Sunday, 29 December 2019

சாட்சி [சிறுகதை] - 2


மோசமான நகைச்சுவை துணுக்குகளை மிகுந்த தன்னம்பிக்கையோடு கூறியபடி தொகுப்பாளர் பேசிக் கொண்டிருந்தார்.  சகோதரர்கள் இருவரின் தற்போதையை வேலை பற்றி விசாரித்தார். யோவான், மருந்து தயாரிப்பு நிறுவனமொன்றில் நிர்வாகியாக இருந்தான். பொறியியல் பட்டதாரியான இம்மானுவேலுக்கு பெங்களூரில் பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலை. அவர்களுடைய அப்பா ஓய்வு பெற்ற அரசு ஊழியர். சகோதரர்கள் இருவருக்குமே இன்னும் திருமணம் ஆகியிருக்கவில்லை. இல்லை. அவர்கள் தொடர்ந்து நடிக்க விரும்பவில்லை. வேறு வாய்ப்புகள் வந்தன. திரைப்பட வாய்ப்புக்கூடத்தான். ஆனால் அவர்கள் எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. தனிப்பட்ட காரணம். தொலைக்காட்சியில் நடித்ததே ஒரு விபத்து. மேலும் திரை வாழ்க்கைமீதும் பெரிய மோகம் இல்லை எனலாம். இரண்டு வருடங்களிலேயே தொடர் நின்றுபோனதில் அவர்களுக்கும் வருத்தம்தான். ஆனால் ஊடகத் தொழில் பற்றி எல்லோருக்கும் தெரியுமே.  இன்னொரு விஷயமும் இருக்கிறது. நாடகத்தில் நடித்தவர்களுக்கும் அதை பார்த்து ரசித்தவர்களுக்கும் வயதேறியபோதே அதன் ஈர்ப்பு குறைய ஆரம்பித்துவிட்டது. சண்டையா? இயக்குநருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையிலா? தயாரிப்பு நிறுவனத்துக்கும் தொலைக்காட்சி சேனலுக்கும் இடையிலா? தெரியவில்லை. பெரியவர்களின் உலகத்தில் அவர்கள் அப்போது இல்லை.

பேட்டி சுவாரஸ்யமின்றி தொடர்ந்தபோதும், தொகுப்பாளர் உற்சாகம் குறையாமல் கேள்வி கேட்டார். "சொல்லுங்கள். உங்கள் இருவரில் யார் நல்ல நடிகர். நாங்கள் அதிகம் தொலைகாட்சியில் பார்த்தது யாரை?". இம்மான் உடனே யோவானை நோக்கி விரலை நீட்டி "இவன் தான்" என்று கூறி பின்னால் நகர்ந்தான். " அப்படியா நம்பவே முடியவில்லை".

அதுவரை அவசியமற்ற இடங்களில் எல்லாம் மிகையாக ஆச்சர்யத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த தொகுப்பாளரின் குரலில் இப்போது உண்மையாகவே ஆச்சர்யம் வெளிப்பட்டது. அது புரிந்துகொள்ளக் கூடியதே. இரண்டு பேரில் இம்மானுவேல்தான்  பொது இடங்களில் அதிகம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறான். கல்லூரியில். அலுவலகத்தில். பெங்களூருக்கு இடம் மாறிய பிறகுதான் இறந்தகாலத்தில் நிழல் அவனைவிட்டு விலகியது. ஆனால்  யோவானோ எப்போதுமே யார் கவனத்திலும் படுவதில்லை. அரிதாகவே யார் ஞாபகத்திலாவது அவன் நெருடினான். மாய பென்சிலின் உதவியால் எல்லாவற்றுக்கும் உயிர்கொடுக்கும் குழந்தை நடிகனை யோவானின் இன்றைய தோற்றத்தில் பொருத்துவது சிரமம். பால்யத்தில் சதா பரவசத்தோடு திரியும் சிறுவனாக யோவான் இருந்தான். துடிதுடிப்பு மிக்க அச்சிறுவனுக்குத்தான் நாடக வாய்ப்பு கிடைத்தது. பள்ளி விழாவொன்றில் அவனை எதேச்சையாக பார்த்த நாடக இயக்குநர் அவனுடைய களங்கின்மையால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். விலாசம் கண்டுபிடித்து நேராக வீட்டுக்கே வந்தார். பெயர் மாற்றத்துக்கு மட்டும் யோவானின் அப்பா அனுமதி அளிக்கவில்லை. அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டு இயக்குனர் அவனை தொலைக்காட்சியில் நடிக்க வைத்தார். அவர் எண்ணியதுப் போலவே அச்சிறுவன் திரையில் அற்புதங்கள் செய்தான். எல்லோருமே அவனை விரும்பினார்கள்.

யோவானுக்கு ஓர் இரட்டைச் சகோதரன் உண்டு என்பதையே நாடக இயக்குநர் முதலில் அறிந்திருக்கவில்லை. வீட்டில் வந்து பார்த்ததும் ஆச்சர்யம் அடைந்தார். முக்கியமான தகவலை தவறவிட்டதற்காக தன் உதவியாளர்களை கடிந்துகொண்டவர் "இதுவும் நல்லதுதான். ஒருத்தனுக்கு ஜீரம் வந்தால் இன்னொருத்தனை வைத்து சமாளித்துவிடலாம்" என்று பலமாக சிரித்தார். ஆனால் திரைத் தேர்வின்போதே அதன் சாத்தியமின்மை அவருக்கு தெரிய வந்துவிட்டது. இம்மானுவேலால் காமிராவையோ  அல்லது காமிராவுக்கு பின்னால் இருப்பவர்களையோ பார்க்காமல் வசனம் பேச முடியவில்லை. வெறுமனே நிற்கும்போதுகூட அவன் கண்கள் அலைபாய்ந்தன. அழுகை தேங்கி முகம் கோணியது. இயக்குநர் அவனை நடிக்க வைக்க இயன்ற மட்டும் போராடி தோற்றார். ஆனால் யோவானோ இயற்கையாகவே நல்ல நடிகன். காமிரா பயம் கிடையாது. ஒத்திகைக்கூட இல்லாமல் வசனங்களை சரியான உணர்ச்சிகளோடு பேசும் திறன் அவனுக்கிருந்தது. தன் பகுதி மட்டுமில்லாமல் காட்சியில் நடிக்கிற மற்றவர்களின் வசனங்களைக்கூட மனப்பாடமாக அறிந்து வைத்திருப்பான். பிற நடிகர்கள் மறந்துவிடும்போது கிசுகிசுப்பாக எடுத்துக் கொடுப்பான். அவர்கள் சிரித்துவிடுவார்கள். சில நேரம் மற்றவர்கள் வசனம் பேசும்போது யோவானின் உதடுகளும் கூடவே அசையும். "கட்" என்று இயக்குநர் மைக்கில் அதட்டுவார். "நீ சொல்லாத". நாக்கை மடித்து "த்ச்" என்பான் சிறுவன் யோவான்.

இன்று திரும்பி வந்தால் அச்சிறுவனால் அசௌகர்யமான மௌனத்தைத் தவிர வேறெதையும் யோவானிடம் பகிர்ந்துகொள்ள முடியாது என இம்மானுவேல் எண்ணினான். போதகராக விரும்பும் யோவானும் அச்சிறுவனை பார்த்து திகிலடையக் கூடும்.   

***



"நாளை சென்னை கிளம்ப வேண்டும்." என்றபடி இம்மான் காலி கோப்பையை கீழே வைத்தான். பெங்களூர் நகருக்கு வெளியே ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது தளத்தில் இருந்தது இம்மானின் வீடு. பின்னிரவை நெருங்கும் நேரம் என்பதால் வெளி உலகில் ஓசைகள் அடங்கிய நிசப்தம் பரவிக் கொண்டிருந்தது. மழை ஓய்ந்து சின்ன சின்ன ஒலிகள்கூட துல்லியமாக கேட்டன. அவன் தொடர்ந்தான். "ஏதோவோர் யுடியூப் சேனலில் இருந்து பேட்டி கேட்கிறார்கள். பழைய தொலைக்காட்சி தொடர் சம்பந்தமாக".

அவனுக்கெதிரே ரூத் அமர்ந்திருந்தாள். இம்மான் பேசியதை கேட்டு, நொடிப்பொழுது மட்டும் அவளில் ஆர்வம் எழுந்தது. பின் மறுபடியும் இறுகிய உடலுக்குள் தூரம் புகுந்து தன்னை மறைத்துக் கொண்டாள். வந்தது முதல் அவள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. மழை ஈரம் காயாத நெற்றி முடி கன்னத்தில் ஒட்டியிருந்தது. அமைதியாக சிக்னேச்சர் பாட்டிலை திறந்து மீண்டும் தன் கோப்பையை நிறைத்தாள். சோடா கலந்ததும் விஸ்கி அடர்த்தி குறைந்து பொன்னாக மாறியது.

இம்மானுவேலை கண்ணுயர்த்தி பாராமல் மௌனமாக கோப்பையையே வெறித்துக் கொண்டிருந்த ரூத் சற்று பின்னால் நகர்ந்து சுவரில் சாய்ந்துக் கொண்டாள். அவள் நகரவும், மேஜை அடியில் இருந்து ஒரு காலி நறுமண பாட்டில் உருண்டு வந்தது. மேஜையிலிருந்து ஜீன்ஸ் பேண்ட்டின் ஒற்றைக் கால் மட்டும் பக்கத்தில் தனியே தொங்க, அது தன்மீது படாதபடி ரூத் கொஞ்சம் தள்ளி அமர்ந்தாள். இம்மானுடைய வீடு முழுக்கவே எதைத் தொட்டாலும் வேறேதாவது ஒன்று கூடவே இடறியது. 

கோப்பையை கையில் சுழற்றியவாறு பால்கனி தடுப்பில் இருந்த பாட்ஓஸ் செடியை ரூத் அங்கிருந்தே பார்க்க முயற்சி செய்தாள். திரைச்சீலைக்கு அப்பால் அவள் பரிசளித்தச் செடி  குட்டியாக தெளிவில்லாமல் தெரிந்தது. ஆனால் உடனே தன் மனதில் அதை அணுக்கத்தில் காண முடிந்தது. பிளாஸ்டிக் டப்பாவை சுற்றி மண் தடம் போட்டிருக்க,  சரியான பராமரிப்பு இல்லாமல் தங்க நிறத்தில் மலர வேண்டிய இலைகள் உயிர் நலிந்து வாடியிருந்தன. அவள் விஸ்கியை பருகினாள். 
   
உரையாடலை துவக்க எண்ணிய இம்மான், "என்னை ஏன் பேட்டி கேட்கிறார்கள் என்றே தெரியவில்லை." என்று கூறி இலக்கின்றி சிரித்தான். "எப்போதும்போல் நான் அவன் புகழை பகிர்ந்துகொள்கிறேன்". அவன் குரலை செவியில் வாங்கி கொள்ளாமல் ரூத் செல்பேசியில் ஓர் ஆங்கில பாடலை ஒலிக்கவிட்டாள். பொன்னரளி பூக்கள் எனக்கு மகிழ்ச்சியூட்டவில்லை.

"வீட்டுக்கு போவதை நினைத்தாலே சலிப்பாக இருக்கிறது. அப்பாவால் ஒரு அவதி. வெறுப்பில் முறைத்துக் கொண்டேயிருப்பார். அம்மாவால் இன்னொரு அவதி. அழுதுக் கொண்டேயிருப்பார். நான் இன்னும் குழந்தை என்று அவருக்கு நினைப்பு". இம்மான் சுவரோடு பேசிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் எரிச்சலேற்பட்டு சிகரெட்டை எடுத்து வாயில் பொருத்தினான். லைட்டரில் நெருப்பை ஏற்றும்போதுதான் ரூத் பக்கத்தில் இருப்பது கவனத்தில் தடுக்கியது. கட்டாயம் ஆத்திரம் அடைவாள். சின்ன தயக்கத்திற்கு பின் உதாசீனமாக சிகரெட்டை பற்ற வைத்து கால்களை நீட்டி உட்கார்ந்தான். சிகரெட் டப்பாவை அறை மூலையில் இருந்த காலி டப்பாக்களின் வரிசையில் நிறுத்தினான்.  

சீண்டப்பட்டாலும் தன்னை அடக்கிக் கொண்டு ரூத் தலையை பின்னால் சரித்து கூரையை வெறித்தாள். தாழ்ந்த கூரையில் தொங்கிய மின்விசிறியின் இறக்கைகள் அந்தரத்தில் முளைத்திருக்கும் கைகள் போல் தோற்றமளித்தன. அவள் குரல்வளையை நோக்கி அவை நீண்டு வந்தன. இம்மான் பொறுமை இழக்கலானான். தொலைக்காட்சி தொடர் பற்றிய செய்தி அவளை ஆர்வமூட்டும் என எண்ணியிருந்தான். ஆனால் அவளோ அழுத்தம் குறையாது அமர்ந்திருந்தாள்.

அறிமுகமான புதிதில் பிறரிடம் அதிகம் பகிராத தன் கடந்தகாலத்தின் பகுதியை இம்மான் ரூத்திடம் கூறியபோது அவள் மிகுந்த பரவசம் அடைந்து ஈடுபாட்டுடன் உரையாடினாள். "சிறுவயதில் நான் டிவியே அதிகம் பார்த்ததில்லை.அதனால்தான் தெரியவில்லை". உடனடியாக தொடரின் பெயரை கூகிளில் போட்டு தேடி பழைய புகைப்படமொன்றை எடுத்துக் காட்டினாள். மாய பென்சிலை உதட்டில் வைத்து சிந்தனையோடு அமர்ந்திருக்கும் சிறுவன். "ஆமாம். நீயேதான். நடிகனா நீ?" என்று ரூத் வியந்தாள். உண்மையில் அப்படத்தில் இருந்தது இம்மானுவேல் அல்ல. யோவான். அதை குறிப்பிட்டபோதும் அவள் பிரகாசம் வடியவில்லை. யுடியூபில் குறைந்த தரத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த தொடரின் சில அத்தியாயங்களை  கண்டுபிடித்து பார்க்கலானாள். அவ்வப்போது செல்பேசி திரையில் இருந்து அவள் பார்வை விலகி அவன் முகத்தை தொட்டு மீண்டது. "அதில் நடித்தது நானே இல்லை" என்று பலமுறை அழுத்திச் சொன்னான் இம்மான். "சரி. சரி. அதனால் ஒன்றுமில்லை". தொடர்ந்து வந்த தினங்களில், அவனுடைய பழைய ஞாபகங்கள் சார்ந்து ரூத் உற்சாகத்தோடு கேள்விகள் கேட்டு விசாரித்தாள். அனைத்து கேள்விகளுக்கும் இம்மான் விலகலாகவே பதில் சொன்னான். அவன் அசிரத்தை அவளை சலிப்படைய வைத்தது. மேலும் கால நகர்வில் தொலைக்காட்சி, மாயபென்சில், நடிப்பு முதலியவை ரூத்தின் ஞாபகத்தில் புதைந்து மங்கிவிட்டன. கடந்தகாலத்தின் இம்மான் பற்றி யோசிக்க அவளுக்கு அவகாசமேயில்லை. நிகழ்காலத்தின் இம்மான் அவனை துயரோடு அலைக்கழித்து கொண்டிருந்தான்.

இம்மான் சிகரெட்டை ஆழ இழுத்து புகையை நுரையீரலில் கூடுதல் நேரம் நிறுத்தி சுவாசக் குழாய் முழுக்க காட்டத்தை தேக்கினான். புகை திட்டாக வெளியே வந்தது. தொண்டையை செறுமினான். ரூத் அவனை பொருட்படுத்தாதிருக்க, அவள் புறக்கணிப்பு அவனை தொந்தரவு செய்தது. அவள் சீக்கிரம் சமாதானம் அடைய வேண்டும் என விரும்பினான். அவனுக்கு வாய் திறந்து பேச வேண்டும் போலிருந்தது. நெடுநாட்களுக்கு பிறகு திடீரென பழைய ஞாபகங்களை தனியே எதிர்கொள்வது விசித்திரமாக இருந்தது. நினைவுகள் ஒழுங்கின்றி கிளைத்தன. ஒழுங்கின்றி மறைந்தன. எல்லாமே தொலைக்காட்சி நாடகம் சம்பந்தமானவை. இளஞ்சிவப்பு நிற மாய பென்சில் வீங்கிய தலையோடும் உருண்டைக் கண்களோடும் நெருக்கத்தில் தோன்றியது. அவனுக்கு அதன் வினோத உருவம் பிடித்ததேயில்லை. லேசாக அது அச்சமூட்டவும் செய்தது. கண்ணிமைத்து அதை விரட்டினான்.

ஆரம்பத்திலேயே நாடக இயக்குநருக்கு சகோதரர்களை ரொம்பவும் பிடித்து விட்டது. இருவர் மீதும் பாகுபாடின்றி அன்பு செலுத்தினார். நடிப்பு வரவில்லை என்பதற்காக இம்மானிடம் எந்த வித்தியாசமும் அவர் காட்டியதில்லை. உண்மையில் கூடுதலாகவே அக்கறை செலுத்தினார். படப்பிடிப்பு இடைவேளைகளில் தன் உதவியாளரிடம் கூறி அவனை மட்டும் தனியே ஸ்டில் காமிராவில் புகைப்படம் எடுக்க வைப்பார். தொடர்புறுத்தும் காட்சிகளில்  போலி உடலாக பயன்படுத்துவார். வேறுபாடு துல்லியமாக தெரியாது என்பதால் டப்பிங்க் பேசும் வாய்ப்பு கூட அளித்திருக்கிறார். பிற்பாடு யோசிக்கையில் யோவான்மீது தனக்கு பொறாமை வரக்கூடாது என்பதற்காகவே அவர் இதையெல்லாம் செய்ததாக இம்மானுக்கு தோன்றியிருக்கிறது. யோவான் தொலைக்காட்சியில் நடித்து புகழ் பெறுவதால் இம்மானுக்கு அவன்மேல் பொறாமை ஏற்படும் என்று அவர்கள் இயக்குனர் போலவே பலரும் நினைத்திருக்கிறார்கள். தொடர் வெற்றிபெற்றதும் அவர்கள் எண்ணம் மேலும் வலுப்பட்டது. ஆனால் நிஜத்தில் இம்மானுக்கு யோவான்மேல் சிறிதும் பொறாமை உண்டாகவில்லை. அவன் பெருமை அடையவேச் செய்தான்.

இரட்டையர்கள் தங்களுக்குரிய வகையில் ஒருவர்மீது ஒருவர் விசேஷ அன்பு கொண்டிருந்தார்கள். அவர்கள் இதயம் மிக உறுதியாக அறிந்த நெருக்கம். அதனாலேயே நிரூபிக்க சிரமமானது. உடன், காமிரா முன்னால் நிற்பதிலும் இம்மானுக்கு ஈர்ப்பில்லை. சிறுவயதிலேயே மறைவிடங்களில் பாதுகாப்பை உணர்கிறவனாக அவனிருந்தான். கண்கள் சூழ நிற்கும்போதோ அவனுள்ளிருந்த நொய்மையான எதுவோ வெட்டவெளியில் துடிதுடித்தது. எனவே காமிராவை விட்டகன்று யார் பார்வையிலும் படாமல் படப்பிடிப்பு நடக்கும் வீட்டை ஆசையாக சுற்றிவருவான். அதுவே அவனுக்கு நிறைவளித்தது. சனி ஞாயிறு படப்பிடிப்பென்றால் தவறாமல் தளத்திற்கு போய் எல்லா இடங்களிலும் சுற்றி அலைவான். நாடகத்தில் கதாநாயகியாக நடித்த சிறுமியோடு பேசுவான்.  இருவரும் பிசினஸ் விளையாடுவார்கள். "நடிக்கச் சொன்னால் மட்டும் உடம்பு பதறுகிறது. இப்போது மட்டும் பயமாக இல்லையா?" என்று கேட்டு இயக்குநர் குட்ட வருவார். நழுவி ஓடிவிடுவான்.

திறந்திருந்த பால்கனி கதவு வழியே காற்று குளிரோடு அலையடித்து வர அவன் சாம்பல் கிண்ணத்தில் சிகரெட்டை உதிர்த்துவிட்டு மீண்டும் புகையை இழுத்தான். இரவு விளக்கின் மஞ்சள் ஒளி கண்களில் தேங்க, எதிர்புற சுவரில் தங்க நிழல்கள் அசைந்தன. சிகரெட் புகைக்கு மூச்சை இழுத்து வெறுப்புடன் அமர்ந்திருந்த ரூத் அவன் பிரக்ஞைக்கு வெளியே இருந்தாள். தொடர் நாயகியான சிறுமியின் ஞாபகம் அவனில் வளரலாகிற்று. குழந்தைமை மின்னும் கண்கள் அகன்று பேபி நித்யா இப்போது நிரஞ்சனாவாகியிருந்தாள். இன்னமும் தொலைக்காட்சியில்தான் நடித்து கொண்டிருக்கிறாள். மகள், தங்கை முதலிய துணை கதாபாத்திரங்கள். ஒன்றிரண்டு திரைப்படங்களில்கூட நடித்திருக்கிறாள். 

சில மாதங்களுக்கு முன்பு நிரஞ்சனாவை இம்மான் யதேச்சையாக இன்ஸ்டாகிராமில் பார்க்க நேர்ந்தது. அங்கு அவளை பின்தொடர ஆரம்பித்து புகைப்படங்களுக்கு விருப்பக்குறி போட்டு குறுஞ்செய்தி அனுப்பி மறு பரிச்சயம் செய்துகொண்டான். தினமும் மின்னரட்டை செய்தார்கள். ஏதோ காரணமாக அவள் பெங்களூர் வந்தபோது எம்.ஜி.ரோட்டில் ஒரு கபேயில் சந்தித்து கொண்டனர். பின்னர், அருகே ஒரு பப்புக்குச் சென்று அங்கேயே சொந்தமாக வடிக்கப்பட்டு நுரை பொங்க பரிமாறப்படும் பியரை அருந்தினார்கள். நள்ளிரவு அறைக்கு வந்துச் சேர, சிவப்புச் சாயம் மிளிரும் மெழுகு உதடுகளால் அவள் அவனை முத்தமிட்டாள். பிறகு சட்டென்று விலகி தீவிரமான குரலில் "என்ன ரக காண்டம் வைத்திருக்கிறாய்?" என்று கேட்டு ஆணுறை பாக்கெட்டை வாங்கி பரிசோதிப்பதுப் போல் கூர்ந்துபார்த்தாள். "குப்பையாய் அறையை பார்த்ததும் பயந்துவிட்டேன்.இது ஆபத்தில்லை" என்று புன்னகைத்து அதை பிரித்தாள். 

பிணைப்பற்ற அந்த ஒற்றை இரவு தொடர்பை ரூத் கண்டுபிடித்துவிட்டாள். எப்படி என்பது இன்றுவரை இம்மானுக்கு விளங்கவில்லை. சிகரெட்டை தேய்த்து அணைத்து இம்மான் மீண்டும் கோப்பையில் விஸ்கியை ஊற்றினான். முதல் மிடறு பருகியதுமே தலைக்குள் என்னவோ உருகி ஓடியது.  

"நாளை ஊருக்கு போக வேண்டும்". இம்முறை ரூத்திடம் தெரிவிப்பது போலில்லாமல் தனக்கே சொல்லிக் கொள்வது மாதிரி இம்மான் சொன்னான். ஊருக்கு போக வேண்டும் என்று திரும்ப வாய் முணுமுணுக்க குடும்ப ஞாபகம் மனதில் ஓடியது. ஊரில் யோவான் இருப்பான். அப்புறம் அப்பா. போன வருடம் பார்த்தபோதே அவருடைய பெரிய ஆகிருதியில் கொஞ்சம் தளர்வு தெரிந்தது. அதை சமன் செய்வதுப் போல் முகத்தில் கூடுதல் இறுக்கம். உடலின் தளர்ச்சியும் கன்னச் சதை வற்றத் துவங்கிய முகத்தின் இறுக்கமும் இப்போது இன்னும் அதிகரித்திருக்கக்கூடும்

அப்பா இம்மானிடம் சரியாக முகங்கொடுத்து பேசுவதில்லை. ரூத் குற்றம் சாட்டும் அதே காரணம்தான். அவன் குறித்த நினைவு வரும்போதெல்லாம் "ஒழுக்கம் கிடையாது. மனிதன் என்றால் ஒழுக்கம் வேண்டும்" என்று உள்ளுக்குள் அப்பா அரற்றுவார். பள்ளி இறுதி வருஷத்தின்போது வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் எனும் உறுதியாக நம்பிக்கையில் தன்னை அப்போது தீவிரமாக காதலித்துக் கொண்டிருந்த வகுப்புத் தோழி ஒருத்தியை வீட்டுக்கு அழைத்து வந்து இம்மான் மாட்டிக் கொண்டான். எதிர்ப்பார்க்காத விதமாக அசந்தர்ப்பமான நேரத்தில் அப்பா அம்மா இருவருமே வீடு திரும்பிவிட்டனர். சில நாட்களிலேயே அம்மா எளிதாக அச்சம்பவத்தை கடந்துவிட்டார். மூச்சிலும் அதை அவர் பின்னர் நினைவூட்டியதில்லை. நேரெதிராக, அப்பாவோ அதை மூளையில் சுமந்தபடியே இருந்தார். அவனோடு ஒழுங்காக பேசுவதை நிறுத்திக் கொண்டார். வருஷங்கள் ஓடிவிட்டன. யோசிக்கையில் அப்பா தன்னிடம் கடைசியாய் இரண்டு நிமிஷம் சேர்ந்தாற்போல் பேசிய நினைவே இம்மானுக்கு இல்லை. அயர்ச்சி உருவாக, வலிந்து மனவோட்டத்தை தடுத்தான். அப்பாவின் ஞாபகம் மறைந்ததும் அம்மா மனதில் எழுந்து வந்தார். ஜெபமாலையை இறுக பற்றியபடியும் பைபிளை மடியில் இருத்தி வசனங்கள் வாசித்தபடியும் துயரோடு தனியே அமர்ந்திருக்கும் அம்மா. துயரற்ற அம்மாவை நினைவில் எடுக்க முயன்றான். வருஷங்களை பின்னால் நகர்த்தி கொண்டே போக, சோர்வு மண்டியது. போன தடவை வீட்டுக்கு போனபோது சகிக்க முடியாமல் திட்டியேவிட்டான். "இப்படி அழுது வடிந்தால் வீட்டுக்கு வரவா தோன்றும்?". அம்மா உடனடியாக கண்களை துடைத்துக் கொண்டார். விரல்களின் நடுக்கம் ஜெபமாலையில் தொற்ற, அதன் முனையில் சிலுவை முன்னும் பின்னும் அலைகிறது. மெதுவாக. மிக மெதுவாக.  

கோப்பையில் மீதமிருந்த விஸ்கியை இம்மான் பருகினான். நெஞ்சில் காந்தி அணைந்து மூச்சு நெருப்பாக வந்தது. அவன் கண்கள் ரூத்தின் மேல் நிலைத்தன. முந்தைய யோசனைகள் யாவும் அடங்கி ஒரு கருப்புத் திரை சரிந்தது. அப்பா, அம்மா, யோவான், நிரஞ்சனா. எல்லோரும் கரைந்து நழுவ அறை மட்டும் கவனத்தில் துலங்கி வந்தது. அறையின் மென்வெளிச்சத்தில் ரூத் வெறும் நினைவு போல் உடலற்றிருந்தாள்.

மது கோப்பையின் கண்ணாடி குளிர்ச்சியை உதட்டில் பதித்தபடி செல்பேசியில் ஒலித்த பாடலுக்கேற்ப ரூத் மெல்ல தலையாட்டிக் கொண்டிருந்தாள். போதை மூளை நரம்புகளில் ஊடுருவ நீரில் முங்கியதுப் போல் அவள் தலை கனத்து வந்தது. கோப்பையை கீழே வைத்துவிட்டு தலைமுடியை அள்ளி முடி போட்டாள். தோள்களில் தளர்ந்த டீஷர்டை இழுத்துவிட்டுக் கொண்டாள். இம்மான் அவள் ஒவ்வொரு அசைவையும் கவனித்தான். அசைவுகள் மட்டுமே அவள் அங்கிருப்பதை உறுதி செய்தன. இம்மானுடைய பார்வையை உணர்ந்தபோதும் ரூத் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. கோபத்தில் கடுகடுத்துக் கொண்டிருந்த அவள் முகத்தில் திடீரென்று தவித்து ஏங்கும் ஓர் ஆற்றுப்படாத துயர் படியலாகிற்று. அவளிடம் முந்தையை உறுதியில்லை. என்ன மாறியது என்று தெரியவில்லை. மது போதையாக இருக்கலாம். அல்லது இயலாமையில் துவண்டிருக்கலாம். வைராக்கியமும் கோபமும் மறைந்து களைத்த பறவை என அவள் வாடியிருந்தாள். அடுத்த பாடல் ஒலித்தது.

மழைக்காலம் முடிந்ததும் எனையெழுப்பு அன்பே. இல்லை. குளிர்காலமும் கடக்கட்டும் அன்பே. வெளிச்சம் மீண்டும் முளைத்து பிசாசுகள் மண்ணுக்கடியே போகும்வரை நான் கண்கள் திறக்க போவதில்லை.

ரூத் கண் மூடி அமர்ந்திருக்க, இம்மானும் நெகிழ தொடங்கியிருந்தான். சுற்றி தேங்கியிருந்த சிகரெட் வாடையை கையால் விரட்டிவிட்டு ரூத்தை நோக்கினான். குட்டி சிலுவை போட்ட தங்க சங்கிலி அவள் கழுத்து வெண்மையோடு ஒட்டிக் கொண்டிருந்தது. அதில் மென்மையான பொன் மினுக்கம். அப்போது ரூத் மிக அழகாக தோற்றம் அளித்தாள். அதாவது அரிதாக துயரில் – அதன் உணர்ச்சிகரத்தின் விசையில்- தோன்றக்கூடிய அழகு. அந்த துயரே அவள் அசைவுகளை தொகுத்து அங்கு உடலாக திரண்டிருந்தது. நெருப்பு பற்றும் சீறலை தன்னில் இம்மான் உணர்ந்தான். அவன் நன்கறிந்த உணர்ச்சி. அவன் கண்கள் அவளுடலைவிட்டு அகலவில்லை. நெருங்கிச் சென்று அவளை அணைத்துக் கொண்டான். அவள் தடுக்கவில்லை. நிகோட்டின் வாசம் உதடுகளில் பதியும் அழுத்தமான முத்தம். 

முத்தத்துக்கு ஆரம்பத்தில் ஒப்புக் கொடுத்தவள் கண்கள் திறந்ததும் துணுக்குற்று அவனை தள்ளிவிட்டாள். கட்டில் காலுக்கு பக்கத்தில் இருந்த சாம்பல் கிண்ணத்தை அப்போதுதான் அவள் கவனித்தாள். பலவீனத்தில் வசமிழந்து இம்மானுடைய பிடிக்குள் ஆட்பட்டது கழிவிரக்கம் உண்டு பண்ண வேகமாக ஊர்ந்து சாம்பல் கிண்ணத்தை கையில் எடுத்தாள். உண்மையில் அது சாம்பல் கிண்ணம் அல்ல. கையடக்க பூக்குவளை. பாட்ஹோஸ் செடியை அவள் பரிசளித்ததும் இம்மான் தானாக தேடி போய் அதை வாங்கி வந்து அடுத்த நாள் அவளிடம் காண்பித்தான். “செடியை இதில் பாதுகாப்பாய் வளர்க்கவிருக்கிறேன்என்றான். “நானும் பார்க்கிறேன்என ரூத் போலியான அவநம்பிக்கையோடு சிரித்தாள். அவளுக்கு அந்த மண்ணாலான பூக்குவளை பிடித்திருந்தது. நுணுக்கமான வேலைப்பாடுடையது. இலைகள் விரியும் அழகிய கோடுகள். விற்பனை நிலையத்தில் கூடவே நிறச்சாயமும் தூரிகையும் கொடுத்திருந்தார்கள். வேலைப்பாடுகள் மேல் வண்ணமடித்து பயன்படுத்திக் கொள்ளலாம். பூக்குவளையைவிடவும் அவன் அக்கறை அவளை அதிகம் கவர்ந்தது. பிறகு அதை அவள் மறந்துவிட்டாள். செடி பழைய பிளாஸ்டிக் டப்பாவில்தான் இருந்தது.  நினைவில் தோன்றியிருந்தாலும் எல்லா முக்கியமான பொருட்களையும் அதையும் அவன் தொலைத்திருக்கக்கூடும் என்றே அவள் அனுமானித்திருப்பாள்.

சிறுதொட்டியை சரித்து பார்த்தாள். சிகரெட் துண்டுகள். சாம்பல் துகள்கள். அவள் உடல் நடுங்கியது. அதை கையில் பிடித்தபடி எழுந்து நின்றாள். "என்னை இதைவிட அதிகமாக நீ கேவலப்படுத்தமுடியாது." என்று அழுகையோடு இரைந்தாள். "முதலில் அந்த செடியை சாகவிட்டாய். இப்போது இது"

இம்மானுக்கு அவள் சொல்வது உரைக்கவே கொஞ்ச நேரமானது. பூக்குவளையை கவலையோடு பார்த்தான். எப்படி தவறியது? திட்டமிட்டு செய்யவில்லை. வெறும் பழக்கம். நெற்றியை தேய்த்தபடி எழுந்து நின்றான். அந்த செடியை தான் சாகவிடவில்லை என்றான். அவன் அதற்கு மறக்காமல் நீரிட்டான். ஆனால் சரியான அளவை அறிந்திருக்கவில்லை. தண்ணீரே செடிகளை கொல்லும் என்பது வினோதமானதுதான். அதை பெரிய தவறு என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

கவனமாக சாம்பல் கிண்ணத்தை அவன் தன் பேச்சில் தவிர்க்க, ரூத் "எனில் இது?இது" என்று அழுகையை விழுங்கி ஆதங்கத்தோடு பொறுமினாள். "என்னையும் இப்படிதான் நீ பயன்படுத்துகிறாய்" என்று கூறி மலர்த் தொட்டியை கீழே போட்டு உடைத்தாள்

களிமண் துண்டங்கள் போர்வை விரிப்பில் சிதற சாம்பல் துகள்கள் காற்றில் பறந்தன. ரூத் குளியலறைக்குள் சென்று உட்பக்கமாய் தாழிட்டுக் கொண்டாள். மன்னிப்பு கோரியபடி அவன் கதவை தட்டினான். பதில் வரவில்லை என்றதும் அவனுக்கு கலக்கம் ஏற்பட்டது. கதவில் காதை வைத்து நுணுகி கேட்டான். தேம்பல் ஒலி கேட்க, கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. சில நிமிடங்களில் அவள் வெளியே வந்தாள். முகத்தில் ஈரம் சொட்டியது. நேரே கட்டிலில் ஏறி படுத்துக் கொண்டாள். நாளை காலை கண் விழிக்கும்போது அவளை பார்க்க முடியாது என்பது இம்மானுக்கு புரிந்தது. சொல்லாமலேயே தன் வீட்டுக்கு போய்விடுவாள். அப்படி தனிமைக்குள் வெயில் நுழையும் பல காலைப் பொழுதுகள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக, இம்முறை அவனுள்ளே எதுவோ சமன் தப்பி சரிவில் விழுந்து ஓடலாகிற்று. அதை கவனிக்க விரும்பாமல், மது கோப்பையை எடுத்தபடி பால்கனியில் போய் நின்றான்.

மழை மறுபடியும் தூறிக் கொண்டிருந்தது. தொடக்கமும் முடிவுமற்ற நிதான கதி. அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுவழி மரங்களையும் அவற்றை கடந்து சாலையில் ஈர வெளிச்சத்தில் வேகமாக விரையும் ஒன்றிரண்டு வாகனங்களையும் இம்மான் நோக்கினான்

தெருவிளக்குகளின் மஞ்சள் வெளிச்சம் காலத்தையும் தூரத்தையும் குழப்பி மயக்கம் உருவாக்கியது. பொன் திரவத்தை விழுங்கியபடி வாசல் பக்கம் பார்த்தான். காற்றில் ஆகாய மல்லிகைகள் உதிர்ந்து தரையெங்கும் பரவி கிடைந்தன. மழை ஈரத்தில் தம் லகுத்தன்மையை இழந்து அவை எடைக் கூடியிருந்தன. அக்காட்சியை பார்க்கையில் அவனுக்கு சோகமாக இருந்தது.

***

(மேலும்)



புகைப்படங்கள் : ஏ.வி.மணிகண்டன் 

No comments:

Post a Comment