றியது. பேட்டியின் நடுவே யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் யோவான் வேகமாக எழுந்து நின்றபோது காமிரா அவனை படம் பிடிக்க தடுமாறியது. முழு காணொளியிலும் அந்த ஓர் அசைவு மட்டுமே இம்மானுக்கு மெய்யானதாக பட்டது. இக்காணொளியை அம்மாவோ அப்பாவோ பார்க்காமல் இருக்க வேண்டும் என இம்மான் எண்ணிக் கொண்டான். குறைந்தபட்சம் இன்று மாலை அவன் வீட்டை விட்டு கிளம்பும்வரையிலாவது.
இம்மான்
இன்ஸ்டாகிராமை திறந்தான். நிரஞ்சனா இரண்டு பதிவுகள் இட்டிருந்தாள். முதலாவது மாயபென்சிலோடு அவளிருக்கும் பழைய புகைப்படம். பாவாடையும் டீஷர்ட்டும் அணிந்திருக்கும் சிறுமி. நிலைத்தகவலில் சாரையாக ஹேஷ்டேகுகள்.
#BabyNithya #Throwback #Childhood #ActingIsPassion #90sKid. இரண்டாவது பதிவு அந்த யுடியூப் பேட்டிக்கான இணைப்பு. “கடந்தகால நினைவுகள் பொங்குகின்றன. என் வாழ்க்கையை மாற்றியமைத்த நாடகம். அந்த அனுபவத்தை மறக்கவே முடியாது. பல வருடங்களுக்கு பிறகு பழைய நண்பர்களை பார்ப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம் இப்படி சமநிலையிழந்த நிலையில் பார்ப்பது வருத்தமாகவும் உள்ளது. சகோதரர்களை தொடர்பு கொண்டு பேசினேன். எல்லாம் சரியாகிவிட்டது என்றே சொன்னார்கள். யோவான்! என் பழைய நண்பனே! உனக்கு மன அமைதி வாய்க்கட்டும்
#MagicPencil #PeaceForMind #MentalHealth #TakeCareOldFriend #DepressionIsReal
#SayNoToSocialTaboos”. அதற்கு கீழே அவளுடயை புகைப்படம் இருந்தது. யோகா உடை அணிந்து எங்கோ புல் தரையில் கண்மூடி அமர்ந்திருந்தாள். புகைப்படத்தில் அவள் தோல் சுருக்கங்கள் தடமின்றி மறைந்திருந்தன.
நிரஞ்சனாமீது இம்மானுக்கு எல்லையில்லாத கோபம் வந்தது. தங்களிடம் தொலைபேசியில் பேசியதாக பொய் சொன்னதுக்கூட அவனை பாதிக்கவில்லை. ஆனால், போகிறபோக்கில் யோவானை ஏதோ மன நோயாளிப் போல் உருவகித்தது அவனுக்கு தொந்தரவாக இருந்தது. ஆனால் அப்பேட்டியை பார்க்கும் எவருக்கும் அந்த எண்ணம்தான் வரும். நிரஞ்சனாவின் பதிவுக்கு வந்திருந்த பின்னூட்டங்களும் அவள் கருத்தை ஒத்தவையாகவே இருந்தன. யாரோ ஒருவர் எழுதியிருந்தார். “எங்கள் குழந்தை பருவத்தை அழகாக்கியவர்களில் ஒருவர். மத மூடத்தனம் அவரை இப்படி ஆக்கியிருப்பது சோகம்”. பதற்றமின்றி அதை இம்மானால் படிக்க முடியவில்லை. நிச்சயமாக யோவானின் செயல் இயல்பானதல்ல. ஆனால் அது அர்த்தமற்ற உளறலோ அல்லது உளத்திரிபோ கிடையாது. அவ்வளவு தூரம் சொற்களுக்கு உண்மையான வேறொரு குரலை இம்மான் வாழ்க்கையிலேயே கேட்டதில்லை. ஆனால் காமிராவின்
அண்மைக் காட்சியும் பின்னனி வயலினும் அந்த உண்மையை ரத்து செய்திருந்தன. நேரில்
பார்க்காத யாரிடமும் அந்த அசலான உணர்ச்சிகரத்தை விளக்கிவிட முடியாது என அவன் நினைத்தான். இப்போதும் யோவான் தன் பக்கத்திலேயே நின்று பேசிக் கொண்டிருப்பதான பிரமை எழுந்தது. “அக்னியால் ஞானஸ்நானம் கொடுக்ககூடிய தேவன் அவர்”. காரணமின்றி அவனில் ஒருவித பயம் பெருகியது. தன்னை உலுக்கி அதை உதறினான். யோவானின் குரல் தொடர்ந்து ஒலித்தது. “ஏனெனில் அவர் நல்லவர்“. இதை சொல்லும்போது யோவானில் வெளிப்பட்ட துயரை மீண்டும் இம்மான் நெருக்கத்தில் கண்டான். எங்கிருந்து வருகிறது அத்துயர்? சுயத்தின் நெருக்குதல் இல்லாத, நிமிர்வு புலப்படும் துயர். எந்த மனிதனாலும் ஆற்றுப்படுத்த முடியாததுப் போன்ற கண்ணீர். மேற்கொண்டு யோசிக்க முடியாதபடிக்கு அவனில் அழுத்தமான சோர்வு கூடியது. நிரஞ்சனாவுக்கு
அனுப்பும்பொருட்டு கடுமையான வார்த்தைகளில் ஒரு குறுஞ்செய்தியை தட்டச்சு செய்து பின்
அழித்தான்.
இம்மானுக்கு
யோவானை பார்க்க வேண்டும் என்று ஆசை எழுந்தது. ஆனால் அவன் அறைக்குள் இருந்தான். உள்ளே போய் சந்திக்க மனம் வரவில்லை. தனியே பைபிள் வாசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. அல்லது உறங்கிக் கொண்டிருக்கவேண்டும். அவனிடம் நூறு ஆண்டுகளுக்கு தீராத களைப்பு இருந்தது. அப்பா வீட்டின் பின்புறம் தோட்டத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அவன் எட்டி பார்த்துவிட்டு விலகினான். பனியனும் லுங்கியும் அணிந்து அப்பா புற்களை பிடுங்கி ஓரத்தில் வைத்துக் கொண்டிருந்தார். ஞாபகத்தில் திரட்டக்கூடிய காலம் முதலாக அப்பா தோட்டத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். கறிவேப்பிலை, செம்பருத்தி, மணத்தக்காளி என ஒவ்வொன்றையும் அவரே கைப்பட பரமாரித்து வளர்த்தார். அவர் மகன்களுக்கு அது கைவரவே இல்லை. வேலைக்கார பெண்மணி சமையற்கட்டில் பாத்திரங்கள் அடுக்கிவிட்டு புறப்பட, இம்மான் தன் அம்மாவைத் தேடினான். அம்மா காய்ந்த துணிகளை எடுக்க மாடிக்கு சென்றிருந்தார். வாசல் திரைச்சீலை அசைவின்றி கனத்திருக்க, மதிய வெயில், கூடத்தில் ஜன்னல் கோடுகளை பதித்திருந்தது. இம்மான் அங்கு தனியே நின்றிருந்தான். நெடுங்காலத்துக்கு பிறகு அப்பா, அம்மா, யோவான் எல்லோரும் ஒரே நேரத்தில் வீட்டில் இருப்பதாகவும் அவர்களுக்கு மையத்தில் தான் நிற்பதாகவும் அவனுக்கு பட்டது. எல்லோருக்கும் சமதூரத்தில் இருப்பதாக ஒரு விசித்திர எண்ணம் வந்தது. உடனே எல்லோரையும் நெருங்க வேண்டும் எனும் ஆவலும் வந்தது. நெஞ்சத்தில் மிகத் தனியனாக உணரலானான்.
இம்மான்
கூடத்தை சுற்றி பார்த்தான். எதுவுமே மாறியிருக்கவில்லை. வீடு இன்னும் அன்னியமாகாமல் இருப்பது முதல் தடவையாக ஆறுதல் அளித்தது. பழைய தொலைக்காட்சி. மர நாற்காலி. சீரியல் விளக்குகள் மாட்டிய இயேசுவின் படம். இரட்டையர்களின்
சிறுவயது புகைப்படம்
- ஒரேவிதமான ஆடை உடுத்தி தோளில் கைப்போட்டு நிற்பது. எல்லாமே அப்படியே இருந்தன. முன்பு கண்ணாடித் தடுப்பில் அலங்காரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாயபென்சில்கள் மட்டும் இப்போதில்லை. யோவானை அப்பா கை நீட்டி அடித்த மறுதினமே அம்மா அவற்றை கோபத்துடன் தூக்கி தூர எறிந்துவிட்டாள். ஆனால் படப்பிடிப்பு சமயத்தில் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து கணக்கற்ற எண்ணிக்கையில்
மாயப் பென்சில்கள் அன்பளிப்பாக கிடைத்திருந்தன. அவை வீடு முழுக்க சிதறியிருந்தன. பீரோவுக்கு அடியே, மேஜை இழுப்பறையில், சுவர் மூலையில் என மாயப் பென்சில் எங்கிருந்தாவது முளைத்து வந்து அம்மாவின் நரம்புகளில் தொற்றியபடி இருந்தது. ஆண்டுகள் ஓடியப் பிறகும், இன்றைக்கும் அம்மா அதை வீட்டில் துணுக்குறலோடு எதிர்கொண்டபடியே தான் உள்ளார்.
தன் பள்ளித் தோழிக்கு அப்பென்சில்களில் ஒன்றைத்தான் இம்மான் பரிசாக கொடுத்திருந்தான். தொடர்பிழந்த அவளுடைய ஞாபகம் மனதில் ஓடியது. தொடர்பிழந்து போன ஒவ்வொருவரின் ஞாபகமும் மேலெழுந்து வரலாகிற்று. அவன் இதயத்தின் ஒவ்வொரு அறையிலும் வெளிச்சம் புகுந்தது. ஒவ்வொரு அறையிலும் அவன் தனியாக நின்றுக் கொண்டிருந்தான். கடைசியில் அவனுக்கு ரூத்துடைய நினைவு வந்தது. உடனடியாக செல்பேசியை எடுத்து அவள் வாட்சப் பக்கத்துக்கு போனான். முகப்பில் அவள் படம் இல்லை. கருப்புத் திரையின் நடுவே “இயேசு உங்களை நேசிக்கிறார்” எனும் துணை வாக்கியத்தோடு தங்க நிறத்தில் சிலுவை இருந்தது. அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பத் தோன்றிய உறுத்தலை கட்டுபடுத்தி அவன் செல்பேசியை பையில் வைத்தான்.
மெர்சி மாடிக்குப் போய் நைலான் கொடியிலிருந்து ஒவ்வொரு துணியாக எடுத்து பிளாஸ்டிக் கூடையில் போட்டுக் கொண்டிருந்தார். வெயில் பட்டு முறுகிய துணிகளை கையில் பிடிப்பது தணிவாக இருந்தது. தன் மகன்கள் இருவரும் கீழே வீட்டில் இருப்பதை நினைக்கும்போது ஒருவித நிறைவு ஏற்பட்டது. உடனே அதுவே குறைவுபட்டதாய் மாறி பழைய ஏக்கம் நெஞ்சில் கூடியது. இன்பம் அறியாத அன்பின் விளைவு. பிணியுற்றது போல் அவர் பொலிவிழந்து ஒடுங்கியிருந்தார். யோவான், இம்மான் – இருவரின் சட்டைகளையும் கொடியில் பார்க்கும்போது காரணமின்றி துக்கம் பெருகியது. சிறுவயதில் சகோதரர்களுக்கு ஒரே மாதிரியான ஆடை எடுப்பதையே பெற்றோர் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஈஸ்டர், கிறிஸ்துமஸ்,
வருடப்பிறப்பு என்றால் மெர்சியின் பார்வை குளிர கண்ணாடி பிம்பம் மாதிரி சகோதரர்கள் இணை பிரியாது வீடு முழுக்க அலைவார்கள். கடைசியாக ஒரு தடவை பார்த்து தீர்ப்பதற்குள் பிள்ளைகள் அவசரமாக புத்தாடையை கழற்றிவிடுவதுப் போல் எல்லாமே நொடியில் கலைந்துவிட்டது. முதல் முறையாக துணிக் கடையில் வைத்து சகோதரர்கள் வெவ்வேறு ஆடைகளை தேர்வு செய்ய, மெர்சி உடனடியாக மறுப்பு தெரிவித்தார். “அதெல்லாம் இப்போ ஒன்னும் வேண்டாம். இன்னும் கொஞ்சம் வயசாகட்டும்”. ஆனால் மகன்கள் கேட்கவில்லை. அழுது ஆர்ப்பாட்டம் செய்தனர். “அவனுங்க கேக்குறதயே வாங்கு” .
கணவர் தலையிட்டு இருவேறு ஆடைகளை வாங்க வைத்தார். அன்றைய தினம் முழுக்க மெர்சி தன் மகன்களிடம் சிடுசிடுவென்று விழுந்தபடி இருந்தார்.
அதற்கடுத்து, அந்த தொலைக்காட்சி நாடகம் அவரில் பெரிய பாதிப்பை நிகழ்த்தியது. தன் குடும்பத்துக்கு நேர்ந்த சமாதானக் கேடாக அதை அவர் கருதினார். இப்போது அது பற்றி யோசித்தாலும் நெஞ்சில் தன்னை மீறிய வெறுப்பு பெருகும் அவருக்கு. நாடகம் ஒளிப்பரப்பான சமயத்தில் யோவானுக்கோ இம்மானுக்கோ உடல் நிலை சரியில்லாமல் போனால் உடனடியாக அவர் தொலைக்காட்சியை குற்றம் சொல்ல ஆரம்பித்துவிடுவார். “ஊர் கண்ணு பட்டு என் புள்ளங்க பாடுபடுது” என்பார். தன் மகன்களை ஒருவரிடமிருந்து ஒருவர் பிரித்ததிலும் தன்னை அவர்களிடமிருந்து பிரித்ததிலும் அந்நாடகத்துக்கு முக்கிய பங்கு இருப்பதாக அவர் நம்பினார்.
மேகம்
மூடி வெயில் மட்டுப்பட வானம் மென் நீலத்தில் தாழ இறங்கியது. மாடியிலிருந்து மெர்சி கூடையை தூக்கி பிடித்தவாறு படியிறங்கி வந்தார். சற்றைக்குள்
மூச்சிரைக்க, மாடி
திருப்பத்தில் நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். பாஸ்டரை இன்னொரு முறை போய் சந்திக்க வேண்டும் என்று ஓர் எண்ணம்
வந்தது. ஒருவேளை அவர் உதவி செய்ய முன்வராவிட்டால், தானே யோவானிடம் நேரடியாக பேசிவிட வேண்டியதுதான்.
அதை தனக்கே அறிவிப்பதுப் போல் தலையை ஆட்டினார். கூடையை மீண்டும் தூக்கிக் கொண்டு படிகளில்
நடக்கும்போது மெர்சி தன் வீட்டு முன்வாசலில் யாரோ ஒரு சிறுவன் நிற்பதை பார்த்தார். முதலில் அடையாளம் தெரியவில்லை. பிறகுதான் மாலாவின் மகன் என்பது தெரிந்தது. பெயர் சட்டென்று ஞாபகம் வரவில்லை. யாருக்கோ காத்திருப்பதுப் போல் அவன் வீட்டையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். “கதவு திறந்துதான் இருக்கு. உள்ள வாடா” என்று அவர் சொல்ல
முற்பட்டார். அதற்குள் அவன் குனிந்து ஒரு பெரிய ஜல்லிக் கல்லை எடுத்து ஆக்ரோஷத்துடன்
ஜன்னல் கண்ணாடியின் மீது எறிந்தான். அதே நேரத்தில் அவன் செயலை எதிர்பார்க்காத மெர்சியின்
குரலும் ஒலிக்க ஜபசெல்வன் வேகமெடுத்து ஓடலானான். மெர்சி அதிர்ச்சியில் உறைந்து தன் கையிலிருந்த கூடையை கீழே வைத்தார். அது படிக்கட்டில்
நிற்காமல் தடுமாறியது. “நில்லுடா” என்று அடிக்குரலில் கத்தி, அவர் வேகமாக முன்னால்
வர காலை புடவை தடுக்கிவிட்டது. கூடை முதலில் சரிய, துணிகளில் சிக்கியபடி, மெர்சியும்
படிகளில் உருண்டு விழுந்தார். “இயேசப்பா”.
இரத்தம்
அழுத்தம் குறைந்ததில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மெர்சி மயக்கத்திலேயே இருந்தார். காயம்
எதுவும் ஏற்படவில்லை. அதிக உயரத்தில் இருந்து விழாததாலும் துணிகள் சுற்றிக் கொண்டதாலும்
மெர்சி ஆபத்தின்றி தப்பித்திருந்தார். மருத்துவர் புறப்பட்டு போனதும், மெர்சியின் கணவர்
தோட்டத்துப் பக்கம் போய் வாசல் படிகளில் உட்கார்ந்து சிகரெட் பற்ற வைத்துக் கொண்டார்.
யோவான் படுக்கயறையில் தன் அம்மாவின் அருகிலேயே உட்கார்ந்துக் கொள்ள, இம்மான் வரவேற்பு
பகுதியில் நின்று உடைந்த கண்ணாடியையே பார்த்துக் கொண்டிருந்தான். என்ன நடந்தது என்றே
அவனால் யூகிக்க முடியவில்லை. கண்ணாடி நொறுங்கிய சத்தம் கேட்டு வெளியே வந்தபோது சாலை
அரவமின்றி வெறிச்சிட்டிருந்தது. “இயேசப்பா” எனும் அம்மாவின் அலறலைக் கேட்டு அவன் மாடிப்படி
பக்கம் விரைந்து சென்றான். மேகம் விலகி வானில் மீண்டும் வெளிச்சம் பரவியிருந்தது. வெயில்
படும்படி அம்மா தரையில் விழுந்து கிடந்தார். அவர் கைகள் வான் நோக்கி உயர்ந்திருந்தன.
இம்மான் அருகில் சென்று தூக்கும்போதே மெர்சி மயக்கத்திற்குள் இடறியிருந்தார். இம்மான் தன் சகோதரனை உதவிக்கு அழைத்தான்.
மெர்சியின்
பிரக்ஞையில் வெளி ஓசைகள் மங்கலாகிக் கொண்டிருந்தன. உருவெளியில் காட்சிகள் குழம்பின.
ஞானஸ்நானத்துக்கு நீட்டுவதுப் போல் தன் குழந்தையை வானின் வெளிச்சம் நோக்கி உயர்த்தி
பிடித்திருந்தார் மெர்சி. அவருக்குள் மீளமுடியாத திடுக்கிடல். கையில் ஒரு குழந்தைதான்
உள்ளது. இன்னொரு மகன் எங்கே என்று அவர் தேடித் துடிக்கிறார்; ஆங்காரத்துடன் ஓலமிடுகிறார்.
ஆனால் அவரால் அசைய முடியவில்லை; தொண்டைக்குள்ளேயே குரல் அடைபட்டிருக்கிறது. கையில்
இருக்கும் குழந்தையின் முகத்தை பார்க்கிறார். மாசற்ற வெண்மையில் கருமணிகள் ஆச்சர்யத்துடன்
சுழல்கின்றன. உதடுகள் திறந்திருக்க, அன்னையின் விரலை பிடிவாதத்துடன் பற்றிக் கொண்டிருக்கிறது குழந்தை. ஒருபோதும் விலகமாட்டேன்
என்பதுப் போல். உடனே மெர்சி அஞ்சி நடுங்குகிறார். அவருக்கு தெரியவில்லை, இக்குழந்தை
யோவானா அல்லது இம்மானா என்று. “கர்த்தரே” என்று குழந்தையை வான் நோக்கி நீட்டுகையில்
பிரக்ஞையின் கடைசித் துளியும் அணைந்தது.
கண்ணாடித்
துண்டங்களை பெருக்கி அள்ளி வெளியே போட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான் இம்மான். ஜல்லி
கல்லை என்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை. அப்படியே விட்டுவிட்டு கூடத்திற்குச் சென்றான். பின்வாசலில் அப்பா உட்கார்ந்து
புகை பிடித்துக் கொண்டிருப்பதை இடைவழியின் ஊடே பார்க்க முடிந்தது. அவனுக்கும் புகை
பிடிக்க வேண்டும் என்று வேகம் வந்தது. அம்மா கண் விழிக்கும் முன்னர் ஒரு சிகரெட் பிடித்துவிட்டு
வரலாம்; பிறகு அம்மா இயல்பு நிலைக்கு வந்ததும் விடைபெற்று கிளம்பலாம் என யோசனை உதித்தது.
அப்புறம் அவனே தன் யோசனையை தடுத்து, படுக்கையறைக்குச் சென்றான். மெத்தைக் கட்டிலில்
அம்மா கோணலாக படுத்திருந்தார். அவர் வயிறு மூச்சுக் காற்றில் உயர்ந்தெழுந்துக் கொண்டிருந்தது.
திரைச் சீலை வழியே நுழைந்த வெளிச்சத்தில் தூசி புள்ளிகள் மிதந்து கொண்டிருந்தன. இம்மான்
தன்னுள்ளே விரிசலிட்டான். வெளிச்சப் புள்ளிகளின் அந்தர அசைவா அல்லது அம்மாவின் பாத
வெடிப்பா அல்லது பின்வாசலில் செடிகளை பார்த்தபடி அப்பா தனியே புகைபிடித்துக் கொண்டிருப்பதா
அல்லது மறக்கக்கூடாத சாட்சியம் போல் வரவேற்பு பகுதியில் ஒரு கல் கிடப்பதா அல்லது உறங்கிக்
கொண்டிருக்கும் அம்மாவின் கையை யோவான் பற்றிக் கொண்டிருப்பதா – எது இம்மானை உலுக்கியது
என்று துல்லியமாக சொல்ல முடியவில்லை. ஆனால் அவனுக்கு உடல் விதிர்த்து வந்தது. அறையின் மௌனம் அவனை காற்றுக்
குமிழ் போலாக்கியது. கொஞ்சம் உந்தினால் பறந்துவிடலாம். யாராவது தொட்டால் உடைந்துவிடலாம்.
தன்னைமீறி அவனில் கேவல் எழுந்தது. யோவான் அதை கவனியாததுப் போல் நாற்காலியிலிருந்து
எழுந்து அறையைவிட்டு வெளியேறினான். இம்மான் நாற்காலியில் அமர்ந்து அம்மாவின் கையை பற்றிக்
கொண்டதும் இதச் சூடு அவன் உள்ளங்கையில் ஆதுரமாய் பரவியது. நீண்ட நேரம் -கண்ணீர் ஓய்ந்து
உப்புத் தடம் மறையும் வரை- அவன் அப்படியே அமர்ந்திருந்தான்.
படுக்கையறையைவிட்டு
வெளியே வந்த யோவானுடைய முகத்தில் பழைய துயர் மறைந்து தன்னிறைவு தோன்றியிருந்தது. கேள்விகள்,
சந்தேகங்கள், பதில்கள் எல்லாம் நீராலானவைப் போல் மறைந்திருந்தன. ஒரு காயம் தன்னைத்
தானே சரி செய்துக் கொண்டதுப் போல் எங்கும் எந்த தடயமும் எஞ்சியிருக்கவில்லை. கூடத்தைவிட்டு வெளியே வந்த யோவான் வரவேற்பு பகுதியில்
கிடந்த ஜல்லிக் கல்லை கண்டான். உடைந்த கண்ணாடி
வழியே பாய்ந்த வெளிச்சத்தில் அது ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. ஜபசெல்வனை சந்திக்க முடிவு
செய்தபடி அவன் வீட்டைவிட்டு வெளியேறினான். வெளிக்கதவை சாத்தி தாழிடும்போது பின்வாசலிருந்து
அப்பா வீட்டுக்குள் நுழைவது தெரிந்தது.
***
***
(நிறைவு)
புகைப்படங்கள் : ஏ.வி.மணிகண்டன்
No comments:
Post a Comment