Sunday, 29 December 2019

சாட்சி [சிறுகதை] - 3


அரை மணி நேரம் கடந்திருந்தது. ஒரு சின்ன இடைவெளிவிட்டு மீண்டும் பேட்டியை தொடரலாம் என்று முடிவு செய்திருந்தார்கள். பேட்டி எடுத்தவர்களுக்கு சுவாரஸ்யமாக ஒரு விஷயமும் கிடைக்கவில்லை. வெற்றிகரமான பிரபலத்தை பேட்டி எடுப்பது போலுமில்லை. தோற்றுபோனவர்களை பேட்டி எடுப்பது போலுமில்லை. ஊடகத்துறைக்கே சம்பந்தமற்ற  பேட்டி போலிருந்தது. யோவான், இம்மான் இருவருமே எதையும் கவர்ச்சிகரமாக முன்வைக்கவில்லை. சலிப்பூட்டும் அளவுக்கு சாதாரணமாக நடந்து கொண்டார்கள். தன் ஏமாற்றத்தை முகத்தில் காண்பிக்காமல் தொகுப்பாளர் சிரித்தபடி காலர் மைக்கை கழற்றினார். "வெளியே டீ வந்திருக்கிறது. குடித்துவிட்டு தொடர்வோம். சின்ன ரேபிட் ஃபயர் கேள்வி பதிலோடு பேட்டியை முடித்து கொள்ளலாம்".

யோவான் படப்பிடிப்பு அரங்கிலேயே அமர்ந்திருக்க, தேநீர் கோப்பையை பற்றியபடி இம்மான் அலுவலகத்தைச் சுற்றி வந்தான். தமிழ் சினிமாவின் நூற்றாண்டு நாயகர்களோடு கூடம் காலியாக இருந்தது. திரும்பி நடந்து, படப்பிடிப்பு அரங்குக்கு அடுத்திருந்த கலந்தாய்வு அறையை எட்டி பார்த்தான். செல்பேசியில் கண்களை பதித்தபடி சில இளைஞர்கள் உள்ளே படுத்துக் கிடந்தார்கள். சோபாவில் இருந்த பெண் அவனை பார்த்து புன்னகைத்தாள். இம்மான் பதிலுக்கு புன்னகைத்தபடி அவ்விடத்தை நீங்கி பின்புற காலி மனைக்கு வந்தான். ஏசி குளிரை விட்டு வெளியே வந்ததில் வெயில் கண்களில் கூசியது. தொகுப்பாளரும் காமிரா மேனும் வாதாம் மர நிழலில் நின்று புகைபிடித்துக் கொண்டிருந்தார்கள். அவனை கண்டு சிரித்தவாறு "புகைபிடிக்க விருப்பமா?" என்று கேட்டனர்.

அவன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டான். காமிரா மேன் பேச்சு கொடுத்தார். “உங்கள் சகோதரர் எப்போதுமே இப்படித்தானா? அவரை பேச வைக்கவே முடியாது போலயே

இம்மா சிரித்தான்.அவன் பேட்டிக்கு ஒப்புக் கொண்டதையே என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவனிடம் ஸ்மார்ட் போன் கூட கிடையாது. தெரியுமா? யுடியூப் சேனல் என்றால் என்ன என்பதையே அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.”

இயக்குனர் சிகரெட் சாம்பலை காற்றில் தட்டினார். ஆர்வமாக “உங்கள் இருவருக்கும் தொலைக்காட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் இருக்கிறதே?” என்றுக் கேட்டார்.

“ஆமாம்” என்றான் இம்மான். பால்ய காலத்தில் போன ஒரு நீண்ட விடுமுறை சுற்றுலா போல்தான் தொலைக்காட்சி வாழ்க்கை நினைவில் இருப்பதாகவும் மற்றபடி தாங்கள் எப்போதும் சாதாரண நடுத்தர குடும்பத்து வாழ்க்கையையே மேற்கொண்டதாகவும் கூறிவிட்டு சிகரெட்டை தாழ்த்தி பிடித்து தேநீரை பருகினான்.

"ஆனால் நிரஞ்சனாவுக்கு அப்படியில்லை போல. சின்ன திரை நடிகை மாதிரி கூட இல்லை. பெரிய திரை நட்சத்திரம் போலவே அவர் நடந்து கொள்கிறார்". தொகுப்பாளர் கிண்டலாக சிரித்தார். "முன்பு ஒருமுறை அவரை வேறு சேனலில் பேட்டி எடுத்திருக்கிறோம். முழு ஒப்பனையோடு வந்திருந்தார். இன்னும் பல ஆண்டுகளுக்கு அவருடைய அசலான நிறத்தையோ வயதையோ கண்டேபிடிக்க முடியாது. நிரஞ்சனா உங்களுக்கு தெரியும் தானே? உங்கள் தொடரில் நாயகியாக நடித்த சிறுமி.”

"தொடர் ஒளிபரப்பான சமயத்தில் பழக்கம். அதற்கு பிறகு எந்த தொடர்பும் இல்லை". இம்மான் ஜாக்கிரயுணர்வோடு பதிலளித்தான். “நாடக இயக்குனர் ரொம்ப அன்பாக நடந்துகொள்பவர். துரதிருஷ்டவசமாக அவரோடும் எந்த தொடர்பும் இல்லை

ஆனால் நிரஞ்சனாவுக்கும் அவருக்கும் நல்ல தொடர்பு இருக்கும் போலயே”. இயக்குனர் தொகுப்பாளரை பார்த்து கண் சிமிட்டினார்.

இம்மான் ஆபத்தில்லாதவன் என்று அவர்களுக்கு தோன்றியிருக்க வேண்டும். தடையின்றி பேசினார்கள். நிரந்தரமான சிரிப்பு ஒட்டிய தன் முகமூடியை தொகுப்பாளர் கலைத்துவிட்டிருந்தார். ஆபத்தில்லாதவன் என்று எண்ணியே நிரஞ்சனாவும் தன்னிடம் பழகியிருக்க வேண்டும் என இம்மான் நினைத்தான். கீழிமைகளில் பச்சை வண்ணம் பூசிய அவள் முகம் மனதில் ஓடியது. கூடவே அவள் உடலும் திறந்தது. ரோமமற்ற அவள் முழங்கையில் வயதுக்கு பொருந்தாத சுருக்கங்கள் இருப்பதை அன்றிரவு அவன் கவனித்தான். அவள் முகத்தில் சின்ன களங்கம்கூட இல்லை. முகம் மாறா இளமையில் இருக்க, உடலுக்கு மட்டும் தனியே வயதாகிக் கொண்டிருந்தது. இம்மான் சிகரெட்டை கீழே போட்டு மிதித்து அணைத்தான்.

"ரோலிங்". தொகுப்பாளர் கை தட்டி "நிகழ்ச்சிக்கு மீண்டும் வரவேற்கிறோம்" என்றார். "மிக சுவாரஸ்யமாக போய்க் கொண்டிருக்கும் நிகழ்ச்சியின் கடைசி பகுதியை எட்டிவிட்டோம். இப்போது ரேபிட் பயர். முதல் கேள்வி. நாடகத்தில் மாயபென்சிலில் நீங்கள் முதல் தடவை வரைந்த பொருள் எது?"

தொலைக்காட்சி தொடரின் முதல் காட்சியில் மாய பென்சிலை யதேச்சையாக விளையாட்டு மைதானத்தில் கண்டெடுத்ததும் யோவான் அதை வீட்டுக்கு கொண்டு வந்து சார்ட் காகிதத்தில்  ஒரு பெரிய சாக்லேட் வரைவான். பளபளப்பான ரேப்பரோடு சாக்லேட் அதன் மேல் உண்மையாகவே தோன்ற சந்தோஷமும் அதிர்ச்சியும் உண்டாகும். நாக்கில் இனிய கசப்பு ஒட்டி ருசி நரம்பில் தங்க பாதி சாக்லேட்டை மட்டும் சாப்பிட்டு மீதியை குளிர்பதன பெட்டியில் பத்திரமாக வைத்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து திரும்பி வருவான். சாக்லேட் காணாமல் போயிருக்கும். ருசியும் நிஜம். மறைந்ததும் நிஜம். அப்படி தொடங்கிற்று மாய பென்சிலின் கதை.

***



சாட்சி [சிறுகதை] - 2


மோசமான நகைச்சுவை துணுக்குகளை மிகுந்த தன்னம்பிக்கையோடு கூறியபடி தொகுப்பாளர் பேசிக் கொண்டிருந்தார்.  சகோதரர்கள் இருவரின் தற்போதையை வேலை பற்றி விசாரித்தார். யோவான், மருந்து தயாரிப்பு நிறுவனமொன்றில் நிர்வாகியாக இருந்தான். பொறியியல் பட்டதாரியான இம்மானுவேலுக்கு பெங்களூரில் பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலை. அவர்களுடைய அப்பா ஓய்வு பெற்ற அரசு ஊழியர். சகோதரர்கள் இருவருக்குமே இன்னும் திருமணம் ஆகியிருக்கவில்லை. இல்லை. அவர்கள் தொடர்ந்து நடிக்க விரும்பவில்லை. வேறு வாய்ப்புகள் வந்தன. திரைப்பட வாய்ப்புக்கூடத்தான். ஆனால் அவர்கள் எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. தனிப்பட்ட காரணம். தொலைக்காட்சியில் நடித்ததே ஒரு விபத்து. மேலும் திரை வாழ்க்கைமீதும் பெரிய மோகம் இல்லை எனலாம். இரண்டு வருடங்களிலேயே தொடர் நின்றுபோனதில் அவர்களுக்கும் வருத்தம்தான். ஆனால் ஊடகத் தொழில் பற்றி எல்லோருக்கும் தெரியுமே.  இன்னொரு விஷயமும் இருக்கிறது. நாடகத்தில் நடித்தவர்களுக்கும் அதை பார்த்து ரசித்தவர்களுக்கும் வயதேறியபோதே அதன் ஈர்ப்பு குறைய ஆரம்பித்துவிட்டது. சண்டையா? இயக்குநருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையிலா? தயாரிப்பு நிறுவனத்துக்கும் தொலைக்காட்சி சேனலுக்கும் இடையிலா? தெரியவில்லை. பெரியவர்களின் உலகத்தில் அவர்கள் அப்போது இல்லை.

பேட்டி சுவாரஸ்யமின்றி தொடர்ந்தபோதும், தொகுப்பாளர் உற்சாகம் குறையாமல் கேள்வி கேட்டார். "சொல்லுங்கள். உங்கள் இருவரில் யார் நல்ல நடிகர். நாங்கள் அதிகம் தொலைகாட்சியில் பார்த்தது யாரை?". இம்மான் உடனே யோவானை நோக்கி விரலை நீட்டி "இவன் தான்" என்று கூறி பின்னால் நகர்ந்தான். " அப்படியா நம்பவே முடியவில்லை".

அதுவரை அவசியமற்ற இடங்களில் எல்லாம் மிகையாக ஆச்சர்யத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த தொகுப்பாளரின் குரலில் இப்போது உண்மையாகவே ஆச்சர்யம் வெளிப்பட்டது. அது புரிந்துகொள்ளக் கூடியதே. இரண்டு பேரில் இம்மானுவேல்தான்  பொது இடங்களில் அதிகம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறான். கல்லூரியில். அலுவலகத்தில். பெங்களூருக்கு இடம் மாறிய பிறகுதான் இறந்தகாலத்தில் நிழல் அவனைவிட்டு விலகியது. ஆனால்  யோவானோ எப்போதுமே யார் கவனத்திலும் படுவதில்லை. அரிதாகவே யார் ஞாபகத்திலாவது அவன் நெருடினான். மாய பென்சிலின் உதவியால் எல்லாவற்றுக்கும் உயிர்கொடுக்கும் குழந்தை நடிகனை யோவானின் இன்றைய தோற்றத்தில் பொருத்துவது சிரமம். பால்யத்தில் சதா பரவசத்தோடு திரியும் சிறுவனாக யோவான் இருந்தான். துடிதுடிப்பு மிக்க அச்சிறுவனுக்குத்தான் நாடக வாய்ப்பு கிடைத்தது. பள்ளி விழாவொன்றில் அவனை எதேச்சையாக பார்த்த நாடக இயக்குநர் அவனுடைய களங்கின்மையால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். விலாசம் கண்டுபிடித்து நேராக வீட்டுக்கே வந்தார். பெயர் மாற்றத்துக்கு மட்டும் யோவானின் அப்பா அனுமதி அளிக்கவில்லை. அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டு இயக்குனர் அவனை தொலைக்காட்சியில் நடிக்க வைத்தார். அவர் எண்ணியதுப் போலவே அச்சிறுவன் திரையில் அற்புதங்கள் செய்தான். எல்லோருமே அவனை விரும்பினார்கள்.

யோவானுக்கு ஓர் இரட்டைச் சகோதரன் உண்டு என்பதையே நாடக இயக்குநர் முதலில் அறிந்திருக்கவில்லை. வீட்டில் வந்து பார்த்ததும் ஆச்சர்யம் அடைந்தார். முக்கியமான தகவலை தவறவிட்டதற்காக தன் உதவியாளர்களை கடிந்துகொண்டவர் "இதுவும் நல்லதுதான். ஒருத்தனுக்கு ஜீரம் வந்தால் இன்னொருத்தனை வைத்து சமாளித்துவிடலாம்" என்று பலமாக சிரித்தார். ஆனால் திரைத் தேர்வின்போதே அதன் சாத்தியமின்மை அவருக்கு தெரிய வந்துவிட்டது. இம்மானுவேலால் காமிராவையோ  அல்லது காமிராவுக்கு பின்னால் இருப்பவர்களையோ பார்க்காமல் வசனம் பேச முடியவில்லை. வெறுமனே நிற்கும்போதுகூட அவன் கண்கள் அலைபாய்ந்தன. அழுகை தேங்கி முகம் கோணியது. இயக்குநர் அவனை நடிக்க வைக்க இயன்ற மட்டும் போராடி தோற்றார். ஆனால் யோவானோ இயற்கையாகவே நல்ல நடிகன். காமிரா பயம் கிடையாது. ஒத்திகைக்கூட இல்லாமல் வசனங்களை சரியான உணர்ச்சிகளோடு பேசும் திறன் அவனுக்கிருந்தது. தன் பகுதி மட்டுமில்லாமல் காட்சியில் நடிக்கிற மற்றவர்களின் வசனங்களைக்கூட மனப்பாடமாக அறிந்து வைத்திருப்பான். பிற நடிகர்கள் மறந்துவிடும்போது கிசுகிசுப்பாக எடுத்துக் கொடுப்பான். அவர்கள் சிரித்துவிடுவார்கள். சில நேரம் மற்றவர்கள் வசனம் பேசும்போது யோவானின் உதடுகளும் கூடவே அசையும். "கட்" என்று இயக்குநர் மைக்கில் அதட்டுவார். "நீ சொல்லாத". நாக்கை மடித்து "த்ச்" என்பான் சிறுவன் யோவான்.

இன்று திரும்பி வந்தால் அச்சிறுவனால் அசௌகர்யமான மௌனத்தைத் தவிர வேறெதையும் யோவானிடம் பகிர்ந்துகொள்ள முடியாது என இம்மானுவேல் எண்ணினான். போதகராக விரும்பும் யோவானும் அச்சிறுவனை பார்த்து திகிலடையக் கூடும்.   

***



சாட்சி [சிறுகதை] - 1


யுடியூப் சேனலின் அலுவலகம் தேனாம்பேட்டையில் இருந்தது. நகரின் இரைச்சல் புகாத மர நிழல்கள் மூடிய பகுதி. சின்னதாக இருந்தாலும் அலுவலகம் நவீனமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கூடத்தில் ஸ்டிக்கர் ஓவியங்கள் மின்னின. பழைய திரைப்பட போஸ்டர்களில் மாற்றம் செய்து ஒட்டியிருந்தார்கள். அங்கிருந்து இடைவழியைத் தாண்டி வந்தால் இடதுபுறம் படத் தொகுப்பு அறை. முப்பது அடி கணினித் திரைகளில் துண்டு துண்டாக காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. சற்று தள்ளியிருந்த வலுதுபுற அறைதான் படப்பிடிப்பு அரங்கம். விளக்கெரிந்து வெளிச்சமாக இருந்தது. பச்சை மேட் போட்டு முன்னால் மேஜையும் இருக்கைகளும் வைக்கப்பட்டிருந்தன. மற்ற அறைகளைவிடவும் அங்கு ஏசி குளிர் அதிகம் இருந்தது. குளிருக்கு மேல் இனிய மணம் மிதந்தது.

காமிரா மேன் போகஸ் பார்த்து கையசைக்க, காலர் மைக்கை பரிசோதனை செய்துவிட்டு யுடியூப் சேனலின் தொகுப்பாளர் பேசத் துவங்கினார் "வணக்கம் நேயர்களே! தொன்னூறுகளில் வளர்ந்தவர்களுக்கு நமது இன்றைய சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையில்லை. எனினும் ஒரு சின்ன குறிப்பு அளிக்கிறேன். இப்பென்சில் உங்களுக்கு நினைவிருக்கிறதா?". உச்சியில் பொம்மைத் தலை வைத்த நீளமான பென்சில்களை அவர் கையில் பற்றியிருந்தார். மஞ்சள், பிங்க், சிவப்பு ஆகிய வண்ணங்களில் அவை மினுமினுப்போடிருந்தன. "ஆம்.! எல்லாவற்றுக்கும் உயிர் கொடுக்கும் சக்தி பெற்ற மாய பென்சிலேதான்". பென்சில்களை காமிரா பக்கம் உயர்த்தி காட்டிவிட்டு தொடர்ந்தார். "இப்பென்சிலுக்கு உரிய நபரே நம் சிறப்பு விருந்தினர். குழந்தை நட்சத்திரமாக நம் எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவர்". அவர் கைதட்டி வரவேற்க, காமிரா விருந்தினர் பக்கம் திரும்பியது. அங்கே இருவர் இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள். இரட்டையர்கள். தொகுப்பாளர் தொடர்ந்தார். "உங்களைப் போல்தான் நானும் குழம்பினேன் நேயர்களே. ஆனால் இது ஓர் இனிய அதிர்ச்சி. நீங்கள் தொலைக்காட்சியில் விரும்பி பார்த்த முகம் ஒருவருடையது அல்ல. இருவருடையது. வரவேற்கிறோம்.! இதோ யோவான் மற்றும் இம்மானுவேல்."

இரண்டு வருடங்கள், வாரத்தில் மூன்று தினங்கள் தொலைக்காட்சியில் தவறாது ஒளிபரப்பான அந்த நாடகம் தன் சேனலுக்கு பெரிய வெற்றியை பெற்று தந்திருந்தது. பதினோரு வயது நாயகனையும் மந்திர சக்தி பெற்ற பென்சிலையும் மைய கதாபாத்திரங்களாகக் கொண்டு அதை எடுத்திருந்தார்கள். இந்தியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த நிகழ்ச்சியின் நகல்தான் என்றாலும் ஒளிப்பரப்பான சமயம் சிறார்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. பள்ளியரட்டைகளில் தவறாமல் இடம்பிடித்தது. வேறு தொலைக்காட்சி சேனல்களும் அதே கருவை வைத்து நிகழ்ச்சிகள் தயாரித்து வெளியிட்டபோதும் மைய கதாபாத்திரத்தை ஏற்றிருந்த சிறுவனின் நடிப்பாலும் இயக்குநரின் தேர்ச்சியாலும் அவர்களுடைய நாடகம், தனி அடையாளம் பெற்றது. பிற்பாடு ஏதோ காரணத்தால் தொடர் நின்று போக, அதன் பெயரே இன்று எல்லோரு ஞாபகத்திலும் மங்கலாகிவிட்டது. அதை மீண்டும் நினைவூட்டி ஒரு நிகழ்ச்சி செய்தால் கட்டாயம் நல்ல எதிர்வினை கிடைக்கும் என யுடியூர் சேனல்காரர்கள் நினைத்தார்கள்.

"தொன்னூறுகளை கொண்டாடும்விதமாக நாம் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். தொன்னூறுகளின் அடையாளத்தில் ஒன்று இப்பென்சில். அதன் நிமித்தம் நாம் அந்த நாடகத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். அப்படியே அதன் நாயகருக்கும்"

"கட்". இயக்குநர் இடைமறித்ததும் காமிராமேன் திரும்பி பார்க்க, தொகுப்பாளர் பேச்சை நிறுத்தினார். "சார்". இம்மானுவேலிடம் முதுகை சற்று சரித்து இயல்பாக உட்காரும்படி இயக்குநர் அறிவுறுத்தினார். காமிராமேனின் தலை மறைய தொகுப்பாளர் மெல்லிய குரலில் காமிரா இருப்பதையே மறந்துவிடும்படி சொல்லி சிரித்தார். இம்மானுவேலுக்கு அச்சிரிப்பு பிடிக்கவில்லை. எனினும் பதிலுக்கு சிரித்தான். அருகே, எண்ணங்களை கணிக்க முடியாத முகத்துடன் அமைதியாக, யோவான்.

"ஆக்ஷன்". தொகுப்பாளர் தன் முதல் கேள்வியை கேட்டார். "ஓரே மாதிரியும் அதே சமயம் மிக வித்தியாசமாகவும் இருக்கிறீர்களே எப்படி?"

***