இந்த சம்பவத்தை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆன்மத் தேடலில் நம்பிக்கை இருக்கிறதா என்று ஒரு நிகழ்ச்சியில் அசோகமித்திரனிடம் கேட்கப்படுகிறது. அதற்கு அவர் அறுபது வருடமாக ஒரு நல்ல டூத்பேஸ்ட்டை தேடிக் கொண்டிருக்கிறேன்; அதுவே கிடைக்கவில்லை என்று பதிலளிக்கிறார். இப்போது எழுதும்போதும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. கூடவே, எவ்வளவு பொருத்தமாக பதில் என்றும் தோன்றுகிறது. சொல்லற்கரிய ஆப்த வாக்கியம் அல்ல அப்பதில். இன்னோர் எழுத்தாளர்கூட அதை சொல்லலாம்தான். ஆனால் இன்னொருவர் சொல்லும்போது மேடை சுவாரஸ்யத்திற்காக மட்டுமே அது உரைக்கப்படுகிறது என்பது உடனடியாக தெரிந்துவிடும். ஆனால் அசோகமித்திரனின் ஆளுமையோடு சேர்கையில் அதுவே இயல்பான பதிலாக -விதூஷனத்தனமற்றதாக- மாறிவிடுகிறது. அவரிடம் நிச்சயம் வேறு பதிலை எதிர்பார்க்க முடியாது என்றும் கருத நேர்கிறது.
Saturday, 25 September 2021
Wednesday, 18 November 2020
முதல் மனிதன்
[1] கவிதை
கவிதை பற்றிய வரையறைகள் நூற்றாண்டுகளாக விவாதப் பொருளாகவே இருந்து வருகின்றன. கவிதையின் பயன்பாடு சார்ந்து மட்டுமில்லை; கவிதை என்றால் என்ன என்பதுகூட துல்லியமாகப் பதில் சொல்ல முடியாத கேள்வியாகவே இருக்கிறது. அல்லது அதன் எல்லா பதில்களிலும் எப்படியோ ஒரு விடுபடல் வந்துவிடுகிறது. பொதுவாக இலக்கியத்திற்கே அந்தக் குணம் உண்டு எனும்போதும் பிற எந்த இலக்கிய வடிவத்தைக் காட்டிலும் கவிதையே அதிகம் வெகுஜன புழக்கம் கொண்டிருக்கிறது. வார இதழ்கள் செல்வாக்கோடு இருந்த நாட்களில் சுஜாதா கணையாழியில் ஒரு நகைச்சுவை எழுதியிருந்தார்- ஒரு போஸ்ட் கார்ட் வாங்கினால் யாரும் கவிஞராகிவிடலாம் என்று. இதழ்களுக்கு ஓயாமல் கவிதை அனுப்பும் அந்த காலம் இன்றில்லை. எனினும் முகநூல், வாட்சாப் முதலிய இணைய ஊடகங்களில் இன்னமும் கவிதைகள் எழுதிக் குவிக்கப்படுகின்றன. ஏன் கவிதை பரவலாக எழுதப்படுகிறது என்பதும் எது கவிதை என்பதும் தனித்தனியே பேசப்பட வேண்டிய விஷயங்கள் அல்ல என நினைக்கிறேன்.
'சிறுகதை', 'நாவல்', 'கட்டுரை' போன்ற சொற்களை நாம் தினசரி வாழ்வில் கேட்பது அரிது. ஆனால் 'கவிதை' எனும் சொல் அப்படியல்ல. பல நேரங்களில் அது சாதாரணமாக உபயோகிக்கப்படுகிறது. கவிதையோடு பல விஷயங்கள் ஒப்புமை செய்யப்படுவதை நாம் தொடர்ந்து கேட்கிறோம். அழகிய பெண். அழகான நிலக் காட்சி. இனிய ஞாபகம். வித்தியாசமான வாக்கியம். உணர்ச்சிகரமான பேச்சு. இப்படி அழகானவையும், வித்தியாசமானவையும், உணர்ச்சிமிக்கவையும் நமக்கு ஏனோ கவிதையை நினைவுப்படுத்துகின்றன. அதாவது தினசரித்தன்மை விலகும் இடத்தில் தோன்றும் ஒவ்வொன்றையும் நாம் கவிதை என்று துணிந்து அடையாளப்படுத்துகிறோம். அப்படி எல்லாவற்றையும் ஒரேடியாக கவிதை என்று சொல்ல முடியாதுதான். அதே நேரம், அவற்றைக் குறிப்பிட, வேறெந்தச் சொல்லும் உடனடியாகத் தட்டுப்படுவதில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளவே வேண்டும். எல்லா மேலான அனுபவங்களையும் உணர்ச்சிகரமான மனநிலைகளையும் கவிதை என்று சொல்வது பொருத்தமற்றதன்று. சமூகமாக நம் ஆழ்மனதில் கவிதையின் இயல்பு அந்த அளவு பதிந்திருக்கிறது. கவிதை உதிப்பதற்கான தருணங்கள் வாழ்க்கைக்குள் எப்போதும் காத்திருப்பதனாலேயே அது பிரபலமான வடிவமாகவும் இருக்கிறது. முழுமையாக உள்வாங்க முடிந்திராவிட்டாலும், சிறிய உரசலாகவேனும் அத்தருணங்களை அனைவரும் எதிர்கொண்டிருப்போம். நம்மைச் சுற்றி,”கவித, கவித” என்று உச்சுக்கொட்டும் குரல்கள்தான் எத்தனை?
Tuesday, 6 October 2020
மாயமாகும் நிலையின்மை
இலக்கியம் என்பது ஒருவகையில் நினைவுகளை மீட்டெடுக்கும் செயல். ஆனால் மெர்லின்
ராபின்சன் சொல்வதுப் போல் நினைவுகள் தன்னிச்சையானவை. துண்டுப்பட்டவை. எனவே துல்லியமாக
நினைவை மீட்டெடுப்பது யாருக்கும் சாத்தியம் கிடையாது. எப்படி புறயதார்த்தத்தை மனிதர்கள் அறிந்துவிடவே
முடியாதோ அதுப் போல. எனவே நினைவுகளை மீட்டெடுக்கும் முகாந்திரத்தில் இலக்கியம் நினைவுகளை
கட்டியெழுப்புகிறது எனலாம். நினைவுகள் வழியே உணர்ச்சிகளை; விழுமியங்களை; கனவுகளை. மார்சல் ப்ரூஸ்டின் நாவலான “தொலைந்த காலத்தைத் தேடி”
(In search of lost time) உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நவீன காவியம்
என்று அழைக்கப்படும் அந்த நூல் நினைவையும் காலத்தையும் பற்றிய மகத்தான ஆக்கங்களில்
ஒன்று. ஏழு பகுதிகளை உடைய அத்தொடரில் முதல் பகுதியை மட்டுமே நான் வாசித்திருக்கிறேன் (எழுத்தாளர் லிடியா டேவிஸ் மொழிபெயர்ப்பு). கவித்துவத்திற்காகவும், சிக்கலான உணர்ச்சி
நிலைகளின் வெளிப்பாட்டிற்காகவும் அறியப்பட்டும் அந்த நூல் மொழியின் கடினத்தன்மைக்காகவும்
பெயர் பெற்றது. காற்புள்ளிகள், அரைப்புள்ளிகள் ஆகியவற்றின் இணைப்பில் வளர்ந்துக் கொண்டே
போகும் நீண்ட வாக்கியங்கள், அடைப்புக்குறிக்குள் நீளும் பத்திகள் என பின் தொடர்வதற்கு
கஷ்டமான உரைநடையுடையவர் ப்ரூஸ்ட். ஆனால் நினைவுகள் வழியே உலகை கட்டியெழுப்புவது என்பது
நினைவுகளின் தொடர்பின்மைகள், காலக் குழப்பங்கள், உருமாற்றங்கள், நிறப் படிதல்கள் என
எல்லாவற்றையும் உள்ளடக்கியதே. எனவே அந்த நடையும் பௌதீக நியதிகளை மீறிய மாயத்தன்மையோடு
இருக்கிறது.
Friday, 25 September 2020
கிறுக்கர்களுக்கு ஒரு முத்தம்
சிற்றிதழ் வட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவா லாட்ஜை பரிச்சயம் செய்துக் கொள்ளும் வாய்ப்பு, மறைந்த “தக்கை” பாபுவினால் அப்போது எனக்கு கிட்டியது. சேலத்தில் நடக்கும் இலக்கியக் கூடுகைகளின்போது லாட்ஜ் கட்டிடமே தள்ளாட்டத்தில் கொஞ்சம் கோணலாகிவிடும் என்பது பொதுவான அறிதல். அப்படியொரு இரவில்தான் ஜான் சுந்தர் எனக்கு அறிமுகமானார். தளும்பும் அறைகளுக்கு வெளியே மாடி வராந்தாவில் நாங்கள் தெளிவாக நின்றுக் கொண்டிருந்தோம்.
Wednesday, 9 September 2020
மலர்கள் நினைவூட்டுவது
"ஆழ்நதியைத்
தேடி” புத்தகத்தை நான் முதல் தடவை
வாசித்தது 2014ல். அந்த நேரத்தில்
கட்டுரைகளை முழுமையாக உள்வாங்கவில்லை என்பது இப்போது மறுவாசிப்பில் புலப்படுகிறது. இலக்கிய இயக்கங்கள், அழகியல்கள், நோக்கங்கள் பற்றி மிகத் தோராயமான ஒரு சித்திரமே அன்று
என்னிடம் இருந்தது. வாசிப்பினூடே வெவ்வேறு பிராந்தியங்களில் சுற்றியலைந்து ஆறு வருஷங்கள் கழித்து
தற்போது மீண்டும் இந்த நூலை படிக்கும்போது
ஒவ்வொரு கருத்தையும் அதற்குரிய பின்புலத்தில் வைத்து புரிந்துகொள்ள இயல்கிறது. அதனாலேயே நூலின் முக்கியத்துவமும் ஸ்தூலமாக பிடிபடுகிறது. ஜெயமோகனின் இலக்கியத் திறனாய்வு நூல்களில், ”ஆழ்நதியைத் தேடி” தனித்துவமான
இடம் கொண்டது எனக் கருதுகிறேன். “நாவல்”
போல் கோட்பாட்டு நூலோ அல்லது “நவீன
தமிழ் இலக்கியம்” போல் அறிமுக நூலோ
அல்ல இது. “இலக்கிய முன்னோடிகள்” போல் படைப்பாளிகளை மதிப்பிடும்
நூலும் அல்ல. மாறாக,
தத்துவ நோக்கில் இலக்கியத்தை வரையறை செய்யும் நூல். ஜெயமோகனே குறிப்பிடுவதுப் போல் இலக்கியத்தின் “ஆன்மீக
சாரம்” பற்றிய விசாரனை.
இதுவரை பல நூறு பக்கங்களில் இலக்கிய திறனாய்வுகள் எழுதியிருப்பதோடு தொடர்ச்சியான உரையாடல்கள் வழியாக அவற்றை சூழலிலும் முன்நிறுத்தியுள்ளார் ஜெயமோகன். எனவே, “ஆழ்நதியைத் தேடி” எந்த வகையில் விசேஷமானது என்று ஒருவருக்கு நிச்சயம் கேள்வி எழும். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் முதல் பதிப்பு கண்ட நூல். இடைப்பட்ட காலத்தில் அதில் உள்ள கருத்துக்களை பல்வேறு இடங்களில் அவர் எழுதியிருக்கிறார்– இன்னும் துல்லியமான சொற்களாலும், நேர்த்தியான படிமங்களாலும். ஆனால் முக்கியமான வித்தியாசம். மற்ற இடங்களில் எல்லாம், அம்முடிவுகளை அவர் எப்படி அடைந்தார் என்பதை வாசகர்கள் கண்டுபிடிக்க முடியாது. அல்லது அந்த பாதை வெளிப்படையாக இருக்காது. தம் துல்லியத்தினாலேயே அவை ஆதாரம் தேவைப்படாத உண்மைகளாக நிலைகொண்டிருக்கின்றன. எளிமையினாலேயே மறுக்க முடியாததாகவும். ஒருவகையில் அவை ஆசிரியரின் சொற்கள். தடம் இதழில், வெளியான “நத்தையின் பாதை” தொடர் ஒரு நல்ல உதாரணம். ஆனால் “ஆழ்நதியைத் தேடி” நூலில் உறுதி இருக்கும்போது கூடுதலாக நெருக்கமும் வெளிப்படுகிறது. பேசுபொருளே காரணம் என நினைக்கிறேன். பிற நூல்களில் இருப்பது இலக்கியத் தேடல் என்றால் இதிலிருப்பது ஆன்மீகத் தேடல். ஆனால் இரண்டும் தனித்தனி இருப்புகள் அல்ல. ஒன்று கனிந்து இன்னொன்றாக மாறுகிறது.
தற்போது, அமெரிக்க எழுத்தாளர் மெர்லின் ராபின்சனின் “வீடு” நாவல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு காட்சி. நாவலின் மையப்பாத்திரமான க்ளோரி இளமையில் தன் சகோதரிகளோடு சேர்ந்து தோட்டத்துக்குச் சென்று கை நிறைய மலர்கள் பறித்து வருவாள். அதை பார்த்ததும் அவள் தந்தையின் கண்கள் நீரில் மினுங்கிவிடும். அப்போது வரக்கூடிய வாசகங்கள்.
“அவர் ஆம், ஆம் என்று சொல்வார். அவர்கள் ஏதோ ஞாபகச் சின்னத்தை கொண்டு வந்ததுப் போல். இந்த மலர்கள் ஒரு இனிய நினைவூட்டல் என்பதுப் போல். மலர்கள் பற்றிய நினைவூட்டல்”.
இலக்கியமும் அதையே செய்கிறது என எண்ணுகிறேன். மலர்கள், மலர்களையே நினைவூட்டுவதுப் போல். அழகையும் பக்தியையும் சூடக்கூடிய மலர்களுக்கு பின்னால் இருப்பது ஆற்றல். அதுவே ஒளியிலிருந்து மலர்தல் எனும் முதல் செயலை மேற்கொள்கிறது. எல்லா அர்த்தங்களும் அங்கிருந்தே பிறக்கின்றன. நிறமாய் மணமாய் தன்னை அது நிகழ்த்திக் கொள்கிறது. இருப்பின் மகோன்னதமான புதிர் அங்குள்ளது. அதையே உணர்வெழுச்சியாக தந்தை அறிகிறார். அப்படியாக மலர்கள் மலர்களின் சாரத்தை நினைவூட்டுகின்றன. இலக்கியத்தின் ஆன்மீகத் தளமும் அதுவே. மலர்கள் நமக்கு நினைவூட்டுவது. அதை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதையே ஜெயமோகன் இந்த நூலில் குறிப்பிடுகிறார்.
