அரை மணி நேரம் கடந்திருந்தது. ஒரு சின்ன இடைவெளிவிட்டு மீண்டும் பேட்டியை தொடரலாம் என்று முடிவு செய்திருந்தார்கள். பேட்டி எடுத்தவர்களுக்கு சுவாரஸ்யமாக ஒரு விஷயமும் கிடைக்கவில்லை. வெற்றிகரமான பிரபலத்தை பேட்டி எடுப்பது போலுமில்லை. தோற்றுபோனவர்களை பேட்டி எடுப்பது போலுமில்லை. ஊடகத்துறைக்கே சம்பந்தமற்ற பேட்டி போலிருந்தது. யோவான், இம்மான் இருவருமே எதையும் கவர்ச்சிகரமாக முன்வைக்கவில்லை. சலிப்பூட்டும் அளவுக்கு சாதாரணமாக நடந்து கொண்டார்கள். தன் ஏமாற்றத்தை முகத்தில் காண்பிக்காமல் தொகுப்பாளர் சிரித்தபடி காலர் மைக்கை கழற்றினார்.
"வெளியே டீ வந்திருக்கிறது. குடித்துவிட்டு தொடர்வோம். சின்ன ரேபிட் ஃபயர் கேள்வி பதிலோடு பேட்டியை முடித்து கொள்ளலாம்".
யோவான் படப்பிடிப்பு அரங்கிலேயே அமர்ந்திருக்க, தேநீர் கோப்பையை பற்றியபடி இம்மான் அலுவலகத்தைச் சுற்றி வந்தான். தமிழ் சினிமாவின்
நூற்றாண்டு நாயகர்களோடு கூடம் காலியாக இருந்தது. திரும்பி நடந்து, படப்பிடிப்பு அரங்குக்கு அடுத்திருந்த கலந்தாய்வு அறையை எட்டி பார்த்தான். செல்பேசியில் கண்களை பதித்தபடி சில இளைஞர்கள் உள்ளே படுத்துக் கிடந்தார்கள். சோபாவில் இருந்த பெண் அவனை பார்த்து புன்னகைத்தாள். இம்மான் பதிலுக்கு புன்னகைத்தபடி அவ்விடத்தை நீங்கி பின்புற காலி மனைக்கு வந்தான். ஏசி குளிரை விட்டு வெளியே வந்ததில் வெயில் கண்களில் கூசியது. தொகுப்பாளரும் காமிரா மேனும் வாதாம் மர நிழலில் நின்று புகைபிடித்துக் கொண்டிருந்தார்கள். அவனை கண்டு சிரித்தவாறு "புகைபிடிக்க விருப்பமா?" என்று கேட்டனர்.
அவன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டான். காமிரா மேன் பேச்சு கொடுத்தார். “உங்கள் சகோதரர்
எப்போதுமே இப்படித்தானா? அவரை பேச வைக்கவே முடியாது போலயே”
இம்மா
சிரித்தான். “அவன் பேட்டிக்கு ஒப்புக் கொண்டதையே என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவனிடம்
ஸ்மார்ட் போன் கூட கிடையாது. தெரியுமா? யுடியூப் சேனல் என்றால் என்ன என்பதையே அவன்
அறிந்திருக்க வாய்ப்பில்லை.”
இயக்குனர்
சிகரெட் சாம்பலை காற்றில் தட்டினார். ஆர்வமாக “உங்கள் இருவருக்கும் தொலைக்காட்சிக்கும் எந்த சம்பந்தமும்
இல்லாதது போல் இருக்கிறதே?” என்றுக் கேட்டார்.
“ஆமாம்”
என்றான் இம்மான். பால்ய காலத்தில் போன ஒரு நீண்ட விடுமுறை சுற்றுலா போல்தான் தொலைக்காட்சி வாழ்க்கை நினைவில் இருப்பதாகவும் மற்றபடி தாங்கள் எப்போதும் சாதாரண நடுத்தர குடும்பத்து வாழ்க்கையையே மேற்கொண்டதாகவும் கூறிவிட்டு சிகரெட்டை தாழ்த்தி பிடித்து தேநீரை பருகினான்.
"ஆனால் நிரஞ்சனாவுக்கு அப்படியில்லை போல. சின்ன திரை நடிகை மாதிரி கூட இல்லை. பெரிய திரை நட்சத்திரம் போலவே அவர் நடந்து கொள்கிறார்".
தொகுப்பாளர் கிண்டலாக சிரித்தார். "முன்பு ஒருமுறை அவரை வேறு சேனலில் பேட்டி எடுத்திருக்கிறோம். முழு ஒப்பனையோடு வந்திருந்தார். இன்னும் பல ஆண்டுகளுக்கு அவருடைய அசலான நிறத்தையோ வயதையோ கண்டேபிடிக்க முடியாது. நிரஞ்சனா உங்களுக்கு தெரியும் தானே? உங்கள் தொடரில் நாயகியாக நடித்த சிறுமி.”
"தொடர் ஒளிபரப்பான சமயத்தில் பழக்கம். அதற்கு பிறகு எந்த தொடர்பும் இல்லை".
இம்மான் ஜாக்கிரயுணர்வோடு பதிலளித்தான். “நாடக இயக்குனர் ரொம்ப அன்பாக நடந்துகொள்பவர். துரதிருஷ்டவசமாக
அவரோடும் எந்த தொடர்பும் இல்லை”
“ஆனால் நிரஞ்சனாவுக்கும் அவருக்கும் நல்ல தொடர்பு இருக்கும்
போலயே”. இயக்குனர் தொகுப்பாளரை
பார்த்து கண் சிமிட்டினார்.
இம்மான் ஆபத்தில்லாதவன் என்று அவர்களுக்கு தோன்றியிருக்க வேண்டும். தடையின்றி பேசினார்கள். நிரந்தரமான சிரிப்பு ஒட்டிய தன் முகமூடியை தொகுப்பாளர் கலைத்துவிட்டிருந்தார். ஆபத்தில்லாதவன் என்று எண்ணியே நிரஞ்சனாவும் தன்னிடம் பழகியிருக்க வேண்டும் என இம்மான் நினைத்தான். கீழிமைகளில் பச்சை வண்ணம் பூசிய அவள் முகம் மனதில் ஓடியது. கூடவே அவள் உடலும் திறந்தது. ரோமமற்ற அவள் முழங்கையில் வயதுக்கு பொருந்தாத சுருக்கங்கள் இருப்பதை அன்றிரவு அவன் கவனித்தான். அவள் முகத்தில் சின்ன களங்கம்கூட இல்லை. முகம் மாறா இளமையில் இருக்க, உடலுக்கு மட்டும் தனியே வயதாகிக் கொண்டிருந்தது. இம்மான் சிகரெட்டை கீழே போட்டு மிதித்து அணைத்தான்.
"ரோலிங்".
தொகுப்பாளர் கை தட்டி
"நிகழ்ச்சிக்கு மீண்டும் வரவேற்கிறோம்"
என்றார்.
"மிக சுவாரஸ்யமாக போய்க் கொண்டிருக்கும் நிகழ்ச்சியின் கடைசி பகுதியை எட்டிவிட்டோம். இப்போது ரேபிட் பயர். முதல் கேள்வி. நாடகத்தில் மாயபென்சிலில் நீங்கள் முதல் தடவை வரைந்த பொருள் எது?"
தொலைக்காட்சி தொடரின் முதல் காட்சியில் மாய பென்சிலை யதேச்சையாக விளையாட்டு மைதானத்தில் கண்டெடுத்ததும் யோவான் அதை வீட்டுக்கு கொண்டு வந்து சார்ட் காகிதத்தில் ஒரு பெரிய சாக்லேட் வரைவான். பளபளப்பான ரேப்பரோடு சாக்லேட் அதன் மேல் உண்மையாகவே தோன்ற சந்தோஷமும் அதிர்ச்சியும் உண்டாகும். நாக்கில் இனிய கசப்பு ஒட்டி ருசி நரம்பில் தங்க பாதி சாக்லேட்டை மட்டும் சாப்பிட்டு மீதியை குளிர்பதன பெட்டியில் பத்திரமாக வைத்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து திரும்பி வருவான். சாக்லேட் காணாமல் போயிருக்கும். ருசியும் நிஜம். மறைந்ததும் நிஜம். அப்படி தொடங்கிற்று மாய பென்சிலின் கதை.
***


