Friday 25 September 2020

கிறுக்கர்களுக்கு ஒரு முத்தம்

சிற்றிதழ் வட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவா லாட்ஜை பரிச்சயம் செய்துக் கொள்ளும் வாய்ப்பு, மறைந்த “தக்கை” பாபுவினால் அப்போது எனக்கு கிட்டியது. சேலத்தில் நடக்கும் இலக்கியக் கூடுகைகளின்போது லாட்ஜ் கட்டிடமே தள்ளாட்டத்தில் கொஞ்சம் கோணலாகிவிடும் என்பது பொதுவான அறிதல். அப்படியொரு இரவில்தான் ஜான் சுந்தர் எனக்கு அறிமுகமானார். தளும்பும் அறைகளுக்கு வெளியே மாடி வராந்தாவில் நாங்கள் தெளிவாக நின்றுக் கொண்டிருந்தோம். 


ஒவ்வொரு அறைக்குள்ளிலிருந்தும் அராஜகமான ஓசைகள் வெளிவர, மாடியின் மூலையில் மேஜை போட்டு அமர்ந்திருந்த லாட்ஜ் பரமாரிப்பாளரின் முகம் அதிருப்தியில் சுணங்கிக் கொண்டுவந்தது. அடாதக் குரல்களை கஷ்டப்பட்டு சகித்தவாறு, வெள்ளைக் காகிதத்தில் அவர் எதையோ குறித்துக் கொண்டிருந்தார். லாட்ஜின் கணக்கு வழக்காக இருக்கலாம். தொலைவில் நின்றுக் கொண்டிருந்த ஜான் உடனடியாக தன் ஓரங்க நாடகத்தை அரங்கேற்றலானார். கீழே ரவுண்டானாவில் நின்றிருந்த ரோந்து அதிகாரிகள் லாட்ஜை சந்தேகமாக முறைத்துக் கொண்டிருந்த நேரம் அது. பராமாரிப்பாளர் காவல் நிலையத்துக்கு புகார் எழுதுவதாகக் கூறிய ஜான் கவலை தோய்ந்தக் குரலில் இங்கிருந்தே அதை வாசித்தார். “ஐயா, எங்கள் லாட்ஜை முப்பது குண்டர்கள் ஆக்கிரமித்துள்ளார்கள். கவிஞர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அவர்கள் புரியாத மொழியில் ஆபாசமாக பேசுகிறார்கள்”. சண்டையிடுவதும், கட்டிப்பிடித்து அழுது சமரசமாவதும் மறுபடியும் சண்டையிடுவதுமாக நிகழும் இலக்கிய விசாரங்கள் பற்றிய முறையிடலைத் தொடர்ந்து புகார் மணு இப்படி முடிந்தது. “தயவுசெய்து இந்த குண்டர்களிடமிருந்து லாட்ஜையும் கவிதையையும் காப்பாற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்”. பராமரிப்பாளரின் பதற்றமான முகத்தோடு ஒவ்வொரு வரியும் சரியாக ஒத்துப் போக, அந்த இடமே சிரிப்பில் மூழ்கியது. அது, ஜான் சுந்தரின் இயல்பு – மனிதர்களை கேலிச் சித்திரங்களாக்குவது. காலச்சுவடில் வெளியான அவருடைய “வதனமே சந்திரபிம்பமோ” கட்டுரையிலும் அதை கவனிக்கலாம். எல்லா மனிதர்களுமே அவருக்கு வேறு யாரையோ நினைவூட்டுகிறார்கள் – பிரதானமாக சினிமா கதாபாத்திரங்களை. அவ்விதம், கடைசியில் எல்லோருமே கேரிகேச்சர்கள் ஆகிவிடுகிறார்கள். ஜானுடைய இந்த தனிப்பட்ட இயல்பே “நகலிசைக் கலைஞன்” புத்தகத்தின் அடிப்படை பண்பாகவும் உள்ளது. இந்த நூலே ஒருவகையில் கேரிகேச்சர்களின் பவனிதான்.

பாடகர் ஜான் சுந்தரின் இசைக் குழு அனுபவங்களின் தொகுப்பான “நகலிசைக் கலைஞன்” பல்வேறு மனிதர்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறது. விஸ்தாரமாக அவர்கள் திறமையையும். கீற்றாக அவர்கள் சொந்த வாழ்க்கையையும். கடந்தகால ஏக்கம் மட்டுமே வெளிப்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ள களம் இது. ஆர்க்கெஸ்டிரா கச்சேரி என்பது வெறும் சடங்காக இல்லாமல், பொது சமூகத்தின் கொண்டாட்டமான பொழுதுபோக்குகளில் ஒன்றாகவும் கேளிக்கையாக மட்டும் இல்லாமல் கலை வெளிப்பாடாகவும் இருந்த காலம் பற்றிய சித்திரம் இந்த நூலில் உள்ளது. இங்கே “கலை” எனும் சொல்லை மேற்கோள் குறிகளுக்குள் அடைத்தாக வேண்டும். ஏனெனில் இப்புத்தகத்தை பொருத்தவரை, அதுவே ஆசிரியரின் முதன்மை நோக்கம்.  நகலிசை என்கிறபோதும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் கலைஞர்கள் என்பதை நிறுவுவது. ஒவ்வொரு நபரை – பாடகரோ அல்லது வாத்தியம் இசைப்பவரோ- அறிமுகம் செய்யும்போதும் “கலைஞன்” எனும் வார்த்தையை தவறாமல் உள்ளேக் கொண்டு வந்துவிடுகிறார் ஜான். இல்லாவிட்டால் வாசகர்கள் உடனே அதை மறந்துவிடக்கூடும் என்று ஐயம் கொண்டிருப்பதுப் போல்.  

சுவாரஸ்யமான வாசிப்பனுபவத்தை அளிக்கக்கூடிய இந்த நூல் ஜான் சுந்தரை நல்ல நகைச்சுவை எழுத்தாளராக (humorist) அடையாளம் காட்டுகிறது. நகைச்சுவை எழுத்துப் பற்றி குழப்பமான அபிப்ராயங்களே நம்மில் நிலவுகின்றன. அதன் இலக்கிய பெறுமதியை வரையறுப்பது கொஞ்சம் சிக்கலானது. ஆனால் அந்த வகைமையை யாருமே மறுக்க முடியாது. ஆங்கிலத்தில் இப்போது டேவிட் செடாரிஸ் குறிப்பிடப்படுவதுப் போல், தமிழில் அந்த வகைமையில் தீவிரமாக இயங்கும் எழுத்தாளர்கள் குறைவு (எழுதுவது நகைச்சுவை என்பதைத் தாமும் உணர்ந்திருப்பவர்களை மட்டும் சொல்கிறேன்). சமகால தமிழ் எழுத்தாளர்களில் பேயோன் முக்கியமான ஒரு நகைச்சுவை எழுத்தாளர். ஆனால் அவருடைய எழுத்து அதிகம் பரிபாஷையில் செயல்படுவது (meta jokes). அது  வாழ்க்கையில் இருந்து வருவதல்ல. இலக்கியம் எனும் அறிவுத் துறைக்குள் அதன் மொழிபுகளில் நிகழ்வது.  ஜான் சுந்தர் நேரடியாக மனிதர்களிடமிருந்து தன் நகைச்சுவையை பெற்றிருக்கிறார். இயல்பாக புன்னகைத் தோன்றச் செய்யும் தருணங்களும் தன்னை மீறி வாய்விட்டு சிரிக்க வைக்கும் இடங்களும் “நகலிசைக் கலைஞன்” புத்தகத்தில் இருக்கின்றன. (இங்கிலீஷ் பட்டாம்பூச்சி)

நகைச்சுவை எழுத்தை ஒருவகையான எஸ்கேபிசம் என்பார்கள். நகைச்சுவை எழுத்தின் பிதாமகர்களில் ஒருவரான பி.ஜி.வுட்ஹவுஸ் பற்றியும் அது சொல்லப்படுவதுண்டு. சிலரால் குற்றச்சாட்டாகவும். சிலரால் பாராட்டாகவும். சுபம் போட்டு கதையை முடிக்க வேண்டிய கட்டாயம் அந்த பாணி எழுத்தில் உண்டு. ஆனால் ஜானுடைய இந்த நூல் வெறும் மகிழ்ச்சியான கதைகளினால் மட்டும் ஆனதல்ல. கடந்தகாலம் எப்போதுமே பொன்னையும் பொன் வெளிரி கருமைப் படர்ந்த தேய்மானத்தையும் ஒருங்கேக் கொண்டது. ஆர்க்கெஸ்டிரா தொழில் மெல்ல காலாவதியாகும் சித்திரத்தையும் இந்த நூல் வரைந்தெடுக்கிறது. மண்டபத்தை வாடகைக்கு எடுத்து ஒத்திகை பார்த்த நாட்கள் இல்லாமல் போகின்றன. கேஸட் போட்டு பாடுவது பிரபலமாகிறது. (மேக்கரீனா) . பாடல் ரசனையோடு சம்பந்தமில்லாத தரகர்களால் தொழில் இயக்கப்படுகிறது (யாழ்ப்பாணன்). காலமாற்றத்துக்கு அப்பால் மனிதர்கள் விதியால் தோற்றுப் போகும் கதைகளும் இதில் காணக் கிடைக்கின்றன. ஆனால் நம் காதுகளோ இப்படி மாற்றங்களின் பல கதைகளை கேட்டு சலித்திருப்பவை. தோற்றுப் போனவர்களின் கதைமேல் தன்னிசையாக கற்பனாவாத அம்சம் கூடிவிடுகிறது. கிதார் கையில் இருப்பதனாலேயே காதலன் தோரணை வந்து சேர்வதுப் போல். தீவிரமான உணர்வெழுச்சி இல்லாத கற்பனாவாதம் என்பது மிகை மட்டுமே. ஜான் இந்த புத்தகத்தில் தேர்ச்சியோடு அந்த இடங்களை கையாள்கிறார். (அப்படியல்லாத இடங்களும் உள்ளன).

துயருற்றவர்களின் கதையை சொல்லும்போது ஜானின் நடை அன்றாடத்திலிருந்து சரித்திர வழக்குக்கு போய்விடுகிறது (பூக்கமழ் தேறல்). கவிஞர்கள் கண்டராதித்தன், இசை முதலியோர் தம் கவிதைகளில் பழைய இலக்கிய நடையை போலச் செய்து அதன் வழியே அன்றாடத்தின் முரண்களை பகடி செய்வதுப் போல் ஜானின் நடையும் இங்கே மாறுகிறது. நடை மாத்திரம் அல்ல; மனிதர்களே காவிய நாயகர்களாகவும் உருவகம் செய்யப் படுகிறார்கள். (ராகதீபம் ஏற்றும் நேரம்) விளைவாக, மொழி நடையின் பொருத்தமின்மை வாழ்வின் பொருத்தமின்மையை துல்லியமாக சுட்டிக் காட்டிவிடுகிறது.  அது திட்டமிட்டு செய்யப்பட்டிருப்பதுப் போல் படவில்லை. ஆனால் மொழி தன்னளவில் கொள்ளும் உருமாற்றத்திலேயே எழுத்தின் ரகசியம் பொதிந்துள்ளது என நம்புகிறேன். அது எவ்வளவு சிறிய விஷயமாக இருந்தாலும் சரி. போலவே, சிரத்தைக் குறைவாக ஜான் மொழியை கையாளும் இடங்களும் இருக்கவேச் செய்கின்றன. புத்தகத்தின் இன்னொரு முக்கியமானக் குறை. அனுபவப் பகிர்வுகள் வெறும் துணுக்குகளாக எஞ்சிவிடுவது. ஒவ்வொரு பகுதியை படிக்கும்போதும் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளோடு அதை இணைப்பதற்கான சாத்தியங்கள் தென்பட்டாலும் அவை விரிவாக்கம் கொள்ளாத நிலையிலேயே உள்ளன. ஒட்டுமொத்தமாக ஒரு சித்திரத்தை –கால வேறுபாட்டில், சமூக அளவில்- உருவாக்கி எடுப்பதற்கு போதிய கவனம் செலுத்தப்படவில்லை. மேலும் “ஜெய் இண்டிகேட்டர்”  போன்ற சில பகுதிகளில் நகைச்சுவை விளைவற்ற உத்தேசமாக மட்டும் நின்றுவிடுகிறது. ஆசிரியர் எதிர்பார்க்கும்படி நம்மால் அங்கு சிரிக்க முடியவில்லை.

இசைக்குழுவினரின் கலைத்தன்மையை இசை நுட்பங்கள் சார்ந்து இப்புத்தகம் எந்த அளவுக்கு நிறுவியுள்ளது என்பதை என்னால் சரியாக சொல்ல முடியவில்லை. இசைத்துறை சார்ந்தவர்கள் சரியாக சொல்லக்கூடும். ஆனால் இசை சார்ந்த குறிப்புகளைவிடவும் மனிதர்களே இதில் நேர்த்தியாக திரண்டு வந்திருப்பதாகப் படுகிறது. மனிதர்களுக்கு அதிகம் முக்கியத்துவமும் அளிக்கப்பட்டுள்ளது. அது ஒருவகையில் அவசியமானது என்றே நினைக்கிறேன். காரணம், கலை என்பது தனித் திறமையோடு மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல; ஓரெல்லைவரை தனி ஆளுமைக்கும் அதில் பங்கிருக்கிறது.

இப்புத்தகத்தில் கதை மாந்தர்களை நாம் சந்திக்கும் இடங்களை விசேஷமாக சுட்டிக் காட்ட வேண்டும்.  ஒத்திகை நடக்கும் இடத்தில் நாம் அவர்களை எதிர்கொள்கிறோம். அல்லது நிகழ்ச்சி மேடையில். அல்லது டீக்கடையில்.  அல்லது கச்சேரி முடிந்து திரும்பி வரும் தனித்த இரவுகளில். இப்படி எல்லோரையும் வீடற்ற நிலையிலேயே நாம் சந்திக்க நேர்கிறது. அல்லது வீடு அவர்களை புறக்கணிக்கும் இடத்தில். ஜான் இங்கே ஒரு குட்டி உலகை சமைக்கிறார். “வெள்ளி”, “கிச்சடி” என்று தன்வரையில் ஒரு தனிமொழியோடு அவ்வுலகு இயங்கிக் கொண்டிருக்கிறது. மேடையில் நாக்கு உளறுவது. தாளத்தை சரியாக தொடர்வது. கச்சேரி தினங்களை சரியாக அமைப்பது என்று தனிப் பிரச்சனைகளில் அது உழல்கிறது. பாடல்கள் பற்றி மட்டுமே சதா அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பட்டப்பெயர் இல்லாத மனிதரே அங்கில்லை. சொந்த வாழ்க்கையின் அடையாளத்தை உதற விரும்புவதுப் போல் எல்லோரும் வேறு பட்டங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். பொதுவிலிருந்து தனித்திருக்கும் உலகம் அது.



“கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும்” என்பது கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியனுடைய கட்டுரைத் தொகுப்பொன்றின் தலைப்பு. அந்த வாசகம் அடிக்கடி என் நினைவில் வருவதுண்டு – முகத்தில் மோதும் வெளிப்படையான உண்மைத்தன்மையால். இந்த நூலில் இருப்பவர்கள் எல்லோருமே நமக்கு கலைஞர்களாகவே தெரிகிறார்கள். ஏனென்றால் எல்லோருமே பொதுவிலிருந்து தனித்திருக்கிறார்கள். பயிற்சி, தூய்மைவாதம், இயற்கையான மலர்ச்சி என்று கலையின் எல்லா முகங்களும் அவர்களிடம் வெளிப்படுகிறது. போதையின் தீண்டலுக்கு பலியாகும் பெருந்திறமை அங்கிருக்கிறது. அவர்களுடைய நகைச்சுவை, துடுக்குத்தனங்கள், மீறல்கள் எல்லாமே கலையின் பகுதியாகவே உள்ளன. கலை எப்போதுமே அப்படி தனி விதிகளோடு குறுங்குழுக்களிலேயே வாசம் செய்ய முடியும். எனவே அதில் கிறுக்குத்தனத்தை தவிர்க்க முடியாது. அதனால்தான் உலகத்திலேயே ஆகச் சிறந்த வேலை ஆர்க்கெஸ்டிராவில் பாடுவது என நம்புகிறார் ஆறுமுகச்சாமியண்ணன். (புளிசேரி). அவரை சாலையில் எதிர்கொள்ளும் ஜானுக்கு தோன்றுகிறது – இந்த கிறுக்கனுக்கு ஒரு முத்தம் கொடுத்தால் என்னவென்று. ஆனால் அது அவருக்கு சாத்தியப்படவில்லை. நேரில் அவரைத் திட்டியே அனுப்ப வேண்டி வருகிறது. இப்புத்தகத்துக்கான உந்துதலை அந்த இடத்தில் என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. தான் மனதால் விரும்பிய எல்லாக் கிறுக்கர்களுக்கும் ஜான் சுந்தர் கொடுத்திருக்கும் முத்தமே இத்தொகுப்பு.

No comments:

Post a Comment