Sunday 25 December 2022

வலி, சபலம் மற்றும் மரணம்

(தன் "கிறிஸ்துவின் இறுதி சபலம்" நாவலுக்கு நீகாஸ் கசந்த்சாகீஸ் எழுதிய முன்னுரை)

கிறிஸ்துவின் இரட்டை இயல்பானது எப்போதுமே எனக்கு புரிந்துகொள்ள முடியாத மர்மமாகவே இருந்துள்ளது. கடவுளை அடைவதற்கான அல்லது கடவுளிடம் திரும்பி அவரோடு தன்னை அடையாளப்படுத்துவதற்கான மனிதனின் ஏக்கம் என்பது அடிப்படையான மானுட இயல்பாகவும் அதே நேரம் அதிமானுட அம்சத்துடனும் இருக்கிறது. கடவுளுக்கான நினைவேக்கத்தினை ஒரே சமயத்தில் மர்மமானதாகவும் வெளிப்படையானதாகவும் அறிகிறேன். அது என்னில் பெரிய காயங்களையும் பெருக்கெடுத்து பாயும் வசந்தங்களையும் திறக்கிறது.



இளமையிலிருந்தே என் ஆத்துமாவிற்கும் மாமிசத்திற்கும் நடுவே கருணையற்ற யுத்தம் இடைவிடாமல் நடக்கிறது. அந்த போராட்டமே என் ஆதார வேதனையாகவும், என் மகிழ்ச்சிகளுக்கும் துயரங்களுக்குமான தோற்றுவாயாகவும் இருக்கிறது.

என்னுள்ளே ஞாபகத்துக்கு முந்தைய தீமையின் இருண்ட விசைகள் உள்ளன. அவை மனிதனுக்குரியவை. மனிதனுக்கு முந்தையவைக்கூட. போலவே என்னுள்ளேயே ஒளிமிகு விசைகளும் உள்ளன. மனிதனுக்குரிய, மனிதனுக்கு முந்தைய அவ்விசைகள் கடவுளுடையவை. என் ஆத்துமாவானது இந்த இரண்டு படைகளும் சந்தித்து மோதிக் கொள்கிற களமாக இருக்கிறது.

என் வேதனை அழுத்தமாக இருந்திருக்கிறது. நான் என் உடலை நேசித்தேன். அது அழிந்துவிடக்கூடாது என விரும்பினேன். நான் என் ஆத்துமாவையும் நேசித்தேன். அது பாழ்பட்டுவிடக்கூடாது என விரும்பினேன். ஒன்றுக்கொன்று எதிரெதிராக இருக்கும் இந்த இரண்டு புராதான விசைகளையும் ஒன்றிணைக்க நான் போராடி வந்துள்ளேன். அவை எதிரிகள் அல்ல; மாறாக சக ஊழியர்கள் என்பதை அவற்றுக்கு புரிய வைக்க முயன்றேன். அந்த ஒத்திசைவில் அவை திளைக்க முடியும். உடன், நானும் அவற்றுடன் இணைந்துக் கொள்ளலாம் என கருதினேன்.

ஒவ்வொரு மனிதனும் தன் ஆத்துமா, தன் மாமிசம் இரண்டிலும் உள்ள புனித இயல்பில் பங்கெடுக்கிறான். அதனால்தான் கிறிஸ்துவின் மர்மமானது எந்த குறிப்பிட்ட நம்பிக்கையோடும் முடிந்துவிடுவதாக இல்லாமல் உலகத்துக்கே பொதுவானதாக இருக்கிறது. கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான போராட்டமும், இரண்டும் இணைவதற்கான ஏக்கமும் எல்லோரிடமும் நிகழ்கிறது. பெரும்பாலும் சுயநினைவுக்கு வெளியே நடக்கும் இப்போராட்டம் குறுகிய காலமே வாழ்கிறது. ஒரு பலவீனமான ஆத்துமாவுக்கு மாமிசத்தை நீண்ட காலம் எதிர்ப்பதற்கான ஆற்றல் இருப்பதில்லை. அது வளர்ந்து கனத்து மாமிசமாகவே மாறிவிடுகிறது. அத்துடன் போராட்டமும் முடிந்துவிடுகிறது. ஆனால் இரவும் பகலும் தம் முதன்மை கடமைக்காக கண் துஞ்சாமல் விழித்திருக்கும் நம்பிக்கை அமைந்த மனிதர்களிடமோ, மாமிசத்துக்கும் ஆத்துமாவுக்கும் இடையிலான போராட்டம் இரக்கமில்லாமல் வெடிக்கிறது. அது மரணம் வரைக்கூட தொடரலாம். 

ஆத்துமாவும் மாமிசமும் எவ்வளவு வலிமையாக இருக்கின்றனவோ அவ்வளவு தூரத்துக்கு இந்த போராட்டம் பயனுள்ளதாக இருக்கும். கடைசி ஒத்திசைவும் வளத்துடன் வெளிப்படும். பலவீனமான ஆத்துமாக்களையும் மாமிசத்தையும் கடவுள் நேசிப்பதில்லை. வலிமையானதும் தீவிர எதிர்ப்பு சக்தி கொண்டதுமான மாமிசத்துடனே ஆத்துமா சண்டையிட விரும்புகிறது. அது, முடிவற்ற பசியோடிருக்கும் ஒரு மாமிசப் பட்சினி. அது மாமிசத்தை புசிக்கிறது. ஒன்று திரட்டுவதன் வழியே அது மாமிசத்தை மறையச் செய்கிறது.

ஆத்துமாவுக்கும் மாமிசத்துக்கும் நடுவிலான போராட்டம், அதன் கலகம், இசைவு, சமர்ப்பணம், கடைசியில் போராட்டத்தின் குறிக்கோளான கடவுளுடனான சங்கமம் – இதுவே கிறிஸ்து மேற்கொண்ட படியேற்றம். அந்த படியேற்றத்தை மேற்கொள்ளவே நமக்கும் அவர் அழைப்பு விடுக்கிறார். அவர் குருதித் த்டங்களை பின் தொடர்ந்து வரும்படிக்கு.

தன்னுள் போராடும் மானுடனின் முதன்மை கடமை இதுதான் - மீட்சியின் முதல் மைந்தன் எட்டிய உயரமான மலை உச்சியை தானும் தொடுவது. அதை எங்கிருந்து ஆரம்பிப்பது? நாம் அவரை பின் தொடர்ந்து போக வேண்டுமேயானால், அவருடைய போராட்டம் பற்றிய ஆழ்ந்த ஞானம் நமக்கு தேவை. அவருடைய வேதனையை நாம் மீண்டும் வாழ வேண்டும். பூமியின் அழகிய பொறிகளை கடந்த அவருடைய வெற்றியையும் மகத்தானதும் சிறியதுமான மனித சந்தோஷங்களை கடந்த அவருடைய தியாகத்தையும் நாம் மீண்டும் வாழ வேண்டும். தியாகியின் பலி இடமாகிய சிலுவை நோக்கி, ஒரு துணிவிலிருந்து இன்னொரு துணிவின் வழியாகவும், ஒரு தியாகத்திலிருந்து இன்னொரு தியாகத்தின் வழியாகவும் அவர் மேற்கொண்ட படியேற்றத்தில் நாமும் ஈடுபட வேண்டும்.

சிலுவையில் அறையப்பட கோல்கொதா நோக்கிச் சென்ற கிறிஸ்துவின் குருதி வழியும் பயணத்தை “கிறிஸ்துவின் இறுதி சபலம்” நூலை எழுதிய பகல்வேலைகளிலும் இரவுகளிலும் நான் பயங்கரத்துடன் பின் தொடர்ந்ததுப் போல வேறெப்போதும் நடந்ததில்லை. கிறிஸ்துவின் வாழ்க்கையையும் வேட்கையையும் வேறெப்போதும் அவ்வளவு தீவிரமாக நான் அறிந்ததுமில்லை. மனித குலத்தின் தாளா வேதனையும் மகத்தான நம்பிக்கையும் ஒருங்கே வெளிப்படும் இந்த வாக்குமூலத்தை ஒருங்கு செய்யும்போது கண்களில் நீர் தளும்பி நிற்கும்படி நான் கலங்கியிருந்தேன். கிறிஸ்துவின் ரத்தம் ஒவ்வொரு துளியாக, என் இதயத்தில் பெரும் வலியாகவும் பெரும் இனிமையாகவும் விழுந்து நிறைவதை வேறெப்போதும் நான் உணர்ந்தது கிடையாது.

தியாகத்தின் உச்சியான சிலுவையில் அறையப்படவும், பொருளின்மையின் உச்சியில் நின்று கடவுளை அடையவும், மனிதன் கடக்க முடியாமல் போராடுகிற எல்லா நிலைகளையும் கிறிஸ்து கடந்தார். அதனால்தான் அவருடைய துயரம் நமக்கு பரிச்சயமானதாக இருப்பதோடு அதை நம்மால் பகிர்ந்துகொள்ளவும் முடிகிறது. அதனால் தான், அவருடைய இறுதி வெற்றி நம்முடைய வருங்கால வெற்றிப் போல் தோன்றுகிறது. கிறிஸ்துவின் குணநலனில் வெளிப்படும் இந்த அடிப்படை மனித இயல்பே அவரை புரிந்துகொள்ளவும், அவரை நேசிக்கவும், அவருடைய வேட்கையை சொந்த உணர்ச்சிப் போல நாம் பின் தொடரவும் உதவுகிறது. இந்த கதகதப்பான மனித இயல்பு அவரில் இல்லாமல் இருந்திருக்கும்பட்சத்தில், நம் இதயத்தை இவ்வளவு உறுதியோடும் இவ்வளவு கனிவோடும் அவரால் தொட முடிந்திருக்காது. நம் வாழ்க்கைக்கான முன்மாதிரியாக அவர் மாறியிருக்க முடியாது. நாம் போராடுகிறோம். எனவே அவர் போராடுவதை காண்பதன் வழியே நாம் வலிமை பெறுகிறோம். நாம் இந்த உலகில் தனியாக இல்லை என்பதை அறிகிறோம். நம்முடைய தரப்பில் நின்று அவரும் போரிடுகிறார் என்பது தெரிகிறது.

கிறிஸ்துவின் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணமும் ஒரு போராட்டம். ஒரு வெற்றி. எளிய மனித சந்தோஷங்களின் வெல்லமுடியாத மாய முடிச்சையும், சபலங்களையும் கிறிஸ்து வென்றார். தொடர்ச்சியாக, மாமிசத்தை ஆத்துமாவின் பகுதியாய் மாற்றி மேலேறினார். கோல்கொதாவின் உச்சியை அடைந்து சிலுவையில் ஏறினார்.

அவருடைய போராட்டம், அங்கும் முடிவடையவில்லை. சபலம், அந்த இறுதி சபலம், சிலுவையில் அவருக்காக காத்திருந்தது. தீமையின் ஆத்துமா, சிலுவையில் அறையப்பட்டவரின் மயங்கும் கண்களுக்கு முன்னால், ஒரு மின்னல் வெட்டில், அமைதியும் மகிழ்ச்சியும் கூடிய வாழ்க்கை பற்றிய மாய தோற்றத்தை உண்டு பண்ணி காட்டியது. மனிதர்களின் எளிய சௌகர்யமான வாழ்க்கைப் பாதையை தானும் தேர்ந்துக் கொண்டதுப் போல கிறிஸ்துவுக்கு தோன்றியது. அவர் திருமணம் செய்து குழந்தைகளுக்கு தகப்பனாக இருந்தார். மக்கள் அவரை நேசித்து மதிப்புடன் நடத்தினர். இப்போது, முதிர்ந்து வயதானவராக,  வீட்டில் அமர்ந்திருந்தவர், தன் இளமையின் ஏக்கத்தை எண்ணி நிறைவுடன் புன்னகைத்தார். எவ்வளவு நிதானமாகவும் அறிவார்ந்தும் செயல்பட்டு, அவர் மனிதர்களின் பாதையை தேர்ந்தெடுத்துவிட்டார்! உலகை காப்பாற்ற வேண்டும் எனும் விருப்பம்தான் என்ன மாதிரியான மடத்தனம்! சிலுவையின் துன்பங்களிலிருந்தும் சித்திரவதைகளிலிருந்து தப்பித்ததுதான் எவ்வளவு மகிழ்ச்சிகரமானது!

இதுவே மீட்பரின் இறுதி தருணங்களில் அவரை சோதிக்க மின்னல் வெட்டுப் போல தோன்றிய கடைசி சபலம்.

ஆனால் கிறிஸ்து தன் தலையை மூர்க்கமாய் அசைத்து, கண்கள் திறந்து பார்த்துவிட்டார். இல்லை. அவர் ஒரு துரோகி இல்லை. கடவுளுக்கு மகிமை! அவர் கைவிட்டுச் செல்பவர் இல்லை. கடவுள் அவரை நம்பி கொடுத்த காரியத்தை அவர் பூர்த்தி செய்தார். அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவில்லை. தியாகத்தின் உச்சியை அவர் எட்டினார். அவர் சிலுவையில் அறையப்பட்டார்.

நிறைவுற்று அவர் கண்களை மூடினார். மகத்தான வெற்றியின் அழுகுரல் பிறகு ஒலித்தது. அது நிறைவேற்றப்பட்டது! வேறு வார்த்தைகளில் சொல்வதானால்: நான் என் கடமையை நிறைவேற்றிவிட்டேன், நான் சிலுவையில் அறையப்படுகிறேன், நான் சபலத்தில் வீழவில்லை…

போராடும் மனிதனுக்கு ஒரு முதன்மை முன்மாதிரியை வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த நூலை நான் எழுதினேன். வலி, சபலம் மற்றும் மரணம் இவற்றைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை என்பதை அவனுக்கு காண்பிக்க விரும்பினேன். இம்மூன்றையும் நாம் வென்றுவிடலாம். இம்மூன்றும் ஏற்கனவே வெல்லப்பட்டுள்ளது. கிறிஸ்து வலியால் துயருற்றார். அதுமுதல் வலி புனிதமடைந்துவிட்டது. இறுதித் தருணம் வரையில் அவரை வழித்தவறச் செய்ய சபலம் போராடியது. சபலம் தோற்கடிக்கப்பட்டது. கிறிஸ்து சிலுவையில் இறந்தார். அந்த தருணத்திலேயே மரணம் எப்போதுக்குமாய் காணாமல் போனது. 

இந்த பயணத்திலும் ஒவ்வொரு தடையும் வெற்றிக்கான இன்னொரு தருணத்தை வழங்கும் பாதையானது. நமக்கு இப்போது ஒரு முன்மாதிரி இருக்கிறது. நம் வழித்தடங்களில் ஒளியேற்றி நமக்கு வலிமை கொடுக்கிற ஒரு முன்மாதிரி.

இந்த நூல் ஒரு வாழ்க்கை சரிதை அல்ல. போராடும் ஒவ்வொரு மனிதனின் வாக்குமூலம். இதை பிரசுரிப்பதன் வழியே நான் என் கடமையை நிறைவேற்றிவிட்டேன். தன் வாழ்க்கையில் கடுமையாக போராடிய, மனக்கசப்புகள் பெற்ற, நிறைய நம்பிக்கைகளும் கொண்டிருந்த ஒரு மனிதனின் கடமை இது. அன்பால் நிரம்பியிருக்கும் இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொரு சுதந்திர மனிதனும் முன்னைக் காட்டிலும் அதிகமாகவும், முன்னைக் காட்டிலும் மேம்பாட்டுடனும், கிறிஸ்துவை நேசிக்க முடியும் என நான் உறுதியாக நினைக்கிறேன்.


No comments:

Post a Comment