Wednesday, 2 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 9 – பேச்சு (வில்லியம் ஸ்டான்லி மெர்வின்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “மக்கள் மத்தியில் மக்கள்” (people among people) எனும் பிரிவில் அமெரிக்க கவிஞரான வில்லியம் ஸ்டான்லி மெர்வினின் (1927 – 2019) “பேச்சு” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது.  

“வாழ்வின் எல்லா தருணங்களிலும் நாம் மானுடத்தின் கடந்தகாலத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறோம். மானுடத்தின் கடந்த காலம் என்பது முதன்மையாக மொழியே. எனவே, பின்னனியில் இடைவிடாது ஒலிக்கும் கூட்டுக் குரல்களுடனே நாம் வாழ்ந்து வருவதால், இதுவரை பேசப்பட்ட அனைத்து விஷயங்களின் இருப்பையும் கற்பனை செய்வது சாத்தியமானதே ” – செஸ்லா மிலோஷ்


Tuesday, 1 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 8 – கவிதை வாசிப்பு (அன்னா ஸ்விர்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “சூழ்நிலை” (situation) எனும் பிரிவில் போலீஷ் கவிஞரான அன்னா ஸ்விர்ரின் (1909 – 1984) “கவிதை வாசிப்பு” சேர்க்கப்பட்டுள்ளது.  



வெவ்வேறு காலக்கட்டங்களை சேர்ந்த வெவ்வேறு கவிஞர்களை மிலோஷ் தன் நூலில் தொகுத்திருக்கிறார். மேற்கத்திய படைப்புகள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்தாலும் சீனம் ஜப்பான் போன்ற கீழைத்தேய நாடுகளிலிருந்தும் கணிசமான அளவில் கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. லாவோ ட்சு, ரூமி போன்ற பண்டையக் குரல்களில் தொடங்கி நவீன ஆளுமைகளான வாலேஸ் ஸ்டீவன்ஸ், தாமஸ் டிரான்ஸ்ட்ரோமர் வரை நீளும் கவிஞர்களை வாசிக்கும்போது சமயங்களில் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. நூறு நூறு வருஷங்கள் வெட்டி வெட்டி மறையும்போது உண்டாகும் திணறல் அது.  அல்லது ஒரே இடத்தில் நூற்றாண்டுகளாக இருப்பதன் திணறல்.

Monday, 31 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 7 – மணற் துகளோடு நிகழும் பார்வை (விஸ்லவா ஷிம்போர்ஸ்கா)

 செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “பொருளின் ரகசியம்” (the secret of a thing) எனும் பிரிவில் போலீஷ் கவிஞரான விஸ்லவா ஷிம்போர்ஸ்காவின் (1923 – 2012) “மணற்துகளோடு நிகழும் பார்வை” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. விஸ்லவா ஷிம்போர்ஸ்கா 1996ம் வருடம் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவர்.

செஸ்லா மிலோஷ் தன் மனதுக்கு நெருக்கமான கவிதைகளை மட்டுமே இந்த புத்தகத்தில் தொகுத்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. கவிதையின் வெவ்வேறு ரூபங்களை அடையாளம் காட்டும் நூல் என்றே இதை அடையாளப்படுத்த வேண்டும். ஆகவே, தேர்வு செய்திருக்கும் கவிதை மீது விமர்சனம் இருந்தால் அதை மிலோஷ் தன் சிறுகுறிப்பில் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. நவீனத்துவ தொழில்நுட்பம் மேல் தனக்கு நம்பிக்கை இல்லை என ஓர் இடத்தில் அவர் சொல்வது நல்ல உதாரணம். ஷிம்போர்ஸ்காவின் கவிதையில் வெளிப்படும் நான், மற்றமை எனும் பிரிவினையை கூர்மையாகத் தொட்டுக் காட்டியிருக்கிறார் மிலோஷ். “இதுதான். இப்படித்தான்” என்று வரையறுப்பது சில நேரங்களில் வன்முறை. “இது இல்லை. இப்படி இல்லை” என்பது வேறு சில நேரங்களில் வன்முறை. 

o

“இலக்கிய வகைமைகளுக்கு நடுவிலான எல்லைக் கோடு மங்கலாகும்படி ,இருபதாம் நூற்றாண்டில் கவிதை, ஒரு திசையில், தத்துவக் கட்டுரைகளின் இடம் நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. கருத்துருவமாவது கவிதைக்கு ஆபத்து என்றாலும் இந்த போக்கு பிரபஞ்சத்தின் கட்டுமானம் பற்றிய அடிப்படைக் கேள்விகளை கேட்பதற்கு வழி செய்திருக்கிறது. விஸ்லவா ஷிம்போர்ஸ்காவின் கவிதை மனிதனை (அதாவது மொழியை) ஜடப்பொருட்களின் உலகுக்கு எதிர் நிலையில் நிறுத்துவதன் வழியே நம் புரிதலை மாயை என்கிறது. தனிப்பட்ட முறையில், விஸ்லவா ஷிம்போர்ஸ்கா மிகவும் அறிவியல்பூர்வமாக சிந்திப்பதாகவும், நாம் அந்த அளவுக்கு பொருட்களிடமிருந்து பிரிந்து இருக்கவில்லை என்றும் நான் எண்ணுகிறேன்” – செஸ்லா மிலோஷ்



Saturday, 29 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 6 – பெருங்கால்வாயின் வழியே (ஷின் க்வான்)

 செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “பயணம்” எனும் பிரிவில் சீனக் கவிஞரான ஷின் க்வானின் (1049 – 1101) “பெருங்கால்வாயின் வழியே” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. 

“நீர் வழி பயணமானது மற்ற வகை பயணங்களைவிட காலத்தால் மூத்தது. எனவே, கப்பல் பயணத்திற்கு கவிதையில் முக்கியமான இடம் இருக்கிறது. நதிகளுக்கும் கால்வாய்களுக்கும் சீனாவில் உள்ள முக்கியத்துவத்துக்கு சாட்சியாக சீன கவிதையிலும் கப்பல் பயணம் இடம்பெற்றுள்ளது” -செஸ்லா மிலோஷ்

பெருங்கால்வாயின் வழியே

என் சிறிய படகின்
மேற்தளத்தில்
பனித் தூவல்கள் உறைந்திருக்கின்றன
தண்ணீர்
தெளிந்தும் அசைவற்றும் இருக்கிறது
எண்ணிலடங்கா குளிர் நட்சத்திரங்கள்
படகுடன் நீந்தி வருகின்றன
அடர்த்தியான நாணற் புதர் கரையை மறைத்திருக்கிறது
பூமியினையே கடந்துவிட்டதாக நீங்கள் நினைக்கக்கூடும்
அப்போது திடீரென்று கேட்கத் தொடங்குகின்றன
சிரிப்பும் பாடலும்


Friday, 28 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 5 – காட்டு வாத்துகள் (மேரி ஆலிவர்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில்“இயற்கை” எனும் பிரிவில் அமெரிக்க கவிஞரான மேரி ஆலிவரின் (1935 – 2019) “காட்டு வாத்துகள்” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. இயற்கையை மையப்படுத்தி தன் கவியுலகை சமைத்துக் கொண்டவர் மேரி ஆலிவர்.

“இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தில் எண்ணற்று பதிவான மறுப்புவாத (nihilism) அனுபவங்களை பார்க்கையில், இயற்கையுடனான தொடர்பையும் அதன் வழியே மனிதர்கள் உணர்ந்துகொள்ளும் ஞானத்தையும் ஒருவர் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த அனுபவங்களுக்கு தர்க்கபூர்வமான விளக்கங்கள் கிடையாது. பிரபஞ்சமயமான ஒரு தாளத்தை உணர்ந்துகொள்வதே இதில் மிக முக்கியமானது. நாமும் அந்த தாளத்தில் ஒரு பகுதியே. அதற்கு நம் ரத்தவோட்டத்துக்கே நாம் நன்றி சொல்ல வேண்டும். மேரி ஆலிவரின் இந்த கவிதையில் நன்மை, தீமை, குற்றவுணர்ச்சி, மனக்கசப்பு எல்லாமே மனித உலகுக்குரியவையாக உள்ளன.  அதற்கப்பால் உள்ள இன்னோர் அகன்ற உலகம் தன் இருப்பையே மானுடத் துயரங்களை கடப்பதற்கான அழைப்பாக மாற்றியிருக்கிறது” - செஸ்லா மிலோஷ்

Mary Oliver