Saturday, 25 September 2021

அந்த மூன்றாவது கை

இந்த சம்பவத்தை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆன்மத் தேடலில் நம்பிக்கை இருக்கிறதா என்று ஒரு நிகழ்ச்சியில் அசோகமித்திரனிடம் கேட்கப்படுகிறது. அதற்கு அவர் அறுபது வருடமாக ஒரு நல்ல டூத்பேஸ்ட்டை தேடிக் கொண்டிருக்கிறேன்; அதுவே கிடைக்கவில்லை என்று பதிலளிக்கிறார். இப்போது எழுதும்போதும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. கூடவே, எவ்வளவு பொருத்தமாக பதில் என்றும் தோன்றுகிறது. சொல்லற்கரிய ஆப்த வாக்கியம் அல்ல அப்பதில். இன்னோர் எழுத்தாளர்கூட அதை சொல்லலாம்தான். ஆனால் இன்னொருவர் சொல்லும்போது மேடை சுவாரஸ்யத்திற்காக மட்டுமே அது உரைக்கப்படுகிறது என்பது உடனடியாக தெரிந்துவிடும். ஆனால் அசோகமித்திரனின் ஆளுமையோடு சேர்கையில் அதுவே இயல்பான பதிலாக -விதூஷனத்தனமற்றதாக- மாறிவிடுகிறது. அவரிடம் நிச்சயம் வேறு பதிலை எதிர்பார்க்க முடியாது என்றும் கருத நேர்கிறது.



இணையத்தில் கிடைக்கும் அசோகமித்திரனின் காணொளிகளை வைத்து அன்றைக்கு அவர் மேடையில் எப்படி பேசியிருப்பார் என்பதை ஒருவர் தாராளமாக கற்பனை செய்யலாம்.  ஒடிசலான முதிய உருவம் (அசோகமித்திரன் எப்போதாவது இளமையாக இருந்திருக்கிறாரா?). பயந்திருப்பதுப் போன்ற அடக்கமான குரல். சட்டென்று, ஒரு நல்ல டூத்பேஸ்ட்டாக தேடி வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிற கரிசனம் நமக்கே உருவாகிடக்கூடும். அல்லது எந்த பொருளும் நல்லதாக கிடைப்பதில்லை என்கிற அங்கலாய்ப்பு எழலாம். ஆனால் அதுவல்ல அவர் கோருவது. ஒருவிதத்தில் அசோகமித்திரனின் கதாபாத்திரங்கள் மீதும் அத்தகையை கரிசனத்தையே பொது வாசிப்பு செலுத்த விழைகிறது. “தண்ணீர்” நாவலை சென்னை வறட்சிப் பற்றிய பதிவு என்று மட்டும் குறுக்கி அடையாளப்படுத்துவதுப் போல். மனிதனாக இருந்து வாழ்க்கையை கடத்துவதில் உள்ள தவிர்க்கமுடியாத துயர் பற்றியே அசோகமித்திரன் பேச முற்படுகிறார். தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதில் உள்ள தடங்கல்கள். அவை பூர்த்தியாகும்போது பயனிழந்துவிடும் விந்தை. எளிய விஷயங்களாக இருக்க வேண்டியவை எளியவையாக இல்லாமல் இருப்பதன் தடுமாற்றம். அசோகமித்திரனின் எழுத்துக்களில் இவற்றை திரும்ப திரும்ப பார்க்கிறோம். தண்ணீர் பஞ்சம் அவர் உலகில் ஒரு முகாந்திரம் மட்டுமே. ஏழ்மை மற்றொரு முகாந்திரம். பிரம்மாண்டமான சினிமா அரங்கம் இன்னொரு முகாந்திரம். 

அசோகமித்திரன் சாதாராணமானவர்களின் வாழ்க்கையை எழுதினார் எனும் கூற்று எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு பிழையான புரிதலுக்கு இட்டுச் செல்லும் சாத்தியம் உடையது. மனிதன் சாதாராணமான ஒரு உயிர் என்பதையே அசோகமித்திரன் எழுதி நிறுவினார் எனலாம். மனிதன் இந்த பூமிக்குள் எறியப்படுகிறான். அவனுடைய அறிவு எல்லைகுட்பட்டது; ஆற்றல் எல்லைக்குட்பட்டது. வாழ்க்கையோ அவன் தலைக்கு மேல் புரிந்துகொள்ள முடியாத ஒழுக்கில் நகர்கிறது. அதன் ஒழுக்கில் அவனுடைய புத்திசாலித்தனமான திட்டங்கள் பொருளற்றதாய் ஆகின்றன. நாம் நடக்கும்போது திடீரென்று பூமி கோணலாகிவிடும் அபத்தத்தை அசோகமித்திரன் தொடர்ந்து சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அசோகமித்திரனின் கதையொன்று ஞாபகத்தில் வருகிறது. வாழ்ந்துக் கெட்ட குடும்பத்தை சேர்ந்த ஒருவர் குதிரை பந்தயத்தில் பணம் கட்ட வருகிறார். அங்கே வேலை பார்க்கும் கதை சொல்லி, குதிரைக்கு வெற்றி தோல்வி தெரியாது அது ஓட மட்டுமே செய்கிறது என்று சொல்லி அவர் மனதை மாற்றி அனுப்பி வைக்கிறான் - பூரணமான நன்நோக்கில். அவரும் அன்று பந்தயம் கட்டவில்லை. ஆனால் அவர் எந்த குதிரைமேல் பந்தயம் கட்ட வந்தாரோ –எது வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே கிடையாது என கதைசொல்லி நம்பினானோ- அந்தக் குதிரை வென்றுவிடுகிறது. அசோகமித்திரனுடைய பல கதைகளில் இப்படி நோக்கங்கள் செல்லுபடியாகாமல் போகும் தருணங்கள் உண்டு. யாரும் தவறிழைக்காதபோதும் பாதிப்பு நேர்கிற சூழல்கள் உண்டு. சதுரங்கத்தில் காய் நகர்த்தும் அந்த மூன்றாவது கையை அவர் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அதன் வழியே நம்முடைய எல்லையையும். 

பொதுவான அளவுகோலில் அசோகமித்திரனை இருத்தலியல்வாத எழுத்தாளர் என்று குறிப்பிடத் துணியலாம். “மனிதன் கைவிடப்பட்டவன்” என்பது சார்த்தரின் புகழ்பெற்ற பிரகடனம்.  அசோகமித்திரன் நூறு கைவிடப்பட்ட கதை மாந்தர்களை உருவாக்கியிருப்பார். ஆனால் இருத்தலியல்வாத எழுத்துக்களில் பொதுவாகக் காணப்படும் பறதியை அசோகமித்திரனிடம் பார்க்க முடியாது. காப்காவையோ காம்யூவையோ படிக்கும்போது மனதில் தோன்றக்கூடிய பரிதவிப்பு அசோகமித்திரனிடம் எழுவதில்லை. அவர் பொறுமையையே முன்வைக்கிறார். புகார் சொல்லாமல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் முதியவர் போல். இது ஒரு பொருந்தாக் கூட்டணி என உடனடியாகத் தோன்றலாம். கலகக்கார இருத்தலியல்வாதிகளையே நமக்கு தெரியும். அதற்கு நேரெதிர் திசையில் இருப்பவர்கள் அசோகமித்திரனின் கதாபாத்திரங்கள். அவர்களும் வாழ்கிறார்கள் –  நிறைய கேள்விகளுக்கு பதில் தெரியாமல். அவர்களும் தத்தளிக்கிறார்கள் – நிறைய பதில்களுக்கு அர்த்தம் புரியாமல். ஆனால் அவர்கள் முரண்டு பிடிப்பதோ சமரசத்தை மறுப்பதோ இல்லை. 

காப்காவின் கே போல், தமிழிலும் இருத்தலியல்வாத நாயகர்கள் உண்டு. ஜே.ஜே, சம்பத் முதலிய சிலர். ஆனால் அந்த வரிசையில் அசோகமித்திரனின் பாத்திரங்களை நிற்க வைக்க முடியாது. நினைவில் தங்கும் பெயர்கூட அவர்களுக்கு கிடையாது. இந்த வேறுபாட்டிலிருந்தே அசோகமித்திரனின் தனித்துவத்தை புரிந்துகொள்ள முடியும் என எண்ணுகிறேன். நமக்கு பழக்கப்பட்ட பிற இருத்தலியல்வாத கதாநாயகர்களை சிந்தனாவாதிகள் என தோராயமாக சொல்லலாம். அல்லது தம் சிந்தனை மேல் நம்பிக்கைக் கொண்டவர்கள் என. மரணம், நீதி, கலை என்று எல்லா முக்கியமான விஷயங்கள் பற்றியும் அவர்கள் தொடர்ந்து சிந்திக்கிறார்கள். சிந்தனைக்கும் யதார்த்த வாழ்க்கைக்கும் நடுவிலான இடைவெளியே அவர்களை மிரளச் செய்கிறது. அப்படியாக நான் மற்றமை எனும் பிரிவு துலக்கம் பெற, மற்றமையில் நரகத்தை உணர ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அசோகமித்திரனின் உலகில் அப்படி ஒரு பிரிவினை கிடையாது. உறுதியான தன்னிலைக் கொண்ட மனிதர்கள் அங்கே இல்லை. வேறு வகையில் சொல்ல வேண்டும் என்றால், அசோகமித்திரனின் கதாபாத்திரங்கள் இருப்பது நிலவறையிலோ நீதியின் வாசலிலோ அல்ல. பேருந்துக்கான காத்திருப்பில். ரயிலை பிடிக்கும் அவசரத்தில். தண்ணீர் குழாய்க்கடியில். 

அதிகாரமில்லாத சாதாரண மனிதர்களை தொடர்ந்து முன்வைப்பதன் மூலம் அசோகமித்திரன் ஓர் உண்மையை வெளிப்படுத்துகிறார். “வாழ்க்கையை நடத்துவதுதான் சவால்”. இந்த உண்மையை நெருக்கமாக உணர கோவிட் நோய்த் தொற்று காலம் போல் பொருத்தமான வேறு சமயம் இருக்க முடியாது. அசோகமித்திரனுடைய அழகியல் இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாகியிருக்கிறது. மனிதனால் ஓர் எல்லைக்குட்பட்டு மட்டுமே எதையும் செய்ய முடியும்.  அதனால்தான் கதைக்குள் அவர் பேசுவதுக் கிடையாது. அந்த அதிகாரம் ஆசிரியருக்கில்லை என்பதை உணர்ந்து கதையில் தன் எல்லையை தெளிவாகவே வகுத்துக் கொள்கிறார்.  விவரணைகளில் அந்த எல்லைத் தெரிகிறது. உரையாடலில் அந்த எல்லைத் தெரிகிறது.  உணர்ச்சிகளை –உன்னதமோ கீழ்மையோ- வெளிப்படுத்துவதில் அந்த எல்லை தெரிகிறது. இந்த எல்லைகள் வழியே அவர் படைப்புகள் அசாத்தியமான எளிமையையும் பணிவையும் வரித்துக் கொள்கின்றன. ஆனால் அது வெறும் குமாஸ்தா குணம் அல்ல. ஆதவனுடைய வார்த்தைகளில் சொன்னால், “அந்த எளிமை வெகுளித்தனமானதல்ல, விவேகம் நிரம்பியது. முதிர்ச்சியை உள்ளடக்கியிருப்பது. அவனுடைய மௌனத்தைப் போல.”

ஒருவிதத்தில் அசோகமித்திரனை பெண்த்தன்மைக் கொண்ட நவீனத்துவர் என்று சொல்லலாம். சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஜி.நாகராஜன் போன்ற தமிழின் பிற நவீனத்துவ ஆசிரியர்களுக்கும் அசோகமித்திரனுக்குமான முக்கிய வித்தியாசம் இது என நினைக்கிறேன். “மனிதன் மகத்தான சல்லிப்பயல்” என்று சொல்ல முறுக்கிய மீசை வேண்டும். கட்டுமஸ்தான உடல் வேண்டும். ஆனால் மனிதன் சாதாரணமானவன் என்பதை கொஞ்சம் சத்தமாகக்கூட சொல்ல முடியாது. ஒரு பெருமூச்சுப் போல்தான் சொல்லியாக வேண்டும். அவருடைய பெண் கதாபாத்திரங்களை –ஜமுனா, சீதா- இங்கே எண்ணிப் பார்க்கலாம். நம் பொது பிரக்ஞையில் இன்று பதிந்திருக்கும் அசோகமித்திரன் எனும் ஆளுமை, அப்பெண்களின் சாயைகளால் திரண்டவர் இல்லையா? நிலத்திலிருந்து பெண்ணை வந்தடைந்திருக்கும் பொறுமையே அசோகமித்திரனின் படைப்புகளிலும் வெளிப்படுகிறது. வாழ்க்கையின் அபத்தத்தை சகித்துக் கொள்வதற்கும் கசந்த புன்னகையோடு அதை கடந்து செல்வதற்கும் அதுவே உதவிப் புரிகிறது. 

மீண்டும் அசோகமித்திரனின் ஆன்மத் தேடலுக்கு வரலாம். அசோகமித்திரன் அன்றாடத்தையே நிறைய எழுதினார். ஆனால் அதன் வழியே அவர் அடைந்த உண்மை ஓர் ஆன்மீகப் பதில். மனிதனின் ஆற்றல், இன்றைக்கு ஒரு சந்தைப் பொருள். எனவே எல்லா இடங்களிலும் அது அலங்காரமாய் முன்வைக்கப்படுகிறது. தன்முனைப்பு எளிதில் அங்கீகாரம் பெறுகிறது. செயலை பிராதானமாக்கி உபவிளைவுகளை பொருட்படுத்தாத இடத்துக்கு துணிந்து முன்னேறுகிறோம். அதிலுள்ள வன்முறையை பார்க்க நம் கண்களுக்கு திறன் அருகி வருகிறது. இந்த நேரத்தில் அசோகமித்திரன் கட்டாயம் தேவை - ஒரு வெற்றிலைக் காம்பைக்கூட பத்திரமாக வைத்துக் கொள்ள முடியாதவன் மனிதன் என்பதை நினைவூட்ட.

“வேளச்சேரி தண்டீஸ்வரத்தில் சுற்றும் தெருநாய்கள்
பற்றி ஒருமுறை (அசோகமித்திரன்) பேசிக்கொண்டே வந்தார்
அவை அத்தனை பிரியத்தைக் காட்டுபவை
வாலை வாலைக் குழைத்து ஆட்டும்
வீடு வரை நம்மைக் கொண்டுவிடும்
ஆனால் பாருங்கள்
ஒரு நாள் லபக்கென்று கடிச்சு வெச்சுடுச்சு
என்றார்”
-ஷங்கர்ராமசுப்ரமணியன்


No comments:

Post a Comment