Tuesday 28 November 2023

அகழ் மொழிபெயர்ப்புகள்

போனவாரம் "அகழ்" தளத்தில் மூன்று முக்கியமான மொழிபெயர்ப்புகளை வெளியிட்டோம். மொழிபெயர்த்து வழங்கிய நண்பர்கள் பாரி, ஜனா மற்றும் மணவாளன் மூவருக்கும் வாழ்த்துக்கள்.



0

பாஷவிஸ் சிங்கரின் "அறிவுரை" சிறுகதையை பாரி மொழிபெயர்த்திருக்கிறார். சிங்கரின் "காப்காவின் நண்பன்" போன்ற கதைகள் ஒரு வகை என்றால் "முட்டாள் கிம்பிள்" போன்ற கதைகள் இன்னொரு வகை. "அறிவுரை" கதையை இரண்டாவது வகையில் சேர்க்கலாம். நன்மை ஓர் எளிய உண்மை என்பதை அபாரமான உணர்வெழுச்சியுடன் வெளிப்படுத்துபவை சிங்கர் கதைகள். ஒரு நாடோடி நீதிக் கதையை நவீன கதையாக மாற்றும் தேர்ச்சி சிங்கருக்கே உரியது. அல்லது நவீன அழகியலை மறுத்தே நாடோடிக் கதையை சொல்கிறாரா என்றும் யோசிக்கலாம். "சந்தைத் தெருவில் ஸ்பினோசா", "வேன்வில்ட் காவா" ஆகியவற்றை தொடர்ந்து பாரி மொழிபெயர்த்து அகழில் வெளியாகியிருக்கும் சிங்கரின் மூன்றாவது கதை இது. 

0

கட்டிடக் கலை வல்லுனர் ஜீகானி பலாஸ்மாவின் கட்டுரையை ஜனா மொழிபெயர்த்திருக்கிறார். கட்டிடங்கள் என்பவை பார்ப்பதற்கு மட்டும் உரியவை அல்ல;அனைத்து புலன்களாலும் அறிவதற்கானவை என்கிறார் ஆசிரியர்.புலன அனுபவத்திலிருந்து நினைவுகளின் ஆழத்திற்கும் காலத்தின் முடிவின்மைக்கும் போகும் வழிகள் பற்றி கட்டுரை பேசுகிறது.ஒரு கட்டிடம் ஏன் பழையதாக இருக்க வேண்டும் என்பதை விளக்கும் இடம் அசாதாரணமானது."ஆயிரம் கைகளால் உபயோகமுற்று பளபளக்கும் ஒரு கதவின் கைப்பிடியை அழுத்தித் திறப்பதென்பது அலாதியானது."

தொடுகை, வாசனை, ருசி இவற்றை பற்றியே கட்டுரை பேசுவதால் மார்சல் ப்ரூஸ்டின் மேடலின் தருணம் நினைவில் வந்தபடியிருந்தது. ஒரு பிடி கேக்கின் சுவையிலிருந்தே அவர் மொத்த கடந்தகாலத்தையும் பிரக்ஞையின் ஆழத்திலிருந்து மீட்டெடுப்பார். நம் காலத்தில் "பார்த்தல்" என்பதாக மட்டுமே அனுபவம் சுருங்குவது வாழ்வின் இருப்பின் எல்லையையே சுருக்கிவிடுகிறது. சட்டென்று திருநெல்வேலி என்பதே என் மனதில் நாசரேத் பேருந்து நிலையத்தின் ஏணி படிக்கட்டு மிட்டாயாகவும் மிக்சரின் காரமாகவும் பதிவாகி, அங்கிருந்தே வளர்கிறது என்பது ஆச்சர்யத்துடன் ஞாபகம் வந்தது. 

0

செண்டை மேளம் பற்றிய கே.சி.நாராயணனின் "தாள கோபுரம்" கட்டுரையை மணவாளன் மொழிபெயர்த்திருக்கிறார். கதகளி குறித்த "மலையாளியின் இரவு"  கட்டுரையை தொடர்ந்து மணவாளன் மொழிபெயர்த்திருக்கும் கே.சி.நாராயணனின் இரண்டாவது கட்டுரை இது. இரண்டு கட்டுரைகளிலுமே கேரளக் கலாச்சாரத்தின் கலை வடிவங்களின் தனித்துவங்களை அவர் கவித்துவத்துடன் விவரிக்கிறார். கேரளீயம் என்பது அவர் உபயோகிக்கும் சொல். பொதுவாக இசையில் பக்கவாத்தியமாகவே கருதப்படும் தாளக் கருவி கேரளாவில் செண்டை வழியே எப்படி நான்கு மர நேரங்கள் வரைக்கூட நீளும் மைய வெளிப்பாடாக மாறியிருக்கிறது என்பது கட்டுரையில் பேசப்படுகிறது. 

கட்டுரையின் இறுதியில் தாளவட்டம், தாள வேகம் எனும் இரண்டு இசை கூறுகள் வழியே இயற்கையையும் மனிதனையும் வாழ்க்கையின் ஓயாத சுழற்சியையும் இணைத்து விளக்கிய இடம் அவ்வளவு கவித்துவமாக இருக்கிறது. பி.கெ.பாலகிருஷ்ணன் வாசித்தபோது ஏற்பட்ட அதே வியப்பு. கலாச்சாரத்திலும் தத்துவத்திலும் கோட்பாட்டிலுமாக ஏறி ஏறி கடைசியில் எல்லாவற்றையும் உதறி ஓர் அசாத்திய தாவலை இருவரும் நிகழ்த்திக் காட்டுகிறார்கள். மார்க்ஸியத்தின் உபரி கோட்பாட்டில் ஆரம்பித்து பிறகு மார்க்ஸியர்களையே விமர்சித்து கே.சி.நாராயணன் மேற்கொள்ளும் பாய்ச்சல் அசாத்தியமானது. என் "நிழலின் அசைவு" நெடுங்கதையின் கடைசி பகுதியோடு அணுக்கமாய் இருப்பதனால், இக்கட்டுரை தனிப்பட்ட முறையிலும் விசேஷமானது. 

0

நிழலின் அசைவு கதையிலிருந்து,

ஒலிபெருக்கியில் மென்மையாக ஒலித்த பாடல் தீபன் காதில் விழுந்தது. ஒரு ஷெனாய் நெடுநேரமாக ஒரே ஸ்வர வரிசையை திரும்ப திரும்ப காற்றில் மீட்டிக் கொண்டிருந்தது – காலத்தையே நீட்டிப்பது போல. முதலில் அதன் போக்கு அவனுக்கு பிடிபடவில்லை. ஆனால் அவனை அது கட்டியிழுத்தது. கூர்ந்து கவனிக்கையில், திடீரென்று ஒரு கணத்தில் மின்னல் வெட்டாய் அவன் அதை கண்டு கொண்டான். வடிவம். திட்டவட்டமான வடிவம். இசை மேலேறியது. கீழே இறங்கியது. நேர்க்கோட்டில் தரித்து மீண்டும் மேலேறியது. திரும்பவும் கீழே இறங்கியது. மீண்டும் மேலே. இவ்வளவுதான். என்னவொரு பைத்தியக்காரத்தனம்? மீள மீள நிகழும் ஒரு வடிவத்தில் –அந்த தொடர்ச்சியில்- எப்படியோ இசை பிறக்கிறது. வடிவமும் தொடர்ச்சியும். வேறொன்றுமே இல்லை. அவன் அலெக்சாவை நிறுத்திவிட்டு சத்யாவையும் ரகுவையும் அவன் நோக்கினான். அவர்களோ அதை கவனிக்கும் நிலையில் இல்லை.

தீபன் மேலும் வியப்புற்றான் -எவ்வளவு விஷயங்கள் இப்படி திரும்ப திரும்ப நடக்கின்றன? சுழல்களின் சுழல். புதிர்களின் புதிர். இது யாருடைய சொற்பிரயோகம்? போர்ஹெவாகத்தான் இருக்கும். எல்லா புனைவும் ஒரே கதை என்பது அவர் நம்பிக்கை. எல்லா மனிதரும் ஒரே நபர்தான். எல்லா வாழ்க்கையுமே ஒரே கதைதான். மீண்டும் மீண்டும் நிகழ்வது. ஆனால் புதிது போலவே உணர்கிறோம். பிறப்பும் இறப்பும். எனில் இப்பேரழிவும் ஏற்கனவே நடந்திருக்கிறதா? லட்சம் உயிர்களை கொன்று வளர்கிற, அந்த ஆக்கிரமிப்பு சக்தியும் ஏற்கனவே இருந்ததா? அது இறந்து பிறந்திருக்கிறதா? எனில், இறந்த மனிதர்களும் அப்படி மீண்டும் பிறக்க முடியுமா? அல்யோஷாவிடம் ஒரு சிறுவன் கேட்கிறான். “கரமசோவே! நமக்கு சொல்லப்பட்டது உண்மைதானா? நாம் மரணத்திலிருந்து மீண்டும் எழுந்து வருவோமா? மீண்டும் ஒருவரையொருவர் சந்திப்போமா?” அல்யோஷா பாதி உற்சாகத்துடனும் பாதி சிரிப்புடனும் சொல்கிறான் “நிச்சயமாக நாம் மீண்டும் எழுவோம். மீண்டும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்வோம். நமக்கு நடந்தவற்றை எல்லாம், ஒருவரோடு ஒருவர் மகிழ்ச்சியோடு பகிர்ந்துக் கொள்வோம்”

No comments:

Post a Comment