‘உடைந்து எழும் நறுமணம்’ தொகுப்பின் முன்னுரையை இசை இப்படித் தொடங்குகிறார்: “என் கவிதைகளின் அடையாளமாகச் சொல்லப்பட்ட பகடி இயல்பு சமீபத்திய தொகுதிகளில் படிப்படியாகக் குறைந்து இதில் மேலும் அருகியுள்ளது.” ஒரு கவிஞரின் அடையாளம் ஏன் உருமாறுகிறது? அது முழுக்கமுழுக்க அவருடைய தேர்வுதானா? பொதுப்போக்காக மாறி பகடி சலிப்புத் தட்ட ஆரம்பித்திருக்கும் சூழலில் கவிஞர் தன் அடையாளத்தைத் துறக்க வேண்டியது காலத்தின் நிர்ப்பந்தமா? இப்படி வெவ்வேறு கேள்விகளை கேட்பது சுவாரஸ்யமான விசாரங்களுக்கு வழி வகுக்கும். ஆனால் மற்ற விஷயங்களைக் காட்டிலும், இந்தத் திசைமாற்றம் இசையின் இதுவரையிலான கவிதைகளைத் தொகுத்துப் புரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறது. திருப்பத்தில் நுழைவதற்கு முன்னால் வந்த வழியை ஒருதடவை சரி பார்த்துக் கொள்வதுபோல. மேலும், ஒரு குறிப்பிட்ட கவிஞரின் கவிதைகளைப் புரிந்துகொள்வது என்பது அக்கவிதைகள் உருவாகி நிலைப்பதற்கு காரணமாய் இருக்கக்கூடிய சூழலையும் புரிந்துக்கொள்வதுதான்.
![]() |
O