Monday 31 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 7 – மணற் துகளோடு நிகழும் பார்வை (விஸ்லவா ஷிம்போர்ஸ்கா)

 செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “பொருளின் ரகசியம்” (the secret of a thing) எனும் பிரிவில் போலீஷ் கவிஞரான விஸ்லவா ஷிம்போர்ஸ்காவின் (1923 – 2012) “மணற்துகளோடு நிகழும் பார்வை” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. விஸ்லவா ஷிம்போர்ஸ்கா 1996ம் வருடம் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவர்.

செஸ்லா மிலோஷ் தன் மனதுக்கு நெருக்கமான கவிதைகளை மட்டுமே இந்த புத்தகத்தில் தொகுத்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. கவிதையின் வெவ்வேறு ரூபங்களை அடையாளம் காட்டும் நூல் என்றே இதை அடையாளப்படுத்த வேண்டும். ஆகவே, தேர்வு செய்திருக்கும் கவிதை மீது விமர்சனம் இருந்தால் அதை மிலோஷ் தன் சிறுகுறிப்பில் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. நவீனத்துவ தொழில்நுட்பம் மேல் தனக்கு நம்பிக்கை இல்லை என ஓர் இடத்தில் அவர் சொல்வது நல்ல உதாரணம். ஷிம்போர்ஸ்காவின் கவிதையில் வெளிப்படும் நான், மற்றமை எனும் பிரிவினையை கூர்மையாகத் தொட்டுக் காட்டியிருக்கிறார் மிலோஷ். “இதுதான். இப்படித்தான்” என்று வரையறுப்பது சில நேரங்களில் வன்முறை. “இது இல்லை. இப்படி இல்லை” என்பது வேறு சில நேரங்களில் வன்முறை. 

o

“இலக்கிய வகைமைகளுக்கு நடுவிலான எல்லைக் கோடு மங்கலாகும்படி ,இருபதாம் நூற்றாண்டில் கவிதை, ஒரு திசையில், தத்துவக் கட்டுரைகளின் இடம் நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. கருத்துருவமாவது கவிதைக்கு ஆபத்து என்றாலும் இந்த போக்கு பிரபஞ்சத்தின் கட்டுமானம் பற்றிய அடிப்படைக் கேள்விகளை கேட்பதற்கு வழி செய்திருக்கிறது. விஸ்லவா ஷிம்போர்ஸ்காவின் கவிதை மனிதனை (அதாவது மொழியை) ஜடப்பொருட்களின் உலகுக்கு எதிர் நிலையில் நிறுத்துவதன் வழியே நம் புரிதலை மாயை என்கிறது. தனிப்பட்ட முறையில், விஸ்லவா ஷிம்போர்ஸ்கா மிகவும் அறிவியல்பூர்வமாக சிந்திப்பதாகவும், நாம் அந்த அளவுக்கு பொருட்களிடமிருந்து பிரிந்து இருக்கவில்லை என்றும் நான் எண்ணுகிறேன்” – செஸ்லா மிலோஷ்



மணற் துகளோடு நிகழும் பார்வை

நாம் அதை மணற் துகள் என்று அழைக்கிறோம்.

ஆனால் அது தன்னை துகள் என்றோ மணல் என்றோ அழைத்துக் கொள்வதில்லை.

பெயர் இல்லாமலேயே அது இயல்பாய் இருக்கிறது

பொதுவாகவோ குறிப்பிடும்படியாகவோ

நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ

தவறாகவோ அல்லது பொருத்தமாகவோ

எந்த பெயரும் இல்லாமலேயே அது இயல்பாய் இருக்கிறது


நம் பார்வையோ, நம் தொடுகையோ அதற்கு ஒரு பொருட்டே அல்ல

அது பார்க்கப்பட்டதாவோ தொடப்பட்டதாகவோ உணர்வதில்லை

ஜன்னல் சட்டத்தின் மேல் அது விழுந்திருப்பது

நம்முடைய அனுபவம் தானேத் தவிர, அதனுடையதல்ல

இன்னொரு இடத்தில் விழுவதற்கும் இங்கே விழுந்திருப்பதற்கும் அதன் அளவில் ஒரு வேறுபாடும் கிடையாது

அது விழுந்து முடித்துவிட்டது என்பதற்கோ அல்லது

இன்னும் விழுந்துக் கொண்டிருக்கிறது என்பதற்கோ எந்த உத்தரவாதமும் இல்லை


இந்த ஜன்னல் வழியே ஏரியின் காட்சியை அழகாய் பார்க்க முடிகிறது

ஆனால் அந்த பார்வை, தானே எதையும் பார்ப்பதில்லை

அது இந்த உலகில் இருக்கிறது 

வண்ணம் இல்லாமல், உருவம் இல்லாமல்

ஓசை இல்லாமல், வாசம் இல்லாமல், மேலும் வலியும் இல்லாமல் 


ஏரியின் தரை தரையில்லாமல் இருக்கிறது

ஏரியின் கரை கரையில்லாமல் இருக்கிறது

அதன் நீர், ஈரத்தையோ அல்லது வறட்சியையோ உணர்வதில்லை

தன்னுள் திரும்பும் அதன் அலைகள் ஒருமையையோ அல்லது பன்மையையோ உணர்வதில்லை

சிறிதுமிலாத பெரிதுமிலாத கூழாங்கற்கள்மேல்

அலைகள் மோதும் சொந்த இரைச்சல் அவற்றுக்கு கேட்பதில்லை


இயல்பில், வானமற்றதாய் இருக்கும் வானத்திற்கு கீழே இவை எல்லாம் நிகழ்கின்றன

அங்கே சூரியன் மறையாமல் மறைகிறது

அக்கறையில்லாத மேகத்துக்கு பின்னால் ஒளியாமல் ஒளிகிறது

காற்று அதை கலைக்கிறது. காற்றுக்கு ஒரே காரணம்தான்.

அது வீசுதல் மட்டுமே.


ஒரு நொடி கடக்கிறது

இரண்டாவதாக ஒரு நொடி கடக்கிறது

அப்புறம் மூன்றாவதாக ஒரு நொடி

ஆனால் நமக்கு மட்டுமே அவை மூன்று நொடிகளாய் இருக்கின்றன


அவசரச் செய்தியை கொண்டு வரும் தபால் போல நேரம் கடந்துவிட்டிருக்கிறது

ஆனால் அந்த உவமை நாம் உருவாக்கியது.

கதாபாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அவன் அவசரம் உண்மைப் போல் உருவாக்கப்பட்டது.

அவன் செய்தி மனிதத்தன்மை இல்லாதது.


No comments:

Post a Comment