Sunday 23 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 1 – மேக்சிமஸ் (டி.எச்.லாரன்ஸ்)

ஒளி மின்னும் பொருட்களின் நூல் எனும் தலைப்பில் போலீஷ் அமெரிக்க கவியான செஸ்லா மிலோஷ் (1911 - 2004) வெவ்வேறு உலக மொழிகளில் இருந்து கவிதைகளை தேர்ந்தெடுத்து ஒரே புத்தகமாக தொகுத்து அளித்துள்ளார். ஒவ்வொரு கவிதைக்கும் மிலோஷ் அவர்களே சில வரிகளில் குறிப்பும் கொடுத்திருக்கிறார். செஸ்லா மிலோஷ் 1980ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவர். மெய் வெளிப்பாடு, பயணம், தருணம், விடைபெறல் என்று பல உபதலைப்புகளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

O
மெய் வெளிப்பாடு (epiphany) எனும் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் ஆசிரியர் டி.எச்.லாரன்ஸின் (1885-1930) "மேக்சிமஸ்" கவிதை பற்றிய மிலோஷின் குறிப்பு.

“டி.எச்.லாரன்ஸ் தன் மேக்சிமஸ் கவிதை வழியே பல்வகைப்பட்ட கடவுள்களின் உலகுக்கு திரும்புகிறார். கிரேக்கத் தொன்மமான ஹெர்ம்ஸ் நம்மை நேரில் வந்து சந்திப்பதுப் போன்ற திடுக்கிடலை, அவரை அடையாளம் கண்டுகொண்ட அதிர்ச்சியை இக்கவிதை ஏற்படுத்துகிறது. அந்த அளவுக்கு இக்கவிதை ஆற்றல் மிக்கதாய் உள்ளது. மேக்சிமஸ், ரோமானிய பேரரசர் ஜீலியனின் ஆசிரியராய் இருந்த ஒரு தத்துவவாதி. பண்டைய பாகன் வழிபாட்டு முறையை மறுநிர்மாணம் செய்ய முயன்றதால் நம்பிக்கை பிறழ்ந்தவர் (apostate) என்று அழைக்கப்பட்டார் மேக்சிமஸ்.


மெய் வெளிப்பாடு (epiphany) என்பது வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளுக்கிடையே அமையும் ஒரு விசேஷமான தருணத்தை குறிக்கிறது. அதுவரை நாம் கவனித்திராத ஒரு பொருள் திடீரென்று அப்போது தன்னை வெளிப்படுத்துகிறது. அதன் வழியே வாழ்க்கை நிகழ்வுகளின் மர்மம்கூடிய ரகசியப் பக்கத்தின் அறிவிப்பாக அந்த பொருள் மாறுகிறது. ஒருவகையில் கவிதை என்பது யதார்த்தத்தின் பாரத்தை உடைத்து ஒரு புதிய பிரதேசத்தினுள் நுழையும் செயல். அப்பிரதேசத்தில் சாதாரண பொருட்கள் யாவும் ஒரு குழந்தையின் பார்வையில் தெரிவதுப் போல் மிகப் புதிதாய் பிறப்பெடுத்துள்ளன.”

 O

மேக்சிமஸ்
சூரியனையும் நிலவையும்விட மூத்தவர் கடவுள்
கண்ணால் அவரை காண முடியாது
குரலாலும் அவரை விவரிக்க முடியாது

ஆனால் இங்கோ ஓர் அன்னியர், ஒரு நிர்வாண மனிதர், கதவில் சாய்ந்து நிற்கிறார்
மேலங்கி கையில் கிடக்க, உள்ளே அழைக்கப்படுவதற்காக அவர் காத்திருக்கிறார்
எனவே நான் அவரை உள்ளே அழைத்தேன்: உங்களுக்கு விருப்பம் என்றால், உள்ளே வாருங்கள்!
அவர் மெதுவாக உள்ளே வந்து கணப்பின் அருகே அமர்ந்தார்
நான் அவரிடம் கேட்டேன் – உங்கள் பெயர் என்ன?
பதில் சொல்லாது என்னை அவர் நோக்கினார், ஒருவகை இனிய பொலிவு
என்னுள் நுழைந்தது, நான் எனக்குள் புன்னகைத்தபடி கூறினேன் : அவர் கடவுள்!
அவர் சொன்னார் : ஹெர்ம்ஸ்!

சூரியனையும் நிலவையும்விட மூத்தவர் கடவுள்
கண்ணால் அவரை காண முடியாது
குரலாலும் அவரை விவரிக்க முடியாது
எனினும் இதுதான் கடவுள் ஹெர்ம்ஸ், என் கணப்பின் அருகே அமர்ந்திருப்பவர்


* கிரேக்க தொன்மமான ஹெர்ம்ஸ், கடவுளாகவும் கடவுளின் செய்தியாளராகவும் வழிபடப்படுவர். அவ்வகையில் கடவுளுக்கும் மனிதனுக்கும் நடுவிலான எல்லைகள் கடக்கப்படுவதன் குறியீடாக அவர் இருக்கிறார்.

No comments:

Post a Comment