அசுவாரஸ்யமாக போய்க் கொண்டிருந்த பேட்டியில் அப்படியொரு திருப்பம் வரும் என்று யாருமே கற்பனை செய்திருக்க மாட்டார்கள். யோவான் திடீரென்று இருக்கையை விட்டு எழுந்து உருக்கமான பிரசங்கம் போல் தன்போக்கில் பேசத் தொடங்கிவிட்டான். இம்மான் தொகுப்பாளரையும் இயக்குனரையும் பார்த்தான். அவர்கள் முகம் பீதியோடிருந்தது. தன் முகமும் அப்படிதான் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான். காமிரா எல்லாவற்றையும் பதிவு செய்துக் கொண்டிருந்தது.
தொகுப்பாளர் கடைசியாய் கேட்ட கேள்வி. “உங்களுக்கு மாய பென்சில் கிடைத்தால் என்ன வரைவீர்கள்?”.
யோவான் அதற்குள் தன்னை இழந்திருந்தான். அவனே அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவனுள் ஏற்கனவே தேங்கியிருந்த ஏமாற்றம், இப்போது வெளியே எல்லா இடங்களிலும் பதியலாகிற்று. தொகுப்பாளருடைய போலியான இனிமை எரிச்சல் மூட்டியது. அவனுக்கு எல்லாமே மலினமானவையாக தோன்றின. அரங்கின் பிரகாசமான வெளிச்சம். பச்சை விரிப்பு. ஏசி குளிர். அங்கு உலவிய நறுமணம். எதுவுமே இயல்பானதாக இல்லை. அறை வாசனை பாஸ்டர் டேனியலை ஞாபகப்படுத்தியது. பாஸ்டரின் இறுகிய சொற்கள். தண்டனை. அப்பா. சிகரெட் புகை. இருள். உடல். செம்புள்ளிகள் மினுங்கும் மென்சருமம். பிளவுண்ட காயம். இரத்தம். சிவப்பு நிறம். மது. அருள் ஜோசப். இரத்த வாடை. பிசாசு. அற்புதம். மாலா. தழும்பு.நெருப்பு. தண்ணீர். ஞானஸ்நானம். குழந்தை. பேதமை. இழப்பு. செல்வன். தேவாலயம். ஜெபமாலை. அம்மா. சிலுவை. இரத்தம். தச்சன்மகனின் துயர் மிகுந்த அழைப்பு. எலோயி. அவன் மனம் ஒரு முடிவடையாத வலிச் சுழலில் சிக்குண்டது. நேற்றிரவு வீடு திரும்பியபோதே அவனால் பைபிள் வாசிக்கவோ அல்லது ஜெபம் மேற்கொள்ளவோ இயலவில்லை. இயலாமையையும் ஏக்கத்தையும் குடித்தபடி அவனுள்ளே என்னவோ வளர்ந்துக் கொண்டிருந்தது. அது இப்போது வெளிப்பட்டது.
“உங்களுக்கு மாய பென்சில் கிடைத்தால் என்ன வரைவீர்கள்?”
இம்மானை நோக்கி கேட்கப்பட்ட கேள்வி. ஆனால் யோவான் குறுக்கிட்டு அழுத்தமாக “சிலுவை. சிலுவைதான் வரைய வேண்டும். சிலுவை சுமக்கும் சீஷர்களுக்கே கிறிஸ்து அழைப்பு விடுத்தார்” என்றான்.
இம்மான் அதிர்ச்சியில் செயலிழக்க, யோவான் எழுந்து நின்று ஆவேசமாக பேசத் தொடங்கினான். காலர் மைக் உரசி அவ்வப்போது இரைச்சல் எழுந்தது. அவன் பேசுவதை முழுமையாக உள்வாங்க முடியவில்லை. பழி கூறுவது போலவும் எச்சரிக்கை செய்வது போலவும் இருந்தது. அதே நேரம் பிரார்த்தனைப் போலவும் மன்னிப்புக் கோரல் போலவும் ஒலித்தது. திரும்ப திரும்ப “உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோம்” என்றான். தொகுப்பாளரிடமும் இயக்குனரிடமும் பழைய பீதி அகன்று ஒருவித குறுகுறுப்பு மேலிட்டிருந்தது. அவர்கள் யோவானை கட்டுபடுத்த முயற்சிக்கவில்லை. காமிரா மேன் லென்ஸை மாற்றி
தொடர்ந்து பதிவெடுத்துக் கொண்டிருந்தார். இம்மான் யோவானை சமாதானம் செய்ய நினைத்து அவனைத் தொட்டு உட்கார வைக்க முயன்றான். ஆனால் யோவான் அவன் கையைத் தட்டிவிட்டு தன் பேச்சை தொடர்ந்தான். சரீரத்துக்கு வெளிச்சமாயிருக்க வேண்டிய நம் கண்கள் இச்சை படிந்து இருளேறிவிட்டன; நம் நாவுகள் நீதிகேட்டையே வசனிக்கின்றன. நம் தகப்பனின் கரங்களில் ஜீவனை ஒப்புக் கொடுக்க வேண்டும் என்று கட்டளை போல் சொன்னான்.
இம்மானுக்கு அச்சமாகவும் குழப்பமாகவும் இருந்தது. என்ன ஆயிற்று யோவானுக்கு? யோவான் போதகராகும் முயற்சியில் இருப்பதை அவன் அறிந்திருந்தான். ஒருவேளை அந்த விருப்பமே பாதிப்பாகிவிட்டதா? முதலில் அந்த விருப்பமே அனாவசியமானது ; முன்யோசனையில்லாதது என்று அவனுக்கு பட்டது. சட்டென்று ஒரு மிரட்சி. போதகராகும் யோவானின் விருப்பத்தையும் முயற்சியையும் இம்மானிடம் யாருமே குறிப்பிட்டவில்லை. பெங்களூரில் இருக்கும்போது அவன் தன் அம்மாவிடம் பேசுவதேக் கிடையாது. எனில் தனக்கு எப்படி அவை தெரிய வந்தன என திடுக்கிட்டான். அவன் தன் சகோதரனை பார்த்தான். அவர்கள் மத்தியிலேயே அவன் இல்லை. அதன் பிறகு கண் பிரியாமல் அவன் ஒவ்வொரு அசைவையும் கவனித்தான் இம்மான்.
யோவானின் குரல் உயர்ந்து கொண்டே போயிற்று. இரண்டு கைகளும் அகல விரிந்திருந்தன. மேகத்தின்மேல் மனிதக் குமாரன் வருகிறார்; மின்னல்வெட்டுப் போல் பிரம்மாண்டமான வெளிச்சத்தோடு தோன்றவிருக்கிறார். யோவான் நடுங்கியபடி சொன்னான். தன் சொற்களைக் கேட்டு அவனே அஞ்சியதுப் போலிருந்தது. அந்த அச்சம் இம்மானையும் தொற்றியது. சில நொடிகள் அங்கு பாரமான மௌனம் நீடித்தது. தொகுப்பாளர் துணிச்சல் பெற்று மெல்ல குரலெடுத்தார். ஆனால் அவரை இடைவெட்டி யோவானே மீண்டும் பேசத் தொடங்கினான். அவன் தாடைப் பகுதி அதிர்ந்துக் கொண்டிருந்தது. நெற்றியில் வியர்வை துளிர்த்தது. தாங்கவொண்ணா குரூரத்தை அல்லது மேன்மையை கண்டது மாதிரி அவன் பதபதைத்தான். பிறகு சொன்னான், நாம் கிறிஸ்துவின் முன்னால் மண்டியிட வேண்டும். குருதி வடியும் அவர் பாதங்களில் முகம் புதைக்க தயாராக இருக்கவேண்டும். பரிசேயர் ஊரைச் சேர்ந்த பாவியாகிய ஸ்தீரியைப் போல் நாமும் நம் கண்ணீரால் அவர் பாதங்களை கழுவ வேண்டும். ஆறா காயத்தில் முத்தமிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும். வழி மாறிய ஆட்டுக்குடியை அள்ளியெடுப்பதுப் போல் அவர் நம்மை ஏற்றுக் கொள்வார். ஏனெனில் அவர் நல்லவர்.
குரல் இடறி வார்த்தைகள் உடைந்தன. கண்ணீரை துடைக்கக்கூடச் செய்யாமல் அவன் மைக்கை கழற்றி மேஜையில் வைத்துவிட்டு வேகமாக வெளியேற, இம்மான் அவனை பின்தொடர்ந்தான்.
***