Tuesday, 3 April 2018

பாரஞ்சுமக்கிறவர்கள்

"ஒரு பாவி முழுமனதுடன் தன்னை நோக்கி பிரார்த்தனை செய்வதை ஒவ்வொருமுறை ஆகாயத்திலிருந்து பார்க்கும்தோறும் கடவுள் பேருவகை அடைகிறார். தன் குழந்தை முதன்முதலாகச் சிரிப்பதைக் காணும் அன்னையைப் போல்" 

- தஸ்தாவெய்ஸ்கி
 

மனித சமூகம் என்பது பல்வேறு நம்பிக்கைகளால் ஆனது; பல்வேறு மதிப்பீடுகளால் பிணைக்கப்பட்டது. ஆனால் இந்த நம்பிக்கைகள் என்பவையும் மதிப்பீடுகள் என்பவையும் உண்மையில் என்ன? அவற்றுக்குப் புறவயமான இறுதி விளக்கங்கள் உண்டா? அறம், நீதி, மன்னிப்பு, காதல் என நாம் நம் சமூகக் கதையாடல்களிலும் அன்றாடப் பேச்சுவழக்கிலும் பயன்படுத்துகிற எந்த அரூப கருத்துக்கும் திட்டவட்டமான வரையறைகளோ நிரந்தரமான விதிகளோ கிடையாது என்றே சொல்ல வேண்டும். புலன்களால் தொட்டு அறிய முடிகிற பொருட்களைப் போல் அவை மீற முடியாத அறிவியல் நியதிகளால் கட்டப்பட்டவை அல்ல. அணுக்களை பிளப்பதற்கும், இணைப்பதற்கும் அணுக்களின் ஆற்றலை கணிப்பதற்கும் நம்மிடையே அறிவியல் பகுப்புகள் உண்டு; முடிவுகள் உண்டு. ஆனால் குற்ற உணர்ச்சிக்கோ அல்லது மகிழ்ச்சிக்கோ அப்படி எந்த அளவீடும் கிடையாது. எனினும் நாம் விடாமல் அவற்றைப் பற்றிக்கொண்டிருக்கிறோம். அர்த்தம், லட்சியம் போன்ற இன்னப்பிற அரூப கருத்துக்களையும் அவற்றின் வழியாக உருவாக்கிக் கொள்கிறோம். 




பொதுவான விதிமுறைகள் இல்லாததனாலேயே இந்த நம்பிக்கைகளும் மதிப்பீடுகளும் தர்க்கம் மற்றும் காரணியத்துக்கு அப்பால் இருக்கின்றன. தோராயமாக இவற்றை இரு எதிர் நிலைகள் என்றே அழைக்கலாம். இவ்விரண்டுத்தரப்புகளுக்கும் இடையேயான முரணாலும் இடைவெளியாலும் தஸ்தாவெய்ஸ்கி பீடிக்கப்பட்டிருந்தார் என்றே கூறவேண்டும். அவரது "நிலவறைக்குறிப்புகள்" குறுநாவல் மனிதன், காரணியம் என்கிற இருமையை விசாரனைக்கு ஆட்படுத்துவதன் வழியே ஒரு தனிமனிதன் இயற்கை விதிகளின் எல்லைக்குட்பட்டவன் அல்ல என்பதையும் அவன் சுதந்திரமானவன் என்பதையும் நிறுவ முயற்சிக்கிறது; கூடவே தனிமனிதன் விதிகளுக்கு எதிரா மூர்க்கமாத் தீர்மாணத்துடன் இருப்பதால் அவன் செயலற்ற கையறு நிலையில் இருப்பவன் என்பதையும் அது அடிக்கோடாகச் சுட்டுகிறது. அசடன் நாவலில் இதே உரையாடல் அல்லது விவாதம் வேறொரு பரிமாணம் எடுத்து தனி மனிதன் என்பதிலிருந்து சமூகம் என்கிற அடுத்த அடுக்கிற்கு நகர்ந்திருப்பதையும், ஊடே அது நிலவறை குறிப்புகளை உட்செரித்துத் தன்னில் ஒரு பகுதியாக மாற்றியிருப்பதையும் நாம் காண்கிறோம். "தற்கொலை மட்டுமே என் சுயவிருப்பத்தால் (இயற்கையை மீறி) நானே தொடங்கி முடிக்கக்கூடிய ஒரே செயல்" என்று கூறுகிற இப்போலித்தில் நிலவறை மனிதனின் சாயலை நிச்சயம் அடையாளம் காணாமல் இருக்க முடியாது. இப்போலித் மட்டும் இன்னும் வாழ அனுமதிக்கப்பட்டிருந்தால் அவனும் நிலவறையின் இருட்டில்தான் தன் கதையைச் சொல்லத் தொடங்கியிருப்பான். 

Monday, 19 February 2018

மீன்களை அறிதல்


கோவை ஞானி பற்றிய இப்பதிவில் ஜெயமோகன் கார்ல் மார்க்ஸின் “அன்னியமாதல்” (alienation) கோட்பாட்டை இவ்வாறு விளக்குகிறார். தொழிற்சமூகத்தில் உழைப்பாளிக்கு தான் உற்பத்தி செய்கிற பொருளோடு இணக்கமான உளத் தொடர்பு எதுவும் இல்லை. அவன் அங்கே படைப்பாளி கிடையாது; ஒரு உற்பத்திக் கருவி மட்டுமே. எனவே அவனுக்கு படைப்பாளியின் இன்பம் கிடைப்பதில்லை. முதலாளித்துவ சமூகத்தின் இந்த எதிர்மறை விளைவே ‘அன்னியமாதல்’. கீரனூர் ஜாகிர்ராஜாவின் “மீன்காரத் தெரு” நாவலை வாசித்து முடித்ததும் எனக்கு உடனடியாக ஜெயமோகனின் பதிவு யோசனையில் எழுந்தது. இந்த நாவல் முதன்மையாக மீன்காரத் தெரு மேல் பங்களாத் தெரு நிகழ்த்துகிற சுரண்டல் குறித்தும் அப்பகுதிகளில் நிலவும் ஜாதிய வேறுபாடுகள் குறித்தும் பேசுகிறது. ஆனால் அதனூடே நகரும் இன்னொருச் சரடும் மேற்சொன்ன சுரண்டலுக்கும் பாகுபாட்டிற்கும் நிகரான முக்கியத்துவம் உடையது என்றே எண்ணுகிறேன். மீன்காரத் தெருவின் உள்ளே நிகழ்ந்துக் கொண்டிருக்கும் மாற்றம் அது. நாவலில் முன்னதை குறிப்பிடும்போது வெளிப்படுகிற உணர்ச்சிகரமும் அதன் விளைவாக அவ்வப்போது எழும் ஓசைமிகுதியும் பின்னதில் கொஞ்சமும் இல்லை. குறைவானத் தருணங்கள் எனினும் அது அமைதியுடன் மிக இயல்பாக எழுதப்பட்டுள்ளது.


ஷேக்காவின் மகன்கள் - காசீம் மற்றும் நைனா. காசீம் கட்சி பணியில் இருக்கிறான். நைனா கலகக்குணமும் ரௌடித்தனமும் குழப்பமான விகிதத்தில் சேர்ந்த வார்ப்பில் இருப்பவன். சமூக மாற்றத்திற்காகவும் பணம் படைத்தவர்களின் அதிகாரத் திமிருக்கு எதிராகவும் இருவரும் வெவ்வேறு விதங்களில் குரல் கொடுக்கிறார்கள்; இயன்ற வழிகளில் போராடுகிறார்கள் என நாவலில் இருந்து புரிந்துகொள்ளலாம். (போராட்டம் என்கிற சொல்லின் வழக்கமான அர்த்தத்தில் இல்லை என்றாலும் எதிர்ப்பின் வெளிப்பாடு அல்லது மாற்றத்தின் தேடல் என்கிற பொருளில்). இவ்வகையான ஆவேச எதிர்ப்பு நியாயமானது என்பதிலோ அவசியமானது என்பதிலோ இரண்டாவது கருத்து இருக்க முடியாது. ஆனால் இவர்கள் இருவரும் பார்க்கத் தவறுகிற ஒரு விஷயம் இருக்கிறது என்பதையும் அது ஷேக்காவின் –மீனைப் பற்றி தெரிந்தவர்- கண்களுக்கு மட்டுமே தெரிகிறது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.

Saturday, 27 January 2018

999 வாழ்க்கை

நான் சமீபத்தில் இரண்டு மேற்கோள்களை தனியே குறித்து வைத்துக் கொண்டேன்.

ஒன்று “தத்துவத்தின் கதை” நூலின் முன்னுரையில் வில் டூரண்ட் சொல்வது, “காலம் கடப்பதற்கு முன்னால் பெரிய விஷயங்களை பெரியவை என்றும் சிறிய விஷயங்களை சிறியவை என்றும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்”

இரண்டாவது ஜெயமோகனுடையது, “பெரிய வாழ்க்கைகள் நினைவில் நிறுத்தப்படவேண்டும். அன்றாடமென வந்துசூழும் சிறுமைகளுடன் போரிட அவையே படைக்கலமென்றாகின்றன.”


கடந்த சில மாதங்களாக பெரிய புத்தகங்களுடனே அதிகமாக பொழுது கழிவதாலும் நிறைய பெரிய வார்த்தைகளை கற்றுக்கொள்வதும் மறப்பதும் குழம்புவதுமாக இருப்பதாலும் பெரிய விஷயங்கள், பெரிய மனிதர்கள் என தரைக்கே வராத ஆசைகளோடு அலைவதாலும் இவ்விரண்டு மேற்கோள்களும் என்னில் உடனடியாக பற்றி ஏறிக் கொண்டன என நினைக்கிறேன். எனினும் இந்த பெரியவைகளுக்கு நடுவே நான் அவ்வப்போது உணரும் பயமும் மேற்கொள்ளும் அற்பத்தனங்களும் உண்டு. தலைக்கு மேல் சுழலும் கண்கள் உறங்கும் நேரத்தில் சிறியவைகளின் ஜமாவில் அடைக்கலம் சேர்ந்துக் கொள்வேன். பெரியவை, சிறியவை – இரண்டும் ஒன்றையொன்று பார்த்துவிடாமல் இருக்க, என் இரட்டை வாழ்க்கையை அவை கண்டுபிடித்திடாமல் இருக்க, இரண்டிடமும் எனக்கு ஒரு இரட்டைச் சகோதரன் உண்டு என்று பொய் சொல்லி வைத்திருக்கிறேன். ஒட்டுத் தாடியும் ஒட்டு மீசையும் பையிலேயே எப்போதும் இருக்கின்றன. இன்று அந்த திரைப்படத்தின் உச்சக்காட்சி.

Saturday, 21 October 2017

குளிர்

எதிர்பார்க்காத குளிர். இன்று விடியற்காலை சென்னை வந்திறங்கியது முதல் உடல் குளிரில் நடுங்கி உதறியபடியே இருக்கிறது. நான் அணிந்திருந்தது அரைக்கை சட்டை வேறு. முழங்கைகளை பிணைத்துக் கட்டினால் உள்ளங்கை ஜில்லிட்டு கூசியது. ரயில் நிலையத்தில் கூட்டம் இல்லை. ரயில் வருகிறதா என்று தண்டவாளத்தோடு பார்த்தேன். கண் தூரம் வரைக்கும் வானம் இருள் பரப்பாக தாழ்ந்திருந்தது. அடுத்த ரயில் எப்போது என்று பயணச் சீட்டு கொடுக்குமிடத்திற்கு பக்கத்தில் இருந்த பெரிய நேர அட்டவணையில் தேடினேன். இன்னும் அரை மணி நேரம் இருந்தது. சோர்வுடன் கையில் பிடித்திருந்த துணிப்பையை கீழே வைத்தேன்.


குளிர் குறைவதுப் போல் தெரியவில்லை. பையில் அவசரத்திற்கென்று வைத்த ஒரு குளிர் சால்வை உண்டு.  ஆனால் அதை தேடி எடுக்க வேண்டும். துவைக்காத அழுக்குத் துணிகள் சுருட்டிக் கிடக்கும் பையை பிரித்து துழாவுவதற்கு அசூயையாக இருந்தது.

குளிர் பொறுக்காமல் சூட்டிற்காக கைகளை உரசி கன்னத்தில் வைத்தேன். பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. ரயில் நிலையத்திற்கு பின்னால் , சந்தை தெருவில் கடை வாசல்கள் தோறும் கூட்டி பெருக்கி நீர் தெளித்துக் கொண்டிருந்தார்கள்.  சாலைக்கு மறுபக்கம் இருந்த பால் கடையில் அப்போதுதான் பால் வரத்து நிகழ்ந்துக் கொண்டிருந்தது. லாரியில் வந்த பால் டப்பாக்களை இறக்கி வைத்து வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். இன்னொருபக்கம் இறக்கிய டப்பாக்களை பையன்கள் வேகமாக சைக்கிளில் ஏற்றி வீடுகளுக்கு கொடுக்க விரைந்து கொண்டிருந்தார்கள். கடை முதலாளி போலிருந்தவர் ஒவ்வொரு டப்பாவையும் கணக்கெடுத்து ஒரு சின்ன சீட்டில் குறித்துக் கொண்டிருந்தார். அந்த கடையைத் தவிர சுற்றி வேறெங்கும் பெரிதாக சலனம் இல்லை.