Thursday 27 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 4 – அறிவிப்பு (ஸ்டீவ் கொவிட்)

 செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “மக்கள் மத்தியில் மக்கள்” (people among people) எனும் பிரிவில் அமெரிக்க கவிஞரான ஸ்டீவ் கொவிட்டின் (1938 –2015) “அறிவிப்பு” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது.

“நாம் உணர்வதையே பிறரும் உணரும்படிக்கு மனித உணர்ச்சிகள் பொதுவாய் இருப்பதால், தனித்தன்மையின் பிரிவினை வழியே நம்மை மூடிவைத்துக் கொள்வது தவறு என்பதற்கும் நாம் ஒவ்வொருவரும் நம் சகமனிதரை போன்றவரே என்கிற அறிதலுக்கும் என்ன அர்த்தம்? அதன் பொருள் , தவிர்க்க முடியாத அடிப்படை நியதியான நம் மரணத்தை, அந்த பொது விதியை சிறுதருணத்திலாவது நம்மால் கூர்மையான முறையில் அனுபவத்தில் உணர முடிகிறது என்பதே ஆகும். கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த கவிஞர் ஸ்டீவ் கொவிட், நகைச்சுவையான இந்த தீவிரக் கவிதையில் வசப்படுத்தியிருக்கும் விஷயம் மிக வெளிப்படையானது. ஆனால் அரிதாக மட்டுமே வசப்படுவது.” – செஸ்லா மிலோஷ்


அறிவிப்பு

ஒரு வருஷத்துக்கும் மேலாக நான் ஒவ்வொரு நாளும் உடுத்திவந்த
அந்த உறுதியான லெவிஸ் ஜீன்ஸ்
தீடீரென்று கிழிந்துவிட்டது.
கடைசிவரையிலும் அது
நல்ல நிலையில் இருப்பதுப் போல்தான் தெரிந்தது.
ஏன் என்றோ எப்படி என்றோ தெரியவில்லை.
ஆனால் அந்த கிழிசல் அங்கே இருந்தது : கால்களுக்கு நடுவே ஒரு பெரிய ஓட்டை.
ஒரு மாதத்துக்கு முன்னால் என் நண்பன் நிக்,
விளையாட்டு மையத்திலிருந்து
குளித்து முடித்து
எளிய ஆடைகளுக்கு மாறி
வீட்டுக்கு நடந்து வரும்போது பாதி வழியில் சரிந்து விழுந்து இறந்துவிட்டான்.
இதை படித்துக் கொண்டிருப்பவரே, எச்சரிக்கையை கண்டு கொள்ளுங்கள்.
இப்போதே முழந்தாளிடுங்கள்.
கவிஞர் கிறிஸ்டோபர் ஸ்மார்ட் போல
மண்டியிட்டு நிலத்தை முத்தமிடுங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள்.
நேரத்தை ஒழுங்காய் பயன்படுத்துங்கள்.
எல்லோரிடமும் அன்பாய் இருங்கள்.
அன்புக்கு தகுதி இல்லாதவர்களிடமும் அன்பாய் இருங்கள்.
அது நடக்கும் என்று
நீங்கள் நம்பாமல் இருக்கலாம்.
ஆனால் ஓரு நாள் நீங்களும் மறைந்துவிடுவீர்கள்.
காரணமே இல்லாமல்
கால்கள் நடுவே கிழிந்துப் போன, லெவிஸ் ஜீன்ஸை வைத்திருக்கும்
நான், உத்தரவாதமாய் சொல்ல முடியும்
அது நிச்சயம் நடக்கப் போகிறது.
இந்த செய்தியை கடத்துங்கள்.

 

No comments:

Post a Comment