Saturday 22 August 2020

கண்ணாடித் தனிமை

குழந்தை மெல்ல நுழைகிறது. திரைச்சீலையில் அலையும் வெளிச்சத்தினுள். மிக நீண்ட இருட்டில் இருந்து சமீபத்தில்தான் அந்த உடல் திரண்டு கண் விழித்திருக்கிறது. உடனேயே அது கண்டுகொள்கிறது, குழப்பங்களை. ஒவ்வொரு அணுவும் தன் முன் மாறிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது அச்சமும் அதை தொடாமல் இல்லை. எனினும் அதனிடம் ஒரு நம்பிக்கை. பற்றுதலுக்கு காற்றில் துளவுகின்றன அதன் சிறு கரங்கள். அது ஏந்தும் எதுவும் ஆவியாவது கிடையாது. இங்கே பல வருடங்களாக இருக்கும் யாரிடமும் இல்லாத நம்பிக்கை அக்குழந்தையிடம் உள்ளது. பிரச்சனையே அதுதான். யாருமே இங்கே பல வருடங்களாக இல்லை. நான் குறிப்பிடுவது அந்த பெரிய கடிகாரம் பற்றி. உள்ளே அதன் சக்கரங்களை சுழற்றிக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான பாதங்களையுடைய அந்த பழைய உயிர் பற்றி.

0

நாம் இங்கிருக்கிறோம். அவர்கள் கண்ணாடிக்கு பின்னால் இருக்கிறார்கள். பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதுப் போல். பார்க்கும்போதே தொடக்கூடாது என்றொரு ஜாக்கிரதையுணர்வு. அவர்கள் உடல் நீராலும் உப்பாலும் ஆனதல்ல. அது வெளிச்சத்தால் உருவாகியிருக்கிறது. அவர்கள் தங்கள் அசைவை ரத்து செய்துவிட்டிருக்கிறார்கள். காலத்துக்கு எதிராக. அந்த அசைவின்மைக்குள் இருந்து வெறிக்கிறது ஒரு குழந்தை முகம். உடனேயே அது ஒரு மூதாட்டியின் சுருக்கங்கள் நிறைந்த ஆனால் அழகு தீராத முகமாக மாறுகிறது. உண்மையாகவே, அவள் எந்த ரகசியத்தையும் அறிந்திருக்கவில்லை. எனினும் பார்க்க, அப்படி தெரியவில்லை.

0

எல்லா இடங்களுக்கும் தாமதமாக போக நேர்பவன் ஒரு நாள் உலகுக்கு அறிவித்தான். “யாரோ என் நேரத்தை திருடிவிடுகிறார்கள்”

0

புலரியில் வரும் காகம். பருக்கை சுமக்கும் எறும்பின் நிதானம். மின்சாரக் கம்பிகளில் படபடத்து தாவும் குருவியின் வேகம். தானே உறிந்துவிழும் மரப் பட்டை.

0

காட்டில் தீ மூண்டிருக்கிறது. வான் வரை எழும் கரும் புகை. விலங்குகள் அலறி ஓட, நீர் நிலைகள் கொதிக்கின்றன. நெருப்பு கொன்று முன்னேறுகிறது. தடுக்க முடியாத மூர்க்கம். தொடும் எல்லாவற்றையும் அது அழிக்கிறது. நெருப்பு இன்னும் வந்து சேராத தூரத்தில் ஒருத்தி அமர்ந்திருக்கிறாள். தன் வேலியை ஒட்டி மலர்ந்திருக்கும் ரோஜாக்களை பார்த்தபடி. காட்டு நெருப்பு இங்கே வானத்தில் இளஞ்சிவப்பாக படர்ந்திருக்கிறது. அந்த பின்னனியில் ரோஜாக்கள் ஆதுரமாய் இதழ் விரித்திருக்கின்றன. அதன் வசீகரத்தை அவளால் நம்பவே முடியவில்லை.

0

அது ஒரு புராதானமான வேண்டுதல். எனினும், சில நேரங்களில் மெய்யாகவேத் தோன்றுகிறது, வெளிச்சத்தில்தான் அற்புதம் இருப்பதாக.  வெளிச்சம் ஒவ்வொரு இடைவெளியிலும் நுழைவதை நான் பாத்திருக்கிறேன் – மருத்துவமனை ஜன்னலில், இடுகாட்டு மரங்களில், தனித்த அறையின் கதவிடுக்கில். எதையோ நினைவூட்டுவதற்காகவே தான் இருக்கக்கூடாத இடங்களில்கூட அது வருகிறது. இங்கே, கண்ணாடிக்கு மறுபுறம் ஒரு குழந்தை துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருக்கிறது. மூன்றாவது துள்ளலில் வெளிச்சம் அதை அந்தரத்திலேயே ஏந்திக் கொண்டது. காற்றில் மிதக்கும் குழந்தை கொஞ்சம்கூட பயப்படவில்லை.

0

பின் குறிப்பு : சமீபத்தில் இணையம் வழியே புகைப்படக் கலைஞர் "Lisa Sorgini"-ன் வலைதளம் அறிமுகமானது. அவர் புகைப்படங்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கின்றன. அந்த உந்துதலில் எழுதிய குறும்பதிவு.

http://www.lisasorgini.com/






No comments:

Post a Comment