Friday 28 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 5 – காட்டு வாத்துகள் (மேரி ஆலிவர்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில்“இயற்கை” எனும் பிரிவில் அமெரிக்க கவிஞரான மேரி ஆலிவரின் (1935 – 2019) “காட்டு வாத்துகள்” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. இயற்கையை மையப்படுத்தி தன் கவியுலகை சமைத்துக் கொண்டவர் மேரி ஆலிவர்.

“இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தில் எண்ணற்று பதிவான மறுப்புவாத (nihilism) அனுபவங்களை பார்க்கையில், இயற்கையுடனான தொடர்பையும் அதன் வழியே மனிதர்கள் உணர்ந்துகொள்ளும் ஞானத்தையும் ஒருவர் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த அனுபவங்களுக்கு தர்க்கபூர்வமான விளக்கங்கள் கிடையாது. பிரபஞ்சமயமான ஒரு தாளத்தை உணர்ந்துகொள்வதே இதில் மிக முக்கியமானது. நாமும் அந்த தாளத்தில் ஒரு பகுதியே. அதற்கு நம் ரத்தவோட்டத்துக்கே நாம் நன்றி சொல்ல வேண்டும். மேரி ஆலிவரின் இந்த கவிதையில் நன்மை, தீமை, குற்றவுணர்ச்சி, மனக்கசப்பு எல்லாமே மனித உலகுக்குரியவையாக உள்ளன.  அதற்கப்பால் உள்ள இன்னோர் அகன்ற உலகம் தன் இருப்பையே மானுடத் துயரங்களை கடப்பதற்கான அழைப்பாக மாற்றியிருக்கிறது” - செஸ்லா மிலோஷ்

Mary Oliver

காட்டு வாத்துகள்

நீங்கள் நல்லவராய் இருக்க வேண்டியதில்லை.
நீங்கள் பாவங்களுக்கு வருந்தி, நூறு மைல்கள் பாலைவனத்தில் 
மண்டியிட்டு நடக்க வேண்டியதில்லை.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் உடலில் இருக்கும் அந்த மென்மையான விலங்கு, 
எதை நேசிக்கிறதோ அதை நேசிக்க அனுமதிப்பது மட்டும்தான்.
உங்களுடைய மனக்கசப்பை என்னிடம் சொல்லுங்கள். நான் என்னுடையதை உங்களிடம் சொல்கிறேன்.
இதற்கிடையே, உலகம் தன்னியல்பில் இயங்கியபடி உள்ளது.
இதற்கிடையே, சூரியனும் தெளிந்த கூழாங்கல் போன்ற நீர்த் துளிகளோடு மழையும்
நிலப் பரப்புகளை கடந்துச் செல்கின்றன
நெடுமரங்களுக்கும் புல்வெளிகளுக்கும் மேலே
மலைகளுக்கும் நதிகளுக்கும் மேலே அவை செல்கின்றன
இதற்கிடையே, உயரே சுத்தமான நீல வானில் காட்டு வாத்துகள்,
மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றன.
நீங்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு தனிமையில் இருந்தாலும்,
இந்த உலகம் உங்கள் கற்பனைக்கு தன்னை ஒப்புக் கொடுத்தபடியே உள்ளது.
காட்டு வாத்துக்கள் போல் பரவசத்தோடும் பயங்கரத்தோடும்
அது உங்களை மீள மீள அழைக்கிறது
பொருட்களின் வரிசையில் உங்கள் இடத்தை அறிவித்தபடி.

No comments:

Post a Comment