Wednesday 26 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 3 – ஓர் ஏழை மூதாட்டிக்கு (வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “மக்கள் நடுவே மக்கள்” (people among people)  எனும் பிரிவில் அமெரிக்க நவீனத்துவ கவிஞரான வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸின் (1883 – 1963) “ஓர் ஏழை மூதாட்டிக்கு” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. கார்லோஸ் வில்லியம்ஸ் படிமக் கவிதைகளுக்காக புகழ்பெற்றவர். வெளிப்பாட்டில் நேரடித் தன்மை. உணர்ச்சி மிகாத சிக்கனமான மொழி. ஒற்றை படிமம் வழியே தன் சாரத்தை வெளிப்படுத்துவது. இவற்றை படிமக் கவிதைகளின் பொது குணாம்சங்கள் எனலாம்.  

“வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் அமெரிக்க கவிதையையே மாற்றியமைத்தார் என்று சொல்வது உண்மையான கருத்தே. சமகால பேச்சு மொழியிலிருந்து தனக்குரிய தனி வடிவத்தை அவர் கண்டடைந்தார். அதன் அறிமுகமே அமெரிக்க கவிதையை மாற்றியது. கிட்டத்தட்ட சுவாசத்தின் தாளத்தை அடிப்படையாக கொண்டது அவர் மொழி. அதை விட முக்கியமானது, மக்கள் நடுவே வாழ்வதற்கு கார்லோஸ் வில்லியம்ஸ் கொண்டிருந்த விருப்பம். அந்த குணம் அவருக்கு அளிக்கப்பட்ட கொடை. பரிவுணர்ச்சியின், பச்சாதாபத்தின் அடிப்படையில் அவரை வால்ட் விட்மனின் வாரிசு என்று சொல்லலாம். ஒருவேளை அதனால்தான் தன் பிறப்பிடமான ரூதர்போர்ட், நியூ ஜெர்சியிலேயே மருத்துவராய் பணி புரிய அவர் விரும்பினார் போலும். அவர் எல்லாவற்றையும் பார்க்கக்கூடியவராகவும் கவனிக்கக்கூடியவராகவும் அவதானிப்பவராகவும் இருந்தார். யதார்த்தம் பற்றிய தன் குறிப்புகளை எழுத ஆக எளிமையானச் சொற்களை தேர்வு செய்யவே அவர் எப்போதும் முயன்றார்” - செஸ்லா மிலோஷ்


ஓர் ஏழை மூதாட்டிக்கு

தெருவில் பிளம் பழங்களை
கொறித்துக் கொண்டிருக்கும் [ஓர் ஏழை மூதாட்டிக்கு].
அவள் கையில்
ஒரு காகிதப் பை முழுக்க
பிளம் பழங்கள்

அவை இனிய சுவையை அவளுக்கு வழங்குகின்றன
அவை இனிய சுவையை
அவளுக்கு வழங்குகின்றன. அவை சுவையை
இனிமையை அவளுக்கு வழங்குகின்றன  

உறிந்து சுவைத்தும் கையில் மீதமிருக்கும்  
அந்த பாதி பிளம் பழத்துக்கு
அவள் தன்னையே ஒப்புக்கொடுக்கும் விதத்தில்
அதை நீங்கள் பார்க்கலாம்

சமாதானமுற்றிருக்கிறாள் அவள்.
பழுத்த பிளம் பழங்களிலிருந்து ஓர் ஆறுதல்
காற்றை நிரப்புவதுப் போலிருக்கிறது
அவை இனிய சுவையை அவளுக்கு வழங்குகின்றன

0

ஒளி மின்னும் பொருட்கள் 2 – இரண்டு பேரிக்காய்கள் பற்றிய ஆய்வு (வாலேஸ் ஸ்டீவன்ஸ்)


ஒளி மின்னும் பொருட்கள் 1 – மேக்சிமஸ் (டி.எச்.லாரன்ஸ்)

No comments:

Post a Comment