Sunday, 29 December 2019

சாட்சி [சிறுகதை] - 3


அரை மணி நேரம் கடந்திருந்தது. ஒரு சின்ன இடைவெளிவிட்டு மீண்டும் பேட்டியை தொடரலாம் என்று முடிவு செய்திருந்தார்கள். பேட்டி எடுத்தவர்களுக்கு சுவாரஸ்யமாக ஒரு விஷயமும் கிடைக்கவில்லை. வெற்றிகரமான பிரபலத்தை பேட்டி எடுப்பது போலுமில்லை. தோற்றுபோனவர்களை பேட்டி எடுப்பது போலுமில்லை. ஊடகத்துறைக்கே சம்பந்தமற்ற  பேட்டி போலிருந்தது. யோவான், இம்மான் இருவருமே எதையும் கவர்ச்சிகரமாக முன்வைக்கவில்லை. சலிப்பூட்டும் அளவுக்கு சாதாரணமாக நடந்து கொண்டார்கள். தன் ஏமாற்றத்தை முகத்தில் காண்பிக்காமல் தொகுப்பாளர் சிரித்தபடி காலர் மைக்கை கழற்றினார். "வெளியே டீ வந்திருக்கிறது. குடித்துவிட்டு தொடர்வோம். சின்ன ரேபிட் ஃபயர் கேள்வி பதிலோடு பேட்டியை முடித்து கொள்ளலாம்".

யோவான் படப்பிடிப்பு அரங்கிலேயே அமர்ந்திருக்க, தேநீர் கோப்பையை பற்றியபடி இம்மான் அலுவலகத்தைச் சுற்றி வந்தான். தமிழ் சினிமாவின் நூற்றாண்டு நாயகர்களோடு கூடம் காலியாக இருந்தது. திரும்பி நடந்து, படப்பிடிப்பு அரங்குக்கு அடுத்திருந்த கலந்தாய்வு அறையை எட்டி பார்த்தான். செல்பேசியில் கண்களை பதித்தபடி சில இளைஞர்கள் உள்ளே படுத்துக் கிடந்தார்கள். சோபாவில் இருந்த பெண் அவனை பார்த்து புன்னகைத்தாள். இம்மான் பதிலுக்கு புன்னகைத்தபடி அவ்விடத்தை நீங்கி பின்புற காலி மனைக்கு வந்தான். ஏசி குளிரை விட்டு வெளியே வந்ததில் வெயில் கண்களில் கூசியது. தொகுப்பாளரும் காமிரா மேனும் வாதாம் மர நிழலில் நின்று புகைபிடித்துக் கொண்டிருந்தார்கள். அவனை கண்டு சிரித்தவாறு "புகைபிடிக்க விருப்பமா?" என்று கேட்டனர்.

அவன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டான். காமிரா மேன் பேச்சு கொடுத்தார். “உங்கள் சகோதரர் எப்போதுமே இப்படித்தானா? அவரை பேச வைக்கவே முடியாது போலயே

இம்மா சிரித்தான்.அவன் பேட்டிக்கு ஒப்புக் கொண்டதையே என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவனிடம் ஸ்மார்ட் போன் கூட கிடையாது. தெரியுமா? யுடியூப் சேனல் என்றால் என்ன என்பதையே அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.”

இயக்குனர் சிகரெட் சாம்பலை காற்றில் தட்டினார். ஆர்வமாக “உங்கள் இருவருக்கும் தொலைக்காட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் இருக்கிறதே?” என்றுக் கேட்டார்.

“ஆமாம்” என்றான் இம்மான். பால்ய காலத்தில் போன ஒரு நீண்ட விடுமுறை சுற்றுலா போல்தான் தொலைக்காட்சி வாழ்க்கை நினைவில் இருப்பதாகவும் மற்றபடி தாங்கள் எப்போதும் சாதாரண நடுத்தர குடும்பத்து வாழ்க்கையையே மேற்கொண்டதாகவும் கூறிவிட்டு சிகரெட்டை தாழ்த்தி பிடித்து தேநீரை பருகினான்.

"ஆனால் நிரஞ்சனாவுக்கு அப்படியில்லை போல. சின்ன திரை நடிகை மாதிரி கூட இல்லை. பெரிய திரை நட்சத்திரம் போலவே அவர் நடந்து கொள்கிறார்". தொகுப்பாளர் கிண்டலாக சிரித்தார். "முன்பு ஒருமுறை அவரை வேறு சேனலில் பேட்டி எடுத்திருக்கிறோம். முழு ஒப்பனையோடு வந்திருந்தார். இன்னும் பல ஆண்டுகளுக்கு அவருடைய அசலான நிறத்தையோ வயதையோ கண்டேபிடிக்க முடியாது. நிரஞ்சனா உங்களுக்கு தெரியும் தானே? உங்கள் தொடரில் நாயகியாக நடித்த சிறுமி.”

"தொடர் ஒளிபரப்பான சமயத்தில் பழக்கம். அதற்கு பிறகு எந்த தொடர்பும் இல்லை". இம்மான் ஜாக்கிரயுணர்வோடு பதிலளித்தான். “நாடக இயக்குனர் ரொம்ப அன்பாக நடந்துகொள்பவர். துரதிருஷ்டவசமாக அவரோடும் எந்த தொடர்பும் இல்லை

ஆனால் நிரஞ்சனாவுக்கும் அவருக்கும் நல்ல தொடர்பு இருக்கும் போலயே”. இயக்குனர் தொகுப்பாளரை பார்த்து கண் சிமிட்டினார்.

இம்மான் ஆபத்தில்லாதவன் என்று அவர்களுக்கு தோன்றியிருக்க வேண்டும். தடையின்றி பேசினார்கள். நிரந்தரமான சிரிப்பு ஒட்டிய தன் முகமூடியை தொகுப்பாளர் கலைத்துவிட்டிருந்தார். ஆபத்தில்லாதவன் என்று எண்ணியே நிரஞ்சனாவும் தன்னிடம் பழகியிருக்க வேண்டும் என இம்மான் நினைத்தான். கீழிமைகளில் பச்சை வண்ணம் பூசிய அவள் முகம் மனதில் ஓடியது. கூடவே அவள் உடலும் திறந்தது. ரோமமற்ற அவள் முழங்கையில் வயதுக்கு பொருந்தாத சுருக்கங்கள் இருப்பதை அன்றிரவு அவன் கவனித்தான். அவள் முகத்தில் சின்ன களங்கம்கூட இல்லை. முகம் மாறா இளமையில் இருக்க, உடலுக்கு மட்டும் தனியே வயதாகிக் கொண்டிருந்தது. இம்மான் சிகரெட்டை கீழே போட்டு மிதித்து அணைத்தான்.

"ரோலிங்". தொகுப்பாளர் கை தட்டி "நிகழ்ச்சிக்கு மீண்டும் வரவேற்கிறோம்" என்றார். "மிக சுவாரஸ்யமாக போய்க் கொண்டிருக்கும் நிகழ்ச்சியின் கடைசி பகுதியை எட்டிவிட்டோம். இப்போது ரேபிட் பயர். முதல் கேள்வி. நாடகத்தில் மாயபென்சிலில் நீங்கள் முதல் தடவை வரைந்த பொருள் எது?"

தொலைக்காட்சி தொடரின் முதல் காட்சியில் மாய பென்சிலை யதேச்சையாக விளையாட்டு மைதானத்தில் கண்டெடுத்ததும் யோவான் அதை வீட்டுக்கு கொண்டு வந்து சார்ட் காகிதத்தில்  ஒரு பெரிய சாக்லேட் வரைவான். பளபளப்பான ரேப்பரோடு சாக்லேட் அதன் மேல் உண்மையாகவே தோன்ற சந்தோஷமும் அதிர்ச்சியும் உண்டாகும். நாக்கில் இனிய கசப்பு ஒட்டி ருசி நரம்பில் தங்க பாதி சாக்லேட்டை மட்டும் சாப்பிட்டு மீதியை குளிர்பதன பெட்டியில் பத்திரமாக வைத்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து திரும்பி வருவான். சாக்லேட் காணாமல் போயிருக்கும். ருசியும் நிஜம். மறைந்ததும் நிஜம். அப்படி தொடங்கிற்று மாய பென்சிலின் கதை.

***



ரயிலை விட்டிறங்கி தோள் பையை சரி செய்துகொண்டான் யோவான். பறவைகள் கூடு திரும்ப வானெல்லாம் நெருப்பு மூண்டு சூரியன் மேற்கில் வீழத் தொடங்கியிருந்தது. மனதில் படர்ந்த வீட்டின் ஞாபகத்தினூடே அவன் நடந்தான்.  பெங்களூரிலிருந்து இம்மான் காலையில் வீடு வந்து சேர்ந்திருந்தான். மறுதினம் யுடியூர் சேனலொன்றுக்கு சகோதரர்கள் பேட்டி கொடுக்க வேண்டும். நெடுநாட்களுக்கு பிறகு இன்று காலையில்தான் அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டார்கள். எனினும்  இருவர் நடுவிலும் எந்த இடைவெளியையும் யோவான் உணரவில்லை. முதலில் ஒரு துணுக்குறல் ஏற்பட்டது உண்மை. ஆனால் அதுவும் வழக்கமானதே

இம்மானின் தோற்றம் மாறியிருந்தது. தலைமுடி கழுத்து வரை நீண்டிருந்தது. தாடியை நுணுகி கத்திரித்திருந்ததால் தாடை வெட்டு பார்வையில் இன்னும் அழகாக விழுந்தது. வசீகரமும் குழப்பமும் ஒரே கலந்த உருவம். யாரிடமிருந்தோ ஒளிந்துகொள்வது மாதிரி இம்மான் தன் தோற்றத்தை கலைத்து மாற்றியபடியே இருந்தான்.  எனினும் அடைபடாத தவிப்பொன்று அவனிடம் வெளிப்பட்டுக் கொண்டேயிருந்தது. முகத்தில். உடல் மொழியில். இருப்பென்று உருவாகக்கூடிய ஒவ்வொன்றிலும் அதுவும் இருந்தது. தன்னை அறிவதென யோவான்  அதை  உடனடியாக அடையாளம் கண்டுகொண்டான். மீண்டும் ஒரு துணுக்குறல். தன் சகோதரனை பார்த்தான். அவர்கள் ஒரே மாதிரி இருந்தார்கள். பல ஆண்டுகளாக அப்படி இருக்கிறார்கள். அன்னையின் ரத்தத்தை பகிர்ந்து விரல்களாக, விழிமணிகளாக, உண்ணும் விருப்பம் கொண்ட நாக்காக திரண்டது முதல்.

ரயில் நிலைய மேம்பாலத்தில் ஏறினான் யோவான். புறநகர் ரயில்வே நிலையம் மாலையின் பரபரப்பில் இருந்தது. அவனுக்கு முன்னால் கூட்டமாய் மக்கள் படியேறிக் கொண்டிருந்தார்கள். படிக்கட்டு முடிந்து மேம்பாலத்தில் நடக்கும்போது யாரோ ஒருவர் விரைந்து முன்னேறி வேறு யாரோ ஒருவர் விலகி நடந்ததில் கையற்ற மேலாடை உடுத்தியிருந்த ஓர் இளம் பெண்ணின் முதுகு யோவானின் கண்களில் பட்டது. கேசம் மறைக்கும் கழுத்து வளைவினின்று அகலும் மென் தோள்கள். அவன் அவளை நெருங்கியிருந்தான். ஆடை மறைக்காத முதுகுச் சருமம் மாலை வெளிச்சத்தில் அதன் செம்புள்ளிகளோடு அணுக்கமாய் தெரிந்தது. உள்ளாடை பட்டையின் முனை விலகி வந்திருந்தது. தொடும் தூரம்.  கண்கள் அவள் உடலோடு கீழிறங்க சட்டென்று நடையில் வேகம் கூட்டி அவளைக் கடந்து படிகளில் அவசரமாய் இறங்கினான். அவனில் நெருப்பு பற்றும் சீறல் எழுந்தது. முகம் பார்க்காத அப்பெண்ணின் உருவமும் தேக அசைவும் நினைவில் எழ அவற்றை வெட்டி வெட்டி விலக்கினான். மூச்சிரைத்தது. அவள் பின்னாலேயே தொடர்ந்து வருவதுப் போல் பிரமை தட்டிக் கொண்டேயிருந்தது. விரைந்து நடந்து பைக் நிறுத்தத்தை அடைந்தான். திரும்பி பார்க்கையில் மையச் சாலைக்கு போகும் முந்தையை திருப்பத்திலேயே ரயிலை விட்டிறங்கிய கூட்டம் பெரும்பாலும் மறைந்திருப்பது தெரிந்தது. அவளும் அதில் இணைந்திருக்க வேண்டும். சிலர் மட்டுமே அவ்விடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். மெல்ல அவன் பதற்றம் தணிய ஆரம்பித்தது.

மூங்கில் தடுப்புகள் வைத்துக் கட்டிய நிறுத்தத்துக்குள் யோவான் நுழைந்தபோது கடைக்காரர் யாரையோ திட்டிக் கொண்டிருந்தார். “போறீயா இல்லையா நீ இப்ப?”. எதிரே நின்றுக் கொண்டிருந்தவனை யோவான் பார்த்தான். அது அருள் ஜோசப். தேவாலய பணியாள். கோடுபோட்ட சட்டையும் அழுக்கு படிந்த வேட்டியும் உடுத்தியிருந்த அவனுடல் வலுவற்ற மரக்கிளைப் போல் தடுமாறியது.  அவன் யோவானை கவனிக்கவில்லை. “நான் போறேன். சும்மா கூத்தியாளுங்ககிட்ட போய் ரெண்டாயிரம் மூவாயிரம்னு கொடுத்திட்டு வருவீங்க. ஆனா ஒரு பெரிய மனுசன் வந்து காசு கேட்டா மரியாதை இல்லாம பேசுற”. நெஞ்சில் அறைந்து உச்சக்குரலில் கத்தியபடி வெளியே சென்றான்

காம்பவுண்டு பக்கம்போய் எச்சிலை காறி உமிழ்ந்துவிட்டு நெகிழ்ந்த வேட்டியை அவிழ்த்து கட்டினான். வார் பிய்ந்த ரப்பர் செருப்பை சாலையில் தேய்த்தபடி கொஞ்சம் தூரம் நடந்தவன் பிறகு ஓரிடத்தில் நின்று தலை குனிந்து தன் கால்களையே உற்று நோக்கினான். சட்டென்று இரண்டு செருப்புகளையும் கழற்றி ரயில் நிலைய வேலிக்கு மேலே தூக்கி எறிந்துவிட்டு வெறுங்காலில் தள்ளாட்டத்துடன் நடக்கலானான். தண்டவாளத்தில் ரப்பர் செருப்புகள் அருகருகே விழுந்தன.

குடிகார பயலுக்கு காசு கேட்டு ரோதனை பண்றதே வேலை. ஏற்கனவே குடிச்சிருக்கான். இந்த லட்சணத்துல அவன் பெரிய மனுஷனாமாம்”. அடையாளச் சீட்டை நீட்டிய யோவானிடம் பொறுமலோடு கூறினார் கடைக்காரர். “உங்க சர்ச்சுல வேலைக்கு சேர்ந்து கொஞ்ச நாளைக்கு ஒழுங்கா இருந்தான். இப்ப மறுபடி பழைய கதையை ஆரம்பிச்சிட்டான்.சர்ச் காம்பவுண்ட்ல இல்ல, சர்ச்சுக்குள்ளயே குடி வச்சாலும் இவன்லாம் திருந்தமாட்டான்”. யோவான் மௌனமாக தலையசைத்தான். யார் மீது என்று தெரியாமல் ஒரு பரிதாப உணர்ச்சி அவனில் பெருகியது.

பைக்கை எடுக்காமல் வீட்டுக்கு நடந்தே செல்ல யோவான் முடிவெடுத்தான். சிறு வகையிலேனும் உடலை வருத்த வேண்டும் என்று தோன்றியது. “அப்புறம் வந்து பைக் எடுத்திருக்கேன்”.  மின்சார ரயிலொன்றுபாங்க்என அலறி நிலையத்தைவிட்டு செல்ல, அதன் தேயும் ஓசையை கேட்டபடி கடையை விட்டு வெளியேறி பொறுமையாக நடந்தான். உலர்ந்து வெடித்த உள்ளத்தில் யோசனையற்ற வெறுமை. மாலை வெளிச்சம் சரிய, பின்னால் இருள் வந்து கொண்டிருந்தது. வாகனங்கள் இரையும் மையச் சாலையையும் மனிதக்கூச்சல் மிக்க பஜாரையும் கடந்து குடியிருப்பு பகுதியின் வழியே அவன் சென்றான். கால் அறிந்த பாதை. ஆனால் உடலை தொடராது மனம் தன்போக்கில் அலைவுற்றது. ஓசையற்ற மாலை பொழுதுக்குள் மூர்க்கமாக எதிரொலிக்கும் தன் மனதின் குரலை  அவனால் கேட்க முடிந்தது. வெளிச்சத்தின் அரவங்கள் ஓய்ந்து வீதிகள் யாவும் இருளை எதிர்நோக்கி திறந்திருந்தன.  தன் நிழல் போல் பூமியின் இருளோடு யோவான் நடந்துக் கொண்டிருந்தான்.

யோவானை பார்க்கும் எவரும் அவனை மகிழ்ச்சியானவன் என்று சொல்லத் துணிய மாட்டார்கள். மனதின் அலைக்கழிப்பு கண்களில் தீவிரத்தை ஏற்றியிருந்தது. முகத்தில் துன்பச் சாயல் படிந்திருந்தது. பலிபீடத்தில் ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவர்த்தி போலிருந்தான் யோவான். ஆனால் தன் சிறுவயதில் அவன் அப்படி இல்லை. சதா பரவசத்தோடு அலையும் மகிழ்ச்சியான சிறுவனாகவே அவன் எல்லோர் நினைவிலும் தங்கினான். தொலைக்காட்சி நாடகம் நின்று போன சமயத்திலும், அதாவது பதின்மத்தின் மத்தியை கடந்தபோதும், அவனுடைய இயல்பான உற்சாகம் மறைந்திருக்கவில்லை. பன்னிரெண்டு வருடங்களுக்கு முந்தைய அன்றைய முன்னிரவுக்கும் அவன் குணமாற்றத்துக்கும் சம்பந்தம் இருக்கக்கூடும். தன்னைக் காட்டிலும் பெரியதும், அழியாமல் தன்னில் நிலைக்கப் போவதுமான துயரை அன்றைக்குத்தான் முதல் தடவையாக அவன் அறிந்தான்.

இம்மான் தன் பள்ளித் தோழியை வீட்டுக்கு அழைத்து வந்து மாட்டிக் கொண்ட தினம் அது. அன்று வீட்டுக்குள் நுழைந்தபோதே அங்கு ஏதோ விரும்பத்தகாதது நடந்திருப்பது யோவானுக்கு புரிந்தது. ஆனால் என்னவென்று தெரியவில்லை. சமையலறையில் அம்மாவின் விசும்பலை மறைத்து பாத்திரங்கள் மூர்க்கமாக சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தன. யோவான் குழப்பத்தோடு கூடத்து இருக்கையில் அமரவும், அப்பா வாசல் கதவை சப்தமாக அறைந்து மூடிவிட்டு உள்ளே வந்தார். யோவானுக்கு எதிரே அவர் அமர, அம்மா எட்டி பார்த்துவிட்டு சமையலறைக்கு மீள்வது அசைவாகத் தெரிந்தது. தலை குனிந்து அமர்ந்திருந்த அப்பாவின் மூச்சில் கடுமையான சிகரெட் நெடி. உள்ளறைக்கு போக எண்ணி யோவான் எழுந்து நிற்கவும், அப்பா உடனே ஆவேசத்தோடு எழுந்தார். பின் ஒரே எட்டில் யோவானை அடைந்து அவனை கன்னத்தோடு ஓங்கி அறைந்தார். “என்ன திமிரா? நான் இங்க இருக்கேன், நீ பாட்டுக்கு எந்திரிச்சு போற”. அவன் நிதானிப்பதற்குள் இன்னொரு அடி கன்னத்தில் விழுந்தது. “எல்லாம் டிவில நடிச்சதுல வந்த கொழுப்பு. திமிரேறி அலையுற”. பூனை முடி முளைக்கத் துவங்கியிருந்த யோவானின் கன்னம் விரல் ரேகைகள் பதிந்து வீங்கியது. கண்ணீர் கட்டி பார்வை கலங்கியது. அவனுக்கு உண்மையில் எதுவுமே புரியவில்லை. அம்மா சமையலறையில் இருந்து ஓடி வந்து அவனை அணைத்து தூரம் அழைத்து போனார். அப்பா விரலை நீட்டிமனுசன்னா ஒழுக்கம் வேணும்என்று  கூரையை பார்த்து மிரட்டிவிட்டு இருக்கையில் சரிந்தார். பின்பக்கச் சுவரில் மாட்டியிருந்த இயேசு படத்தில் குட்டி சீரியல் விளக்குகள்  மின்னி மின்னி அணைந்துக் கொண்டிருந்தன.

உள்ளறையில், இருட்டில் நின்றபடி இம்மான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். அது தன்மீதான கோபம் என்பது அவனுக்கு தெரியும்.  ஒரு மணி நேரம் முன்புதான் அவன்  தோழி அழுதபடி வீட்டைவிட்டு வெளியேறி இருந்தாள். ஆனால் யோவான் அதை அறிந்திருக்கவில்லை.  "இவரே டிவிக்கு அனுப்பிக்கிட்டு இப்ப புள்ளய சொல்றாரு" . இரத்தம் கண்டிய அவன் முகத்தில் அம்மா வென்னீரால் ஒத்தடம் கொடுத்தார். "அவன் அப்படி பண்ணதுக்கு இவன் என்ன பண்ணுவான்?" என்று தீனமாக புலம்பினார்.  அப்பா அதுவரை வீட்டில் யாரையும் கை நீட்டி அடித்ததில்லை. கோபம் வந்தால் தொடர்ச்சியாக சிகரெட்டுகள் பிடிப்பார். அதற்கே வீடு அடங்கிவிடும். ஒரு நாளும் அவர் கை நீளாது. தற்போது முதல் முறையாக அவனை அடித்திருக்கிறார். மேலும் "ஒழுக்கங்கெட்டவன்" என்று அவர் சொன்னது யோவானை ஆழ தைத்தது - ஒருபோதும் அகற்றமுடியாதபடி. தொலைக்காட்சியை ஒட்டிய கண்ணாடித் தடுப்பில் அலங்காரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாய பென்சில்கள் தன்னை அலட்சியமாக நோக்குவதை அவன் கண்டான். யோவான் மெல்ல நிலைபெற்றபோது அவனில் ஏதோவொன்று கூடுதலாக சேர்ந்திருந்தது. அல்லது ஏதோவொன்று காணாமல் போயிருந்தது. சில தினங்கள் கழித்து இம்மானின் தோழியை யோவான் சாலையில் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. அணுகி வந்தவள், "உன் சகோதரன் ஒரு பன்றி" என்று  வஞ்சத்தோடு சொல்லி வேகமாக மறைய அவனுள் மறுபடியும் எதுவோ சேர்ந்தது. அல்லது தொலைந்தது. முன்னெப்போதுமில்லாத வகையில் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்பவனாகவும் தொடர்ந்து பைபிள் வாசிக்கிறவனாகவும் அவன் மாறினான்.

கடந்தகால நினைவுகளை ஒட்டி சிந்தனை செய்தபடி யோவான் மெதுவாக நடந்தான். இருள் முளைத்து வானில் நீல வியாபகம் கரைய, தெருவிளக்குகளின் பிரகாசத்தில் இரவு உடனடியாக வந்துவிட்டிருந்தது. மிக உயரத்தில் நிலவு எழுந்திருந்தது. வழியில் எங்கோ தவறான திருப்பத்தை எடுத்ததுப் போல் இரவை கண்டு குழம்பி தயங்கி நின்றான். பின் நிதானமாகி தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான். வீட்டை அடைய, இந்த நீண்ட பள்ளிக்கூடத் தெருவை கடந்து தேவாலயத் தெருவுக்குள் நுழைந்து மேலும் இரண்டு தெருக்கள் நடக்க வேண்டும். உடனடியாக வீட்டையும் தேவாலயத்தையும் கண்களில் கண்டான். அதற்குள் தேவாலயத்தின் மின்சார மணியோசையும் பதிவு செய்யப்பட்ட வேத வசனமும் அருகில் கேட்டன. கழுத்தில் சிலுவைக் குறியிடவும், சமீபமாய் அடிக்கடி உணரும் படபடப்பை மறுபடியும் அறியலானான். நெருப்பு பற்றும் அதே சீறல். தன் ஆழத்தில் எங்கோ களங்கம் கூடுவதுப் போல் அவன் பதறினான். "மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும். ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்". ஓங்காரமாய் பொங்கிய குரலை பல்லைக் கடித்து வெளியே வரவிடாது தடுத்தான். தலை உயர்த்தி பார்த்தபோது வானிருள் நிலவை மூட, சாயம் கலைவதுப் போல்  வெள்ளை ஒளி ஒழுகி தொலைந்துக் கொண்டிருந்தது.

பள்ளிக்கூடத் தெருவின் திருப்பத்தில் அரிசிக் கடையை ஒட்டிய சாலை இறக்கத்தில் ஒரே சலசலப்பாக இருந்தது. அரிசிக்காரர் கடையை விட்டு கீழே இறங்கி நின்றிருந்தார். அங்கு யோவானின் அப்பாவும் அருள் ஜோசப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பக்கத்தில் போனதும்தான் அது யோவானின் பார்வையில் பட்டது.  முதுகை பார்த்தே அப்பாவை கண்டுபிடித்துவிட்டான். மடிப்பு கலையாத அப்பாவின் சட்டை சடுதியில் அடையாளம் தெரிந்தது. ஜோசப்பை மறுபடியும் எதிர்கொள்வது ஆச்சர்யத்தை கூட்டியது. சாலையின் எதிர்புற மளிகைக் கடையில் பொருள் வாங்க வந்தவர்கள் சச்சரவை வேடிக்கை பார்த்தபடி போனார்கள். பைக்கொன்று அலறலான கொம்பொலியோடும் கூசும் வெளிச்சத்தோடும் சரேலென்று ஓடி மறைந்தது. அரிசிக்காரர் யோவானின் அப்பாவிடம் "சரி. சரி விடுங்க சார். அவன்கூடபோய் சமமா நின்னுக்கிட்டு." என்று சமரசம் செய்து கொண்டிருந்தார். ஜோசப்பிடம் “நீ போடா” என்றார். ஆனால் அவன் விலகாமல் எதிரிலேயே இருக்க, யோவானின் அப்பா அகன்ற கண்களோடும் பாதி ஓங்கிய கையோடும் நின்றிருந்தார். சிகரெட் பிடித்து கருத்த உதடுகள் கோபத்தில் துடித்தன. யோவான் வந்ததுக் கூட அவருக்கு தெரியவில்லை. அருகே காலிமனையில் படுத்துக் கிடந்த தெரு நாயொன்று எழுந்து வந்து யோவானுக்கு பக்கமாய் நின்று அவனை மோந்து பார்த்துவிட்டு திரும்பியது. நாயும் அதன் நிழலும் இருட்டில் பார்க்க, வினோதமாய் இருந்தன.

வீறாப்போடு நெஞ்சை நிமிர்த்தினான் ஜோசப். "நானும் பெரிய மனுசன்தான் அண்ணாச்சி. அவர போகச் சொல்லுங்க". அரிசிக்காரர் உடனே நாக்கை மடித்து "அடிபட போற நீ. போடான்னு சொல்றேன்" என்று மிரட்டினார். ஜோசப் யார் பேச்சையும் கேட்கும் நிலையில் இல்லை. தலை மட்டும் போதையில் தனியே ஆடிக் கொண்டிருந்தது. கண்கள் அரை மயக்கத்தில் இருந்தன. தன்னைத் தானே அவ்வப்போது உலுக்கிக் கொண்டு "இல்லை. இல்லை" என்றான். நினைப்பது, சொல்வது எதுவுமே  உணர்வில் இல்லை. அப்போதுதான் யோவானின் அப்பா தன் மகனை பார்த்தார். அரிசி கடைக்காரரும் அவனைக் கண்டு "அப்பாவ கூட்டிட்டு போப்பா" என்று கூறினார்.

சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்து எல்லாமே துரித பொழுதில் நடந்துவிட்டன. "அப்படியே போ சொல்லுங்க" என்று ஜோசப் விரல் ஆட்ட, அப்பா திமிறி அவன் தலைமுடியை பற்றி இழுத்து கன்னத்தோடு ஓங்கி அறைந்தார். தலை சாயவும் பின்னங்கழுத்தில் அடுத்த அடி விழுந்தது. இதற்கிடையே ஜோசப்பின் மனைவி மாலாவும் அங்கு வந்து சேர்ந்திருந்தாள். பின்னாலேயே ஓடி வந்த அவளுடைய மகன் ஜபசெல்வன் தன் அப்பாவை மெர்சி ஆண்ட்டியின் கணவர் தலைமுடியை பிடித்து இழுத்து அடிப்பதையும் அப்பாவின்  உடல் எதிர்ப்பின்றி சரிவதையும் பாதி முகத்தில் ஒட்டிய மண்ணோடும் கல்பட்ட கீறலோடும் அப்பா எழ முடியாமல் போராடுவதையும் வலியில் கோணி திக்கித்த முகத்துடன் பார்த்தான். "மனசாட்சியில்லாம இப்படி தெரிஞ்சவரயே அடிக்கிறீங்களேண்ணா. நல்லாவா இருக்கு?" என்று மாலா ஆத்திரத்துடன் கூறி தன் வீட்டுக்காரரை தாங்கி பிடிக்க போனாள். "உன் புருஷன் அடங்கியிருக்கனும் இல்லம்மா. குடிச்சிட்டு அலும்பு பண்ணா. கூட்டிட்டு போ". அரிசிக்காரர் தன்மையாகவும் அதே சமயம் உறுதியாகவும் சொன்னார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே யோவானின் அப்பா விடுவிடுவென்று முன்னால் நடக்க ஆரம்பித்திருந்தார். யோவானுக்குக்கூட அவர் காத்திருக்கவில்லை.

அரிசிக்காரரும் முன்வழுக்கையை தடவியபடி படியேறி கடைக்குள் போக, யோவான் எதையும் முழுமையாக கிரகிக்க முடியாது தடுமாறினான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒன்றிரண்டு பேரும் கலைந்துவிட்டிருந்தனர். "மனசாட்சி இருக்கா?" என்று இல்லாத யாரையோ இயலாமையோடு கேட்டவாறு மாலா குனிந்து தன் கணவனை பார்த்தாள். தெரு நாய் ஒளியும் நிழலுமாய் மறுபடியும் எழுந்து வந்து செல்வனை சுற்றி அலைந்து அவன் கால்களை மோந்து பார்த்துவிட்டு திரும்ப காலி மனைக்கே போனது. யோவான் மனதால் அவ்விடத்தை விட்டு நீங்கியிருந்தான்; அதுவரை நடந்த எதையும் பாராமல் காலத்திலேயே முன்னால் போய் வீட்டை அடைந்து யாரும் நுழைய முடியாத அறைக்குள் புகுந்து கண்களை மூடி அந்தரங்கமாய் ஜெபத்தில் மூழ்கியிருந்தான். "சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம் பண்ணுங்கள்". நிகழ்போதை திடுக்கிடலோடு அறிந்தபோது அவனுக்கு சற்று தள்ளி செல்வன் நின்றிருந்தான். அளவு பெரிதான அரைக்கை சட்டையும் கால் சராயும் உடுத்தியிருந்தான். மேலும் அவன் நிழலே அவனை இன்னும் சிறியவனாக காண்பித்தது. அவன் முகத்தை யோவான் பார்த்தான்.  துளைத்து ஊடுருவும் கைப்பையும் அழுகையையும் பார்த்தான்.  நீராவி பிரிவதுப் போல் குழந்தமை வெளியேறி மறைவதை பார்த்தான். ஒரே கணத்தில் ஒரு சிறுவன் பெரியவனாவதை பார்த்தான்.

"நீ ஏண்டா வந்த? உன்ன வீட்டுலதான இருக்க சொன்னேன். போ" என்று மாலா செல்வனிடம் கூறியபடி ஜோசப்பை ஏந்தினாள். ஆனால் செல்வன் நகரவில்லை. பயத்தில் விக்கி விக்கி அழுதவன் தன்னை எப்படியோ தேற்றிக் கொண்டான். ஜோசப் மாலாவின் கையைத் தட்டிவிட்டு "எங்க அந்தாளு? நான் என்ன பண்றேன் பாரு" என்று குழறலாக பேசினான். தானாக எழுந்து நிற்க முயன்று மீண்டும் கீழே விழுந்தான். யோவான் குனிந்து ஜோசப்பை தூக்கி நிறுத்த மாலாவுக்கு உதவி செய்தான். மாலா அவனிடம் "தெரிஞ்சவரையே இப்படி அடிக்கலாமாப்பா. மனசாட்சி வேண்டாமா?" என்று கேட்டாள். கண்களில் மெலிதாக நீர் வரியிட்டிருந்தது. தேவாலய வளாகத்திலுள்ள வீட்டை எட்டும்வரை அதையே மீள மீள அவள் சொல்லிக் கொண்டிருந்தாள். "இன்னைக்கு மதியம்கூட உங்கம்மாக்கிட்டதான்ப்பா பேசிட்டிருந்தேன்."

ஜோசப் எடையற்றிருப்பதை அவனை தூக்கி நிறுத்துகையில் யோவான் அதிசயத்தோடு கவனித்தான். முகத்தில் பட்ட கீறல்களை உள்ளங்கையால் ஒத்திவிட்டு அவனுடைய இடது கையை எடுத்து மாலா தன் தோளில் போட்டுக் கொண்டாள். அவனை நடக்க வைத்து அழைத்துச் சென்றாள். "ஒரு பெரிய மனுஷனை அடிச்சிட்டான். எங்க அந்தாளு?" என்று ஜோசப் பிதற்றியபடி நடந்தான். காலி வண்டியை தள்ளிக் கொண்டு போன பூண்டுக்காரர் அவர்களை திரும்பி பார்த்தபடி முன்னால் சென்றார். தெரு நாய் அவசியமில்லாமல் குரைத்துவிட்டு மண்ணை இன்னும் அகலத் தோண்டி படுத்துக் கொண்டது.  

அசைவின்றி நின்றுக் கொண்டிருந்த செல்வனிடம் யோவான் "நீயும் வீட்டுக்கு போ" என்றான். கனிவோடு சொல்ல நினைத்தது அச்சத்தோடு வெளிவந்தது. அதே சமயம் மாலாவும் கழுத்தை திருப்பி "வா" என்று செல்வனை அழைக்க, யோவானை பக்கத்தில் அனுமதிக்காத இடைவெளியோடு அவன் சென்றான். ஏதோ குடும்ப உறுப்பினன் போல் யோவானும் அவர்களுடனே நடந்தான்.

தேவாலயத்தை நெருங்கும் சமயத்தில் திடீரென்று ஜோசப் தன் மனைவியின் கையை உதறினான். அந்தரத்தில் எதையோ பற்றி சமனடைந்து நின்று "என்னை விடுறீ. நீதானடி சொன்ன, கர்த்தருக்கு பக்கத்துல போனா எல்லாமே நல்லாயிடும்னு. என்னடி நல்லதா ஆச்சு? எங்கடி நீ சொன்ன அற்புதம்?" என்று கை நீட்டி கேட்டான். மாலா பதறி, "இயேசுவே எம்மை இரட்சியும்" என்றாள். "யோவ். இந்த மாதிரி கர்த்தருக்கு விரோதமா பேசாத". தேவாலய வளாகத்திலிருந்து பாஸ்டர் டேனியலோ அவர் மனைவியோ தங்களை பார்த்துவிடக்கூடாது என்கிற பயம் அவளை பற்றிக் கொண்டிருந்தது.

யோவான் மாலாவை பார்த்தான். மூலியான கழுத்தில் எலும்புகள் புடைத்துக் கொண்டிருந்தன. கைமூட்டில் ஏதோ நெருப்புக் காயம். கன்ன எலும்பு துருத்தும் அவள் கரிய முகம் நியான் வெளிச்சத்தில் கூடுதல் வாட்டம் பெற்றிருந்தது. "ஒழுங்கா வீட்டுக்கு வாய்யா" என்று அவள் குரல் இறைஞ்சியது. யோவான் ஜோசப்பை பார்த்தான். அவன் இடதுகையில் "மாலா" என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. இருட்டில் பச்சை நிறம் அடர்த்தியோடு வெளிப்பட்டது. எண்ணெய் படாமல் பழுப்பேறிய  தலைமுடியோடும் ரத்தக் கோடு படிந்த முகத்தோடும் குனிந்தபடி நின்றான் ஜோசப். ஏதோ அரூபமான பாரத்தால் அழுத்தப்படுவதுப் போல் அவன் கால்கள் நிலை தவறின.  யோவானுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. "வலி எதுவும் இருக்கா? டாக்டர்கிட்ட வேனும்னா போலாம்." என்று சொன்னான். செல்வன் தன்னை வெறுப்புடன் முறைப்பதாக அவனுக்கு தோன்றிக் கொண்டேயிருந்தது. யோவானின் இருப்பையே அப்போதுதான் அறிந்த ஜோசப் ஆச்சர்யத்துடன் தலை நிமிர்த்தி நோக்கினான். அவன் உதட்டில் சிரிப்போடியது. "உங்கப்பன் அடிப்பான். நீ ஆஸ்பத்திரி கூட்டினு போவியா. என்னை பார்த்தா சொத்தை மாதிரி இருக்கா?" என்று ஏளனமாக கேட்டு பின் நாக்கை மடித்தான். கன்னம் வீங்கி முகம் கோரமாக இருந்தது. எதையோ நினைவில் கண்டடைந்தது போல் அவன் குரல் சட்டென உயர்ந்தது.  "நீ தான டிவிலலாம் நடிச்சவன். இப்ப ஏதோ பாஸ்டராக போறியாமே?". கசப்போடு கெக்கலித்து சுற்றிலும் பார்த்தான். பின்  இருகைகளையும் குவித்து "ஸ்தோத்திரம் பாஸ்டர்" என்று கேலியாக வளைந்தான். போலி மரியாதையுடன் கையால் வாயை பொத்தியவாறு கிட்ட வந்து "பரலோக ராஜ்ஜியம் சீக்கிரம் வர வழி பண்ண முடியுமா?" என்று வினவினான். அவனுடல் போதையில் நெளிந்தது. "அமைதியா வா" என்று மாலா அவனை பலவந்தமாக இழுத்தாள். "நீங்க ஒன்னும் தப்பா எடுக்காதீங்க தம்பி" என்று அவசரமாக யோவானிடம் சொன்னாள். யார் பார்வையிலும் படாமல் கணவனை சீக்கிரம் வீட்டுக்குள் கூட்டி போய்விட வேண்டும் எனும் கவலை அவளை ஆட்கொண்டிருந்தது. ஜோசப் பிரசங்கத் தொனியில் "அல்லேலுயா"  என்று ஒருமுறை கத்தி சொல்லிவிட்டு மாலாவின் இழுப்பில் இசைந்து அவள் கூடவே நடந்தான். தன் அப்பாவின் கையை பற்ற விரும்பியவன் மாதிரி செல்வம் ஜோசப்புக்கு மிக அருகாக சென்றுக் கொண்டிருந்தான்.

யோவான் அதிர்ச்சியில் சலனமிழந்திருந்தான். ஜோசப் கூறியதை அவனால் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியவில்லை. பாஸ்டராக வேண்டும் என யாரிடமும் அவன் சொன்னது கிடையாது.  அவனுக்கு அது சார்ந்து எந்த எண்ணமோ செயல்திட்டமோ இல்லை. அப்படி, ஒரேடியாக அந்த யோசனையே வந்ததில்லை என்று கூற முடியாது. அவன் நினைப்பில் அது எப்போதுமே இருந்திருக்கிறது. ஆத்மாவுக்கு வலிமை தேவைப்படும்போதெல்லாம் கடவுளுக்கு இன்னும் அருகில் போக வேண்டும் என்றே அவனுக்கு எண்ணம் வருகிறது. ஆத்மாவுக்கோ அடிக்கடி வலிமை தேவைப்பட, ஊழியமே கடவுளிடம் அழைத்துச் செல்லும் பாதை என்றே அவன் நம்பினான். மேலும், கடவுளை தன் சொற்களில் ஆராதிப்பதையும் அவர் செய்தியை வெளிப்படுத்துவதிலும் அவன் விருப்பம் கொண்டிருந்தான். இருளோடு போராடும் நிலையிலும் ஒளியின் சாட்சியாக வேண்டும் எனும் விழைவு அவனிடம் இருந்தது. பாஸ்டர் டேனியல்மீது இவ்விஷயத்தில் யோவான் வேற்றுமை உணர்வு கொண்டிருந்தான். பாஸ்டருடைய கச்சிதமான ஜெபங்களும் போதனைகளும் அவனில் விலக்கத்தையே ஏற்படுத்தின. அவற்றுக்குள் யாரும் பிரவேசிக்க முடியாது –பாஸ்டர் உட்பட- என யோவான் நினைத்தான்.  பாஸ்டருக்கு தன் சொற்கள் மேல் போதம் இருக்கவில்லை. அவரே அவற்றை நம்புகிறாரா என்பதை ஒருவரும் அறிய முடியாது. இறைவனிடம் போகும் வழி அதுவல்ல என்பது யோவானின் உறுதியான கருத்து. ஆனால் இவை யாவுமே அவனுடைய மனதில் நடப்பவை. அச்சங்கள் போல் அந்தரங்கமானவை. தீர்மாணமான முடிவை அடையாத அல்லது அப்படியான முடிவே இல்லாத விசாரனைகள். ஜோசப்புக்கு இது எப்படி தெரியும்?

அவனுக்கு மிக விசித்திரமாக இருந்தது. ஜோசப் மட்டுமின்றி மற்றவர்களும்கூட தன் ரகசியத்தை அறிந்திருப்பதாக ஓர் எண்ணம் எழுந்தது. உடனே அது உண்மை என்று மறுப்பின்றி பட்டது. யாரும் யாரிடமும் சொல்லாதபோதும் சபையில் உள்ள அனைத்துக் குடும்பங்களும், யோவான் போதகராகி இறை ஊழியம் செய்ய விருப்பம் கொண்டிருப்பதாகவே நம்பின. அதன் உண்மைத்தன்மை மேல் சந்தேகமே எழாதபடிக்கு, எல்லோருக்கும் அது இயற்கையான முடிவாகவே பட்டது. யோவானின் தோற்றமே அப்படிதானே இருந்திருக்கிறது? எப்போதுமே பிரார்த்தனையில் இருப்பவன் போல். அல்லது கடவுளால் நேரடியாக கண்காணிக்கப்படுபவன் போல். யோவான் குழப்பத்தோடு தன் குடும்பம் குறித்து யோசித்தான். அவர்களுக்கும் இது தெரியுமா? இம்மான்? அப்பா? முக்கியமாக அம்மா? யோவான் ஸ்தம்பித்து நின்றிருந்தான்.  பின் சிரமத்துடன் தன்னை சேகரித்து நடக்க ஆரம்பித்தான். அவனுள் கேள்விகள் விடாது பரவின.    
கலக்கமும் சோர்வுமாக தேவாலயத்தை கடக்கையில் பாஸ்டர் டேனியல், யோவானை பெயர் சொல்லிக் கூப்பிட்டார். அவர் கையசைப்பைத் தொடர்ந்து தேவாலய வளாகத்திற்குள் நுழைந்தான் யோவான். பாஸ்டரை அணுகியபோது  அவர் மாலாவை மூர்க்கமாக கடிந்துக் கொண்டிருந்தார். “இது சர்ச். ஜெப ஆலயம். விசுவாசிகளுடைய கூடாரம். உன் புருஷன் என்ன நினைச்சிட்டிருக்கான்னு தெரியலயே”. மாலா தலைகுனித்து விசும்பிக் கொண்டிருந்தாள். வீட்டுக்குள் பாதி உடலாக கட்டில் மேல் கிடந்த ஜோசப்பின் கால்களை தூக்கி நேர் செய்துக் கொண்டிருந்தான் செல்வன்.  ஆனால் அவன் தன்னருகில் இருப்பதான கற்பனை யோவானை சுண்டியது. “ஒரு மாசம்தான் டைம். போஎன்று பாஸ்டர் கடுமையோடு கூற, மாலா வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள். அவள் மறையும்வரை யோவான் எதிர்புறமாக முகத்தை திருப்பிக் கொண்டிருந்தான். தன் பார்வை அவளை இன்னும் வருத்தக்கூடும் என்றெண்ணி அல்லது அவள் கண்ணீரில் தன் பெயரும் இருப்பதாக அஞ்சி.

பாஸ்டர் யோவானின் தோளைத் தட்டி வரவேற்றபடி தென்னை மரத்துக்கு பக்கமாய் கூட்டி வந்தார். தென்னங்கீற்றுகளை சரசரக்க வைத்தபடி காற்று வேகமாய் வந்து அவர்கள் உடலை தொட்டு சென்றது. மாலையிலிருந்து இப்போதுதான் முதல் முறையாக காற்றையே சுவாசிப்பதுப் போலிருந்தது யோவானுக்கு. “ஸ்தோத்திரம் பாஸ்டர்என்றான் யோவான்.

ஸ்தோத்திரம்என்றபடி பாஸ்டர் ஜோசப்பின் வீட்டை பார்த்து கைக் காட்டினார். “நம்ம ஏதோ தேவகாரியம்னு உத்தேசிச்சு அவங்கள கை தூக்கி விடப் பார்த்தா, எங்கேயோ குடிச்சு சண்ட போட்டுட்டு இங்க வந்துருக்கான். உடனே வெளிய அனுப்பவும் பாவமா இருக்கு”. நெற்றியை தேய்த்தபடி அவர் பெருமூச்செறிந்தார். “சரி. தேவ சித்தம்னு ஒன்னு இருக்குல்ல.”

ஜோசப் சண்டையிட்டதே யோவானின் அப்பாவோடுதான் என்பதை பாஸ்டர் அறிந்திருக்கவில்லை. யோவான் வெறுமனே தலையசைத்தான். சாதாரண நிலையிலேயே அவனால் யாரிடமும் எந்த சம்பவத்தையும் அதன் தீவிரத்தோடு விவரிக்கவோ விளக்கவோ இயலாது. தற்போதோ அவன் உடலாகவும் மனமாகவும் களைத்து போயிருந்தான். உடன், பாஸ்டர் டேனியலையும் எப்போதும்போல் அவன் அன்னியமாகவே உணர்ந்தான்.

பாஸ்டர் எந்த முன்குறிப்பும் இல்லாமல் சபையைப் பற்றி பேச ஆரம்பித்தார். சபை முன்னைக் காட்டிலும் ஊக்கத்துடன் இருப்பதாக கூறினார். யோவானுக்குள் ஜோசப்பின் குரலே இன்னும் கேட்டுக் கொண்டிருந்தது. பாஸ்டருடைய பேச்சில் ஏதாவது வித்தியாசம் தென்படுகிறதா என்று கூர்ந்து கவனித்தான். ஆனால் அவர் குரலை வைத்து அவனால் எதையும் அணுமானிக்க முடியவில்லை. அவர் சபையை பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.  ஆராதனைகளில் உற்சாகமான வாலிபர்களையும் சிறுபிள்ளைகளையும் பார்ப்பது ரொம்பவும் மகிழ்ச்சியளிப்பதாக சொன்னார். அவர்கள் கர்த்தருக்கு பிரியமானவர்கள். “கர்த்தரோட செய்திய அவங்கதான் சீக்கிரம் கொண்டு போய் சேர்க்க போறாங்க”. பெரியவர்கள் மாதிரி அவர்களிடம் எந்த சந்தேகமும் கிடையாது என்று பாஸ்டர் அழுத்தினார். “வேதம் என்ன சொல்லுது. உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக.”. பெரும் கூட்டத்தின் முன்னால் நின்று பேசுவதுப் போல் அவர் குரல் நாடகீயமானது. பின் தாழ்ந்தது. “இந்த வார ஞாயிற்றுக்கிழமை ஆராதனைல இதத்தான் பேசனும்னு இருக்கேன். கர்த்தரை விஸ்வாசத்துடன் நம்புவது”. அவர் கண்ணாடியை கழற்றி மீண்டும் மாட்டினார். யோவான் யூகமின்றி அவர் சொல்வதை ஐயத்தோடு கேட்டுக் கொண்டிருந்தான். “ஆனா நம்ம சபை ஆட்கள்ல சிலருக்கு என் மேலயே சந்தேகம். பாஸ்டர் பிரெஞ்சு தாடிலாம் வச்சு ஸ்டைலா இருக்காரேன்னு”. கழுத்து சதை ஆட தாங்க மாட்டாமல் சிரித்தார் பாஸ்டர். கொஞ்ச நேரம் முன்புதான் அவர் முடிவெட்டி சவரம் செய்திருக்க வேண்டும். குளித்து புத்துணர்ச்சிக்கூடிய அவர் முகமும் வடிவான குறுந்தாடியும் யோவானின் கவனத்தில் விழுந்தன. அவரிடமிருந்து மென்மையாக நறுமணம் கசிவதையும் அவனால் உணர முடிந்தது. “சொல்ல வந்ததவிட்டுட்டு ஏதேதோ பேசிட்டிருக்கேன் பாரு. மதியம் போல அம்மா வீட்டுக்கு வந்திருந்தாங்க. தேவையில்லாம் யோசிச்சு குழப்பத்துல இருக்காங்கனு நினைக்குறேன். நீ அவங்கக்கிட்ட ஆறுதலா பேசு. கர்த்தருடைய மகிமைகள் அவங்களுக்கு தெரியும். ஆனா அத திரும்ப சொல்றது ஒன்னும் தப்பில்ல. ஸ்தோத்திரம்என்று அவன் கைகளை பற்றி குலுக்கிவிட்டு தன் வீடு நோக்கி நடக்கலானார்.
 தென்னங்கீற்றுகள் அசைவற்றிருந்தன.  பூமியலிருந்து பகல் வெப்பம் பிரிந்து வெளியேறும் மணம் எழுந்தது. யோவான் நல்ல காற்றுக்காக ஏங்கினான்.  தன் அம்மா பாஸ்டரிடம் என்ன பேசியிருப்பார் என்பதை அவனால் கணிக்க முடிந்தது. அதை பாஸ்டர் தெரிவித்த விதம் அவனுக்கு பிடிக்கவில்லை

பக்கச்சுவரைத் தாண்டி தூரத்தில் தெரு நாய் சுருண்டு கிடப்பதை யோவான் கண்டான். அவன் பார்வையை உடலில் அறிந்ததுப் போல் அது ஊளையிட்டு, உடனே எழுந்து எங்கோ ஓடி மறைந்தது. பின்னும் வெறும் நிழலாக அது அங்கு எஞ்சியிருப்பதுப் போல் மனமயக்கம் உருவானது. யோவானால் எதையுமே தொகுக்க முடியவில்லை. நம்பிக்கை குலையவில்லை எனினும் அவனுக்கு சற்று மூச்சுமுட்டவே செய்தது. எதிரே இருக்கும் தேவாலயத்தை பார்த்தான். திறந்த வாயிலோடு அது மௌனமாக இருந்ததுமண்ணில் தலை சாய்க்க இடமில்லாத மானுடக்குமாரனின் சிலுவை உள்ளே தனித்து நின்றிந்தது. பலி கோருவதுப் போல். யோவானின் ஆத்துமா வலிமையிழந்து இலைப் போல் நடுங்கியது. அது இன்னும் உதிராமல் இருப்பதே வியப்புக்குரியதுதான். உயரமான தேவாலய கோபுரத்துக்கு அடியில் மிகச் சிறியவனாக நின்றுக் கொண்டிருப்பதை தனக்கு வெளியே இருந்து அவனால் பார்க்க முடிந்தது

அப்போது ஜோசப்பின் வீட்டு கதவு மெலிதாக திறக்க, செல்வன் அசைவின்றி நின்று யோவானை பார்த்தான். குற்றவுணர்ச்சி, வழியறியா அச்சம், உள நடுக்கம், கோபம் என பல்வேறு உணர்ச்சிகள் யோவானை அழுத்தின. அவசரமாக தேவாலய வளாகத்தை விட்டு வெளிவரும்போது யோவான் தனக்கே புலப்படாதவனாக இருந்தான்

வாசலை தாண்டியதும் வெளிச்சுவர் கரும்பலகையில் இருந்த வேத வசனத்தை காண நேர்ந்தது. குட்டி மின்விளக்கின் வெளிச்சத்தில் சாக்பீஸ் சொற்கள் பொலிவோடு மினுங்கின. வாசிக்கும்போதே எவ்வளவு அழகிய கையெழுத்து எனும் வியப்பும் அவனில் அனிச்சையாக எழுந்தது.

***

(மேலும்)



புகைப்படங்கள் : ஏ.வி.மணிகண்டன் 


No comments:

Post a Comment