நேற்று (21/10/2023) நற்றுணை வாசக குழுமம் சார்பில் “திருவருட்செல்வி” சிறுகதை நூலுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. வெறும் பாராட்டு மொழியாக இல்லாமல், கருத்து மாறுபாடுகளும் விவாதிக்கப்பட்ட தீவிரமான கலந்துரையாடலாக அமைந்தது. கவிஞர் விக்கிரமாதித்யன் யதேச்சையாக நிகழ்வில் கலந்துகொண்டு இறுதிவரை பங்கேற்றது கூடுதல் மகிழ்ச்சி. நிகழ்ச்சியை முன்னெடுத்த காளி பிரசாத்துக்கும் உரையாற்றிய சாம்ராஜ், சக்திவேல் இருவருக்கும் நன்றி. வாழ்த்துரை வழங்கிய ஷங்கர்ராமசுப்ரமணியனுக்கும் விசேஷமாய் நன்றி சொல்ல வேண்டும். இக்கதைகளின் நிமித்தம் அவர் எப்போதும் உடனிருக்கிறார்.
என் ஏற்புரையின் எழுத்து வடிவம்.
000
"திருவருட்செல்வி" தொகுப்பு வெளியாகி சில மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், திரும்ப படிக்கும்போது அணுக்கமும் தொலைவும் ஒரு சேர எழுகின்றன. காய்ச்சலில் கிடந்த கடந்தகால நாட்களை ஞாபகப்படுத்தி பார்ப்பது போல. பலவீனப்பட்டு கைவிட்டது நம் உடல்தான் எனும் உணர்வும் ஆனால் அந்த உடல் இப்போது வேறு யாருடையதாகவோ மாறிவிட்டதான மயக்கமும் ஒருங்கே எழுகின்றன. சில இடங்களில் என் மொழியே, மறந்து போன பழைய கையெழுத்து மாதிரி இருக்கிறது. சில இடங்களில் இன்னமும் உள்ளங்கை வெப்பம் நீங்கியிருக்கவில்லை.
கதைகளோடு ஓர் இடைவெளியும் உருவாகியிருக்கிறது. இயல்பாகவே மேம்படுத்தியிருக்க வேண்டிய இடங்கள் கண்களில் படுகின்றன. ஒவ்வொரு கதையிலும் சில சொற்களை மாற்றலாம் என்றும் உரையாடல்களை திருத்தலாம் என்றும் வரிகளை மாற்றியடுக்கலாம் என்றும் படுகிறது. இப்படி இன்னும் துல்லியப்படுத்த வேண்டிய சிறுசிறு இடங்கள் நோக்கியே மனம் ஓடுகிறது. சார்லஸ் சிமிக் சொல்வது போல கல்லறையில் கூட எழுத்தாளன் பிழை திருத்தம் செய்ய விரும்புவான் போல. அதே நேரம் கவித்துவமும் உணர்ச்சி வேகமும் மிக்க பகுதிகளை படிக்கும்போது நிறைவும் தோன்றுகிறது. இதையும் இடைவெளியின் விளைவான தைரியத்திலேயே சொல்கிறேன்.
பிரதியை சீர் செய்வதில் எழுத்தாளனுக்கு தோன்றும் அவசம் கவனத்திற்குரியது. இந்த சீர்படுத்துதல் என்பது இலக்கண பிழை அல்லது எழுத்து பிழை சார்ந்த வறட்டு நோக்கல்ல. அப்படி சுத்தமாக எழுதப்படும் எத்தனையோ ஆக்கங்கள் மோசமானதாக இருந்துள்ளன. உள்ளார்ந்த நயத்தையே இங்கு சுட்டுகிறேன். தன் எழுத்தை உற்று நோக்கும் கண்களின் துடிப்பை. மனதுள் ஓடும் ஒலியமைப்பை. நினைவுகளின் படிமங்களின் வெளிப்பாட்டை.
உருவாக்கம் பற்றி பேசும்போதே தொடர்புறுத்தல் சார்ந்தும் எண்ணம் மோதுகிறது. இலக்கியத்தில் நிகழும் எழுத்தாள-வாசக தொடர்புறுத்தல் எப்போதும் என்னை ஆச்சர்யப்படுத்துகிறது. எத்தனை சரி செய்தாலும் சரி செய்ய சிறிய விஷயங்கள் இருந்தபடியுள்ளன. அவையெல்லாம் சரி செய்யப்படாதபோதும், துல்லியமான வாசக அனுபவமும் நிகழ்கிறது. வாசகர்கள் கதைகளின் மைய உணர்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள். இது எப்படி என்பது ஓர் ஆதார வியப்பே. அதே நேரம் இந்த இரண்டையும் தனித் தனியே பிரிக்கவும் முடிவதில்லை. ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன.
மனுஷ்யபுத்திரன் ஒரு பழைய கட்டுரையில் இப்படி சொல்லியிருப்பார். ஒரு நவீன கவிதை ஏன் புரியவில்லை என்பது விவாதத்திற்குரியதல்ல. ஒரு கவிதை ஏன் புரிகிறது என்பதே நாம் பேச வேண்டியது. இது எல்லா இலக்கிய வடிவங்களுக்கும் பொருந்தக்கூடியது. இலக்கிய வடிவங்கள் ரகசியத்தை லட்சியமாய் கொண்டிருக்கின்றன. மறைபிரதியில் இயங்குகின்றன. ஆனால் இரு நண்பர்களின் மௌனமான தலையசைப்பை போல துல்லியமாக புரிந்துகொள்ளவும்படுகின்றன. அந்த உறவை -அந்த மர்மத்தை- நாம் உரையாடல் பரப்புக்குள் கொண்டு வர வேண்டும்.
சுருக்கமாக சொன்னால் - சிரத்தையில்லாத உருவாக்கம் நிச்சயம் தொடர்புறுத்தப்படுவதில்லை ;ஆனால் தடுமாற்றங்களும் விடுபடல்களும் உருவாக்கத்தின் பகுதியாகின்றன. இது எப்படி? புதுமைப்பித்தனுக்கு தமிழ் எழுத தெரியவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவசர அவசரமாக எழுதப்பட்ட அவர் கதைகளில் நாம் உணரும் லயத்திற்கு என்ன பொருள்? தஸ்தாயெவ்ஸ்கியின் டயரிகளில் இருக்கும் அத்தனை அடித்தல் திருத்தல்களுக்கும் என்ன பொருள்? அந்த தொடர்புறுத்தலையே விந்தை என உணர்கிறேன்.
“தொடர்புறுத்தல்” என்று சொல்லும்போது, கதையை எழுதவும் கேட்கவும், புரிந்துகொள்ளவும் நமக்குள் மொழியை கடந்த ஒரு பாதை இருப்பதாகவே படுகிறது. இந்த தொகுப்பில் உள்ள பல கதைகள் என் வாழ்க்கையில் நடக்காதவை. என்னிடம் பகிரப்பட்டவை. சில அனுபவங்கள் நான் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தவை. வெவ்வேறு நபர்கள் இவற்றை வாழ்ந்திருக்கிறார்கள். சாட்சி கதை தஸ்தாயெவ்ஸ்கி எழுத்தின் மறு ஆக்கம். கதைகள் வழியே இப்படி வெவ்வேறு மனிதர்களின் குரலாக மாறுவது ஆழமான அனுபவமாய் இருக்கிறது.
இன்னொரு மனிதரின் -அது சொந்த அப்பாவாகவோ மகளாகவோ இருந்தாலும்- உடல் வலியை என்னால் பகிர்ந்துகொள்ளவே முடியாதபோது, இன்னொரு மனிதரின் கதையை மட்டும் எழுத முடிவது உள்ளபடியே ஆச்சர்யமாக இருக்கிறது. இன்னொருவரை நம்மில் ஒரு பகுதியாக உணர்வதற்கு நமக்குள் ஆழத்தின் வழிகள் இருக்கின்றன போலும். அதற்கான கதவுகள் பரிணாமத்தில் உருவாகியிருக்கின்றன போலும். மற்றமையை கதையிலிருந்து பிரிக்கவே முடியாது. மற்றமையை ஏற்றுகொள்ளுவதை குறிக்கோளாய் மட்டுமின்றி தன் இருப்பின் நோக்கமாகவும் கொண்ட ஓர் ஆதி நிகழ்வே கதை.
இந்த ஆற்றல் மனிதர்களுக்கு இருப்பதனாலேயே துல்லியமான அமையாதபோதும் -திருத்தங்களுக்கு வாய்ப்பு இருக்கும்போதும்- ஒரு கதை வாசகர்களோடு உரையாட முடிகிறது என நினைக்கிறேன். நான் இங்கே சொல்ல வருவது - ஒரு கதைக்கு தொழில்நுட்பமே தேவை இல்லை என்றல்ல. உண்மையில் கதையின் தொழில்நுட்பம் அதிகமாய் பேசப்பட வேண்டியது என்றே வாதிடுகிறேன். ஆனால் கதை என்பது அது மட்டுமே இல்லை என்பதும், பல சமயங்களில் வடிவமும் மொழியும் சரியாக அமைந்தும் கதைகள் உவப்பற்றதாக போவதை கணக்கில் எடுக்கும்போது கதையின் பின்னுள்ள அரூப இருப்பை அங்கீகரிப்பது அவசியமாகிறது என்றும் சொல்ல தோன்றுகிறது. மொழியின் வடிவத்தின் மீதான பிரக்ஞையேக் கூட மொழியையும் வடிவத்தையும் கடப்பதன் நிமித்தமே தொழிற்படுகிறது.
மொழிக்கு அப்பால் கதைகளின் பின்னனியில் இருக்கக்கூடிய அரூபமான இருப்பையே நேர்மை, தேடல் என்று வெவ்வேறு வார்த்தைகளில் சுட்டுகிறோம். நான் தனிப்பட்ட முறையில் அதை "பரிசீலணை" எனும் வார்த்தையால் குறிப்பிட விரும்புகிறேன். பல நேரங்களில் பரிசீலணை என்பதை சந்தேகம் என்று நாம் புரிந்துகொண்டுவிடுகிறோம். ஆனால் சந்தேகத்தில் ஓர் எதிர்மறை அர்த்தம் இருக்கிறது. அவநம்பிக்கை இருக்கிறது. ஆனால் பரிசீலிப்பது அப்படியல்ல. அது ஆழமான நம்பிக்கை மற்றும் பற்றுறுதியில் இருந்தே பிறக்கிறது. ஒரு வார்த்தையை தேர்வு செய்வதில், ஓர் உணர்ச்சியை முன்வைப்பதில், இன்னொரு உணர்ச்சியை தவிர்ப்பதில் எழுத்தாளனிடம் தொடர்ந்து பரிசீலணை நடக்கிறது. தொழில்நுட்பமும் பரிசீலணையாகவே இருக்கிறது. ஒவ்வொரு பரிசீலணையும் சரியான தேர்வுக்கான நம்பிக்கையையும் தன்னுள் கொண்டிருக்கிறது. அது உண்மை மீதான நம்பிக்கையே.
புதுமைப்பித்தனின் "செல்லம்மாள்", தி.ஜானகிராமனின் " செய்தி", அசோகமித்திரனின் "காந்தி", ஜெயமோகனின் "திசைகளின் நடுவே" என்று எல்லா மகத்தான கதைகளிலும் ஒரு பொது அம்சமாக நான் கருதுவது இந்த பரிசீலணையே. தீராத பரிசீலணையே உண்மையாகிறது; அழகாகிறது; கற்பனையின் தாவலாகவும் ஒழுங்காகவும் மாறுகிறது.
இப்படி சொல்லும்போது எழுத்தாளனை ஒரு பீடத்தில் வைப்பது போன்ற எண்ணம் வரலாம் - பரிசீலணையை அகத்தூய்மையோடு ஒப்புமை செய்துவிட வாய்ப்பிருப்பதால். ஆனால் நான் சொல்ல வருவது அதுவன்று. பெரும்பாலான எழுத்தாளர்களிடம் "இந்த கதை உண்மையா?" "அந்த கதையில் வரும் கதாபாத்திரம் நீங்களா?" என்று கேட்கும்போது அவர்கள் ரசிக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். கூசவும் கூடும். எனக்கு கூசியிருக்கிறது. எனில் பொதுவாக எண்ணுவது போல கதைகளின் வழியே தன் அடையாளத்தை விளம்பரப்பப்படுத்துவது எழுத்தாளர்களின் நோக்கமாக இருக்க முடியாது. அதே நேரம் "எழுத்தாளன் இறந்துவிட்டான்" என்று கதையை தன்னிடமிருந்து பறிக்கவும் அவன் அனுமதிப்பதில்லை.
இந்த முரண் சுவாரசியமானது. தோராயமாக எழுத்தாளனுக்கு கதையின் பேசுபொருளை சொந்தம் கொண்டாடுவதில் பெரிய விருப்பம் இல்லை என்றும் அதன் அடிப்படை உணர்ச்சி தளத்தையும், பரிசீலணை களத்தையுமே முக்கியமாய் கருதுகிறான் என்றும் புரிந்துகொள்ளலாம். குறைந்தபட்சம் நான் அப்படிதான் எண்ணுகிறேன்.
இலக்கிய வாசிப்பிலுமே இந்த அம்சமே நம் முதன்மை அக்கறையாக இருக்க வேண்டும். பேசுபொருளோ வடிவமோ மட்டும் இலக்கியம் அல்ல என்பது நாம் எப்போதோ கண்டுபிடித்த உண்மைகள். ஆனால் அதை மறக்க ஆரம்பித்துவிட்டோமா என்று எண்ணும்படிக்கு இலக்கியம் சார்ந்த உரையாடலில் பேசுபொருட்களின் ஆதிக்கம் பெருகிவிட்டது. இன்னொருபுறம் கட்டுடைப்பின் நகல்களும் அலைகின்றன. போலவே, தனக்கு தெரிந்ததையும் சௌகரியமானதையும் மட்டுமே பிரதியில் எதிர்பார்க்கும் தன்முனைப்பை களங்கமற்ற வாசிப்பாய் கருதும் போலித்தனமும் பெருகியிருக்கிறது. வாசிப்பில் பரிசீலிக்கப்படாத ரசனை போல ஆபத்தானது வேறில்லை.
எழுத்தாளனைப் போலவே வாசகனுக்கும் விமர்சகனுக்கும் நம் காலத்தில் பரிசீலணை தேவையாக இருக்கிறது. எழுத்து, வாசிப்பு, விமர்சனம் என்று எல்லா இலக்கிய செயல்பாடுகளுமே தீராத சுய பரிசீலணைகளே. ஒரு கதை எதை பேசுகிறது என்று உள்ளட்டகம் சார்ந்தும், எப்படி பேசுகிறது என்று வடிவம் சார்ந்தும், எதற்காக பேசுகிறது என்று கட்டுடைத்தல் சார்ந்தும் உரையாடல்கள் நிகழ்வது சரியானதே. ஆனால் இவற்றில் அக்கறை கொண்டிருக்கும்போதே ஒரு கதை நம்மை என்ன செய்கிறது என்கிற கேள்வியை கைவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எழுத்தாளன் வாழ்க்கையை பரிசீலிக்க வேண்டும் என்றும் அதன் விளைவாக வடிவ மாற்றங்களை -மொழியிலும் அகத்திலும்- அனுமதிக்க வேண்டும் என்று சொல்லும்போது இலக்கிய சூழல் தன் விமர்சன மொழியை தொடர்ந்து பரிசீலிக்க வேண்டும் எனும் கோரிக்கையையும் சேர்க்க வேண்டியிருக்கிறது.
வாசிப்பில் பரிசீலணையானது முன்னோடிகளின் தொடர்ச்சியை பேணுவதே (மீறலும் தொடர்ச்சியே) என்பது என் வலுவான நம்பிக்கை. இலக்கிய செவ்வியல் தொகுதியை (Canon) பரிசீலணையைவிட்டு விலக்கிவிட முடியாது. ஏற்கனவே சொன்னது போல பரிசீலணை என்பது எதிர்மறையானதாக, விமர்சனமாக மட்டுமே இருக்க வேண்டும் என்றில்லை. மறதிக்குள் விழாமல் பார்த்துக் கொள்வதே பரிசீலணை. சிறப்பு மலர்கள், முழு நாள் கருத்தரங்குகள் என்று முன்னோடிகளுக்கு தொடர்ச்சியாக பாராட்டுக்கள், விழாக்கள் தமிழில் நடக்கின்றன. இது அவசியமானது. கடமையும் கூட. ஆனால் அதே அளவுக்கு அவசியமான இன்னொரு செயல் - அவர்கள் அடுத்த தலைமுறையின் மொழியிலும் நரம்புகளிலும் கலப்பது. அது நடக்காவிடில் எல்லா பாராட்டு கூட்டங்களும் காந்தி படத்துக்கு மாலை போட்டு சுவரில் மாட்டுவது போலவே ஆகிவிடும். அது காந்தியை வாழ்க்கைக்கு வெளியே நிறுத்தும் வழி. இன்று, எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் நடுவிலான இடைவெளிகள் இவ்வளவு குழம்பி போயிருப்பதற்கான காரணத்தை இந்த புள்ளியிலிருந்தும் தேட ஆரம்பிக்கலாம்.
கடைசியாக என் கதைகள் பற்றி ஒரு அபிப்ராயத்தை பகிர நினைக்கிறேன். என்னுடைய கதைகளை திரும்ப படிக்கும்போது அவை நிகழ்வுகளை முதன்மைபடுத்துவதேயில்லை என்று புரிகிறது. விவரனைகளிலும் சித்தரிப்புகளிலுமே அவை ஆர்வம் கொண்டிருப்பதாய் படுகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால் எல்லாவற்றையும் பார்ப்பதையே லட்சியமாக கொண்டிருக்கின்றன. இருண்ட மூலைகள். தனித்த அறைகள். ஆக்கிரமிக்கும் நிழல்கள். நாய்களின் அனாதை கண்கள். அடிபட்ட விலங்குகளின் சிதைந்த உடல்கள். இவற்றை கதைக்குள் ஒரு ஜோடி கண்கள் கூர்ந்து பார்த்துக் கொண்டேயிருக்கின்றன. நான் இப்போது வாசிக்கும் ஆங்கில நாவலில் ஒரு வரி வருகிறது. “விழியே கடவுளின் ஆக தனிமையான ஒரு படைப்பு”. எல்லாமே தோன்றி மறைவதை பார்த்துக் கொண்டேயிருக்கும் விழிகளை இந்த நூலில் கவனிக்கிறேன். என் முதுகுக்கு பின்னும் யாரோ ஒருவரின் கண்கள் நிலைத்திருப்பதான உணர்வு வருகிறது
ooo