Sunday 29 December 2019

சாட்சி [சிறுகதை] - 1


யுடியூப் சேனலின் அலுவலகம் தேனாம்பேட்டையில் இருந்தது. நகரின் இரைச்சல் புகாத மர நிழல்கள் மூடிய பகுதி. சின்னதாக இருந்தாலும் அலுவலகம் நவீனமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கூடத்தில் ஸ்டிக்கர் ஓவியங்கள் மின்னின. பழைய திரைப்பட போஸ்டர்களில் மாற்றம் செய்து ஒட்டியிருந்தார்கள். அங்கிருந்து இடைவழியைத் தாண்டி வந்தால் இடதுபுறம் படத் தொகுப்பு அறை. முப்பது அடி கணினித் திரைகளில் துண்டு துண்டாக காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. சற்று தள்ளியிருந்த வலுதுபுற அறைதான் படப்பிடிப்பு அரங்கம். விளக்கெரிந்து வெளிச்சமாக இருந்தது. பச்சை மேட் போட்டு முன்னால் மேஜையும் இருக்கைகளும் வைக்கப்பட்டிருந்தன. மற்ற அறைகளைவிடவும் அங்கு ஏசி குளிர் அதிகம் இருந்தது. குளிருக்கு மேல் இனிய மணம் மிதந்தது.

காமிரா மேன் போகஸ் பார்த்து கையசைக்க, காலர் மைக்கை பரிசோதனை செய்துவிட்டு யுடியூப் சேனலின் தொகுப்பாளர் பேசத் துவங்கினார் "வணக்கம் நேயர்களே! தொன்னூறுகளில் வளர்ந்தவர்களுக்கு நமது இன்றைய சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையில்லை. எனினும் ஒரு சின்ன குறிப்பு அளிக்கிறேன். இப்பென்சில் உங்களுக்கு நினைவிருக்கிறதா?". உச்சியில் பொம்மைத் தலை வைத்த நீளமான பென்சில்களை அவர் கையில் பற்றியிருந்தார். மஞ்சள், பிங்க், சிவப்பு ஆகிய வண்ணங்களில் அவை மினுமினுப்போடிருந்தன. "ஆம்.! எல்லாவற்றுக்கும் உயிர் கொடுக்கும் சக்தி பெற்ற மாய பென்சிலேதான்". பென்சில்களை காமிரா பக்கம் உயர்த்தி காட்டிவிட்டு தொடர்ந்தார். "இப்பென்சிலுக்கு உரிய நபரே நம் சிறப்பு விருந்தினர். குழந்தை நட்சத்திரமாக நம் எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவர்". அவர் கைதட்டி வரவேற்க, காமிரா விருந்தினர் பக்கம் திரும்பியது. அங்கே இருவர் இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள். இரட்டையர்கள். தொகுப்பாளர் தொடர்ந்தார். "உங்களைப் போல்தான் நானும் குழம்பினேன் நேயர்களே. ஆனால் இது ஓர் இனிய அதிர்ச்சி. நீங்கள் தொலைக்காட்சியில் விரும்பி பார்த்த முகம் ஒருவருடையது அல்ல. இருவருடையது. வரவேற்கிறோம்.! இதோ யோவான் மற்றும் இம்மானுவேல்."

இரண்டு வருடங்கள், வாரத்தில் மூன்று தினங்கள் தொலைக்காட்சியில் தவறாது ஒளிபரப்பான அந்த நாடகம் தன் சேனலுக்கு பெரிய வெற்றியை பெற்று தந்திருந்தது. பதினோரு வயது நாயகனையும் மந்திர சக்தி பெற்ற பென்சிலையும் மைய கதாபாத்திரங்களாகக் கொண்டு அதை எடுத்திருந்தார்கள். இந்தியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த நிகழ்ச்சியின் நகல்தான் என்றாலும் ஒளிப்பரப்பான சமயம் சிறார்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. பள்ளியரட்டைகளில் தவறாமல் இடம்பிடித்தது. வேறு தொலைக்காட்சி சேனல்களும் அதே கருவை வைத்து நிகழ்ச்சிகள் தயாரித்து வெளியிட்டபோதும் மைய கதாபாத்திரத்தை ஏற்றிருந்த சிறுவனின் நடிப்பாலும் இயக்குநரின் தேர்ச்சியாலும் அவர்களுடைய நாடகம், தனி அடையாளம் பெற்றது. பிற்பாடு ஏதோ காரணத்தால் தொடர் நின்று போக, அதன் பெயரே இன்று எல்லோரு ஞாபகத்திலும் மங்கலாகிவிட்டது. அதை மீண்டும் நினைவூட்டி ஒரு நிகழ்ச்சி செய்தால் கட்டாயம் நல்ல எதிர்வினை கிடைக்கும் என யுடியூர் சேனல்காரர்கள் நினைத்தார்கள்.

"தொன்னூறுகளை கொண்டாடும்விதமாக நாம் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். தொன்னூறுகளின் அடையாளத்தில் ஒன்று இப்பென்சில். அதன் நிமித்தம் நாம் அந்த நாடகத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். அப்படியே அதன் நாயகருக்கும்"

"கட்". இயக்குநர் இடைமறித்ததும் காமிராமேன் திரும்பி பார்க்க, தொகுப்பாளர் பேச்சை நிறுத்தினார். "சார்". இம்மானுவேலிடம் முதுகை சற்று சரித்து இயல்பாக உட்காரும்படி இயக்குநர் அறிவுறுத்தினார். காமிராமேனின் தலை மறைய தொகுப்பாளர் மெல்லிய குரலில் காமிரா இருப்பதையே மறந்துவிடும்படி சொல்லி சிரித்தார். இம்மானுவேலுக்கு அச்சிரிப்பு பிடிக்கவில்லை. எனினும் பதிலுக்கு சிரித்தான். அருகே, எண்ணங்களை கணிக்க முடியாத முகத்துடன் அமைதியாக, யோவான்.

"ஆக்ஷன்". தொகுப்பாளர் தன் முதல் கேள்வியை கேட்டார். "ஓரே மாதிரியும் அதே சமயம் மிக வித்தியாசமாகவும் இருக்கிறீர்களே எப்படி?"

***


"ரெண்டு பேரையும் இன்னைக்குத்தான் ரொம்ப நாள் கழிச்சு ஒன்னாவே பார்க்குறேன். ஆனா கண்ணு பார்க்கத் திராணியில்லை. சொந்த புள்ளங்களையே இப்படி தொலைச்சிட்டேனே." சொற்கள் திணற மெர்சி ஆற்றாமையில் வெதும்பினார். "தூர இருக்கும்போதே ஒன்னா தெரியறனுவங்க. இப்ப பக்கத்துல இருக்கும்போதுக்கூட வேற வேறயா இருக்கானுங்க".

மேல் சட்டையின்றி பனியன் மட்டும் அணிந்து லுங்கியை வயிறுக்கு மேல் ஏற்றி கட்டியிருந்த பாஸ்டர் டேனியல் மெதுவாக தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருந்தார். கரிய பேருடல் பிதுங்கி நாற்காலிக்கு வெளியே போக முயன்றுக் கொண்டிருந்தது. அவர் மனைவி உள்ளே இருந்து ஒரு வெள்ளை சட்டையை கொண்டு வந்து தர, அதை உட்கார்ந்தவாறே அணிந்து கொண்டார். மெர்சியைவிட நிச்சயம் பத்து வயதாவது அவருக்கு கம்மியாக இருக்க வேண்டும். ஆனால் அவர் உடல்மொழியில் மூத்தவர்களின் இடைவெளியும் அசிரத்தையும் வெளிப்பட்டன. மெலிதான சட்டம் வைத்த மூக்குக்கண்ணாடி அவர் பார்வையில் இருந்த விலக்கத்தை மறைக்க உதவியது.

மெர்சி கூன் போட்டு பாதி இருக்கையில் அமர்ந்திருந்தார்நெடுநாள் கழித்து இம்மான் வீட்டுக்கு வந்திருந்தான். மறுதினம் அவனும் யோவானும் ஏதோ சேனலுக்கு பேட்டி கொடுக்க போவதாக சொன்னார்கள். மகன்களை ஒன்றாக பார்த்ததிலிருந்து மெர்சியின் மனம் தன்னிலை இழந்து பரிதவிக்கலாகிற்று. வழக்கமான அரைகுறை சாப்பாட்டைக்கூட மதியம் அவர் உட்கொள்ளவில்லை. ஏற்கனவே வாட்டிக் கொண்டிருந்த வேதனை அதிகரித்தது. மனபாரம் பொறுக்கமாட்டாது பின்மதியமாக பாஸ்டரை சந்திக்க வீட்டைவிட்டு கிளம்பினார். தலைக்கூட வாரவில்லை. முந்தானையால் முகத்தை மட்டும் துடைத்துக் கொண்டு புறப்பட்டார்.

தேவாலய வளாகத்திற்குள் இருந்த பாஸ்டரின் வீடு நோக்கி ஓட்டமாக நடந்தார் மெர்சி. உடல் வேகத்தில் எண்ணங்களை நிறுத்திவிட முயல்வது மாதிரி அவர் நடையில் வேகம் கூடியபடி இருந்தது. ஆனால் எண்ணங்கள் அவரை எளிதில் முந்தின. திரும்ப திரும்ப யோவானும் இம்மானும் மனதில் மோதினார்கள். தொடர்பற்ற இருவேறு மனிதர்களாக தன் மகன்கள் மாறிக் கொண்டிருப்பதை எண்ணும்தோறும் அவரில் ஏக்கக்கனம் கூடியது. யோவானின் உடல் ஒடுங்கிக் கொண்டே வர, கண்களின் தீவிரத்தாலேயே அவன் முகத்தில் சோகச்சாயல் அதிகரித்து வந்தது. உதடுகளிலோ மௌனத்தின் இறுக்கம். வீட்டில் இருந்தாலும் அவன் எங்கோ தொலைந்துபோய்விட்டதான கலக்கமே ஏற்பட்டது. மறுபுறம், இம்மானுவேலையோ அரிதாகத்தான் நேரில் பார்க்கவே வாய்த்தது. அவன் தோள்கள் அகலம் கண்டிருந்தன. பெங்களூரிலிருந்து போன வருடம் வந்தபோது ஒட்டவெட்டிய தலைமுடியோடும் அடர்ந்து நீண்ட தாடியோடும் இருந்தவன், இம்முறை காதுக்கு மேல் சுருண்டு புரளும் கேசத்துடனும் நுணுகி கத்தரித்த தாடியோடும் இருந்தான். குடும்பம் அவன் அக்கறையில் இருப்பதாகவே தெரியவில்லை.  

தன் மகன்கள் தூரம் சென்றுக் கொண்டிருப்பதை மெர்சி உணர்ந்தார். ஒருவரிடமிருந்து ஒருவர் தப்பித்து அல்லது இருவரும் ஏதோவோர் பொது எதிரியிடமிருந்து தப்பித்து எதிர் திசைகளில் ஓடிக் கொண்டிருந்தார்கள். அது மெர்சியை கலவரப்படுத்தியது. திடீரென்று ஒரு நாள் தான் அறியாத இடங்களுக்கு அவர்கள் சென்றுவிடக்கூடும் என பதறினார். தான் அறியாதவர்களாக அவர்கள் மாறிவிடக்கூடும். அன்னை ஒருபோதும் தன் பிள்ளைகளை அறியாதவர் ஆகிவிடக்கூடாது, கர்த்தாவே!

தேவாலய வளாகத்தின் வெளிக்கதவை திறந்து உள்ளே நுழைந்தார் மெர்சி. மதியப் பொழுதின் அமைதி அங்கு நிறைந்திருந்தது. அவர்களுடைய சபையில் எழுபதுக்கும் குறைவான குடும்பங்களே இருந்தன. சென்னை புறநகரை சேர்ந்த அப்பேரூராட்சியின் நான்கு பெரிய தேவாலயங்களில் ஒன்றென்றாலும் அது இப்போது அதிகம் செல்வாக்கோடில்லை. அவ்வூரிலேயே அற்புதங்கள் நிகழ்த்தும் நிறைய புது சபைகள் தோன்றிவிட்டன. ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளோடு குட்டி குட்டி தேவாலயங்கள் எழுந்துவிட்டன. பழைமையான இந்த சீயோன் தேவாலயம் தன் சந்தன நிற கோபுரத்தோடும் வண்ணம் இழந்த சுவர் வசனங்களோடும் அடக்கமாக நின்றிருந்தது.

மெர்சி நீண்ட கதவை சாத்திவிட்டு நடந்தார். முன்பகுதி மண் தரை வெயில் சரிவில் மின்ன, கோணலாய் வளர்ந்த தென்னை மரத்தின் நிழல் கீற்றுகள் தரையில் நெளிந்துக் கொண்டிருந்தன. வளாகத்தின் வலது ஓரத்தில் அருள் ஜோசப்பின் வீடு இருந்தது. மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவன் தன் மனைவி மாலாவோடும் எட்டு வயது மகன் ஜபசெல்வனோடும் அங்கு குடிவந்திருந்தான். “அந்த மனுசன் எந்த வேலைக்கும் ஒழுங்கா போகாம, எந்நேரமும் குடிச்சிட்டு அலையுறாரு பாஸ்டர். கடவுளுக்கு பக்கத்திலேயே இருந்தாலாவது எங்களுக்கு விடிவுகாலம் பொறக்கும்” என்று மாலா தன் மகனோடு வந்து பாஸ்டரிடம் அழுது புலம்ப, அவர் ஜோசப்பை தேவாலய பணியாளாக ஏற்றுக் கொண்டார். மேலும் ஒரு ஞாயிறு ஆராதனையின்போது அவனை குடும்பத்தோடு சபை முன்னிலையில் சாட்சி சொல்லவும் வைத்தார். பாஸ்டரின் பரிந்துரையால் மாலாவுக்கு அருகிலுள்ள கிறிஸ்துவ பள்ளிக்கூடத்தில் ஆயாம்மா வேலை கிடைத்தது.

பள்ளிகளுக்கு  ஆண்டு விடுமுறை என்பதால் மாலா வீட்டில்தான் இருக்க வேண்டும். மெர்சியை பார்த்தால் உடனடியாக பேச வந்துவிடுவாள். கருத்து மெலிந்த சிறு உடலுக்கு பொருத்தமில்லாத நம்பிக்கை பளீரிடும் கண்களோடு "ஸ்தோத்திரங்க்கா" என்று ஆரம்பித்து உற்சாகத்துடன் பேசுவாள். ஏனோ அவளுக்கு சரளமாக "சிஸ்டர்" சொல்ல வரவில்லை. ஆனால் அவ்வப்போது பேசி பழக முயற்சி செய்தாள். "ஸ்தோத்திரம்க்கா சிஸ்டர்" என்று  ஒருமுறை கூற மெர்சி உதட்டுக்குள் சிரித்தார். தற்சமயம் அவளோடு பேசும் உளவார்ப்பில் மெர்சி இல்லை. கதவு பாதி திறந்திருந்த அச்சிறிய வீட்டுக்குள் தொலைக்காட்சி ஓடுவதை கவனித்து முகத்தை உடனே எதிர்புறம் திருப்பி பாஸ்டரின் வீடு பார்த்து வேகமாகச் சென்றார் மெர்சி.

 "வருத்தப்படாதீங்க சிஸ்டர். தண்ணிய குடிங்க". சட்டையை கொடுத்துவிட்டு சமையலறைக்கு சென்ற பாஸ்டரின் மனைவி சொம்பில் தண்ணீரோடு திரும்பினார். கண்ணாடியைக் கழற்றி மூக்கில் அதன் தடங்களை அழுத்தித் துடைத்தார் பாஸ்டர். “பசங்க ரெண்டு பேரும் வீட்லயா இருக்காங்க?”. சொம்பை கீழே வைத்த மெர்சி தாடையில் வழிந்த நீரை முந்தானையால் ஒத்தியபடிஇல்ல பாஸ்டர். யோவான் வேலைக்கு போய்ட்டான். இம்மான் வீட்லதான் இருக்கான்என்றார்.  உலர்ந்த துணிகளை மேஜையில் இருந்து எடுத்து மடித்துக் கொண்டிருந்த பாஸ்டரின் மனைவி, "பசங்களுக்கு இப்ப என்ன வயசு ஆகப் போகுது?" என்று விசாரித்தார். "ரெண்டு மாசத்துல இருபத்தியெட்டு முடிஞ்சிடும்". மெர்சி கூறியதை கேட்டதும் பாஸ்டரின் முகத்தில் லேசாக புன்னகையோடியது. "அவ்ளோ பெரிய பசங்கள வச்சிக்கிட்டு ஏதோ சின்ன குழந்தைங்கள நினைச்சு கவலைப்படுற மாதிரி புலம்புறீங்களே". சமாதானம் செய்ய நினைத்தாலும் அவரும் உள்ளே சற்று குழம்பிதான் இருந்தார். மெர்சி தன்னிடம் வந்திருப்பதற்கான காரணம் அவருக்கு தெரியும். அதை சரியான விதத்தில் எதிர்கொள்ள அவர் இன்னும் தயாராகியிருக்கவில்லை.

"நீங்களும் சாதாரணமா சொல்லாதீங்க பாஸ்டர். ஏற்கனவே ஒருத்தன் வீட்டுக்கே வர மாட்டேங்குறான். இப்ப இன்னொரு புள்ளையையும் கொடுத்திட்டு நான் என்ன பண்ணுவேன்?" என்று மெர்சி முறையிட்டார்

"ரொம்ப அலட்டிக்காதீங்கம்மா.. பையன் சும்மா ஆர்வத்துல நினைச்சிருப்பான். அது ஒன்னும் லேசுப்பட்ட காரியம் இல்ல. சபையில இண்டர்வியூ இருக்கு. அப்புறம் பரீட்சை எழுதனும். டயாசிஸ் இருக்கு. சர்ச்சுகள்ல ஊழியம் செய்யனும்". மெர்சி தலையை வேகமாக ஆட்டி மறுத்தார். "அவன் சும்மா நினைக்கிறவன் இல்ல பாஸ்டர். அழுத்தக்காரன்". கடைசி வார்த்தையில் அவர் குரல் இடறியது. "எனக்கும் எம்புள்ளங்க கல்யாணம் குழந்தைனு ஆகி நல்லா வாழனும்னு ஆச இருக்காதா?".

"பாஸ்டராகிட்டா கல்யாணம் பண்ணிக்கக்கூடாதுன்னு ஒன்னும் விதி கிடையாது. இப்ப நான் இல்ல? எனக்கு மனைவி இருக்கா. பதினஞ்சு வயசுல பெரிய பொண்ணு இருக்கா". பொருத்தமின்றி எதையோ சொல்லிவிட்ட உணர்வு குறுக்கிட பாதிரியார் உடனடியாக பேச்சை மாற்றினார். "அதாவது தேவையில்லாம ரொம்ப யோசிச்சு பயப்படாதீங்கன்னு சொல்றேன்".

"இல்ல பாஸ்டர். அவன் அந்த வழியில போனா, திரும்ப வரவே மாட்டான். என் பசங்க என்னைவிட்டு போய்ட்டே இருக்காங்க. என்ன பாவம் பண்ணேனோ தெரியல. கடவுள் என்னை இப்படி சோதிக்கிறார்". பாஸ்டரின் மனைவி உட்புகுந்து "ஏன் சிஸ்டர் இப்ப தலையில கை வைச்சு உட்கார்ந்திருக்கீங்க. ஒன்னும் ஆகல" என்று ஆறுதல் சொன்னார்.

கூந்தலில் அங்கங்கு நரை எழுந்திருக்க மெர்சியின் முகத்தில் நீடித்த துயரின் சோர்வு தடமிட்டிருந்தது. கண்களில் நிரந்தரமான தவிப்பு. மெர்சி அழுகையை தொண்டையில் விழுங்கி, "எல்லாம் அவங்க அப்பாவால வருது." என ஆதங்கத்தில் பொறுமினார். "அந்த பாழாய்ப் போன டிவி சீரியலுக்கு அனுப்பாதீங்கன்னு தலையால அடிச்சிக்கிட்டேன். அவர் கேட்கல. வீம்புக்குன்னு அனுப்புனாரு, அப்பவே எல்லாம் ஆரம்பிச்சிடுச்சு. பாடுபட்டு புள்ளங்கள வளர்த்தும் நிம்மதி இல்ல. அன்னைக்கே அவங்க என்னைவிட்டு போக ஆரம்பிச்சிட்டாங்க." 

"விடுங்க. பழச என் பேசிக்கிட்டு இருப்பானேன்". பாஸ்டர் இடைமறித்தார். "மனிதனால் கூடாதவை எல்லாம் தேவனால் கூடும். நாம அவர நம்பி பிரார்த்தனைதான் செய்ய வேண்டியதுதான்".  தன்னியல்பில் ஞாயிற்றுக்கிழமை குரலுக்கு மாறினார். "வேதம் என்ன சொல்லுது? நடுகிறவனாலும் ஒன்றுமில்லை. நீர் பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை.. விளையச் செய்கிற தேவனாலே எல்லாமாகும். தேவனுக்கு விசுவாசமா இருந்து பிள்ளைங்கள பெத்து இவ்வளவு நாள் வளர்த்து ஆளாக்கிட்டீங்க. நீர் பாய்ச்சல் மேற்கொண்டாச்சு. அவ்வளவுதான். இனி தேவன் பார்த்துப்பார். தேவனுக்கு சேவை பண்றது ஆசீர்வாதமான காரியம்ன்றத நம்ம மறந்துடக்கூடாது".

சட்டென்று மெர்சியின் கண்களிலும் உடலசைவிலும் குரோத உணர்ச்சி தோன்றுவதை பாஸ்டர் கவனித்தார். சில நொடிகளுக்கு அது நிலைத்திருந்தது. பின்பழையபடி பிள்ளைகளின் அணுக்கத்துக்கு ஏங்கும் அன்னையின் பரிதாபமான தோற்றத்திற்குள் அவர் தொலைந்தார். ஆனால் அந்த முதல் குரோதமும் அதில் வெளிப்பட்ட தீர்க்கமும் பாஸ்டரிடம் தடுமாற்றத்தை ஏற்படுத்தின. விஸ்வாச மீறல். கடுமையோடு புத்திமதி சொல்ல வேகம் வந்தது. அதை மறைத்து தன்னை திரட்டி "நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க. நான் அவன்கிட்ட கட்டாயம் பேசுறேன்" என்றார்.

மெர்சி  கைகூப்பியவாறு எழுந்தார். "ரொம்ப நேரம் ஆயிடுச்சு, நான் கிளம்புறேன், பாஸ்டர். ஸ்தோத்திரம்". பாஸ்டரின் மனைவி மட்டும் எழுந்து நின்று விடைகொடுத்தார். "பத்திரமா போய்ட்டு வாங்க". பாஸ்டர் தன்மையாக கூறினார். "சண்டே சர்ச்ல பார்க்கலாம். உங்க இன்னொரு பையன் வந்தா சர்ச்சுக்கு கூட்டிட்டு வாங்க. முன்னாடி எப்பவோ பார்த்தது. பெங்களூர்லதான வேலை பார்க்குறான்?"

"ஆமாம். அவன் சர்ச்சுக்கு எங்க வர போறான். வீட்டுக்கே வர்றதில்லை". முனங்கலாக மெர்சி கூற, பாஸ்டர் எச்சரிக்கை தொனிக்கும் பார்வையை வெளிப்படுத்தினார். தேவ பயம் பற்றிய அறிவுறுத்தல். மெர்சியின் கவனத்தில் அது விழவில்லை. "வரேன் சிஸ்டர். ஸ்தோத்திரம்" என்று பாஸ்டரின் மனைவியை பார்த்து சொல்லிவிட்டு வெளியேறினார்.

திரும்பும் வழியில்தான் மெர்சிக்கு ஞாபகம் வந்தது. தேவாலயத்தை கடந்து உள்ளே வரும்போது நெற்றியில் சிலுவைக் குறி போடவில்லை. பிரக்ஞை தேவைப்படாத அனிச்சை செயல். அதுவே அவசரத்தில் மறதிக்குள் விழுந்துவிட்டதுஅவசரமில்லாத  நேரங்களிலும் சிலுவை, ஜெப வாக்கியங்கள் போன்றவை மறந்துவிட்டால் ஆறுதலாக இருக்கும் என அயர்ச்சியாக ஓர் எண்ணம் தட்டியது. தனிமையின் ஒவ்வொரு கணத்திலும் கடவுளை  நினைத்தே அவர் மருகிக்கொண்டிருக்கிறார். "என்ன ஜபம் பண்ணி என்ன பிரயோஜனம்?". ஏற்கனவே மகன்களின் பிரிவால் மெர்சிக்குள் நிரம்பியிருந்த ஏமாற்றம் கடவுள்மீது திரும்பிற்று. அந்த கசப்பின் வழியாகவே அவ்விடத்தை கடந்து செல்ல உந்துதல் உண்டாகசடுதியில் உள நடுக்கம் ஏற்பட்டு தன்னையறியாமல் "இயேசுவின் ரத்தம் ஜெயம்" என  முணுமுணுத்தார். தேவாலய முகப்பு வர, அங்கேயே நின்று தலையில் முக்காடிட்டுக் கொண்டார். நெற்றியில் சிலுவை போட்டு உயர நோக்கியபோது  வான் நிறைந்த மஞ்சள் ஒளி கோபுரத்தை மறைத்துக் கொண்டிருந்தது.

வெளியே வருகையில் மெர்சி, மாலாவை எதிர்கொண்டார். வாசலில் கிடந்த வேப்பஞ் சருகுகளை பெருக்கியள்ளி சாலை இறக்கத்தில் கொண்டு போய் கொட்டிவிட்டு திரும்பிய மாலா விளக்குமாறையும் முறத்தையும் கதவில் சாய்த்து வைத்தாள். "ஸ்தோத்திரம் சிஸ்டர். பாஸ்டர் பார்க்க வந்தீங்களா?” என்றபடி பக்கெட்டிலிருந்து ஈரத்துணியை எடுத்தாள். "ஸ்தோத்திரம் மாலாசாப்பாடுலாம் ஆச்சா? பையன் என்ன பண்றான்?". மெர்சி எந்திரத்தனமான குரலில் நலம் விசாரித்தார். "பையன் விளையாட போயிருக்கான்." என்றபடி மாலா இயல்பான துடிப்போடு பேசத் துவங்கினாள். "அவன தினம் விபிஎஸ் அனுப்புறேங்க்கா, இப்பவே நல்லா பைபிள் வசனம்லாம் சொல்றான். ஆண்டவனுக்கு பயப்பட்டவனா வளர்ந்தான்னா அதுவே போதும். அவர் கிருபைதானக்கா எல்லாம்". கண்கள் மூடி சிலுவையிட்டு கொண்டாள். “அவர்தான் நம்மள பிசாசுங்ககிட்ட இருந்து காப்பத்தனும்”. மெர்சியின் முகம் உணர்ச்சியற்றிருந்தது. அங்கில்லாத தொலைவில் அவர் மனம் நிலைத்திருந்தது. அதை பொருட்படுத்தாமல் மாலா மேற்கொண்டு பேசினாள். "இப்ப சுவிசேஷ கூட்டம் ஒன்னு பார்த்தேன்க்கா டிவில".  தொலைக்காட்சியில் கண்ட ஜெப அற்புதத்தை வியப்போடு பகிர்ந்தாள். கர்த்தரின் சொல்கேட்டு மேடையிலேயே பிசாசு வீறிட்டு அலறி ஓடிய நிகழ்ச்சியை தத்ரூபமாக விவரித்தாள். அவள் குரலில் அற்புதத்தை கண்ட ஆனந்தமும் நம்பிக்கையின் துணிச்சலும் வெளிப்பட்டன. "என் வூட்டுக்காரரயும் அங்கதான் கூட்டினு போவனும்". சட்டென்று உறுத்தல் பெற்று "நம்ம பாஸ்டர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போவனும்" என்றபடி அழுக்குத்துணியை மீண்டும் பிழிந்தாள். "இன்னும் குடியை மட்டும் அந்தாள் இன்னும் விட்டு ஒழிச்ச பாடில்லை”. அவள் குரல் தணிந்து பின் மீண்டும் இயல்பான வேகத்துக்கு வந்தது.எல்லாம் பிசாசு பண்ற வேல. தினமும் கர்த்தர்கிட்ட அதத்தான் ஜெபிக்குறேன்". 

“பையன பார்த்துக்கோ”. மெர்சி பெருமூச்சுடன் கூறினார். அவருக்கு மேலும் பேச வேண்டும் போலிருந்தது. ஆனால் மொழியும் மனமும் துண்டிக்கப்பட்டது போல் ஒரு பெரிய காலி இடம் அவர் முன்னால் தோன்றியிருந்தது.

"நான் ஒருத்தி. வீட்டுக்கு போயிட்டிருந்த உங்கள நிக்க வச்சு பேசிட்டிருக்கேன்." என்று புன்னகைத்து விலகிய மாலா, சுவரில் ஒட்டியிருந்த கரும்பலகையை ஈரத்துணியால் துடைத்து, துண்டு காகிதத்தை பார்த்து புதிய வேத வசனத்தை சாக்பீஸால் எழுத ஆரம்பித்தாள். அவள் விலகவும் மெர்சி மீண்டுமொருமுறை கோபுரத்தை நோக்கிவிட்டு தலையை தாழ்த்தினார். பிறகு மாலா கரும்பலகையில் வசனம் எழுதி முடித்து வெள்ளை தூள் ஒட்டிய கையை புடவைத் தலைப்பில் தேய்க்கும்வரை அங்கேயே யோசனையின்றி நின்று வேடிக்கை பார்த்தார். ஒவ்வொரு வார்த்தைக்கும் சமமான இடைவெளிவிட்டு மிக அழகிய கையெழுத்தில் வசனம் எழுதப்பட்டிருந்தது. மெர்சி பைபிள் வாக்கியத்தை மனதுக்குள் ஓட்டியவாறிருக்க, மாலா அவரை சந்தேகத்தோடு பார்த்து "வரேன்க்கா" என்று உள்ளே போனாள். அவள் வீட்டில் நுழைந்து மறைந்ததும் மெர்சி மறுபடியும் அண்ணாந்து பார்த்தார். தேவாலய கோபுரம் வழக்கத்தைக்காட்டிலும் அதிக உயரமாக இருப்பதான மயக்கம் எழுந்தது. சிவப்பு நிற உச்சி சிலுவை கண்களிலேயே படவில்லை. பின்னர் உற்று நோக்கியபோது மிக உயரத்தில் வடிவம் சிதைந்து வெளிச்ச பொட்டு போல் அது அசைந்தது. சற்றைக்குள் உருவம் மாறி அந்தரத்தில் சொட்டி உறையும் குருதியாக காட்சியளித்தது. மெர்சி அஞ்சி "இயேசுவின் ரத்தம் ஜெயம்" என்று நடுக்கத்தோடு சொல்லி திரும்பி நடந்தார்.

***

No comments:

Post a Comment