Monday 24 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 2 – இரண்டு பேரிக்காய்கள் பற்றிய ஆய்வு (வாலேஸ் ஸ்டீவன்ஸ்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “பொருளின் ரகசியம்” (secret of a thing)  எனும் பிரிவில் அமெரிக்க நவீனத்துவ கவிஞரான வாலேஸ் ஸ்டீவன்ஸின் (1879 – 1955) “இரண்டு பேரிக்காய்கள் பற்றிய ஆய்வு” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது.

“அறிவியல்மீதும், அறிவியல் முறைமைகள்மீதும் பற்றுதல் கொண்டிருந்தவர் வாலேஸ் ஸ்டீவன்ஸ்.  யதார்த்தம் சார்ந்த அவருடைய கவிதைகளில் ஓர் ஆராய்ச்சி பார்வை தென்படுகிறது. ஒரு பொருளை மின்னல் வெட்டில் கைப்பற்ற முயன்ற ஜென் கவிஞர் பாஷோவின் அறிவுரைக்கு நேரெதிரானது இது. இரண்டு பேரிக்காய்களை, ஏதோ வேற்றுலகப் பொருள் போல், விவரிக்க முயற்சிக்கும் ஸ்டீவன்ஸ் அவற்றின் அடிப்படை பண்புகளை ஒவ்வொன்றாக பட்டியலிடுகிறார். ஒரு கியூபிச பாணி ஓவியத்துக்கு நெருக்கமாக தன் ஆராய்ச்சியை முன்வைக்கிறார். எனினும் பேரிக்காய்கள் விவரிக்க முடியாத பொருளாகவே எஞ்சுகின்றன” செஸ்லா மிலோஷ்

வாலேஸ் ஸ்டீவன்ஸ்

இரண்டு பேரிக்காய்கள் பற்றிய ஆய்வு

1.

அறிவுறுத்தும் சிறிய வேலை.
பேரிக்காய்கள் வயலின்கள் அல்ல
நிர்வாண உடல்களோ போத்தல்களோ அல்ல
அவை, வேறு எந்த பொருளையும் ஒத்திருப்பவை அல்ல

2.

அவை மஞ்சள் உருவங்கள்
வளைவுகளால் ஆனவை
கீழ்பகுதியில் விரிந்து செல்பவை
சிகப்புத் தீண்டல் கொண்டிருப்பவை

3.
அவை தட்டை பரப்புகள் அல்ல
வளைந்த கோடுகள் உடையவை
உருண்டையானவை
மேல்பகுதியில் குறுகிக் கொண்டேச் செல்பவை

4.
அவை வடிவமைக்கப்பட்ட விதத்தில்
அங்கங்கு நீலச் சாயைகள் படிந்துள்ளன
காய்ந்து இறுகிய இலையொன்று
அதன் கிளைமேல் தொங்கிக் கொண்டிருக்கிறது

5.
மஞ்சள் ஒளிவிடுகிறது
தன் உடல் மேல் பூ மலர
வெவ்வேறு மஞ்சள் நிறங்களிலும்
எலுமிச்சை நிறங்களிலும், ஆரஞ்சுகளிலும், பச்சைகளிலுமாய்
அது ஒளிவிடுகிறது

6.
பேரிக்காய்களின் நிழல்கள்
பச்சைத் துணியில் பொட்டுக் கறைப் போல் படிகின்றன
பேரிக்காய்கள் காணப்படுவதேயில்லை
பார்வையாளரின் விருப்பத்தின்படி

* ”அறிவுறுத்தும் சிறிய வேலை” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும், இக்கவிதையின் முதல் வரி லத்தீன் மொழியில் உள்ளது. “Opusculum Paedagogum”.

ஒளி மின்னும் பொருட்கள் 1 – மேக்சிமஸ் (டி.எச்.லாரன்ஸ்)

No comments:

Post a Comment